Published:Updated:

தவறுசெய்த போலீஸாரை காப்பாற்ற முயற்சி... திசைமாறுகிறதா இரட்டை லாக்கப் டெத் வழக்கு?

போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
போராட்டம்

மாணிக்கராஜ் நல்லா படிக்கக் கூடியவன். பன்னிரண்டாம் வகுப்புல 1,127 மார்க் வாங்கியிருந்தான். ஏதோ தப்பு செஞ்ச அவன்மேல போலீஸார் அடுத்தடுத்து பொய் வழக்கு போட்டு, பெரிய குற்றவாளிபோல ஆக்கிட்டாங்க

தவறுசெய்த போலீஸாரை காப்பாற்ற முயற்சி... திசைமாறுகிறதா இரட்டை லாக்கப் டெத் வழக்கு?

மாணிக்கராஜ் நல்லா படிக்கக் கூடியவன். பன்னிரண்டாம் வகுப்புல 1,127 மார்க் வாங்கியிருந்தான். ஏதோ தப்பு செஞ்ச அவன்மேல போலீஸார் அடுத்தடுத்து பொய் வழக்கு போட்டு, பெரிய குற்றவாளிபோல ஆக்கிட்டாங்க

Published:Updated:
போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
போராட்டம்

இரட்டை லாக்கப் டெத் வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி போலீஸார், நான்கு வருடங்களாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினரைப் பாதுகாக்க சி.பி.சி.ஐ.டி முயல்வதாக பாதிக்கப்பட்டோர் குமுறுகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம், மருதூரைச் சேர்ந்த முருகேசன், வாகைக்குளத்தைச் சேர்ந்த மாணிக்கராஜ் ஆகியோரைத் திருட்டு வழக்கு தொடர்பாக 2018-ல் சிவந்திப்பட்டி போலீஸார் பிடித்துச் சென்றதாகவும், நான்கு நாள்கள் சட்ட விரோத காவலில்வைத்து, விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்றுவிட்டதாகவும் அப்போது குற்றச்சாட்டு எழுந்தது.

முருகேசன்
முருகேசன்
மாணிக்கராஜ்
மாணிக்கராஜ்

இது பற்றி நம்மிடம் பேசிய மாணிக்கராஜின் உறவினர்கள், “மாணிக்கராஜ் நல்லா படிக்கக் கூடியவன். பன்னிரண்டாம் வகுப்புல 1,127 மார்க் வாங்கியிருந்தான். ஏதோ தப்பு செஞ்ச அவன்மேல போலீஸார் அடுத்தடுத்து பொய் வழக்கு போட்டு, பெரிய குற்றவாளிபோல ஆக்கிட்டாங்க. முருகேசனுக்குத் திருட்டுச் சம்பவங்கள்ல தொடர்பு இருந்ததான்னு தெரியாது. ஆனா, அவன் மேலேயும் எந்த வழக்கும் கிடையாது. ரெண்டு பேரையும் அம்பாசமுத்திரம் பக்கத்திலுள்ள மண்பொத்தை என்ற இடத்துல பிடிச்ச போலீஸ்காரங்க, ஒவ்வொரு ஸ்டேஷனுக்கா கூட்டிட்டுப் போய் ராத்திரியெல்லாம் அடிச்சுருக்காங்க. நாலு நாள் அடிச்சதோட, ரெண்டு பேர் காலையும் உடைச்சுட்டாங்க. வலியில துடிச்ச அவங்களுக்கு எந்தச் சிகிச்சையும் கொடுக்காததால, சிவந்திப்பட்டி ஸ்டேஷன்லேயே செத்துட்டாங்க” என்றனர் வேதனையோடு.

தவறுசெய்த போலீஸாரை காப்பாற்ற முயற்சி... திசைமாறுகிறதா இரட்டை லாக்கப் டெத் வழக்கு?

இருவரின் மரணத்துக்கும் காரணமான காவல்துறையினர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றியதோடு, விரைவாக விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது நீதிமன்றம். அத்துடன் நெல்லை மாஜிஸ்ட்ரேட் விசாரிக்கவும் உத்தரவிட்டது.

பாதிக்கப்பட்டவர்களுக்காக சட்டரீதியாகவும், நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் சார்பாகவும் போராடிவரும் வழக்கறிஞர் மகாராஜன் பேசுகையில், “சாத்தான்குளம் வழக்குபோலவே இங்கேயும் இரு உயிர்கள் பலியாகியிருக்கின்றன. அங்கு இன்ஸ்பெக்டர் வரையிலான உயரதிகாரிகள் மட்டுமே தொடர்பு என்பதால் சி.பி.சி.ஐ.டி வேகமாகச் செயல்பட்டது. ஆனால், இந்த வழக்கில் அப்போது பொறுப்பில் இருந்த இரு எஸ்.பி-க்கள், டி.எஸ்.பி-யாக இருந்து தற்போது பதவி உயர்வு பெற்றிருக்க ஒரு எஸ்.பி உள்ளிட்ட 40 பேருக்குத் தொடர்பு இருக்கிறது. இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் இருக்கும் சி.பி.சி.ஐ.டி விசாரணை அதிகாரியால், உயரதிகாரிகளை எப்படி விசாரிக்க முடியும்... அதன் காரணமாகவே வழக்கு கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

அடித்துக் கொன்றுவிட்டு, இருவரும் விபத்தில் சிக்கியதாகப் பொய்யாக வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள் போலீஸார். விபத்து என்று வழக்கு பதிவுசெய்த காவலர்கூட, ‘அதிகாரிகள் என்னைப் கட்டாயப்படுத்தி வழக்கு போட வைத்தார்கள்’ என்று மாஜிஸ்ட்ரேட் விசாரணையின்போது சொல்லியிருக்கிறார். மாணிக்கராஜ் உடலில் 16 காயங்களும், முருகேசன் உடலில் 19 காயங்களும் இருந்ததாகவும், அவற்றை மறைக்கவே இரு சக்கர வாகன விபத்தில் இருவரும் சிக்கியதாகவும் பொய்யாக ஆவணங்களை போலீஸ் தயாரித்திருப்பதாக மாஜிஸ்ட்ரேட் சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது. (என்றவர், அந்த அறிக்கையின் நகலைக் காட்டினார்.)

2020-ல் சி.பி.சி.ஐ.டி விசாரணை அதிகாரியாக இருந்த இன்ஸ்பெக்டர் தேவி என்னிடம் பேசும்போது, ‘இந்த வழக்கில் எல்லா விசாரணையும் முடிந்துவிட்டது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நிலையில் இருக்கிறோம்’ என்று சொன்னார். அதற்கான ஆடியோ ஆதாரமும் என்னிடம் இருக்கிறது. அதற்குப் பிறகு இரண்டு வருடமாகியும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. சில வாரங்களுக்கு முன்பு ஒரு டி.எஸ்.பி என்னிடம், ‘இந்த விவகாரத்தைக் கைவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் பணம் வாங்கித்தருவதாக’ பேரம் பேசினார். அவர் என்னிடம் 42 நிமிடங்கள் பேசியதற்கான ஆதாரம் இருக்கிறது.

மகாராஜன்
மகாராஜன்

விசாரணை என்ற பெயரில் முருகேசன், மாணிக்கராஜ் ஆகியோரை அடித்தே கொன்றிருக் கிறார்கள். மாணிக்கராஜின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. முருகேசனுக்குக் கல்யாணமாகி 20 நாள்களே ஆகியிருந்தன. அநியாயமாகக் கொல்லப்பட்ட இருவருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்திவருகிறோம்” என்று படபடத்தார்.

இது குறித்து சி.பி.சி.ஐ.டி தரப்பின் கருத்தை அறிய இன்ஸ்பெக்டர் சபீதாவிடம் பேசினோம். “வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் இது குறித்து நான் என்ன கருத்து சொன்னாலும் சரியாக இருக்காது. அதனால் இது பற்றி எதையும் பேச விரும்பவில்லை” என்று முடித்துக் கொண்டார்.

அரசியல் பிரச்னையாக மாறினால்தான், வேகம் காட்டுமா சி.பி.சி.ஐ.டி?