Published:Updated:

மலக்குழி... காவு வாங்கும் சமூக அநீதியும் `பாண்டிகூட் 2.0' ரோபோ நம்பிக்கையும்!

பாண்டிகூட்
பாண்டிகூட்

இறந்தவர்களின் மனைவியர், குடும்ப பாரத்தைச் சுமப்பதற்காக கணவரின் பணியைத் தொடர்கிறார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கிறது இளநீர்குளம் கிராமம். அழகான பெயர். ஆனால், நிலைமை நேரெதிராக இருக்கிறது. பெட்டிப் பெட்டியாக குடிசைவீடுகள். பிளாஸ்டிக் ஷீட் வேயப்பட்ட கான்கிரீட் வீடுகள். இவற்றில் வசிக்கும் அனைவரும் துப்புரவுப் பணியாளர்கள்; உள்ளாட்சி அமைப்புகளில் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் (Sanitary workers). இவர்களில் சிலரையே மலக்கழிவுத் தொட்டி உள்ளிட்ட புதைக் கழிவுத் தொட்டிகளில் கழிவுகளை அள்ள அரசு மற்றும் தனியார் தரப்புகள் பயன்படுத்திக்கொள்கின்றன. இப்படி புதைக் கழிவுத் தொட்டிகளில் கழிவுகளை அகற்றுவோரை, 'மனிதக் கழிவு அகற்றுவோர்' (Manual scavengers) என்றே குறிப்பிட வேண்டும் என வலியுறுத்துகிறார்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள்.

மலக்குழி... காவு வாங்கும் சமூக அநீதியும் `பாண்டிகூட் 2.0' ரோபோ நம்பிக்கையும்!

கடந்த மார்ச் மாதம் செப்டிக் டேங்க்கைச் சுத்தம் செய்தபோது கிருஷ்ணமூர்த்தி என்பவர் விஷவாயு தாக்கி பலியானார். அவரைக் காப்பாற்றச் சென்ற அவரின் மகன்கள் இருவர், அருகில் வசிப்பவர்கள், என்னவோ ஏதோ என எட்டிப்பார்த்தவர்கள் என மொத்தம் ஆறு பேரை காவு வாங்கியது அந்த செப்டிக் டேங்க். உண்மையில், அவர்களை காவு வாங்கியது சாதியம் சார்ந்து வளர்ந்து நிற்கும் சமூக அநீதியே!

மலக்குழியில் இறங்குபவர்கள் கட்டாயம் மது அருந்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருப்பதால், குடிநோய் சார்ந்தும் இங்கே இறப்புகள் ஏராளம். அப்படி இறந்தவர்களின் மனைவியர், குடும்ப பாரத்தைச் சுமப்பதற்காக கணவரின் பணியைத் தொடர்கிறார்கள். - இந்த அவலநிலை குறித்த முழுமையான செய்திக் கட்டுரையை வாசிக்க > மலக்குழி அல்ல... சவக்குழி - காவு வாங்கும் சமூக அநீதி! https://www.vikatan.com/news/general-news/manual-scavenging-tragedy

பாண்டிகூட் 2.0...

'பல கோடி ரூபாய் செலவில் விண்ணுக்கு ராக்கெட்டுகளை ஏவும் நம்மால், இந்த மலக்குழிகளை சுத்தம் செய்யும் கருவிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லையே... ஏன்?' - அவ்வப்போது எழும் இந்த ஆதங்கக் குரல்களுக்கு எதிர்வினையாய் ஆராய்ச்சியை தன்முனைப்போடு செய்து, ஒரு ரோபோவைக் கண்டுபிடித்துள்ளனர் கேரளாவைச் சேர்ந்த விமல் கோவிந்த், ரஷீத், நிகில், அருண் ஜார்ஜ், ஜலீஸ், அப்சல் முட்டிக்கல், சுஜோத், விஷ்ணு ஆகிய எட்டு பொறியியல் மாணவர்கள். இதற்கு 'பாண்டிகூட்' (Bandicoot - பெருச்சாளி) எனப் பெயர் சூட்டியுள்ளனர். பலருக்கும் ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும், நிம்மதியையும் ஒருசேர அளித்துள்ளது இந்த நற்செய்தி.

சில மாதங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட இந்த ரோபோ, கேரளாவின் திருவனந்தபுரம் மாநகராட்சியிலும், தமிழகத்தில் கும்பகோணம் நகராட்சியிலும் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டது. அப்போது ரோபோவை இயக்குவதிலும் இடம் மாற்றுவதிலும் பல சிரமங்கள் ஏற்பட்டன. இதனால் பாண்டிகூட்டை நடைமுறைக்குக் கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால், அந்த இளைஞர்கள் சோர்வடையவில்லை. அந்த எட்டு இளைஞர்களில் நான்கு பேர் சேர்ந்து 'ஜென்ரோபோடிக்ஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்கள். அதில் 'பாண்டிகூட்'டின் செயல்பாட்டுக் குறைகளை நிவர்த்திசெய்து மேம்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர்.

அவர்களின் பெருமுயற்சியின் பலனாக, குறைகள் சரிசெய்யப்பட்டு 'பாண்டிகூட் 2.0' உருவானது. 48.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த 'பாண்டிகூட்' ரோபோ, தற்போது தஞ்சாவூர் மாநகராட்சியில் பயன்படுத்தப்படுகிறது. அதன் செயல்பாடு குறித்து தஞ்சாவூர் மாநகராட்சியின் பாதாளச் சாக்கடைப் பிரிவு மேற்பார்வையாளர் சிவக்குமாரிடம் பேசினோம்.

மலக்குழி... காவு வாங்கும் சமூக அநீதியும் `பாண்டிகூட் 2.0' ரோபோ நம்பிக்கையும்!

''நான்கு சக்கரங்களைக்கொண்ட இந்த ரோபோ, கார்பன் மூலம் உருவாக்கப்பட்டிருப் பதால் எடை மிகக் குறைவாகவே உள்ளது. வெவ்வேறு இடங்களுக்கு எளிதில் கொண்டு செல்ல முடிகிறது. பட்டன்கள் மூலம் இயக்கும் வசதி உள்ளது. 25 அடி ஆழம் வரை செல்லக்கூடிய வகையில் பிளாஸ்டிக் குழாய்க்குள் ஒயர்கள் இணைக்கப்பட்டுள்ளன. குழிக்குள் இறக்கி எளிமையாக வேலை செய்வதற்கேற்ப விரிந்து மடங்கும் வகையில் இந்த ஒயர்கள் அமைக்கப் பட்டுள்ளன.

கழிவுகளை அள்ளும் பகுதி மனிதர்களின் கை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், கழிவுகளைச் சுமக்க விரியும் தன்மைகொண்ட பக்கெட்டும் பொருத்தப்பட்டுள்ளது. 'கை' போன்ற பகுதி உள்ளே சென்று கழிவுகளை அள்ளி பக்கெட் போன்ற பகுதியில் கொட்டும். பட்டனை அழுத்தினால் கழிவுகளைச் சுமந்தபடி பக்கெட் மேலே வந்துவிடும். சாக்கடைக்குள் சுத்தம் செய்யும் பணிகளை மேலே இருந்தபடி பார்ப்பதற்காக எல்.இ.டி ஸ்கிரீன் உள்ளது. அதில் இணைக்கப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் சாக்கடையில் அடைப்பு உள்ள பகுதியையும் எளிதில் கண்டறிய முடியும். இருட்டான பகுதிகளிலும் இந்த கேமராக்கள் படம்பிடிக்கின்றன. இதுமட்டுமல்லாமல் விஷவாயுவைக் கண்டறியும் கருவியும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. செல்போனை இயக்குவதுபோல் இந்த ரோபோவை எளிதாக இயக்க முடியும்'' என்றார் சிவக்குமார்.

'பாண்டிகூட் 2.0' ரோபோவை வடிவமைத்த 'ஜென்ரோபோடிக்ஸ்' நிறுவனத்தின் இணை நிறுவனர் அருண் ஜார்ஜிடம் பேசினோம். ''முதல் வெர்ஷனைவிட 2.0-வின் கொள்ளளவையும், கழிவுகளை அகற்றும் நேரத்தையும் அதிகரித்துள்ளோம். ரோபோவின் உடல் பாகங்களை வலிமையான உலோகத்தால் அமைத்துள்ளோம். முதல் வெர்ஷனில் ஒரு கேமரா மட்டுமே இருந்தது. 2.0-வில் நான்கு கேமராக்களைப் பொருத்தியுள்ளோம். பாண்டிகூட் 2.0-வுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்த கட்டமாக கோயம்புத்தூர், சென்னை, திருவனந்தபுரம் ஆகிய மாநகராட்சிகளுக்கு இந்த ரோபோவை வழங்கவுள்ளோம்" என்றார் தன்னம்பிக்கையுடன்.

இந்த ரோபோ குறித்து துப்புரவுப் பணியாளர்கள் சொல்வது என்ன? சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன? - முழுமையான செய்திக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > பாண்டிகூட் 2.0 - மலக்குழிகளைச் சுத்தம் செய்யும் ரோபோ https://www.vikatan.com/news/general-news/a-robot-to-end-manual-scavenging

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு