Published:Updated:

சதுர அடி ரூ.25 லட்சம்! - திருத்தணி மெகா மோசடி!

திருத்தணி
பிரீமியம் ஸ்டோரி
திருத்தணி

டி.டி.நாயுடு என்பவரின் அறக்கட்டளையிலிருந்து மற்றோர் அறக்கட்டளையின் பிரதிநிதியான டாடாஜிக்கு கடந்த 2019, நவம்பர் மாதம் 50.18 ஏக்கர் நிலம் மாற்றிப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது

சதுர அடி ரூ.25 லட்சம்! - திருத்தணி மெகா மோசடி!

டி.டி.நாயுடு என்பவரின் அறக்கட்டளையிலிருந்து மற்றோர் அறக்கட்டளையின் பிரதிநிதியான டாடாஜிக்கு கடந்த 2019, நவம்பர் மாதம் 50.18 ஏக்கர் நிலம் மாற்றிப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது

Published:Updated:
திருத்தணி
பிரீமியம் ஸ்டோரி
திருத்தணி

வழக்கமாக, பத்திரப்பதிவில் சொத்தின் சந்தை மதிப்பைக் குறைத்து பதிவுசெய்வதில்தான் லஞ்சம் வாங்குவார்கள். ஆனால், திருத்தணியில் 50 ஏக்கர் நிலத்தை, சந்தை மதிப்பைவிட ‘தலைசுற்றும்’ அளவுக்கான மடங்குக்கு உயர்த்திக்காட்டி நூதன மோசடியை அரங்கேற்றியிருக்கிறார்கள். இது தொடர்பாகத் தற்போது சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் உட்பட மூன்று பேர்மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவுசெய்துள்ள நிலையில், இந்த மோசடியின் பின்னணியை விசாரித்தால் கிடைக்கும் தகவல்கள் கிறுகிறுக்கவைக்கின்றன!

சென்னையில் வணிக நிறுவனங்களின் மையமாகத் திகழும் தி.நகரிலேயே ஒரு சதுர அடி நிலத்தின் சந்தை மதிப்பு அதிகபட்சம் 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டாது. ஆனால், திருவள்ளுவர் மாவட்டம், திருத்தணியில் 50 ஏக்கர் நிலத்தை ஐந்து லட்சத்து 61 ஆயிரம் கோடி ரூபாய்க்குப் பத்திரப்பதிவு செய்திருக்கிறார்கள். அதாவது, ஒரு சதுர அடி நிலத்தின் விலை கிட்டத்தட்ட 25 லட்சம் ரூபாயாம்! உண்மையில் அந்தப் பகுதியில் அரசு வழிகாட்டு மதிப்பின்படி ஒரு ஏக்கர் நிலமே 24 லட்சம் ரூபாய்தான்.

டி.டி.நாயுடு என்பவரின் அறக்கட்டளையிலிருந்து மற்றோர் அறக்கட்டளையின் பிரதிநிதியான டாடாஜிக்கு கடந்த 2019, நவம்பர் மாதம் 50.18 ஏக்கர் நிலம் மாற்றிப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதாவது, 21.69 ஏக்கர் நிலம் 2.43 லட்சம் கோடி ரூபாய்க்கும், 22.27 ஏக்கர் நிலம் 2.45 லட்சம் கோடி ரூபாய்க்கும், 6.22 ஏக்கர் நிலம் 72 ஆயிரத்து 900 கோடி ரூபாய்க்கும் என மூன்று செட்டில்மென்ட் பத்திரங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசுக்கு 61 ஆயிரத்து 776 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் சார் பதிவாளர் செல்வகுமரன், கல்லூரி அதிபர் டி.டி.நாயுடு, அவரின் மகன் டாடாஜி ஆகியோர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவுசெய்துள்ளது.

சதுர அடி ரூ.25 லட்சம்! - திருத்தணி மெகா மோசடி!

இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் பேசினோம்... ``திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே ராமஞ்சேரி, பெரியகாடாம்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மேற்கண்ட சொத்துகளை பத்திரப்பதிவு செய்ய அமலாக்கத்துறை தடை விதித்துள்ள நிலையில், விதிகளை மீறி திருத்தணி சார் பதிவாளர் செல்வகுமரன் பத்திரப்பதிவு செய்திருக்கிறார். செட்டில்மென்ட் பதிவைப் பொறுத்தவரை, குடும்ப உறுப்பினருக்குள் பதிவு நடந்தால் ஒரு சதவிகிதமும், வெளி நபர்கள் இடையே பதிவு நடந்தால் ஏழு சதவிகிதமும் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் குடும்ப உறுப்பினர் என்ற அடிப்படையில் ஒரு சதவிகிதம் கட்டணம் செலுத்திப் பதிவுசெய்துள்ளனர். ஆனால், டி.டி.நாயுடு தனிப்பட்ட முறையில் அவரின் மகன் டாடாஜிக்கு சொத்துகளை செட்டில்மென்ட் செய்யவில்லை. இருவரும் இந்தப் பரிமாற்றத்தை இரண்டு அறக்கட்டளைகள் வழியாக மேற்கொண்டுள்ளனர். இதன்படி, சொத்துப் பரிமாற்றம் கிரயமாக மட்டுமே கருதப்பட்டிருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்குள் நடந்த இந்தப் பரிமாற்றத்தை தானமாகக் கருத முடியாது. செல்வகுமரன் இந்த மூன்று செட்டில்மென்ட் பத்திரங்களையும் தலா 29 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்து, பதிவு செய்துள்ளார். இந்த விவகாரத்தில் அப்போதே செல்வகுமரன் மீது 17-பி பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலத்துக்கு லோன் எதுவும் கொடுத்துவிட வேண்டாம் என்று அந்த ஏரியாவின் வங்கிகளுக்கும் எழுத்துபூர்வமாகத் தகவல் அனுப்பப்பட்டது’’ என்றவர்கள், டி.டி.நாயுடுவின் சொத்துகளை அமலாக்கத்துறை ஏற்கெனவே பறிமுதல் செய்த விவகாரத்தையும் விவரித்தனர்...

திருவள்ளூர் மாவட்டம், குன்னவலம் கிராமத்தில் உரிய அங்கீகாரம் இல்லாமல் மருத்துவக் கல்லூரி நடத்திய விவகாரத்தில், 2013-ல் டி.டி.நாயுடு கைதுசெய்யப்பட்டார். அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையினரும் அவர்மீது வழக்கு பதிவுசெய்து, திருத்தணி அருகேயுள்ள அவரது நிலங்களைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடந்த 2015, ஆகஸ்ட் 6-ம் தேதி அமலாக்கத்துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது. வில்லங்கச் சான்றிலும் இது தொடர்பான ஆணை உள்ளது. அதையும் மீறிப் பதிவுசெய்த சார் பதிவாளர் செல்வகுமரன் அப்போதே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை மூவர்மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது” என்றார்கள் விரிவாக.

சதுர அடி ரூ.25 லட்சம்! - திருத்தணி மெகா மோசடி!

இது பற்றி பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ``தற்போது நீதிமன்றத்துக்குச் சென்றுதான் அந்தப் பதிவைச் செல்லாததாக்க முடியும். கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கும், நிலத்தின் மதிப்பைப் பல மடங்கு உயர்த்திக்காட்டி, பெரும் தொகையை வங்கிகளில் கடன் பெறுவதற்கும் சிலர் இப்படியான மோசடிகளைச் செய்வார்கள். இந்த விவாகரத்தில் சார் பதிவாளருக்குப் பெரும் தொகை கைமாறியிருக்க வாய்ப்பு இருக்கிறது. இல்லையென்றால், இவ்வளவு பெரிய தொகைக்கு அவர் பதிவு செய்திருக்க மாட்டார். ஒன் டைம் செட்டில்மென்ட்டோடு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம்... வழக்கு வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டிருப்பார்’’ என்றார்கள்.

இது தொடர்பாக விளக்கம் கேட்பதற்கு செல்வகுமரன் மற்றும் டி.டி.நாயுடு ஆகியோரைப் பலமுறை தொடர்புகொள்ள முயன்றபோதும் இரு தரப்புமே நமது அழைப்புகளை ஏற்கவில்லை. இந்த மெகா மோசடியில் உரிய விசாரணை நடத்தி, இது போன்று வேறெங்கும் மோசடிகள் நடத்தப்பட்டிருக்கின்றனவா என்று அரசுத் தரப்பு கண்டறிய வேண்டும்!