கரூர்: `அவங்க குழந்தை மாதிரி!' - மனநலம் பாதித்த பெண்ணுக்கு உதவிய இன்ஸ்பெக்டர்

இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், மனநிலை பாதிக்கப்பட்ட தனபாக்கியம் பாதுகாப்பின்றி ரோட்டில் சென்றுவருவதைக் கண்டார். `தனபாக்கியத்துக்கு உரிய வைத்தியம் செய்ய வேண்டும். அவர் ஒரு குழந்தை மாதிரி’ என்று கூறி, தனபாக்கியத்துக்கு சிகிச்சை நடக்க ஸ்பாட்டிலிருந்தே நடவடிக்கை எடுத்தார்.
`அவங்க ஒரு குழந்தை மாதிரி. அவங்களுக்குத் தேவை நல்ல சிகிச்சையும் அரவணைப்பும்தான். அது கிடைச்சுட்டாலே அவங்க நம்மை மாதிரி நார்மலாகிடுவாங்க’ என்று கூறி, மனநலம் பாதித்த பெண்ணை மீட்டு, சிகிச்சைக்கு அனுப்பிவைத்து நெகிழவைத்திருக்கிறார், காவல்துறை ஆய்வாளர் ஒருவர்.

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், கழுகூர் ஊராட்சியிலுள்ள வெண்ணிலாபுரத்தைச் சேர்ந்தவர், தனபாக்கியம். இவரின் கணவர் பல வருடங்களுக்கு முன்னர் இவரை விட்டுவிட்டுச் சென்ருவிட்டதால், தனது மகள் வெற்றிலாவோடு தனியே வசித்துவருகிறார். அதோடு, தன் கணவர் தனக்குச் செய்த கொடுமையை நினைத்து, கடந்த ஏழு ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்திருக்கிறார். ஓலைக்குடிசை வீட்டில் எவ்வித அடிப்படை வசதியோ, உறவினர்களின் ஆதரவோ இன்றி மனநிலை பாதிக்கப்பட்ட தனது தாய் தனபாக்கியத்துடன் அவர் மகள் வெற்றிலா வசித்துவந்தார். இந்நிலையில், வெற்றிலா மணப்பாறையிலுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பலரின் உதவியுடன் பி.காம் முதலாம் ஆண்டு படித்துவருகிறார். 100 நாள் வேலை வாய்ப்பு உட்பட எந்த வேலைவாய்ப்போ, வருமானமோ இன்றி, இலவச ரேஷன் பொருள்களை வைத்துக்கொண்டு சாப்பிட்டு வாழ்ந்துவந்தனர்.

ஆதரவின்றி வாழும் தங்களுக்கு தங்கள் பெயரிலுள்ள இரண்டு சென்ட் நிலத்துக்கு தனிப் பட்டா, அரசுத் தொகுப்பு வீடு கட்டித் தருதல், தனது தாய்க்கு சிகிச்சையளித்து குணப்படுத்தித் தருதல் உள்ளிட்ட வாழ்வாதார உதவிகள் செய்து கொடுக்குமாறு கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன், தோகைமலை ஒன்றியத் தலைவர் லதா, ஆணையர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு குளித்தலை சிநேகிதி தொண்டு நிறுவனம் மூலம் கோரிக்கை மனுக்கள் அளித்தார் வெற்றிலா. அதன்பேரில், தோகைமலை ஒன்றியத் தலைவர் லதா, 'உங்களுக்கு தொகுப்பு வீடு ஒதுக்கீடு செய்து தரப்படும்' என உறுதியளித்தார். மேலும், குளித்தலை வருவாய்த்துறையினர் முதற்கட்டமாக கூட்டுப் பட்டா வழங்கினர். இதனால், வெற்றிலா முகத்தில், `இனி வாழ்ந்துவிடலாம்' என்ற நம்பிக்கை ஒளி பரவியது.
இந்த நிலையில், தோகைமலை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், கழுகூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்தபோது, மனநிலை பாதிக்கப்பட்ட தனபாக்கியம் பாதுகாப்பின்றி ரோட்டில் சென்று வருவதைக் கண்டார். அதைப் பார்த்து, பரிதாபப்பட்ட ஜெகதீசன், தனபாக்கியம் பற்றி அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தார். `தனபாக்கியத்துக்கு உரிய வைத்தியம் செய்ய வேண்டும். அவர் ஒரு குழந்தை மாதிரி' என்று கூறி, தனபாக்கியத்துக்கு சிகிச்சையளிக்க ஸ்பாட்டிலிருந்தே நடவடிக்கை எடுத்தார். சிநேகிதி தொண்டு நிறுவனம் உதவியுடன், சாந்திவனம் மனநலக் காப்பகத்தின் தலைவர் மற்றும் மணப்பாறையிலுள்ள சிந்துஜா மருத்துவமனை இயக்குநர் டாக்டர் கலையரசன் உள்ளிட்டோரை இன்ஸ்பெக்டர் தொடர்புகொண்டு பேசினார்.

அதன்பேரில், சாந்திவனம் காப்பகத் தலைவர் டாக்டர் கலையரசன் மற்றும் திருச்சி ஆத்மா மருத்துவமனை நிர்வாகச் செயலாளர் டாக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் ஏற்பாட்டின்படி, புழுதேரியிலுள்ள சாந்திவனம் மனநலக்காப்பக இயக்கநர் அரசப்பன், ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், செவிலியர் அனிதா ஆகியோர் கொண்ட குழுவினர், தோகைமலை காவல் நிலையத்துக்கு வந்தனர். அங்கு, சிநேகிதி தொண்டு நிறுவன இயக்குநர் சத்யா, ஒருங்கிணைப்பாளர் வடிவேல் உதவியுடன் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், மனநிலை பாதிக்கப்பட்ட தனபாக்கியத்தை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தார். பின்னர், உரிய மனநல மருத்துவ சிகிச்சை அளித்து குணப்படுத்தி, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறு கூறி, தனபாக்கியத்தை சிகிச்சைக்காக சாந்திவனம் மனநலக் காப்பகத்தாரிடம் ஒப்படைத்தார். அதோடு, இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தனது சொந்தச் செலவில் அரிசி, மளிகைப் பொருள்களை வாங்கி, தனபாக்கியம் மகள் வெற்றிலாவிடம் வழங்கி, அவரை நெகிழவைத்தார்.