Published:Updated:

திருவாரூர்: ஊர்கூடி தார்ச்சாலை அமைத்த கிராம மக்கள்... கவனம் ஈர்க்கும் புத்தகரம் கிராமம்!

தார்ச்சாலை
News
தார்ச்சாலை

``தேர்தல் நேரங்கள்ல இந்தச் சாலையை தார்ச்சாலையாக அமைச்சுக் கொடுப்போம்னு எல்லா கட்சிகளுமே இதை முக்கிய வாக்குறுதியாவெக்கிறாங்க. அந்த அளவுக்கு இந்தப் பகுதி மக்களோட மிகவும் முக்கியமான எதிர்பார்ப்பாக இது இருந்துக்கிட்டு இருக்கு."

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகேயுள்ள ஓர் ஊரில் நீண்டகாலமாகப் பழுதடைந்து கிடந்த சாலையால் அந்த ஊர்மக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்துவந்திருக்கிறார்கள். இந்நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த மக்களும் இங்கிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பணி செய்யும் இளைஞர்களும் பங்களிப்பு செய்து, பெரும் செலவில் பழுதடைந்த சாலையை தார்ச்சாலையாக அமைத்திருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்ததோடு வரவேற்பையும் பெற்றுள்ளது.

சாலை
சாலை

சமீபகாலமாக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊர்மக்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களது ஊரின் நலன் கருதி, நீர்நிலைகளை தூர்வாருவது, மரம் நடுதல் போன்ற பணிகளைச் செய்துவருவதையும் பார்த்துவருகிறோம். இந்நிலையில்தான் புதிய முயற்சியாக, திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகேயுள்ள குமட்டி திடல் ஊராட்சிக்கு உட்பட்ட புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது சொந்த முயற்சியில் தார்ச்சாலை அமைத்திருப்பது பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது குறித்துப் பேசும் புத்தகரம் கிராமவாசிகள், ‘’இது எங்க ஊரோட பிரதான சாலை. இந்தச் சாலையோட மொத்த தூரம் சுமார் 3 கிலோமீட்டர். இந்தச் சாலையை கடந்துதான் நாங்க மத்த பகுதிகளுக்குப் போயாகணும். குறிப்பா, கடைத்தெரு, மருத்துவமனைகளுக்குப் போகுறதுக்கும், மாணவர்கள் பள்ளிக்கூடங்கள் போயிட்டு வரவும், இந்தச் சாலையைத்தான் பயன்படுத்தியாகணும். இந்தச் சாலை பழுதடைந்து பல வருஷம் ஆச்சு. இது குண்டும் குழியுமா இருக்குறதுனால, நாங்க படக்கூடிய கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இந்தச் சாலையைப் பார்த்து பயந்து போயி ஆம்புலன்ஸ், பள்ளிக்கூட வாகனங்கள் எதுவுமே எங்க ஊருக்குள்ளார வர்றதில்லை. அவங்களைச் சொல்லியும் குத்தமில்லை. இந்தச் சாலையில் கடந்து போகுறதுங்கறது ரொம்பவே சவாலான காரியம், நிறைய விபத்துகளும் நடந்திருக்கு.

திருவாரூர்: ஊர்கூடி தார்ச்சாலை அமைத்த கிராம மக்கள்... கவனம் ஈர்க்கும் புத்தகரம் கிராமம்!

அதுவும் மழைக்காலங்கள்ல சொல்லவே வேண்டியதில்லை, சாலையில தண்ணீர் தேங்கி நின்னு, நிலைமை ரொம்பவே மோசமாயிடுது. டூ வீலர்கள் போறவங்களும் ரொம்பவே சிரமப்படுறோம். இந்தச் சாலையை சீரமைச்சுக் கொடுக்கச் சொல்லி, ஊராட்சி நிர்வாகத்துகிட்டயும், திருவாரூர் மாவட்ட நிர்வாகத்துகிட்டயும் பலமுறை வலியுறுத்திப் பார்த்துட்டோம். ஆனால் எந்தப் பலனுல் இல்லை.

தேர்தல் நேரங்கள்ல இந்தச் சாலையை தார்ச்சாலையாக அமைச்சு கொடுப்போம்னு எல்லா கட்சிகளுமே இதை முக்கிய வாக்குறுதிகளாவெக்கிறாங்க. அந்த அளவுக்கு இந்தப் பகுதி மக்களோட மிகவும் முக்கியமான எதிர்பார்ப்பாக இருந்துக்கிட்டு இருக்கு. ஆனால் இந்தப் பிரச்னைக்கு விடிவு காலம் வராமலேயே இருக்கு. இதுக்கு மேலயும் அரசாங்கத்தை நம்பியிருந்து எந்தப் பிரயோசனமும் இல்லைன்னுதான், ஊர்மக்கள் எல்லாரும் பணம் போட்டு, தார்ச்சாலை அமைக்க முடிவெடுத்தோம்,

தார்ச்சாலை
தார்ச்சாலை

இதுக்காக வாட்ஸ்அப் குரூப்களை உருவாக்கினோம். குறிப்பாக, புத்தகரம் கிராமத்துலயிருந்து போயி வெளிநாடுகள்ல வேலை பார்க்கக்கூடிய இளைஞர்கள் இதுக்கு நிறைய பணம் கொடுத்திருக்காங்க. இந்த ஊர்ல இப்ப வசிக்கும் ஏழை, பணக்காரங்கங்கற வித்தியாசம் இல்லாம, எல்லாருமே தங்களால் முடிஞ்ச அளவுக்குப் பங்களிப்பு செலுத்தியிருக்காங்க. சுமார் ரெண்டு லட்சம் ரூபாய் பணம் சேர்ந்துச்சு. தாரச்சாலை அமைக்குறதுக்கான பொருள்கள் வாங்க இந்தப் பணத்தை பயன்படுத்தினோம். எங்க ஊர்ல ஆண்கள் பெண்கள் எல்லாரும் களத்துல இறங்கி வேலை பார்த்தோம். முதற்கட்டமாக, 750 மீட்டர் தூரத்துக்கு இதுக்கான வேலை நடந்து முடிவடையும் நிலையில இருக்கு. மீதிச் சாலையை சீரமைக்க எங்ககிட்ட இப்போதைக்கு பணம் இல்லை, இதுக்கு தமிழக அரசுதான் ஏற்பாடு செய்யணும்’’ எனத் தெரிவித்தார்கள். ஊர்கூடி சாலை அமைத்த மக்களின் உன்னத செயல் பாராட்டுக்குரியது. ஆனால் அரசு அதிகாரிகள், இதை மனதில்கொண்டு ஊர்மக்களே சாலை அமைத்துக்கொள்வார்கள் என வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கக் கூடாது என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக இருக்கிறது.