Election bannerElection banner
Published:Updated:

`தடுப்பூசி கேட்டு மிரட்டுகிறார்கள்' - அச்சத்தால் லண்டன் சென்ற சீரம் நிறுவன உரிமையாளர் அதார் பூனாவாலா

அதார் பூனாவாலா
அதார் பூனாவாலா

`எங்களுக்குத்தான் முதலில் தடுப்பூசி கொடுக்க வேண்டும்' என்று கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் புனே நிறுவனத்தின் உரிமையாளருக்கு மிரட்டல் வந்திருக்கிறது.

புனேயில் செயல்பட்டுவரும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா, இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு நிறுவனத்துடன் இணைந்து `கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசியைத் தயாரித்துவருகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தடுப்பூசியின் தேவை எதிர்பார்த்ததைவிட அதிகரித்திருக்கிறது. 18 வயது நிரம்பியவர்களுக்கு மே ஒன்றாம் தேதியிலிருந்து தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துவிட்டார். இதனால் தடுப்பூசியின் தேவை மேலும் அதிகரித்திருக்கிறது. மற்றொரு பக்கம் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வேலைப்பளு அதிகரித்திருக்கிறது. ஆர்டர்கள் குவிந்துவருகின்றன. மாநிலங்கள் நேரடியாக தடுப்பூசியை வாங்கிக்கொள்ளலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு : ‘’புதிதாக தயாரிக்க மத்திய அரசு எந்த ஆர்டரும் தரவில்லை!’’

இதனால் ஒவ்வொரு மாநிலமும் தங்களது மாநிலத்துக்கு முதலில் தடுப்பூசி கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கின. ஆனால், நாளுக்கு நாள் நிலைமை மோசமாகவே, அரசுகளுக்குக் கடும் அழுத்தும் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து வற்புறுத்தல் தற்போது மிரட்டலாக மாறியிருக்கிறது. மிரட்டல்களின் காரணமாக புனே சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதார் பூனாவாலா, தன் குடும்பத்துடன் லண்டன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

லண்டனில் இருந்துகொண்டு, தி டைம்ஸ் நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் இது குறித்துப் பேசியிருக்கிறார். ``கொரோனா தடுப்பூசி கேட்டு மாநிலத்தின் முக்கியப் பதவிகளில் இருப்பவர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள். இந்தியா முழுக்க தடுப்பூசி கொடுக்கும் முழுப் பொறுப்பும் எங்களது தோளில் விழுந்துள்ளது. என்னால் தனிப்பட்ட முறையில் இதைச் செய்ய முடியாது. அதிகாரத்தில் இருப்பவர்கள் போன் செய்து தங்களுக்கு முதலில் தடுப்பூசி கொடுக்க வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். ஒவ்வொருவரும் தடுப்பூசி பெற வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் எங்களிடமிருந்து மட்டுமே ஏன் பெற வேண்டும் என்று நினைக்கின்றனர் என்றுதான் தெரியவில்லை" என்று தெரிவித்திருக்கிறார். அவர் கூறிய அதிகாரித்தில் இருப்பவர்கள், மாநில முதலமைச்சர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் உரிமையாளர்கள் என்று கூறப்படுகிறது.

`அதைப் பற்றி பேசினால் என் தலையே இருக்காது!' - சீரம் நிறுவன CEO-வின் ஷாக் பேட்டி

முன்னதாக அதார் பூனாவாலாவுக்கு கடந்த வாரம் மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு கொடுத்திருக்கிறது. நேர்காணலில் பேசிய அதார், ``இந்தியாவில் கொரோனா தடுப்பூசித் தட்டுப்பாடு இன்னும் சில மாதங்களுக்கு இருக்கும். ஜூலை மாதம்தான் நிலைமை சரியாகும். தற்போது 60-70 மில்லியன் டோஸ்கள் தயாரிக்கப்படுகிறது. இது ஜூலையில் 100 மில்லியன் டோஸ் அளவுக்கு அதிகரிக்கப்படும். முன்னர் போதிய ஆர்டர் இல்லாத காரணத்தால் உற்பத்தி அளவை அதிகரிக்காமல் இருந்தோம்" என்று தெரிவித்தார். மத்திய அரசு தடுப்பூசி உற்பத்தி அளவை அதிகரிக்க சீரம் நிறுவனத்துக்கு 3,000 கோடி ரூபாய் முன்பணம் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பூனாவாலா தன்னை யார் மிரட்டினார்கள் என்பதைப் புகார் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. இது தொடர்பாக மகாராஷ்டிரா அமைச்சர் சம்புராஜ் தேசாய் அளித்த பேட்டியில், ``பூனாவாலா தன்னை யார் மிரட்டியது என்பது குறித்து முறைப்படி புகார் செய்ய வேண்டும். அப்படிப் புகார் செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு