சினிமா
தொடர்கள்
Published:Updated:

சாத்தான்குளம் சம்பவத்துல கிடைச்ச நீதி, துப்பாக்கிச்சூடு சம்பவத்துல கிடைக்கல!

 ஸ்னோலின் அம்மா வனிதா
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்னோலின் அம்மா வனிதா

- ஸ்னோலின் அம்மா வனிதாவின் குமுறல்!

2018, மே 22... தூத்துக்குடிக்குக் கறுப்பு நாள். அந்த நாளை அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது. சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிப் போராடிய மக்கள்மீது ஆகப்பெரிய அரச வன்முறை ஏவப்பட்டது. 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தார்கள். தூத்துக்குடி வரலாற்றில் அழியாக் கறை படிந்தது. இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன். அந்த அறிக்கை, கடமை தவறிய அரசு அதிகாரிகளையும் மக்கள்மீது வன்முறை நிகழ்த்திய காவல்துறையினரையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. நொடிக்கு நொடி தகவல்களைக் கேட்டறிந்துவிட்டு வெளியில் வந்து ‘எனக்கு எதுவுமே தெரியாது’ என்று பாவமான முகத்தோடு பேட்டியளித்த அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முகத்திரையையும் கிழித்திருக்கிறது.

அக்டோபர் 18-ம் தேதி, இந்த விசாரணை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையில் பரிந்துரைத்தபடி தவறிழைத்த, உயிர்பறித்த அதிகாரிகள்மீது நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறது தமிழக அரசு.

தூத்துக்குடித் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரில் எக்காலமும் நினைவிலிருந்து அகலாதவர் ஸ்னோலின். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டுக் கல்லூரியில் கால் எடுத்து வைக்கும் கனவோடு இருந்தவர், தான் வாழ்ந்த ஊருக்காகவும் வருங்காலத் தலைமுறையின் நலனுக்காகவும் போராட்டக் களத்துக்குச் சென்று துப்பாக்கித் தோட்டாக்களுக்கு இரையானார்.

சாத்தான்குளம் சம்பவத்துல கிடைச்ச நீதி, துப்பாக்கிச்சூடு சம்பவத்துல கிடைக்கல!

விசாரணை அறிக்கை பரபரப்பைக் கிளப்பியுள்ள சூழலில் ஸ்னோலினின் வீட்டுக்குச் சென்று அவரின் அம்மா வனிதாவைச் சந்தித்தேன். வீடு முழுக்க புகைப்படங்கள் வழி ஸ்னோலினின் ஆன்மா உறைந்திருக்கிறது. இறுக்கமும் துயரமும் தோய்ந்த முகத்தோடு ஸ்னோலினின் ஒரு புகைப்படத்தின் முன் அமர்ந்து ஜெபமாலையை உருட்டிக் கொண்டிருக்கிறார் வனிதா. கசிந்த கண்களோடு என் கரம்பற்றி அமரவைக்கிறார் அந்தத் தாய்.

“துப்பாக்கிச்சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசனின் விசாரணை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதுபற்றிக் கேள்விப்பட்டீர்களா?”

“நம் ஊர்ல இதுவரைக்கும் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள் எல்லாமே கண் துடைப்புக்காக அமைக்கப்பட்டதா தான் இருந்துச்சு. அருணா ஜெகதீசன் அம்மாவோட விசாரணை அறிக்கையையும் அதேமாதிரி கிடப்புல போட்ருவாங்களோன்னு பயந்தேன். சி.பி.ஐ விசாரிச்சா நியாயம் கிடைக்கும்னு நம்புனோம். ஆனா அவங்களும் ஒரு போலீஸ்காரர் பெயரைக்கூட குற்றப்பத்திரிகையில சேர்க்கலே. இந்த நீதிபதியம்மா துப்பாக்கிச்சூட்டுக்கு போலீஸ்காரங்கதான் காரணம்னு உண்மை நிலையை வெளிப்படையா சொல்லியிருக்காங்க. முழுக்க முழுக்க ஸ்டெர்லைட் ஆலையோட நலனைப் பாதுகாக்கத்தான் துப்பாக்கிச்சூடு நடந்திருக்குங்கிற உண்மை இப்போ வெளிச்சத்துக்கு வந்திருக்கு.”

“துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்டதாக 3 தாசில்தார்கள், 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். அரசின் நடவடிக்கை நம்பிக்கையளிக்கிறதா?”

“புதிய ஆட்சிப் பொறுப்பேற்றதும் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தகுதியின் அடிப்படையில் பணி வழங்கப்படும்னு தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் சொன்னார். முதல்வராகி 14 நாள்கள்லயே சொன்ன மாதிரி செஞ்சுட்டார். விசாரணை அறிக்கையும் இப்போ வந்திருக்கு. ஆனா, தாசில்தார், காவலர்கள் பணியிடை நீக்கமெல்லாம் தலையை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது போல இருக்கு. இவங்கெல்லாம் வெறும் அம்புதான். எய்தவங்க மேல இதுவரைக்கும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படலையே?

ஒரு மாநில முதலமைச்சருக்குத் தெரியாமல், அவர் உத்தரவு இல்லாமல் எப்படி துப்பாக்கிச்சூடு நடந்திருக்கும்? விசாரணை ஆணையம் அவரை விசாரணை செய்யும்னு எதிர்பார்த்தோம். நடக்கவேயில்லை. அவரைத்தானே முதல்ல அழைச்சு விசாரிச்சிருக்கணும்.”

சாத்தான்குளம் சம்பவத்துல கிடைச்ச நீதி, துப்பாக்கிச்சூடு சம்பவத்துல கிடைக்கல!

“ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்யப்போவதாகவும், அதை வாங்க 7 முன்னணி நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும் வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் கூறியுள்ளாரே?”

“உச்ச நீதிமன்றத்துல வழக்கு நிலுவையில் இருக்கு. நீதிமன்றத்தோட அனுமதியைப் பெறாமல் ஆலையை விற்பனை செய்யப் போறதா விளம்பரம் கொடுத்ததே தவறுன்னு வழக்கறிஞர்கள் எல்லாம் சொல்றாங்க. மக்கள் தொடர்ந்து போராடக்கூடாதுங்கிறதுக்காகப் போடுற நாடகம் இது. ஆலையை விக்கிறோம்னு சொல்லிட்டு இன்னொரு பினாமி கம்பெனியோட பேர்ல அவங்களே திரும்பவும் உற்பத்தியைத் தொடங்கத் திட்டமிடுறாங்களோன்னு சந்தேகமா இருக்கு. எதுவாயிருந்தாலும் இனிமே பேக்டரியை நடத்தத் தூத்துக்குடி மக்கள் அனுமதிக்க மாட்டோம்.”

“ஆணையத்தின் அறிக்கை மூலம் நீதி கிடைத்ததாக நம்புகிறீர்களா?”

“நீதிபதியம்மா உண்மை நிலையை எடுத்துச் சொல்லியிருக்காங்க. அந்த அளவுல திருப்தியாயிருக்கு. ஆனா துப்பாக்கிச்சூட்டுல சம்பந்தப்பட்ட எல்லாக் குற்றவாளிகளுக்கும் தண்டனை கிடைக்கிற நாள்தான் எங்களுக்கு முழுமையா நீதி கிடைச்ச நாள். சாத்தான்குளத்துல அப்பாவையும் மகனையும் போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு அடிச்சுக் கொன்ன 10 போலீஸ்காரங்களும் தண்டனை அனுபவிக்கிறாங்க. சாத்தன்குளம் சம்பவத்துல கிடைச்ச நீதி, துப்பாக்கிச்சூடு சம்பவத்துல கிடைக்கல. நிச்சயம் நீதி கிடைக்கும்னு நம்புறேன்.”

‘‘ ‘சமூக விரோதிகளால்தான் கலவரம் ஏற்பட்டது’ என்று கூறிய நடிகர் ரஜினிகாந்த்தையும் விசாரணை ஆணையம் கண்டித்திருக்கிறதே...”

“ஆமா... அப்படிச் சொன்னதுக்காக தூத்துக்குடி மக்கள்கிட்ட அவர் வெளிப்படையா மன்னிப்பு கேட்கணும்.”

சாத்தான்குளம் சம்பவத்துல கிடைச்ச நீதி, துப்பாக்கிச்சூடு சம்பவத்துல கிடைக்கல!

“வீடு முழுக்க ஸ்னோலின் புகைப்படங்கள் நிறைந்திருக்கின்றன. இப்போது உங்கள் மனநிலை எப்படியிருக்கிறது?”

“நான் என் மகளோட போய்ச் சேர்ந்தாதான் என் துக்கம் விலகும். உயிர் இல்லாத உடம்பு மாதிரிதான் எங்க வீடு கிடக்கு. எந்த நிவாரணமும் என் மகளைத் திரும்பத் தரப்போறதில்லை. அவ இருந்தப்போ இருந்த சந்தோஷம், கலகலப்பு எதுவுமே இல்ல. ஜெபமாலையைக் கையில வச்சுக்கிட்டு கண்ணை மூடி அவளை நினைச்சு ஒவ்வொரு மணியா உருட்டிக்கிட்டிருக்கேன். தினமும் காலையில என் செல்ல மகள் உறங்கிட்டிருக்கிற ‘வாடி’க்கு (கல்லறைத் தோட்டம்) போயி உட்கார்ந்து ஜெபிச்சுட்டு வருவேன். ஸ்னோலினுக்கு வக்கீலுக்குப் படிக்கணும்னு ஆசை. இந்தக் கொடுமை மட்டும் நடக்காமப்போயிருந்தா இந்நேரத்துக்கு கறுப்பு கவுனை மாட்டிக்கிட்டு கம்பீரமா கோர்ட்டுக்குப் போயிருப்பா. அதைப் பார்க்கணும்னு ஆசை ஆசையா இருந்தேன். எல்லாமே போச்சு...”

‘‘தமிழக அரசிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?’’

“ஸ்டெர்லைட் ஆலையை எந்த வடிவத்திலும் திறக்கக்கூடாது. அதுமட்டுமல்ல... ஒரு தகரம்கூட இல்லாம இங்க இருந்து அப்புறப்படுத்தணும். துப்பாக்கிச்சூட்டுல இறந்த 13 பேரின் நினைவா ஸ்தூபி எழுப்பணும்.”