Published:Updated:

தொழுதூர் டு மதுரை... விபத்து, கால் சிதைவு... ஒரு தாயின் உயிரைக் காக்க நடந்த ரியல் போராட்டம்!

சிகிச்சையில் ராஜாம்மாள்
சிகிச்சையில் ராஜாம்மாள்

பெரிய மருத்துவமனைகளே கைவிட்ட ராஜம்மாளை, வட்டார மருத்துவமனை மருத்துவர்கள் போராடிக் காப்பாற்றினர்.

பேரனின் முதல் பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகளைக் குடும்பத்தினர் செய்துவர, தாய் ராஜாம்மாள் தனது மகன்களுடன் மளிகைப் பொருள்களை வாங்க, பக்கத்து ஊரான தொழுதூருக்கு கிளம்பிச்சென்றார். திட்டமிட்ட பொருள்களை வாங்கிக்கொண்டு, வாடகை ஆட்டோ ஒன்றில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

`அந்த விபத்து ஏற்படுத்திய தாக்கம்தான் காரணம்!' - இலவச ஆம்புலன்ஸ் சேவையில் கேரள பேக்கரி ஓனர்

எதிரே வந்த ஆட்டோ ஒன்று, இவர்கள் பயணித்த ஆட்டோ மீது மோதி நின்றது. நடந்த விபத்தில் ராஜாம்மாளின் வலது கால் சேதமடைந்து ரத்தவெள்ளத்தில் கிடந்தார். அவரை, அப்படியே வாரிப்போட்டுக்கொண்ட மகன்கள், அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் போனார்கள். அங்கு முதலுதவி செய்த மருத்துவர்கள், பெரம்பலூருக்குப் பரிந்துரைத்தார்கள்.

தொழுதூர் டு மதுரை... உயிர் போராட்டம்!

அதன்படி ராஜம்மாள், பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கும், ஆறாக ஓடும் ரத்தத்தை எங்களால் நிறுத்த முடியல. உடனடியாக பெரிய மருத்துவமனைக்குக் கொண்டுசென்றால் அம்மாவைக் காப்பாற்றலாம் என்றனர்.

ambulance
ambulance

மகன்கள், தாயைக் காப்பாற்றிட பல தனியார் மருத்துவமனையின் கதவுகளைத் தட்டியுள்ளனர். தொடர் விடுமுறையைக் காரணம் காட்டிய தனியார் மருத்துவர்கள் திருச்சிக்கு போகச் சொன்னார்கள். அதன்படி ஆம்புலன்ஸில் ராஜம்மாள் திருச்சி கொண்டுசெல்லப்பட்டார்.

திருச்சி மருத்துவர்களும், “தாமதமில்லாமல் மதுரை போனால் காப்பாற்றிவிடலாம்” என்றார்கள். இப்படியான அலைக்கழிப்புக்கு மத்தியில் ராஜம்மாளின் மகன் லட்சுமணன் நம்மை அழைத்து, ‘அம்மாவைக் காப்பாற்ற உதவி செய்யுங்கள்’ எனக் கோரிக்கை வைத்தார்.

திக் திக் நிமிடங்கள்

மருத்துவமனையில்
மருத்துவமனையில்

அடுத்த சில நிமிடங்களில் நாம் நேரில் சென்று விசாரித்தோம். “ராஜம்மாளின் வலது காலில் பலத்த காயம். ரத்தம் அதிகமாக வெளியேறியபடி இருக்கவே, இரண்டு யூனிட் ரத்தம் ஏறிக்கொண்டிருக்க, ஆம்புலன்ஸ் மதுரை நோக்கிப் பறந்தது.

அடுத்த 10 நிமிடங்களில் மீண்டும் போன் வந்தது. ’ரத்தம் அதிகம் வெளியேறுவதால், உடல்நிலை மோசமாகிக்கொண்டே போகிறதாம். மதுரை கொண்டு போகமுடியுமான்னு தெரியல’ என்றார்கள். இக்கட்டான சூழல். இந்நிலையில், விராலிமலை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரும், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணருமான ஜான் விஸ்வநாத்தை தொடர்புகொண்டோம்.

அவரிடம், ராஜம்மாளைப் பற்றிச் சொன்னோம். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்த திருவாலந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜம்மாள். 5 மகன்கள், ஒரு மகள். அதில் மூத்த மகன் கொளஞ்சி மற்றும் மகள் வள்ளி ஆகியோர் மாற்றுத்திறனாளிகள். ராஜம்மாளும் அவரது கணவர் பிச்சைப்பிள்ளையும் உழைப்பால் பிள்ளைகளைக் காப்பாற்றி வந்தனர். இந்நிலையில், விபத்து என விளக்கினோம்.

டாக்டர் ஜான் விஸ்வநாத்
டாக்டர் ஜான் விஸ்வநாத்

சட்டென மருத்துவர், “அந்தம்மாவை, விராலிமலை அரசு மருத்துவமனையில் அனுமதியுங்கள். முதலுதவி செய்வோம். மற்றதை பார்த்துக்கொள்வோம்” என்றார். அடுத்த 15 நிமிடங்களில், ராஜம்மாள் விராலிமலை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ராஜம்மாளின் வலதுகால் எலும்பு மற்றும் தொடை எலும்பு சேதமடைந்துள்ளது என்றும், தசை நரம்புகள் சிதைந்துள்ளது என்பதையும் கண்டறியும்போதே அதிகப்படியான ரத்தம் வெளியேறியதால், ராஜம்மாள் மூச்சு மற்றும் இருதயத் துடிப்பு நின்று, சுயநினைவு இழந்தார். மருத்துவர் மற்றும் செவிலியர்கள் ஏதேதோ முதலுதவிகள் செய்தார்கள். மிக நீண்ட போராட்டத்தின் பலனாய் உயிரை மீட்டனர்.

விபத்து சிதைத்த காலை அறுவை சிகிச்சை செய்யும்  மருத்துவர்கள்
விபத்து சிதைத்த காலை அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள்
சென்னையில் நடிகை யாஷிகா ஆனந்த் பயணித்த கார் விபத்து! - இளைஞர் படுகாயம்

ரத்தம் தேடி பயணம்… உதவிய உள்ளங்கள்

பெரிய மருத்துவமனைகளே கைவிட்ட ராஜம்மாளை, வட்டார மருத்துவமனை மருத்துவர்கள் போராடிக் காப்பாற்றினர்.

உயிர்பிழைத்த ராஜம்மாளுக்கு அதிக அளவு ரத்தம் தேவைப்பட்டது. சூழலைப் புரிந்துகொண்ட மருத்துவர், 6 யூனிட் ரத்தம் ஏற்பாடுசெய்தார். மேலும் ரத்தம் தேவை என்பதால் திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் தேடி அலைந்தோம். தொடர் அலைச்சல் மற்றும் கண்விழிப்பு காரணமாக, ராஜம்மாளின் மகன்களான லட்சுமணன், ஆனந்த், ராமராஜன் ரத்தம் கொடுக்க முன்வந்தும், இயலாத சூழல். தொடர்முயற்சியின் பலனாய் பெரம்பலூர் ராதாகிருஷ்ணன், திருச்சி ரமேஷ் மற்றும் ராஜம்மாளின் மகன்கள் ரத்த தானம் செய்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்கள், நண்பர்கள் மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை ரத்த வங்கிமூலம் 16 யூனிட் ரத்தம் சேகரித்தோம். சில நண்பர்கள், 'ரத்தம் தேவை எனில் கூப்பிடுங்க' என நம்பிக்கையளித்தனர்.

சிகிச்சையில்  ராஜாம்மாள்
சிகிச்சையில் ராஜாம்மாள்

5 மணி நேர அறுவைசிகிச்சை

தொடர் சிகிச்சையின் பலனாக, ராஜம்மாளின் உடல்நிலையில் முன்னேற்றம். காலை எடுத்தே ஆகவேண்டும் என்கிற நிலைதான். ஆனால், சின்ன முயற்சி. சேதமடைந்த கால்களை தசைமாற்று பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சரிசெய்ய முயற்சி செய்வோம். இல்லை எனில் காலை அகற்ற வேண்டும் எனக் கூறினார்கள். அதன்படி, கடந்த 10-ம் தேதி 5 மணி நேரம் தொடர் அறுவைசிகிச்சை நடைபெற்றது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு தீவிர கண்காணிப்பில் இருந்தார். நாள்கள் நகர்ந்தன. உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள், காலைக் காப்பாற்றவும் உழைத்தார்கள். ஆனால், அறுவைசிகிச்சை செய்த காலில் ரத்த ஓட்டம் இல்லை. மீண்டும் சோதனை. சில நாள்களுக்கு முன்பு அறுவைசிகிச்சை மூலம் சேதமடைந்த காலை நீக்கினர்.

இனி ஆபத்தில்லை…

நம்மிடம் பேசிய மருத்துவர் ஜான் விஸ்வநாத், “ராஜம்மாளின் காலைக் காப்பாற்ற கூடுமானவரை முயற்சி செய்தோம். ஆனால், அவரின் உடல் ஒத்துக்கொள்ளவில்லை. அவரின் உயிர் முக்கியம் என்பதால், காலை எடுக்கவேண்டிய நிலை. சில தினங்களில் அவருக்கு நடைப்பயிற்சி தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காயங்கள் ஆறியதும், நவீன செயற்கைக் கால் பொறுத்த ஏற்பாடு செய்யப்படும். நடந்ததை எண்ணி கவலைப்பட வேண்டாம். அவர் உயிர் பிழைத்ததே பேரதிசயம்” என்றார்.

அதிவேகத்தில் வந்த ஆட்டோ, லாரி - 6 பேரின் உயிரைப் பலிகொண்ட சாலை விபத்து

அதை கேட்டுக்கொண்டிருந்த ராஜம்மாளின் மகன் லட்சுமணன், “விராலிமலை அரசு மருத்துவர்களும் விகடனும் இல்லையெனில் எங்கள் தாயை பறிகொடுத்திருப்போம். அம்மாவின் உயிரைக் காப்பாற்ற உதவிய எல்லோருக்கும் கோடி நன்றிகள்” என்றார் நெகிழ்வோடு.

பின் செல்ல