அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

ஆதரவற்ற பிஞ்சுகள்... அலட்சியக் காப்பகம்... பறிபோன மூன்று உயிர்கள்!

பறிபோன மூன்று உயிர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
பறிபோன மூன்று உயிர்கள்!

மாதேஷின் தாய் ஜெயாவைத் தத்தெடுத்து வளர்த்து, முத்து என்பவருக்குத் திருமணம் செய்துவைத்தேன். மாதேஷ் பிறந்த சில ஆண்டுகளிலேயே அவன் தந்தை உயிரிழந்துவிட்டார்.

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியிலுள்ள ஸ்ரீவிவேகானந்தா சேவாலயத்தில், ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கெட்டுப்போன உணவால், மூன்று சிறுவர்கள் துடிதுடிக்க இறந்துபோனதாகச் சொல்லப்படும் சம்பவம் பெருந்துயரம் என்றால், இறந்த சிறுவர்களின் குடும்பப் பின்னணியோ நம்மைக் கண்ணீர்க் கடலில் ஆழ்த்துகிறது!

‘காப்பகத்தில் நடந்தது என்ன?’ என்பது குறித்து, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மற்ற சிறுவர்களிடம் விசாரித்தோம். ‘‘ஆயுதபூஜைக்காக செவ்வாய்க்கிழமை மதியம் (4-10-2022) சாம்பார், சர்க்கரைப்பொங்கல், லட்டு எல்லாம் வெளியிலருந்து வந்துச்சு. அதையே இரவு உணவுக்கும் கொடுத்தாங்க. மறுநாள் புதன்கிழமை காலையிலயும் இட்லியோட அதே பழைய சாம்பாரும், லட்டும் கொடுத்தாங்க. அதைச் சாப்பிட்ட கொஞ்ச நேரத்துல எங்க எல்லாருக்கும் வாந்தி, பேதி வந்துடுச்சு. பாபு, மாதேஷ், அத்திஷ் மூணு பேரால எழுந்து நடக்கக்கூட முடியலை.

ஆதரவற்ற பிஞ்சுகள்... அலட்சியக் காப்பகம்... பறிபோன மூன்று உயிர்கள்!

புதன்கிழமை நைட்டு அவங்க படுக்கையிலேயே மலம் கழிச்சுட்டாங்க. நாங்கதான் ரூமையெல்லாம் பினாயில்வெச்சு சுத்தம் பண்ணினோம். வார்டன்கிட்ட சொன்னதும், மூணு பேருக்கும் ஓம வாட்டர் மட்டும் வாங்கிக் கொடுத்தார். வேற எதுவும் செய்யாததால, பாபுவும் அத்திஷும் அன்னைக்கு நைட்டே எங்க கண்முன்னால துடிதுடிச்சுச் செத்துப்போயிட்டாங்க.

மாதேஷை ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போகலையில காலம் கடந்துடுச்சு. அவனும் இறந்துட்டான். ஒருவேளை காலைல எங்களுக்கு வாந்தி வந்தப்பவே ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டு வந்திருந்தாங்கன்னா அவங்க மூணு பேர் உயிரையும் காப்பாத்தியிருக்கலாம்’’ என்றனர் ஆற்றாமை பொங்க.

உயிரிழந்த சிறுவன் மாதேஷின் பாட்டி துளசி நம்மிடம் பேசுகையில், ‘‘மாதேஷின் தாய் ஜெயாவைத் தத்தெடுத்து வளர்த்து, முத்து என்பவருக்குத் திருமணம் செய்துவைத்தேன். மாதேஷ் பிறந்த சில ஆண்டுகளிலேயே அவன் தந்தை உயிரிழந்துவிட்டார். தாய் ஜெயாவும் வயிற்றில் கட்டி வந்து இறந்துவிட்டாள். வயதான காலத்தில் பேரன் மாதேஷைக் கவனிக்க முடியாததால், அவனை இந்தக் காப்பகத்தில் கொண்டுவந்து சேர்த்தேன்.

ஆதரவற்ற பிஞ்சுகள்... அலட்சியக் காப்பகம்... பறிபோன மூன்று உயிர்கள்!

அக்டோபர் 1-ம் தேதிகூட காப்பகத்துக்குச் சென்று மாதேஷைப் பார்த்துவிட்டு வந்தேன். அப்போது காப்பகத்தில் நிர்வாகிகள் யாரும் இல்லை. சிறுவர்களே சமைத்துச் சாப்பிடுவதாகச் சொன்னார்கள். இப்படி அநியாயமாக என் மகளுக்கும் பேரனுக்கும் நானே கொள்ளி வைக்கும் நிலை ஏற்பட்டுவிட்டதே...’’ எனத் தலையில் அடித்துக்கொண்டு கதறியழுதார்.

மற்றொரு சிறுவனான பாபு, திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியைச் சேர்ந்த ராஜா சேதுபதி - இந்திராணி தம்பதிக்குப் பிறந்தவர். இந்தத் தம்பதிக்கு நான்கு குழந்தைகள். இவர்களில், முதல் பெண் குழந்தைக்கு அப்பா ராஜா சேதுபதி பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சிறைத் தண்டனை பெற்றவர். தாய் இந்திராணியோ கணவரின் கொடுஞ்செயலுக்கு உடந்தையாக இருந்ததோடு, தன் கைக்குழந்தையைக் கொன்றதற்காகவும் சிறைத் தண்டனை அனுபவித்துவருபவர். இந்த நிலையில், ஆதரவற்று நின்ற மற்ற மூன்று குழந்தைகளையும் 2015-ல் சமூகநலத்துறை அதிகாரிகள் மீட்டு, பெண் குழந்தையை வேறு ஒரு காப்பகத்திலும், பாபுவையும் அவன் சகோதரனையும் விவேகானந்தா சேவாலயத்திலும் சேர்த்திருக்கின்றனர். இந்த நிலையில்தான் பாபு கெட்டுப்போன உணவை உண்டு உயிரிழந்திருக்கிறான்.

துளசி
துளசி

அத்திஷின் தாய் பூங்கொடி நம்மிடம் பேசுகையில், ‘‘நானும் ஆதரவற்றோர் காப்பகத்தில் வளர்ந்தவள்தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் விஜய் இறந்துவிட்டார். வேலை தேடி திருப்பூருக்கு வந்த நான், மகனைச் சரியாக கவனிக்க முடியாததால், காப்பகத்தில் சேர்த்தேன். கடந்த 1-ம் தேதி என்னிடம் பேசும்போதுகூட, `எனக்கு இங்கே இருக்கப் பிடிக்கலை... என்னைக் கூட்டிட்டுப் போம்மா’ என்றான். நல்ல வேலை கிடைத்த பின்னர் மகனை என்னுடனேயே அழைத்துக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். அதற்குள்... கணவர் இறந்துவிட்ட நிலையில், என் வாழ்வின் ஒரே பிடிப்பாக இருந்தவனும் போய்விட்டானே...” என்று தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார்.

இந்த நிலையில், நம்மிடம் பேசிய விவேகானந்தா சேவாலயத்தின் தலைவர் செந்தில்நாதன், ‘‘ஆயுதபூஜையை யொட்டி, அதிக அளவிலான இனிப்பு, பொரி, சுண்டல், லட்டு ஆகியவை வந்திருந்தன. அவற்றில், லட்டை உண்டதால்தான் பிரச்னை ஏற்பட்டதாகச் சிறுவர்கள் கூறுகின்றனர். சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் வழக்கம்போல் காப்பாளர் ஓம வாட்டரும், மாத்திரையும் வழங்கியிருக்கிறார். ஆனால், நள்ளிரவில்தான் மாணவர்களுக்கு அதிக அளவு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மரணம் ஏற்பட்டிருக்கிறது’’ என்றார்.

செந்தில்நாதன்
செந்தில்நாதன்

சம்பவம் குறித்துப் பேசிய போலீஸ் தரப்பு, ‘‘சிறுவர்கள் மரணம் தொடர்பாகக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 174-ன்படி, சந்தேக மரணம் என வழக்கு பதிவுசெய்திருக்கிறோம். காப்பகத்தின் தலைவர் செந்தில்நாதனிடம் மூன்று முறை விசாரணை நடத்தியிருக்கிறோம். சிறுவர்களின் உடல் உறுப்புகளை ஆய்வுக்காக அனுப்பியிருக்கிறோம். அறிக்கை கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்றனர்.

தாய், தந்தை அரவணைப்பின்றி, நல்ல கல்விக்காகவும், மூன்று வேளை உணவுக்காகவும் ஆதரவற்றோர் காப்பகத்தில் வளர்ந்துவந்த சிறுவர்களின் உயிர்கள் கெட்டுப்போன உணவால் பறிபோனதாகச் சொல்லப்படுவது உச்சகட்ட வேதனை. இந்தத் துயரச் சம்பவம் காப்பகங்கள் செயல்படும் முறை குறித்தான, ஆய்வின் அவசியத்தை உறுதிப்படுத்தியிருக்கிறது.