Published:Updated:

பசுமை போர்த்திய பள்ளிக்கூடம்... 10,000 மரங்கள் வளர்த்த ஆசிரியரின் அனுபவம்!

முயற்சி
பிரீமியம் ஸ்டோரி
News
முயற்சி

முயற்சி

“பள்ளிக்கூடங்கள் ஏட்டுக்கல்வியைச் சொல்லிக் கொடுக்கும் இடம் மட்டுமல்ல, அங்கே இயற்கைச் சூழலையும் கற்றுக் கொடுக்கலாம். அவர்களைப் பயன்படுத்தி இயற்கைக்குத் தேவையானவற்றையும் செய்ய முடியும்” என்கிறார் மதுரை மாவட்டம், சிட்டம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் பெ.சிவராமன்.

பள்ளியின் முன்புறம்
பள்ளியின் முன்புறம்

மதுரையிலிருந்து மேலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது சிட்டம்பட்டி. பள்ளிக்குள் நுழையும் முன்னரே பெரிய புங்கமரத்திலிருந்து கிளம்பிய குளிர்க்காற்று நம்மைத் தழுவியது. கோயில், குளம், மரங்கள் என அமைதியான இயற்கைச் சூழலின் நடுவில் அமைந்திருந்த பள்ளிக்குள் சென்றோம்.

மாணவர்களுக்கு பசுமை உணர்வை ஊட்டிய ஆங்கில ஆசிரியர் பெ.சிவராமன் நம்மை வரவேற்றுப் பேசினார். “நான் இந்த பள்ளிக்கு வந்து 13 வருஷம் ஆச்சு. ஆரம்பத்துல இந்தப் பள்ளிக்கூட வளாகத்துல பத்து மரங்கள்கூட இல்லை. இப்போ 210 மரங்கள் இருக்கு. பள்ளிக்கூட வளாகத்துக்குள் மட்டும் இல்லை. வளாகத்துக்கு வெளியே இருக்கிறதும் நாங்கள்வெச்ச மரங்கள்தான். அதோ தெரியுது பாருங்க... அந்த அரசமரம்... மாணவர்களுக்குக் கழிவறை கட்டுவதற்காக இடிக்கப்பட்ட கட்டடத்தில் முளைத்திருந்தது. அதை அப்படியே வேருடன் பிடுங்கி நட்டுவெச்சோம். இப்போ மிகப் பெரிய மரமாக வளர்ந்து, பறவைகளுக்கு வீடாய் மாறியிருக்கு. கடந்த 13 வருஷத்துல பள்ளிக்கூடம், மாணவர்களோட கிராமங்கள், நெடுஞ்சாலைகள்னு பல இடங்கள்ல பத்தாயிரத்துக்கும் அதிகமான மரங்களை வளர்க்கிறேன். அதுல எங்க பள்ளி மாணவர்களோட பங்களிப்பும் இருக்கு” என்று முன்கதை சொன்னவர் தொடர்ந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பள்ளிக்குள்
பள்ளிக்குள்

“ஆசிரியர் ஆகுறதுக்கு முன்பிருந்தே எனக்கு மரங்கள் மீதும் பறவைகள் மீதும் பற்று அதிகம். காலையில வந்தவுடன் மாணவர்களிடம், `அந்த மரத்துக்குத் தண்ணீர் ஊற்றினாயா?’, `உன்னோட செடி ஏன் இன்னும் செழிப்பாக வளராம இருக்கு?’ என்றெல்லாம் மரங்களின் நிலை பற்றித்தான் விசாரிப்பேன். அதனால மாணவர்கள் என்னிடம் எதையும் மறைக்காமல் மனம் திறந்து பேசுறாங்க. பல விடுமுறை நாள்களை அவர்களோடுதான் செலவழிப்பேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

விடுமுறை தினங்கள்ல மாணவர்களை மதுரையைச் சுற்றியிருக்கும் நாகமலை, சமணர் மலை, யானை மலை, அழகர் மலை, அரிட்டாப்பட்டி மலை, குட்லாடம்பட்டி மலை போன்ற இயற்கைச் சூழல் நிறைஞ்ச இடங்களுக்குக் கூட்டிக்கிட்டுப் போய் இயற்கையின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்வேன். மரத்தைவெச்சு இயற்கையைப் பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்தினதாலதான் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்களை என்னால வளர்க்க முடிஞ்சுது” என்றவர் விருதுகள் குறித்து பேசினார்.

மாணவ மாணவியர்களுடன் ஆசிரியர் சிவராமன்
மாணவ மாணவியர்களுடன் ஆசிரியர் சிவராமன்

“குஜராத் ரிவர் சைடு ஸ்கூல் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் இரண்டும் இணைந்து நடத்திய, `டிசைன் ஃபார் சேஞ்ச்’ (Deign for Change) என்ற தலைப்பில் இந்திய அளவில் நடக்கும் போட்டியில் இரண்டு முறை பரிசு வாங்கியிருக்கோம். முதல் முறை முதல் 10 இடங்களுக்குள்ளயும், இரண்டாவது முறை முதல் 100 இடங்களுக்குள்ளயும் தேர்வாகிப் பரிசு வாங்கினோம்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் இன்டெல் (INTEL) நடத்தின மாநில அளவிலான போட்டியிலும் பரிசு வாங்கியிருக்கோம். மதுரை கீரின் போன்ற சமூக அமைப்புகள், அமைச்சர்களிடம்கூட பரிசுகள் வாங்கியிருக்கோம். ‘ஒரு மாணவன், ஒரு மரம், ஒரு பாட்டில்’ என்ற முறையை மாணவர்களிடையே அறிமுகப் படுத்தினேன். இந்தப் பள்ளியில படிக்கிற எல்லா மாணவர்களும் மரம் வளர்க்கிறாங்க” என்ற சிவராமன் நிறைவாக,

“நடுநிலைப் பள்ளிங்கிறதால படிப்பு முடிஞ்சு வெளியே செல்லும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தென்னை, மா, பலா, கொய்யா போன்ற மரக்கன்றுகளையும், மருதம், கடம்பம், சந்தன மரக்கன்றுகளையும் ஒவ்வொரு வருஷமும் கொடுக்கிறேன். அவர்கள் இந்தப் பள்ளியில படிச்சதுக்கான நினைவுகளை அந்த மரங்கள் நினைவுகூரவைக்கும். அதையெல்லாம் பள்ளியைவிட்டுப் போறதுக்கு முன்னமே நட்டுவெக்கச் சொல்லிடுறேன். நேரம் கிடைக்கும்போது மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பார்வையிடுவேன். இப்படி மாணவர்களுக்கு நெருக்கமாக இருந்து அவங்களோட ஆர்வத்தை இயற்கையின் பக்கம் திருப்பணும்கிறதுதான் என் நோக்கம். அதோட இந்தப் பூமிப் பந்துக்குப் பசுமைப் போர்வை போர்த்தணும். அதை மாணவர்கள் மூலம் செய்யறதுல எனக்கு ரொம்ப திருப்தி” என்ற சிவராமனின் முகத்தில் பெருமிதம் தெரிகிறது.

தொடர்புக்கு, சிவராமன், செல்போன்: 99447 93606