Published:Updated:

``காய்கறி வாங்க மூணு கிலோ மீட்டர் போகும் மக்களுக்கு மாஸ்க் உதவும்!” - இளம்பெண்ணின் சேவை

நந்தினி

``எனக்கு வருமானம் இல்லாட்டியும், என்னோட தொழிலைச் சரியான முறையில பயன்படுத்துற மனநிறைவு கிடைக்குது."

``காய்கறி வாங்க மூணு கிலோ மீட்டர் போகும் மக்களுக்கு மாஸ்க் உதவும்!” - இளம்பெண்ணின் சேவை

``எனக்கு வருமானம் இல்லாட்டியும், என்னோட தொழிலைச் சரியான முறையில பயன்படுத்துற மனநிறைவு கிடைக்குது."

Published:Updated:
நந்தினி

கொரோனா பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டுவரும் நிலையில், உணவு, தங்குமிடம், முகக்கவசம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான தட்டுப்பாடும் அதிகரித்துவருகிறது. இந்தச் சூழலில், பலரும் தங்களால் இயன்ற உதவிகளை ஏழை மக்களுக்கு செய்துவருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் நந்தினி.

விழிப்புணர்வு பணியில் நந்தினி
விழிப்புணர்வு பணியில் நந்தினி

திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கம் ஒன்றியத்திலுள்ள J.J நகர் கிராமத்தில் வசிக்கிறார். இருளர் சமூகத்து மக்கள் அதிகம் வசிக்கும் இந்த ஊரில் பெரும்பாலான மக்கள் அரிசி ஆலை, மரம் வெட்டுதல், விவசாய வேலைகளுக்கு தினக்கூலிகளாகச் செல்கின்றனர். அதே சமூகத்தைச் சேர்ந்த தையல் தொழிலாளியான நந்தினி, கிராம மக்களுக்கு இலவசமாக மாஸ்க் தயாரித்துக் கொடுத்திருப்பதுடன், சோப்பும் கொடுத்து உதவியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மளிகைப் பொருள்கள் வாங்கக்கூட மூன்று கிலோ மீட்டர் செல்லும் நிலையிலுள்ள அந்தக் கிராம மக்களுக்கு, நந்தினியின் சேவை பெரிதும் உதவியிருக்கிறது. நந்தினியிடம் பேசினோம்.

நந்தினி
நந்தினி

̀̀`எங்க பகுதியில் அதிகமா வசிக்கும் இருளர் சமூகத்து மக்கள் தினக்கூலி வேலைக்குப் போறவங்க. இவங்க வீடுகள்ல ஒருத்தர் படிச்சிருந்தாலே பெரிய விஷயம். அன்றாடம் வேலைக்குப் போனாதான் சாப்பிடவே முடியும். அவங்க நிலைதான் எனக்கும். எங்க வீட்டுலயும் ரேஷன் அரிசி சாப்பாடுதான். ஆனாலும் எங்க ஊரிலுள்ள ஏழை மக்களுக்கு அவ்வப்போது என்னாலான உதவிகளைச் செய்வேன். பொங்கல், தீபாவளியில வயசானவங்க 10 பேருக்கு துணி எடுத்துக் கொடுப்பேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

10-வது வரைக்கும் படிச்சிருக்கேன். அதனால சமூக நிகழ்வுகள் பத்தி எனக்கு ஓரளவுக்குத் தெரியும். கொரோனா பாதிப்பால் மக்கள் சிரமப்படும் சூழல்ல, அவங்களுக்கு என்னாலான உதவியைச் செய்ய நினைச்சேன். ஊர்ல ஏழை மக்களை சந்திச்சுப் பேசினேன். `ரேஷன் அரிசியில கஞ்சி காய்ச்சிக் குடிக்கிறோம்’னு சொன்னாங்க. எங்க ஊர்ல சில பெட்டிக் கடைகள்தாம் இருக்கு. அரசாங்க ஏற்பாட்டுல ஊருக்குள்ளயே காய்கறிகள் கொண்டுவந்து விக்கிறாங்க. ஆனா, மளிகைப் பொருள்கள் வாங்கணும்னா மூணு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிற பாலவாக்கம் கிராமத்துக்குப் போகணும்.

மாஸ்க் தைக்கும் பணியில் நந்தினி
மாஸ்க் தைக்கும் பணியில் நந்தினி

அத்தியாவசியத் தேவைக்காக மக்கள் வெளிய போகும் சூழல் இருக்கிறதால, அவங்களுக்கு மாஸ்க் வாங்கிக் கொடுக்கலாம்னு நினைச்சேன். விசாரிச்சுப் பார்த்ததுல மாஸ்க் விலையெல்லாம் அதிகம்னு கேள்விப்பட்டேன். அதுக்கான பணவசதி எங்கிட்ட இல்லை. நான் வீட்டுலயே துணி தைக்கிறேன். வேலைக்குப் போக முடியாம கையிலயும் காசு புலங்காம இருக்கிறதால மக்களும் என்கிட்ட துணி தைக்க வர்றதில்லை.

வீட்டுல சும்மா இருக்காம, பயன்படுத்தாம இருக்கிற துணிகள்ல மாஸ்க் செய்யலாம்னு முடிவெடுத்தேன். கடையில ஒரு மாஸ்க் வாங்கிட்டு வந்து அதுபோலவே மாஸ்க் செய்யக் கத்துக்கிட்டேன். பொங்கல், தீபாவளிக்கு ரேஷன் கடையில வாங்கி பத்திரப்படுத்தி வெச்சிருந்த காட்டன் புடவை, வேஷ்டிகளை துவைச்சுக் காயவெச்சு, அதுல 170 மாஸ்க் செஞ்சேன். அதுக்கு ரெண்டு நாள் ஆச்சு.

நந்தினி
நந்தினி

எங்க ஊர்ல இருக்கும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கைம்பெண்கள், முதியோர்கள்னு ஏழ்மையான 40-ம் மேற்பட்ட குடும்பங்களைத் தேர்வு செஞ்சேன். அவங்க வீட்டுல இருந்த எல்லோருக்குமே கடந்த ரெண்டு நாளா மாஸ்க் கொடுத்து, அதைப் பயன்படுத்தும் விதத்தைச் சொல்லிக்கொடுத்தேன். கூடவே, ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு குளியல் சோப்பு கொடுத்து அடிக்கடி கை கழுவி சுகாதாரமா இருக்க வலியுறுத்தினேன்” என்கிற நந்தினியின் கணவர் அர்ஜூனன், டெம்போ டிரைவராக வேலைக்குச் செல்கிறார். கணவரின் ஊக்கத்தால்தான் மாஸ்க் தயாரித்துக் கொடுத்திருக்கிறார் நந்தினி.

இவரது கணவரும் மாமியாரும் கொத்தடிமைகளாக இருந்து பல்வேறு இன்னல்களை எதிர்கொண்ட நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு மீட்கப்பட்டிருக்கிறார்கள். அந்த வலிகளை நந்தினியும் உணர்ந்திருக்கிறார். தற்போது கொத்தடிமைகளாக இருக்கும் மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுவரும் நந்தினி, கொத்தடிமைகளுக்கான மறுவாழ்வு சங்கத்தின் பாலவாக்கம் ஒன்றியத் தலைவியாகவும் செயல்படுகிறார்.

``இப்போ, ஏழை மக்கள் பலவகையிலும் ரொம்பவே சிரமத்துல இருக்காங்க. யாராச்சும் உதவி செய்ய மாட்டாங்களான்னு எதிர்பார்த்து காத்திருக்காங்க. அவங்ககிட்ட மாஸ்க்கும் சோப்பும் கொடுத்ததும் ரொம்பவே நெகிழ்ந்துட்டாங்க. நான் செஞ்சது ரொம்பவே சின்ன உதவிதான். ஆனா, என்னோட குடும்பச் சூழலுக்கு இது பெரிய விஷயம்.

மாஸ்க் வழங்கும் நந்தினி
மாஸ்க் வழங்கும் நந்தினி

சின்ன உதவியும் பெரிய உதவியும் பயனடைஞ்சவங்க இருக்கிற நிலையையும் அவங்கவங்க பார்க்கிற பார்வையிலதான் இருக்கு. அதனால எனக்கும் மக்களும் ரொம்பவே நிறைவு கிடைச்சிருக்கு. கொடுத்த மாஸ்க்கை துவைச்சுப் பயன்படுத்தச் சொல்லியிருக்கேன். இப்போ மறுபடியும் மாஸ்க் தைச்சுகிட்டிருக்கேன். அதையும் மக்களுக்கு கொடுக்கப்போறேன்.

இதனால எனக்கு வருமானம் இல்லாட்டியும், என்னோட தொழிலைச் சரியான முறையில பயன்படுத்துற மனநிறைவு கிடைக்குது. எங்க பக்கத்து ஊர்ல நிறைய மக்களுக்கு ரேஷன் கார்டு இல்லையாம். அதனால, ரேஷன் அரிசிகூட கிடைக்காம சிரமப்படுறாங்க. அவங்களுக்கு அரிசி கிடைக்க உதவுமாறு ஊர் பஞ்சாயத்துத் தலைவர்கிட்ட சொல்லியிருக்கேன். அடுத்து, அந்த மக்களுக்கு அரிசி கிடைக்க ஏற்பாடு செய்யணும்” என்கிறார் நந்தினி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism