Published:Updated:

தி.மலை: `அழுகையைக் கட்டுப்படுத்திக்கிட்டு நின்னேன்!’ - பெண் இன்ஸ்பெக்டரை நெகிழ வைத்த ஆட்சியர்

பெண் இன்ஸ்பெக்டரை நெகிழ வைத்த மாவட்ட ஆட்சியர்
பெண் இன்ஸ்பெக்டரை நெகிழ வைத்த மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி சல்யூட் வைத்து கௌரவப்படுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாடு முழுவதும் 74-வது சுதந்திரதின விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அதன்படி திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கொரோனா தடுப்புப் பணியில் சிறப்பாகப் பணியாற்றிய 78 களப்பணியார்களுக்கு பதக்கங்களையும் பாராட்டுக்களையும் வழங்கினார். தொடர்ந்து சிறப்பான பணிகளில் ஈடுபட்ட காவல்துறையினர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.

சுதந்திர தின விழா
சுதந்திர தின விழா

அப்போது தெள்ளாறு காவல்நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் அல்லிராணிக்கு சான்றிதழ் மற்றும் கேடயத்தை வழங்கினார் ஆட்சியர் கந்தசாமி. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நிற்கும் இடத்தில் அல்லிராணியை நிறுத்திய ஆட்சியர் கந்தசாமி, யாரும் எதிர்பாராத விதமாக கீழே இறங்கி அவருக்கு சல்யூட் அடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

வந்தவாசியை அடுத்திருக்கும் நாவல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி அமாவாசை, கரும்புத் தோட்டத்தில் போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு சென்று விசாரணை மேற்கொண்ட இன்ஸ்பெக்டர் அல்லிராணி, அமாவாசையின் உடலை ஆட்டோவில், உடற்கூறாய்வு பரிசோதனைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்தார். ஆனால், கொரோனா அச்சம் காரணமாக அவரது உடலைத் தூக்குவதற்கு உறவினர்கள் உட்பட யாருமே முன்வரவில்லை. அதனால் ஆட்டோ ஓட்டுநரின் உதவியுடன் அந்த உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் இன்ஸ்பெக்டர் அல்லிராணி. இந்தச் சம்பவம்தான் மாவட்ட ஆட்சியரே அவருக்கு சல்யூட் அடிக்க வைத்திருக்கிறது.

தி.மலை: `அழுகையைக் கட்டுப்படுத்திக்கிட்டு நின்னேன்!’ - பெண் இன்ஸ்பெக்டரை நெகிழ வைத்த ஆட்சியர்

இன்ஸ்பெக்டர் அல்லிராணியிடம் பேசினோம். ``என் வாழ்க்கையில் மறக்க முடியவே முடியாத தருணம் அது. அந்த நேரத்துல எனக்கு ஆனந்தக் கண்ணீர்தான் வந்துச்சி. மாவட்டத்தின் ஆட்சியரான அவர், சாதாரண இன்ஸ்பெக்டரான என்னை அவர் இடத்துல நிற்க வைத்து, கீழே இறங்கி சல்யூட் வைத்த சம்பவம் என்னால் தாங்கிக்கவே முடியல. அந்த நேரத்தில் அழுகையை கட்டுப்படுத்திக்கிட்டுத்தான் அங்க நின்னேன். வந்தவாசிக்குப் பக்கத்துல இருக்கற நாவல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வாய் பேச முடியாத அமாவாசை என்பவர் கடந்த மே மாதம் 14-ம் தேதி, ஏரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவரது கரும்புத் தோட்டத்தின் வழியே சென்றிருக்கிறார். அப்போ எலிக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த கரன்ட் கம்பி மீது உரசி இறந்துட்டாரு.

நைட் ரவுண்ட் முடிச்சிட்டு காலையில தூங்கிக்கிட்டு இருந்தப்ப 6.15 மணிக்கு ’கரும்புக் காட்டுல ஒரு டெட்பாடி கெடக்குது’ அப்படின்னு வி.ஏ.ஓ எனக்கு போன் பண்ணாரு. உடனே டிரைவரை மட்டும் கூட்டிக்கிட்டு நான் அங்க போயிட்டேன். அப்போது அங்கிருந்த கரும்புக் காட்டின் உரிமையாளர், காட்டை சுத்திப்பாக்க வரும்போது டெட்பாடியைத் பாத்தேன்னு சொன்னாரு. வரப்பில் நடந்து போனவருக்கு எப்படி பல அடி தூரம் தள்ளி, கரும்புக் காட்டுக்குள்ள இறந்து கிடக்கிறவரு தெரிஞ்சாருனு எனக்கு சந்தேகம் வந்துச்சி.

தி.மலை: `அழுகையைக் கட்டுப்படுத்திக்கிட்டு நின்னேன்!’ - பெண் இன்ஸ்பெக்டரை நெகிழ வைத்த ஆட்சியர்

அப்புறம் இறந்தவர் யாருன்னு அடையாளம் தெரியாததால எதாவது தடயம் கிடைக்குமான்னு உடலை ஆய்வு செய்தேன். அப்போதுதான் உடலின் பின்புறமும், அவர் அணிந்திருந்த பேண்டும் கருகி ஸ்மெல் வந்துச்சி. அங்க தரையில் இருந்த புல்லுங்களும் கருகிப் போயிருந்தது. அப்போ சந்தேகத்துக்கு, இடத்து உரிமையாளரை விசாரிச்சப்போதான், எலிக்காக கரன்ட் கம்பி வச்சதை ஒத்துக்கிட்டாரு. அமாவாசை செத்துப்போய் கிடந்ததைப் பார்த்ததும், கரன்ட் கம்பியை எடுத்து சுத்தி வீட்டுல மறைச்சி வைச்சுட்டுத்தான் எதுவும் தெரியாதது போல தகவல் சொல்லியிருக்காரு.

சுதந்திர தின விழாவில்...!
சுதந்திர தின விழாவில்...!

அதுக்கப்புறம் அவரை கைது செய்தோம். அமாவாசை இறந்துபோன தகவல் தெரிஞ்சதும் அவரோட சொந்தக்காரங்கள்லாம் வந்துட்டாங்க. அப்போ அங்க இருந்தவங்க எல்லாம் இளைஞர்கள்தான். ஆனால், உடலை தூக்க வாங்கனு நான் கூப்பிட்டும் யாரும் வரல. கொரோனா பயத்தால அவரோட அக்கா, அண்ணன், தம்பி கூட தூரத்துல நின்னுக்கிட்டு, என்னையும் தொடதீங்கன்னு கத்துனாங்க. அப்புறம் அந்த ஆட்டோ டிரைவர் உதவியோட உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைச்சேன்” என்று நெகிழ்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு