Published:Updated:

திருநெல்வேலி: `சிறைக்கைதி கொலையில் நீதி தேவை!’ - ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற இளைஞர்கள்

தீக்குளிக்க முயற்சி
தீக்குளிக்க முயற்சி

பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் சக கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்ட முத்து மனோ உடலை வாங்க மறுத்து 53-வது நாளாகப் போராட்டம் நடந்துவரும் நிலையில், ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம், மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மனோ. 26 வயது இளைஞரான அவர், சட்டக் கல்லூரியில் படித்துவந்தார். முத்து மனோ உள்ளிட்ட நான்கு பேர் நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றித் திரிந்ததாக ஏப்ரல் 8-ம் தேதி காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

சிறையில் கொலையான முத்து மனோ
சிறையில் கொலையான முத்து மனோ

கைதான நால்வரும் ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 22-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைக்குள் சென்றதும், அங்கிருந்த சக கைதிகள் சிலர் முத்து மனோவைக் கொடூரமாக தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதில் அவர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

சிறைச்சாலைக்குள் நடந்த இந்தக் கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள். சிறைத்துறை அதிகாரிகள், கைதிகள் உள்ளிட்ட பலரிடமும் கொலைச் சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

பாளையங்கோட்டை மத்தியச் சிறை
பாளையங்கோட்டை மத்தியச் சிறை

இதற்கிடையே கொலையில் தொடர்புடைய மத்திய சிறைக் கைதிகள் ஏழு பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சிறைக்குள் நடந்த சம்பவம் காரணமாக சிறைத்துறை அதிகாரிகள் ஏழு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

முத்து மனோ கொலைக்கு உடந்தையாக இருந்த சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என அவரின் உறவினர்களும் பெற்றோரும் வலியுறுத்திவருகிறார்கள். அதை வலியுறுத்தி, கடந்த 53 நாள்களாக வாகைக்குளம் கிராமத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.

தீக்குளிக்க முயற்சி
தீக்குளிக்க முயற்சி

இந்தநிலையில், முத்து மனோ கொலைக்கு நியாயம் கேட்டு அவரின் உறவினர்கள் மற்றும் சமுதாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார்கள். அப்போது மூன்று பேர் திடீரென மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தங்கள் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்கள்.

ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் கடுமையான சோதனைகளைக் கடந்து, மண்ணெண்ணெய் கேனுடன் நுழைந்து, ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தின் வாசலில் அவர்கள் உடலில் தீவைத்துக்கொள்ள முயன்றதால் அந்தப் பகுதியிலிருந்த பொதுமக்கள் பதற்றத்துடன் சிதறி ஓடினார்கள்..

தண்ணீர் ஊற்றிக் கழுவும் போலீஸார்
தண்ணீர் ஊற்றிக் கழுவும் போலீஸார்

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் முருகன், வெங்கடேஷ், கார்த்திக் ஆகிய மூன்று இளைஞர்களையும் பிடித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி செய்த சம்பவத்தால் நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

அடுத்த கட்டுரைக்கு