Published:Updated:

`அம்மா எதையுமே சொல்லலை; இப்போ எங்க எதிர்காலமும் தெரியல!' - பெற்றோர் இன்றி தவிக்கும் பிள்ளைகள்

மூன்று குழந்தைகள்

ஹெச்.ஐ.வி பாதிப்புக்குப் பெற்றோரை இழந்த இவர்கள், சொந்த பந்தங்கள் யாருமின்றி தனியாகவே வசிக்கின்றனர். தங்கள் வாழ்க்கை முடிவுகளைத் தாங்களே தீர்மானித்துக்கொள்கின்றனர்.

`அம்மா எதையுமே சொல்லலை; இப்போ எங்க எதிர்காலமும் தெரியல!' - பெற்றோர் இன்றி தவிக்கும் பிள்ளைகள்

ஹெச்.ஐ.வி பாதிப்புக்குப் பெற்றோரை இழந்த இவர்கள், சொந்த பந்தங்கள் யாருமின்றி தனியாகவே வசிக்கின்றனர். தங்கள் வாழ்க்கை முடிவுகளைத் தாங்களே தீர்மானித்துக்கொள்கின்றனர்.

Published:Updated:
மூன்று குழந்தைகள்
கொங்கு மண்டலத்திலுள்ள வர்த்தக நகரின் பிரதான வீதியில் அமைந்திருக்கிறது அந்த வீடு. சிமென்ட் கூரை போடப்பட்ட அந்தச் சிறிய வீட்டில் வசிக்கும் மூன்று குழந்தைகளின் முகத்தில் ஏக்கமும் வாட்டமும் தொக்கி நிற்கிறது. ஹெச்.ஐ.வி பாதிப்புக்குப் பெற்றோரை இழந்த இவர்கள், சொந்த பந்தங்கள் யாருமின்றி தனியாகவே வசிக்கின்றனர். தங்கள் வாழ்க்கை முடிவுகளைத் தாங்களே தீர்மானித்துக்கொள்கின்றனர்.
குழந்தைகள்
குழந்தைகள்

பால்ய பருவத்தை மகிழ்ச்சியுடன் கழிக்க வேண்டிய மூவரும், விவரம் தெரிந்த வயதிலிருந்து கஷ்டங்கள் தவிர எதையுமே அறியாதவர்கள். அடிப்படைத் தேவைகளுக்குக்கூட சிரமப்படுகின்றனர். தாயின் முதலாம் ஆண்டு நினைவு தின காரியங்களையும் யார் உதவியும் இன்றி தாங்களே செய்துள்ளனர். கல்லூரிப் படிப்புக்காகக் காத்திருக்கும் அக்கா துர்கா, பள்ளியில் படிக்கும் தங்கை புவனாவையும் தம்பி கதிரவனையும் தாயன்புடன் கவனித்துக்கொள்கிறார் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன).

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த மூன்று குழந்தைகளின் ஒவ்வொரு நாள் பொழுதும் விவரிக்க முடியாத வேதனைகளுடன் கழிகின்றன. எல்லாவற்றையும் எதிர்கொண்டு, படிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். மூவரும் ஒற்றுமையுடன் இருப்பதே இவர்களின் வாழ்நாளை நகர்த்தும் நம்பிக்கை அச்சாரம்.

குழந்தைகள்
குழந்தைகள்

``பெற்றோர் ஆரம்பத்துல ஒத்துமையாதான் இருந்தாங்க. பிறகு, அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அடிக்கடி சண்டை நடக்கும். அப்பா பூமாலை கட்டும் வேலைக்குப் போனார். ரெண்டு நாள்கள் வேலைக்குப் போனா நாலு நாள்கள் லீவ் போட்டுப்பார். அவர் கொஞ்சம் பொறுப்பில்லாம இருந்ததால, கூலி வேலைக்குப் போன அம்மாதான் கஷ்டப்பட்டு உழைச்சு எங்களைக் கவனிச்சுக்கிட்டாங்க. அப்பாவுக்குச் சொந்த பந்தங்கள் மேல என்ன மனவருத்தம்னு தெரியலை... யார் வீட்டுக்கும் போக மாட்டோம். சொந்தக்காரங்களும் எங்க வீட்டுக்கு வரமாட்டாங்க.

கொண்டாட்டம், புது டிரெஸ்னு எந்த மகிழ்ச்சியான சூழலும் எங்களுக்கு இருந்ததில்லை. சின்னச் சின்ன ஆசைகளுக்குக்கூட ரொம்பவே ஏங்கினோம். இந்த நிலையில உடல்நிலை சரியில்லாம சுயநினைவை இழந்துட்டார் அப்பா. ரொம்பவே துடிச்சுப்போன அம்மா, படுக்கையில் இருந்த அப்பாவை நல்லா கவனிச்சுக்கிட்டாங்க. படிப்படியா நினைவு திரும்பினாலும், அப்பாவால எந்த வேலையும் செய்ய முடியாம வீட்டுலயேதான் முடங்கியிருந்தார். வறுமை, பல்வேறு பிரச்னைகளால இப்ப வரையும் கஷ்டங்களை மட்டுமே அனுபவிக்கிறோம்.

குழந்தைகள்
குழந்தைகள்

அந்த வறுமையிலும்கூட, பெற்றோர் எங்க மேல பாசமா இருந்தாங்க. பொழுதுபோக்கு விஷயங்கள்னு எதுவுமே கிடையாது. படிப்பு, வீடுதான் எங்க உலகம். நல்லா படிச்சோம். தனக்குனு எந்த சந்தோஷத்தையும் அம்மா எதிர்பார்த்ததில்லை. 10 ரூவா இருந்தாலும் அதுல எங்க படிப்புக்கு ஏதாச்சும் வாங்கிக் கொடுக்கவே ஆசைப்படுவாங்க. `நல்லா படிச்சு மூணு பேரும் ஒசத்தியான வேலைக்குப் போய் சந்தோஷமா இருக்கணும். சொந்த உழைப்பால முன்னேறணும்’னு தினமும் சொல்லுவாங்க.

குடும்பக் கஷ்டங்களோடு, மேற்கொண்டு கவனம் சிதறக்கூடாதுனு எங்களை எந்த வீட்டு வேலையும் செய்ய விடாம அம்மா பார்த்துக்கிட்டாங்க. சரியா தூக்கம் இல்லாம கடுமையா உழைச்சாங்க. இந்த நிலையில உடல்நிலை ரொம்பவே மோசமாகி, 2018-ல் அப்பா இறந்துட்டார். அப்புறம் எங்க நிலைமை இன்னும் மோசமாச்சு” என்று கண்ணீருடன் கூறும் துர்கா, அருகிலிருக்கும் தாயின் படத்தைப் பார்த்து உடைந்து அழுகிறார்.

children
children
ஹெச்.ஐ.வி பாதிப்பில் இருந்த அந்தத் தாய்க்கும் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அதனால், உடலளவிலும் மனதளவிலும் வேதனைகளையும் வலிகளையும் சுமந்தவர், அதுகுறித்து தன் பிள்ளைகளிடம் சொல்லாமலேயே இருந்துள்ளார்.

``அப்பா எதனால இறந்தார்னு எங்களுக்கு அப்போ தெரியாது. ஆனா, சுற்றுவட்டாரத்துல எங்க குடும்பத்தைக் காயப்படுத்துற மாதிரி சிலர் பேசினாங்க. அதனால, ஸ்கூல் லீவ் நாள்கள்ல எங்க மூவரையும் வீட்டுக்குள் வெச்சு பூட்டிட்டு அம்மா வேலைக்குப் போயிடுவாங்க. ஸ்கூல் தவிர, வெளியிடங்களுக்குப் போகவே மாட்டோம். போன வருஷம் அம்மாவுக்கும் உடல்நிலை மோசமாச்சு. படுக்கையிலதான் இருந்தாங்க. அப்போ நான் ப்ளஸ் டூ, தங்கச்சி டென்த். காலையில சீக்கிரமா ஸ்கூல் கிளம்பினா, ஸ்பெஷல் கிளாஸ் முடிஞ்சு இரவுலதான் வீட்டுக்கு வருவோம்.

குழந்தைகள்
குழந்தைகள்

எனக்கும் தங்கச்சிக்கும் சமையல் தெரியாது. எனக்குத் தெரிஞ்ச மாதிரி அறைகுறையாதான் சமைப்பேன். பல மாதங்கள் நல்ல சாப்பாடுகூட இல்லை. இரவுல மட்டும் சமைப்பேன். அதுவும் உப்புமாதான். கடையில சாப்பாடு வாங்கவும் காசு இல்லாம, நிறைய நாள்கள் பட்டினியில தவிச்சோம். உடல்நிலை ரொம்பவே மோசமானதால அம்மாவை கவர்மென்ட் ஆஸ்பத்திரியில சேர்த்தோம். ஆனா, கொஞ்ச நாள்லயே அம்மா இறந்துட்டாங்க. அப்போ இறுதிக்காரியத்துக்கு மட்டும் சில சொந்தக்காரங்க வந்தாங்க. பிறகு, ஒரு வருஷமா யாருமே எங்களைக் கண்டுக்கறதில்ல. பழக்கப்பட்ட வாழ்க்கைதானே இது என்பதால, இதுக்காக நாங்களும் வருத்தப்படலை. பெற்றோர் ஹெச்.ஐ.வி பாதிப்பால இறந்தது சமீபத்துலதான் எங்களுக்குத் தெரியும்.

பெற்றோரின் இழப்பு, வறுமை, ஆதரவில்லாத நிலைனு படிப்பில் கவனம் செலுத்த ரொம்பவே சிரமப்பட்டோம். டென்த்ல 471 மார்க் எடுத்த நிலையில, இந்த வருஷம் ப்ளஸ் டூ-ல 600-க்கு 498 மார்க் எடுத்தேன். நான் எதிர்பார்த்த மார்க்கைவிட இது கம்மிதான். பிறகு, வீட்டுல இருந்தபடியே நீட் எக்ஸாமுக்கு தயாரானேன். அதுல தேர்வானாலும் போதிய மார்க் கிடைக்கலை. அதனால டாக்டர் கனவை விட்டுட்டு, யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்பைப் படிக்க ஆசைப்படுறேன்.

எங்க மூவரின் படிப்புக்கு மட்டும் பிறரின் உதவியை எதிர்பார்க்கிறோம். நல்லா படிச்சு, எங்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செஞ்சுக்கிறோம்.
துர்கா

இந்தப் படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டுல 100 இடங்கள் மட்டுமே இருக்கும். அதுல எனக்கு இடம் கிடைக்க வாய்ப்பில்லைன்னாலும், தனியார் காலேஜ்ல அரசு ஒதுக்கீட்டில் நிச்சயமா இடம் கிடைக்கும். அதற்கான கவுன்சலிங் விரைவில் நடக்க இருக்கு. எல்லா வகையிலும் சேர்த்து வருஷத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவாகும். எங்க நிலைக்கு இந்த அஞ்சரை வருஷப் படிப்பை எப்படி முடிக்கிறதுனு தெரியலை.

இப்போ ஓரளவுக்குச் சமைக்கிறேன். தம்பியும் தங்கச்சியும் ஆன்லைன்ல படிக்கிறதால, அவங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்கறேன். ரெண்டு பேரும் ஸ்கூல் முடிக்கிற வரைக்கும் இலவசமாவே படிக்க அவங்க படிக்கிற ஸ்கூல் நிர்வாகம் உதவி செய்றதா சொன்னாங்க. தங்கச்சி டாக்டருக்குப் படிக்க ஆசைப்படுறா. என்ன பண்றதுனு தெரியலை. சாப்பாட்டுத் தேவைக்கு அரசு அதிகாரிகள் ஒருசிலர் தனிப்பட்ட முறையில ஓரளவுக்கு உதவி செய்றாங்க. அதுவும் போதுமானதா இல்லை.

குழந்தைகள்
குழந்தைகள்

இந்த வீட்டுல தண்ணிக்கும் கஷ்ட நிலைதான். இவ்வளவு வருஷம் சமாளிச்சுட்டோம். நிறைய சிக்கல்கள் இருக்கு. இங்கயே தொடர்ந்து இருந்தா, கவலைகளால எங்க படிப்பு பாதிக்கப்படும். யார் ஆதரவும் இல்லாம நாங்களே எங்க வாழ்க்கையைப் பார்த்துக்கிறோம். ப்ளஸ் ஒன் படிக்கிற தங்கச்சியும், ஏழாவது படிக்கிற தம்பியும் ஸ்கூல் திறக்கப்பட்டதும் ஹாஸ்டல்ல சேர்ந்திடுவாங்க. எனக்கு இடம் கிடைக்கும் காலேஜ்ல நானும் ஹாஸ்டல்ல சேர்ந்திடுவேன். லீவ் நாள்ல மட்டும் வீட்டுக்கு வந்து தங்கிட்டுப் போயிடுவோம்.

நேத்துதான் அம்மாவின் முதல் வருஷ நினைவு தினம். யாருமே வரலை. சாதம் செஞ்சு படையல் வெச்சு அம்மாவை வேண்டிக்கிட்டோம். எங்களுக்கு நாங்க மூணு பேருதான் உதவி, ஆதரவு எல்லாமே. இப்படியே இனியும் வாழ்ந்துக்கிறோம்.

எங்க மூவரின் படிப்புக்கு மட்டும் பிறரின் உதவியை எதிர்பார்க்கிறோம். நல்லா படிச்சு, எங்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செஞ்சுக்கிறோம்."

- தளர்வான குரலில் பேசும் துர்கா, தங்கை மற்றும் தம்பியை அரவணைத்துக் கொள்கிறார்!

குழந்தைகள்
குழந்தைகள்

வெளியுலகம் அறியாத இந்த மூன்று குழந்தைகளின் முகத்திலும் எதிர்காலம் குறித்த கவலைகள் சூழ்ந்து நிற்கின்றன!

படிப்புத் தேவைக்கு இந்தக் குழந்தைகள் மூவரும் பிறரின் உதவியை எதிர்பார்க்கின்றனர். இவர்களுக்கு உதவ முன்வரும் வாசகர்கள், `help@vikatan.com’ என்ற மெயில் ஐ.டி-க்கு தொடர்புகொண்டு தாங்கள் செய்ய விரும்பும் உதவிகள் குறித்துத் தெரிவிக்கலாம். இவர்கள் குறித்த விவரங்கள் உடனடியாகத் தரப்படும்.