Election bannerElection banner
Published:Updated:

நெல்லை: `ஆட்டத்துக்கு நாங்களும் வரலாமா?' - இளவட்டக் கல் தூக்கும் போட்டியில் கலக்கிய பெண்கள்

இளவட்டக்கல் தூக்கும் போட்டி
இளவட்டக்கல் தூக்கும் போட்டி

ஆண்கள் தூக்கியது போலவே இந்த வருடம் பெண்களுக்கும் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடத்தப்பட்டது. பெண்களுக்கு 40 கிலோ எடை கொண்ட கல் வைக்கப்பட்டது.

தென் மாவட்ட கிராமங்களுக்குச் சென்றால், ஊரின் நடுவே உருண்டையான கல் கிடப்பதைப் பார்க்க முடியும். அதன் பின்னணியில் பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. ஒரு காலத்தில், `இளவட்டக்கல்’ என்று அழைக்கப்படும் அந்தக் கல்லைத் தூக்கியவர்களுக்கு மட்டுமே பெண் கொடுப்பார்களாம். அந்த அளவுக்குத் திருமணத்துக்கும் இளவட்டக்கல்லுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது.

இளவட்டக்கல் தூக்கும் இளைஞர்
இளவட்டக்கல் தூக்கும் இளைஞர்

சுமார் 60 வருடங்களுக்கு முன்பு வரையிலும், இளைஞர்களின் உடல் தகுதியைப் பரிசோதிக்கும் வகையில் அந்தக் கல் திகழ்ந்திருக்கிறது. தற்போது உள்ள இளைஞர்களுக்கு அதன் முக்கியத்துவம் தெரியாததால் பல கிராமங்களில் இளவட்டக்கல் தெருக்களில் மண்மூடிக் கிடக்கின்றன.

பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக முன்பு இளவட்டக்கல் தூக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த இத்தகைய நிகழ்வுகள் மறைந்து வருவதாக வரலாற்று ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இருப்பினும் தமிழகத்தின் சில கிராமங்களில் இப்போதும் மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டு, இளவட்டக்கல் தூக்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

போட்டியைத் தொடங்கி வைத்த இன்பதுரை எம்.எல்.ஏ
போட்டியைத் தொடங்கி வைத்த இன்பதுரை எம்.எல்.ஏ

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள வடலிவிளை கிராமத்தில் பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. ராதாபுரம் தொகுதியின் எம்.எல்.ஏ-வான ஐ.எஸ்.இன்பதுரை இந்தப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். இளைஞர்கள் மட்டுமல்லாமல் இளம் பெண்களும் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

வழுவழுப்பான இளவட்டக்கல், 45 கிலோ, 60 கிலோ 90 கிலோ மற்றும் 129 கிலோ எடை கொண்டவையாக இருந்தன. வயதுக்கு ஏற்றாற்போல் பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்ட போட்டியாளர்கள் இளவட்டக்கல்லைத் தூக்கினார்கள். வழுக்கும் கல்லைத் தோள் வரை தூக்கி கழுத்துக்குப் பின்பாகப் போட வேண்டும். சில இளைஞர்கள் திறமையாகச் செயல்பட்டு கழுத்து வரை தூக்கிய கல்லைக் கழுத்தைச் சுற்றிப் பல வட்டங்கள் அடித்து கீழே போட்டார்கள்.

`கைகோத்து பாரம்பர்ய நடனம்; இளவட்டக்கல்!' - தோடர் பழங்குடிகளின் `மொத்வர்த்' புத்தாண்டுக் கொண்டாட்டம்

ஆண்கள் தூக்கியது போலவே இந்த வருடம் பெண்களுக்கும் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடத்தப்பட்டது. பெண்களுக்கு 40 கிலோ எடை கொண்ட கல் வைக்கப்பட்டது. இந்தப் போட்டியில் பங்கேற்ற பெண்கள், தோளுக்கு மேல் தூக்கி பின்னால் வீசி பார்வையாளர்களை அசர வைத்தார்கள்.

ஆண்களுக்கான 129 கிலோ எடை கொண்ட கல்லை வடலிவிளை கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் ஒரே மூச்சில் தூக்கி வீசினார். அவரைத் தவிர வேறு யாராலும் அந்தக் கல்லைத் தூக்க இயலவில்லை. கடந்த வருடமும் அவரே முதல் பரிசைத் தட்டிச் சென்ற நிலையில் இந்த ஆண்டும் அவருக்கே பரிசு கிடைத்தது.

முதல்பரிசு வென்ற தங்கபுஷ்பம்
முதல்பரிசு வென்ற தங்கபுஷ்பம்

90 கிலோ எடையுள்ள கல்லைத் தூக்குவதில் போட்டி அதிகம் இருந்தது. அதில், முத்துப்பாண்டி என்ற வீரர் 12 முறை கல்லைக் கழுத்தைச் சுற்றித் தூக்கி முதல் பரிசை வென்றார். 40 கிலோ எடைகொண்ட இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் தங்கபுஷ்பம் என்பவர் முதல் பரிசு வென்றார்.

பெண்களுக்கென நடத்தப்படும் உரல் தூக்கும் போட்டி வழக்கம் போலவே இந்த ஆண்டு நடத்தப்பட்டது. அதில், பெண்கள் தங்களின் அபாரத் திறமையை வெளிப்படுத்தினார்கள். 45 கிலோ எடைகொண்ட உரலை அதிகம் முறை தூக்கி வீசிய பத்மபிரியா முதலிடம் பிடித்தார். ஆண்களுக்காக, உரலை இரு கைகளால் தூக்கி, பின்னர் ஒரு கையால் தலைக்கு மேல் உரலைத் தூக்கும் போட்டி நடத்தப்பட்டது.

உரல் தூக்கும் போட்டியில் பங்கேற்ற வீராங்கனை
உரல் தூக்கும் போட்டியில் பங்கேற்ற வீராங்கனை

கிராமிய மணம் கமழும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளைக் கிராமத்து மக்களும் அருகில் உள்ள கிராமத்தினரும் உற்சாகப்படுத்தினார்கள். வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ பரிசுகளை வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் பணகுடி இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு