லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

அரசு அதிகாரம் கருப்பை வரை நீண்ட கதை!

கருப்பை
பிரீமியம் ஸ்டோரி
News
கருப்பை

- மு.இராமனாதன்

இந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட ஓர் அறிவிப்பு சர்வதேச ஊடகங்களில் இன்றளவும் பேசப்படுகிறது. ‘சீனப் பெண்கள் மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள லாம்’ என்பதுதான் அந்த அறிவிப்பு. இந்த அறிவிப்புக்குப் பின்னான சீனாவின் கதை, 1979-ல் தொடங்குகிறது.

எல்லாப் பிரச்னைகளுக்கும் மக்கள் தொகை தான் காரணம் என்று உலகெங்கும் உள்ள பொருளியல் அறிஞர்களும் மக்கள்தொகை ஆய்வாளர்களும் நம்பிய காலமது. சீன அரசும் அப்படித்தான் நம்பியது. ஆனால், அது ஒருபடி மேலே போனது. உலகில் முன்னுதாரணமும் பின்னுதாரணமும் இல்லாத ‘ஒற்றைக் குழந்தைத் திட்ட’த்தை 1980-ல் அறிவித்தது சீனா. சீனாவின் வலுவான அரசு இயந்திரம், அத்திட்டத்தைத் தீவிரமாக நிறைவேற்றியது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு 2015-ல், ‘இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம்’ என்று அனுமதித்தது அரசு. ஆறு ஆண்டு களுக்குப் பிறகு, இப்போது 2021-ல், அனுமதி மூன்று குழந்தைகளுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தளர்வுகளுக்கு என்ன காரணம்?

- மு.இராமனாதன்
- மு.இராமனாதன்

உழைக்கும் வயதினர் குறைந்துபோயினர்

சீனாவின் மக்கள்தொகை அறிக்கை கடந்த மே மாதம் வெளியானது. மக்கள்தொகை எதிர்பார்த்ததைவிடக் குறைவாக, 141 கோடியாக இருந்தது. முக்கியமாக, மக்கள்தொகையில் உழைக் கும் வயதினரின் (16 - 59) விகிதம் குறைந்து விட்டது. 2010-ல் சீனாவின் மக்கள்தொகையில் 70 சதவிகிதம் பேர் உழைக்கும் வயதினராக இருந்தனர். இப்போது அது 63 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. மறுபுறம் இதே காலகட்டத்தில் முதியவர்களின் விகிதம் 13 சதவிகிதத்திலிருந்து 19 சதவிகிதமாக உயர்ந்துவிட்டது. பொதுவாக, சீனாவில் உள்ள உழைக்கும் வயதினர்தான், ‘உலகத்தின் தொழிற்சாலை’யாக விளங்கும் சீனாவின் பொருளாதாரத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள். இவர்களில் பலரும் 1980-க்குப் பிறகு, பிறந்த ஒற்றைக் குழந்தைகள். இவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் அதே வேளையில், இவர்கள் பேணிக் காக்க வேண்டிய பெற்றோர்களின் ஆயுட்காலம் அதிகரித்து வருகிறது. எனவே, 2015-ல் அமலாக் கப்பட்ட இரட்டைக் குழந்தைத் திட்டத்துக்கும், இப்போது அமலாகியிருக்கும் மூன்று குழந்தைத் திட்டத்துக்கும், வருங்காலங்களில் உழைக்கும் வயதினரின் எண்ணிக்கையை உயர்த்துவது தான் நோக்கம்.

ஆண் குழந்தை மோகம்

பல்வேறு சர்வதேச ஊடகங்களும், சீனாவுக்கு வயதாகி வருகிறது என்று எழுதின. ஒற்றைக் குழந்தைத் திட்டம் சீனாவின் உற்பத்திச் சங்கிலியில் ஏற்படுத்தியிருக்கும் பாரதூரமான விளைவுகளைப் பற்றியும் எழுதின. ஆனால், சீனாவின் ஒற்றைக் குழந்தைத் திட்டம் உண்டாக்கிய இன்னொரு சேதத்தைப் பலரும் இந்தத் தருணத்தில் பேசவில்லை. ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது அரச கட்டளை யாக இருந்தது. அந்தக் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலான தம்பதிகளின் விழைவாக இருந்தது. சீனா மட்டுமல்ல, உலகெங்கிலும் பல நாடுகளில் இந்த ஆண் குழந்தை மோகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்துவந்தாலும், சீனாவின் ‘ஒற்றைக் குழந்தைத் திட்டம்’ அங்கு அபாய கரமான விளைவுகளை ஏற்படுத்தியது.

ஒரு குழந்தைக்குத்தான் அனுமதி என்பதால் அது எப்படியாவது ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்பி னார்கள். அதனால் குழந்தையின் பாலினத்தை அறியத் துடித்தார்கள். பல நகரங்களில் சட்டத் துக்குப் புறம்பான சோதனைச்சாலைகள் இருந்தன. உருவாகும் குழந்தை, பெண் என்று அறிந்தால் அதைக் கலைத்தார்கள். கருக் கலைப்பு இலவசம். எந்தக் கேள்வியும் கேட்கப் பட மாட்டாது.

கண்காணிக்கப்பட்ட கருப்பைகள்

‘ஒற்றைக் குழந்தை’த் திட்டத்துக்கு மாத்திரைகள், லூப் (IUD), ஆணுறை முதலான கருத்தடைச் சாதனங்களைவிட, கருத்தடை அறுவைசிகிச்சையையே அரசு ஊக்குவித்தது. முதல் பிரசவத்துக்குப் பிறகு, பல தாய்மார் களுக்குக் கட்டாயக் கருத்தடை அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. குழந்தைப் பிறப்பையும் கருத்தடையையும் கண்காணிக்க மிகப் பெரிய வலைப்பின்னல் இருந்தது. குடும்பக் கட்டுப்பாட்டு அமைச்சகத்தின் கீழ் 50 லட்சம் முழு நேர ஊழியர்களும், 8.5 கோடி பகுதி நேர ஊழியர்களும் பணியாற்றினர். இவர்களுக்கு ‘மக்கள் தொகைக் கண்காணிப்பாளர்கள்’ என்று பெயர். இவர்கள் செய்விக்க வேண்டிய கருத்தடை அறுவைசிகிச்சைகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சிலர் இலக்கைத் தாண்டவும் செய்தனர். அவர்களுக்கு ஊதியத் துடன் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.

கர்ப்பிணிகள் ஒளிவதற்கு இடமில்லை!

ஒவ்வோர் ஊரிலும் ‘மக்கள்தொகைக் கண்காணிப்பாளர்’களால் பெண்கள் அவதானிக்கப்பட்டார்கள். இந்தக் கண்காணிப் பாளர்கள் சிலரை நேர் கண்டிருக்கிறார், புலிட்சர் பரிசு பெற்ற இதழாளர் மெய் ஃபாங்.

மா குவிங்ஜூ, 45 வயதுப் பெண்மணி. அரசு நியமித்த கண்காணிப்பாளர். ஹுவாங் ஜெய்பூ எனும் சிற்றூரில் பெட்டிக்கடை வைத்திருக் கிறார். கடையில் ஓர் அட்டவணை தொங்கு கிறது. ஊரில் வசிக்கும் பெண்களின் சகல விவரங்களும் அட்டவணையில் இருக்கிறது. வயது, முகவரி, மணமானவரா, பிள்ளை பெற்றவரா, கருத்தடை செய்து கொண்டவரா, கருத்தடைச் சாதனம் பயன் படுத்துபவரா முதலான எல்லா விவரங்களும். ‘சின்ன ஊர்தானே, விவரங்களைச் சேகரிப்பது சிரமமில்லை’ என்று ஃபாங்கிடம் சொல்கிறார் மா.

காவோ இன்னொரு கண்காணிப்பாளர். பியூஜியான் மாநிலத்தில் யோங்கே எனும் ஊரைச் சேர்ந்தவர். பல மாநிலங்களில் முதல் குழந்தைக்கே அனுமதி பெற வேண்டும். பியூஜி யானிலும் அப்படித்தான். அனுமதி பெறாத கருத்தரிப்புகள் கலைப்பதற்குத் தகுதியானவை. இரண்டாவது கருத்தரிப்பாக இருந்தால் சொல்ல வேண்டுவதில்லை. அப்படி அனுமதியின்றிக் கருவுற்றவர்கள் ஊரைவிட்டு ஓடிப்போவார்கள். ஆனால், அவர்களை வரவழைக்கும் தந்திரம் காவோவிடம் இருந்தது. வீட்டில் பெரியவர்களைச் சிறைப் பிடிப்பார். அதற்கு அவருக்கு அதிகாரம் இருந்தது. தப்பியோடியவர்கள் திரும்பும்போது சிலருக்கு ஆறேழு மாதமாக இருக்கும். கரு எத்தனை வளர்ந்திருந்தாலும் கலைப்பார்கள் செவிலியர்கள். சுமார் 1,500 கருச்சிதைவுகள் தனது மேற்பார்வையில் நடந்திருக்கும் என்கிறார் காவோ. சிதைக்கப்பட்ட கருக்கள் பலவும் பல மாதங்கள் வளர்ந்தவைதாம் என்று ஃபாங்கிடம் ஒப்புக்கொள்கிறார் காவோ. ஒற்றைக் குழந்தைத் திட்டத்தின் 35 ஆண்டுக் காலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் இப்படி ஆயுதத்தாலும் குருதியாலும் எழுதப்பட்ட கதைகள் இருக்கும்.

அரசு அதிகாரம் கருப்பை வரை நீண்ட கதை!

பாலின சமச்சீரின்மை

ஒற்றைக் குழந்தைத் திட்டத்தால் சீனாவின் பாலின சமநிலையும் குலைந்தது. பத்தாண்டு களுக்கு முன்னால் சீனாவில் சராசரியாக 100 பெண் குழந்தைகளுக்கு 118 ஆண் குழந்தைகள் பிறந்தன. 100 பெண் குழந்தைகளுக்கு 103 ஆண் குழந்தைகள் என்பதை, ஏற்கத்தக்க விகிதமாக ஐநா கருதுகிறது. இப்போது சீனாவில் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 111 ஆகியிருக்கிறது. இன்னும் போக வேண்டிய தூரம் இருக்கிறது.

தண்டனையின் தூரம் அதிகம்

2000-ம் ஆண்டு வாக்கிலேயே இந்தத் திட்டம் உண்டாக்கி வரும் பொருளாதாரச் சமூகச் சீர்கேடுகளை அரசு உணர்ந்தது. என்றாலும் இந்தப் பிழையான பாதையைத் திருத்திக்கொள்ள அரசுக்கு மேலும் சில ஆண்டுகள் வேண்டி வந்திருக்கிறது. அரசு இப்போது இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம், மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என்றெல்லாம் சொன்னாலும் மக்கள் தயாராக இல்லை. நகர வாழ்க்கையில் செலவினங்கள் மிகுந்துவிட்டது. பிள்ளைகளின் மீது பெற்றோர்களுக்கு எதிர்பார்ப்பு மிகுந்து விட்டது. கடுமையாகப் பணியாற்றினால் மட்டுமே வேலையில் நீடிக்க முடியும் என்பதால் தம்பதிகளால் பிள்ளை வளர்ப்புக்காகக் கணிசமான நேரத்தை ஒதுக்க முடியவில்லை. தம்பதிகளின் முதிய பெற்றோர்களுக்கு நகரத்தில் வாழ அனுமதி கிடைப்பதில்லை. ஆகவே புதிய தளர்வுகளைப் பயன்படுத்திக் கொள்வோர் குறைவாக இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் அரசின் அனுமதியின்றி கரு உருவாவதைத் தடுக்கவும், அப்படி உருவானால் அதைப் பிடுங்கி வீசவும் அரசால் இயன்றது. ஆனால், அதே அதிகாரத்தின் கரங்களால் இன்று நினைத்த மாத்திரத்தில் இரண்டாவது, மூன்றாவது பிள்ளைப் பேற்றை உருவாக்க முடியவில்லை. ஆகவே, பிள்ளைகளுக்கும் முதியவர்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை வடிவமைக்கும் முனைப்பில் இருக்கிறது சீன அரசு. ஒற்றைக் குழந்தைத் திட்டத்தின் விளைவுகளை அந்நாடு இன்னும் பல ஆண்டு களுக்குச் சுமக்க வேண்டிவரும்.

சீனாவின் ஒற்றைக் குழந்தைத் திட்டத்தால் நசுக்கப்பட்ட அந்நாட்டுப் பெண்களின் கருப்பை உரிமைகள், பாதுகாப்பற்ற கருக் கலைப்புகள், பெண் சிசுக்கொலைகள், கர்ப்பிணிகள் உயிரிழப்பு என நீளும் இந்த அரச அநீதி, உலகுக்குப் பாடம்!

இந்தியாவில் திருத்தி எழுதப்பட்ட தீர்ப்பு!

சீனாவைப் போலவே, இந்தியாவிலும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கட்டாய அறுவைசிகிச்சை நடந்த காலம் ஒன்று இருந்தது. அது நெருக்கடி நிலைக் காலம் (1975-77). இந்திரா காந்தியின் இருபது அம்சத் திட்டத்துக்கு நிகராக, சஞ்சய் காந்தியின் ஐந்து அம்சத் திட்டமும் பரப்புரை செய்யப்பட்டது. ஒருகட்டத்தில் இந்த ஐந்து அம்சங்களில் ஒரேயோர் அம்சமே பிரதான இடம் வகித்தது. அது, குடும்ப நலத்திட்டம். பல வட மாநிலங்களில் கட்டாயக் கருத்தடை அறுவை சிகிச்சைகள் நடந்தேறின. ஆனால், இந்திய மக்கள் வாக்காளர்களும் ஆவார்கள். 1977 தேர்தலில் பல வடமாநில வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களித்தனர். நெருக்கடி நிலை காலகட்டத்தில் சர்வ வல்லமையோடு விளங்கிய இந்திரா காந்தியும் சஞ்சய் காந்தியுமே 1977 தேர்தலில் தோற்றுப்போனார்கள். சீன மக்களுக்கு அப்படியான ஒரு வாய்ப்பு கிடைக்க வில்லை. ஒற்றைக் குழந்தைத் திட்டத்தைப் பலரும் வெறுத்தார்கள். ஆனால், அந்த எதிர்ப்பை அவர்கள் உள்ளுக்குள் பூட்டி வைத்துக்கொள்ள வேண்டியவர்களாக இருந்தார்கள். சீனாவில் நடப்பது ஒரு கட்சி ஆட்சி. கம்யூனிஸ்ட் கட்சி தான் ஆட்சியாளர்களைத் தெரிவு செய்யும். மக்களுக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை.