Published:Updated:

தாலி எடுத்து கொடுக்குற கையால கொள்ளிக்குடம் தூக்க வெச்சுட்டாங்க!

குப்புசாமி, நந்தன்
பிரீமியம் ஸ்டோரி
குப்புசாமி, நந்தன்

- தற்கொலைக்கு காரணம் ஆளுங்கட்சி மிரட்டலா?

தாலி எடுத்து கொடுக்குற கையால கொள்ளிக்குடம் தூக்க வெச்சுட்டாங்க!

- தற்கொலைக்கு காரணம் ஆளுங்கட்சி மிரட்டலா?

Published:Updated:
குப்புசாமி, நந்தன்
பிரீமியம் ஸ்டோரி
குப்புசாமி, நந்தன்

‘‘நந்தன் மகன் குப்புசாமி தங்கமான பையன்ங்க. யாராச்சும் அதட்டிப் பேசினாலே பயந்துடுவான். பொங்கல் புளியில செத்துப்போன பல்லி கிடந்தது சம்பந்தமா நந்தன் பேட்டி கொடுத்ததுனாலதான் ஆளுங்கட்சிக்காரங்களும், போலீஸ்காரங்களும் நடுராத்தியில வீடு புகுந்து மிரட்டுனாங்க. பயந்துபோய் குப்புசாமி தீக்குளிச்சுட்டான்...’’ என்று கதறுகிறார்கள் நந்தனின் உறவினர்கள்.

தாலி எடுத்து கொடுக்குற கையால கொள்ளிக்குடம் தூக்க வெச்சுட்டாங்க!

திருத்தணி முருகன் கோயில் மலையடிவாரத்தில் இருக்கிறது முதியவர் நந்தனின் வீடு. ஜனவரி 4 அன்று வீட்டுக்கு எதிரிலுள்ள ரேஷன் கடையில், தமிழக அரசின் பொங்கல் பரிசுப்பொருள்களை வாங்கியிருக்கிறார் நந்தன். மூன்று நாள்கள் கழித்து, அதிலிருந்த 200 கிராம் புளிப் பொட்டலத்தை பிரித்தபோது, இறந்துபோன பல்லி கிடந்திருக்கிறது. 7-ம் தேதி காலை புளிப் பொட்டலத்துடன் ரேஷன் கடைக்குச் சென்றவர் இது பற்றி ஊழியர் சரவணனிடம் கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு அவரோ, ‘‘ஆளும்கட்சியினர்கிட்ட போய்க் கேளு” என்று சொல்லியிருக்கிறார்.

இந்த விஷயத்தை உள்ளூர் செய்தியாளர்களிடம் கூறினார் நந்தன். செய்தி வெளியானதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல் பா.ஜ.க-வின் ஹெச்.ராஜா வரை தி.மு.க-வைக் கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து ரேஷன் கடை ஊழியர் சரவணன் திருத்தணி காவல் நிலையத்தில் நந்தன் மீது கொடுத்த புகாரின் பேரில், அவர்மீது பிணையில் வெளி வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்தது காவல்துறை. அவர்மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், ‘ரேஷன் கடை ஊழியரை வழிமறித்து புளியில் பல்லி இருந்ததாகப் புகைப்படம் காட்டினார்; நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் அரசின் திட்டத்தைச் சீர்குலைக்கும் விதமாக வதந்தி பரப்பினார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தாலி எடுத்து கொடுக்குற கையால கொள்ளிக்குடம் தூக்க வெச்சுட்டாங்க!

இந்த நிலையில்தான், நந்தனை போலீஸ் கைதுசெய்யப்போவதாக தகவல்கள் பரவவே... மன உளைச்சல் அடைந்த குப்புசாமி ஜனவரி 11-ம் தேதி மாலை, பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்தார். சுமார் 80 சதவிகிதம் தீக்காயமடைந்தவர் சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மறுநாள் காலை உயிரிழந்தார். அவரிடம் மரண வாக்குமூலம் பதிவு செய்யப்படாததும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இதையடுத்து, கொதித்துப்போன அ.தி.மு.க-வினர் திருத்தணியில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

நந்தனின் குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்றோம்... வீட்டுக்கு அருகில் நின்றிருந்த இருவரிடம், நாம் யாரென்ற விவரத்தைச் சொன்னதும், ‘‘தயவுசெய்து கிளம்புங்க’’ என்று அனுப்பிவிட்டனர்.

தாலி எடுத்து கொடுக்குற கையால கொள்ளிக்குடம் தூக்க வெச்சுட்டாங்க!

தொடர்ந்து சரவணப்பொய்கை திருக்குளம் பக்கம் சுற்றி வந்தோம். அப்போது நம்மைத் திருப்பி அனுப்பியவர்களே நம்மிடம் வந்து அக்கம் பக்கம் பார்த்துவிட்டு மிரட்சியுடன் பேசினார்கள். ‘‘வீட்டைச் சுத்தியும் ஆளுங்கட்சிக்காரங்க கண்காணிக்கிறாங்க. யாருக்கும் பேட்டி கொடுக்கக் கூடாதுனு மிரட்டிட்டுப் போனாங்க” என்றவர்கள், ‘‘குப்புசாமி சென்னையில தனியார் கம்பெனியில அறுபதாயிரம் ரூபாய் சம்பளத்துல நல்ல வேலையில இருந்தான். அவனுக்கு இன்னும் கல்யாணமாகலை. அவங்கப்பா பொண்ணு பார்த்துக்கிட்டிருந்தாரு. டி.வி-யில பேட்டி கொடுத்ததுக்கு அப்புறம் ஆளுங்கட்சிக்காரங்க மிரட்டிட்டே இருந்தாங்க. இதுல பயந்துபோய்த்தான் குப்புசாமி தற்கொலை செஞ்சுக்கிட்டான். தாலி எடுத்துக் கொடுக்கவேண்டிய அவங்கப்பா கையால கொள்ளிக்குடம் தூக்கவெச்சுட்டாங்க’’ என்று கதறி அழுதவர்கள் அவசரமாகக் கிளம்பிச் சென்றார்கள்.

அ.தி.மு.க அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பி-யுமான ‘திருத்தணி’ ஹரியைச் சந்தித்துப் பேசினோம். ‘‘200 கிராம் புளிக்காக முதியவர் நந்தன் விளம்பரம் தேடவேண்டிய அவசியமில்லை. புகார் சொன்னவர் அ.தி.மு.க அனுதாபி என்ற ஒரே காரணத்தால், தி.மு.க திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் பூபதி, நந்தன் வீட்டுக்கு ஆட்களை அனுப்பி மிரட்டியிருக்கிறார். போலீஸாருக்கு அழுத்தம் கொடுத்து பொய் வழக்கு பதிவுசெய்ய வைத்துள்ளார். நந்தனை மூன்று மணி நேரம் ஸ்டேஷனில் வைத்து மிரட்டி, டார்ச்சர் செய்துள்ளனர். தொடர் மிரட்டல்களால்தான் குப்புசாமி தனது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். இந்த விவகாரம் பற்றி யாரும் பேசக் கூடாது என்று அக்கம் பக்கத்தினரையும் ஆளுங்கட்சியினர் மிரட்டியிருக்கிறார்கள்’’ என்றார்.

குற்றச்சாட்டு குறித்து தி.மு.க மாவட்டச் செயலாளர் பூபதியிடம் விளக்கம் கேட்டோம். ‘‘அந்த ரேஷன் கடையில் 830 பயனாளிகளுக்குப் பொங்கல் பொருள்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. நந்தன் மட்டுமே புகார் கூறியிருக்கிறார். அவர் சொன்னதில் உண்மையிருந்தாலும், ரேஷன் கடை பணியாளரிடம் கொடுத்து வேறு புளி பார்சலை வாங்கிச் சென்றிருக்கலாம். அதைவிடுத்து, பத்திரிகைகளிலும், சமூக ஊடகங்களிலும் விளம்பர நோக்கத்தில் செயல்பட்டிருக்கிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி யாரும் போலீஸாருக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. அவரை மிரட்டவும் இல்லை. அப்பாவுக்கும் மகனுக்கும் குடும்பத் தகராறு இருந்திருக்கிறது. இதனால், அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம்’’ என்றார்.

ஹரி
ஹரி
பூபதி
பூபதி

திருத்தணி ஏ.எஸ்.பி சாய் ப்ரணீத்திடம் பேசினோம். ‘‘எஃப்.ஐ.ஆர் இல்லாமல் எந்தவொரு வழக்கையும் விசாரிக்க முடியாது. அவரைக் கைது செய்யவில்லை... கேஸ் போடாமல் அழைத்து விசாரித்தால்தான் தவறு. தற்கொலை பற்றி விசாரித்துவருகிறோம்’’ என்று கறாராக சட்டம் பேசியவரிடம் “மரண வாக்குமூலம் ஏன் பெறவில்லை?” என்று கேட்டால் மட்டும் பதில் இல்லை!

“குப்புசாமியிடம் மரண வாக்குமூலம் வாங்காதது ஏன்?” என்று திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யாவிடம் கேட்டால், “இதுபோன்ற வழக்குகளில் அரசு மருத்துவர்கள் முன்னிலையில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற வேண்டும். 80 சதவிகித தீக்காயம் இருந்ததால், குப்புசாமியை அவசரமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச்சென்றிருக்கிறார்கள். அதனால்கூட வாக்குமூலம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம்” என்றார்.

கருத்துரிமை பற்றி வாய்கிழியப் பேசுபவர்கள், இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism