Published:Updated:

''களத்துல வீரமும், கட்டுத்தரையில் பாசமும்!'' காளைக்கு சிலைவைத்து வழிபடும் குடும்பம்!

சந்திரசேகர் மற்றும் குடும்பத்தினர்.
சந்திரசேகர் மற்றும் குடும்பத்தினர்.

மதுரை அருகே, வீட்டில் வளர்த்த ஜல்லிக்கட்டுக் காளைக்கு சிலைவைத்து வழிபடுகிறது ஒரு குடும்பம்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது சொக்கம்பட்டி கிராமம். இக்கிராமத்தின் மில்கேட் குடியிருப்புப் பகுதியில் வசித்துவரும் சந்திரசேகர், தனது வீட்டில் வளர்க்கப்பட்ட ஜல்லிக்கட்டுக் காளை இறந்த பிறகு, அதனை மாட்டுத் தொழுவத்தில் புதைத்து, அந்த இடத்தில் காளையின் நினைவாக சிலை எழுப்பியிருக்கிறார். மேலூர் சுற்றுவட்டார கிராமங்களுக்கு சந்திரசேகர் வீட்டுக் காளைச் சிலை மிகவும் பிரபலம். குறிப்பாக, ஜல்லிக்கட்டு சீசனில், மேலூர் பகுதி கிராமத்துக் காளைகளை, சந்திரசேகர் வீட்டிற்கு அழைத்துவந்து, காளைச் சிலைக்கு பூஜை செய்து, ஆசி பெற்ற பின்னரே, ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு காளைகளை அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் அப்பகுதி மக்கள்.

காளை சிலை
காளை சிலை
ஜல்லிக்கட்டு மாடு வளர்க்க வாழ்க்கையையே அர்ப்பணித்த மதுரை செல்வராணி!

சந்திரசேகரிடம் பேசினோம். “25 வருஷத்துக்கு முன்னால, ஜல்லிக்கட்டுனா, என் அண்ணன் செந்தில்வேலைத் தான் சுத்துப்பட்டி கிராமத்துக்குத் தெரியும். எல்லா ஊருக்கும் போய் ஜல்லிக்கட்டுப் போட்டியில கலந்துகிட்டு நிறைய பரிசு வாங்கிட்டு வருவார். எங்க வீட்டுலயும் ஏழெட்டு ஜல்லிக்கட்டுக் காளைகள் நிக்கும். அத்தனையும் அவர் ஒருத்தரே பாத்துக்குவாரு. நானோ, என் அப்பாவோ ஜல்லிக்கட்டுக் காளைகள் கிட்ட போக மாட்டோம். கறவை மாடுகளை மட்டும்தான் நாங்க பார்த்துக்குவோம். ஒரு நாள், உடம்பு சரியில்லாம எங்க அண்ணன் இறந்துட்டார். காளைகளை பார்க்க ஆள் இல்லாம போச்சு. ஒரு கட்டத்துல வீட்டுல ஜல்லிக்கட்டுக் காளைகளே இல்ல.

காளை சிலையுடன் சந்திரசேகர்
காளை சிலையுடன் சந்திரசேகர்

எங்க வீட்ல நின்ன கறவை மாடு ஒன்னு சினை வச்சு, காளைக் கண்ணு போட்டுச்சு. அதைப் பாத்த எங்க அப்பா, ‘உங்க அண்ணன் பொறந்துருக்கான் பாருடா’னு சொன்னார். எங்க அண்ணனுக்கு கருப்பு கலர் காளையைத்தான் ரொம்ப பிடிக்கும். அதே மாதிரி, அந்த காளைக் கண்ணும் கருப்பு கலர்ல இருந்துச்சு. எங்களுக்கு ரொம்ப சந்தோசம். அன்னைல இருந்து நான், அந்தக் காளையை அண்ணன்னு தான் கூப்புடுவேன். என் ரெண்டு மகன்களும் பெரியப்பானுதான் கூப்டுவானுங்க. என் அண்ணன் மாதிரியே எங்க மேல ரொம்ப பாசமா இருக்கும். 22 வருசம் எங்க கூட இருந்துச்சு. 2015-ல, ஒரு நாள் உடம்பு சரியில்லாம இறந்துருச்சு. எங்களால தாங்கவே முடியல. அதை கட்டியிருந்த இடத்துலையே குழி தோண்டி புதச்சுட்டோம். முதல் வருச நினைவு நாளுக்குள்ள, அங்க சிலை வச்சுட்டோம். தினமும் பூஜை பண்ணுவோம்” என்றார் நெகிழ்ச்சியோடு.

காளை சிலை
காளை சிலை
ஜல்லிக்கட்டு காளைகள்... வாடிவாசலில் கெத்து காட்ட எதெல்லாம் அவசியம்?

“என் பெரியப்பா இதுவரை ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகிட்டு பரிசு இல்லாம வீட்டுக்கு வந்தது இல்ல. அதே மாதிரி தான் எங்க பெரியப்பா காளையும். தங்க காசுகள், மிக்சி, கிரைண்டர், சைக்கிள், கட்டில்கள், கோப்பைகள், நிறைய சில்வர்- பித்தளைப் பாத்திரங்கள்’னு எங்க வீட்டையே நிறைச்சு வச்சுருந்தார்” என பேச ஆரம்பித்தார் சந்திரசேகரின் மகன் செந்தில். ”தொழுவத்துல அவர் பாசத்தை யாராலும் மிஞ்ச முடியாது. கயிறு அறுந்தா கூட, அமைதியா பக்கத்துல வந்து நிப்பார். ஆனா, களத்துல ஒரு ஆள் தொட முடியாது. ’சொக்கப்பட்டிக் காரிக்காளை வருது’னு மைக்ல சொன்னா, எல்லா பயலுகளும் ஒதுங்கி தான் நிப்பானுங்க. அந்த அளவுக்கு ஆக்ரோஷமா களத்துல வந்து இறங்குவாரு. களத்தைத்தாண்டி, கயிறு போட்டா போதும். அமைதியாகிடுவார். எங்க மேல அவ்வளவு பாசம் வச்சுருப்பார். அவர் இறந்தப்போ, என் அண்ணன் சிங்கப்பூரில் இருந்தான். நான் இங்கேயும், அவன் சிங்கப்பூர்லயும் மொட்டை போட்டோம். குடும்பத்துல ஒரு ஆள் இறந்தா என்ன காரியம் பண்ணனுமோ அதைப் பண்ணோம். இப்போ, சிலை வச்சு கும்பிட்டுகிட்டு இருக்கோம். அவர் எங்க கூடவ தான் இருக்கார்” என்றார் சந்திரசேகரின் மகன்.

சந்திரசேகர் மற்றும் குடும்பத்தினர்.
சந்திரசேகர் மற்றும் குடும்பத்தினர்.
ஜல்லிக்கட்டு காளைகளோடு விளையாடும் 4 வயது மதுரை சிறுமி... வியக்கும் ஊர்மக்கள்!

சந்திரசேகரின் மனைவி சாந்தி “என் மச்சான் பேரு செந்தில் வேல். அதனால், என் இளைய மகனுக்கும், காளைக்கும் செந்தில்னு பேர் வச்சோம். சின்ன பசங்க காளைக் கிட்ட போனா கூட எதுவும் செய்யாம அமைதியா அவங்க கூட விளையாடுவார். கட்டுத்தரையை சுத்தமா வச்சுக்கிட்டு, வெள்ளி செவ்வாய்க்கு சாம்பிராணி போட்டா தான் அவருக்குப் பிடிக்கும். அதே மாதிரி தான் சிலை வச்சப்பின்னரும் செஞ்சிட்டு இருக்கோம். சிலை வைக்கணும்னு முடிவு பண்ணப்போ, என் மகன் எடுத்த போட்டோவை எல்லாம் பார்த்து அவர் உட்கார்ந்திருக்குற மாதிரி ஒரே கல்லுல 4 அடி நீளத்துல, இரண்டரை அடி அகலத்துல சிலை செஞ்சோம். சிலையில, மூக்கணாங்கயிறு மாட்ட ஓட்டை இருக்கும். அடிக்கடி கயிறு மாத்துவோம். எங்க ஊர்ல மட்டுமில்ல, சுத்தியிருக்க ஊர்ல இருந்தும், காளைகளை இங்க கூட்டிவந்து கும்பிட்டுட்டு போவாங்க” என்றார்.

வீட்டில் வளர்த்த காளையை குடும்பத்தில் ஒரு நபராக நினைப்பது வழக்கான ஒன்றாக இருந்தாலும், சந்திரசேகர் குடும்பத்தார், காளைக்கு சிலை வைத்து வழிபடுவது அனைவரையும் ஆச்சர்யத்திலும், நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு