Published:Updated:

திருக்குறள் முதல் தொல்காப்பியம் வரை அசத்தும் மழலைகள்...

செந்தமிழ், முத்தமிழ், பைந்தமிழ்
பிரீமியம் ஸ்டோரி
செந்தமிழ், முத்தமிழ், பைந்தமிழ்

- பத்தாம் வகுப்புப் படித்த தாயின் வைராக்கிய வளர்ப்பு!

திருக்குறள் முதல் தொல்காப்பியம் வரை அசத்தும் மழலைகள்...

- பத்தாம் வகுப்புப் படித்த தாயின் வைராக்கிய வளர்ப்பு!

Published:Updated:
செந்தமிழ், முத்தமிழ், பைந்தமிழ்
பிரீமியம் ஸ்டோரி
செந்தமிழ், முத்தமிழ், பைந்தமிழ்

கொரோனா காலத்தில் குழந்தைகள் கேம்கள், யூடியூப் சேனல்கள் என எப்போதும் இணைய கேளிக்கைகளில் இருக்கிறார்கள் என்று பல பெற்றோர்களும் கூறுவதைக் கேட்கிறோம். ஆனால், தேனி மாவட்டம் தேவாரம் அருகேயுள்ள தே.சொக்க லிங்கபுரம் குக்கிராமத்தைச் சேர்ந்த இரட்டையர்களான செந்தமிழ், முத்தமிழ், அவர் களின் இளைய சகோதரி பைந்தமிழ் ஆகியோர் இதே கொரோனா காலத்தில் திருக்குறள், தொல்காப்பியம், தேவாரம், திருவாசகம், திருப் பாவை, திருவெம்பாவை போன்ற வற்றை கற்று, அருவியென ஒப்பு விக்கும் திறமையை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

‘`நான் பத்தாம் வகுப்புதான் படிச்சிருக்கேன்னாலும், என் உடல் நோவுகளுக்கு இடையிலயும் என் புள்ளைங்களுக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுத்து வார்த்தெடுத்திருக்கிறது சந்தோஷமா இருக்கு’’ என்று சொல்லும் அந்தக் குழந்தைகளின் அம்மா ஜெயமணி, அந்த நெகிழ்வான, நிறைவான கதை சொன்னார்.

திருக்குறள் முதல் தொல்காப்பியம் வரை அசத்தும் மழலைகள்...
திருக்குறள் முதல் தொல்காப்பியம் வரை அசத்தும் மழலைகள்...

‘`வீட்டுல வறுமை. பத்தாவது படிச்சிட்டு பஞ்சாலைக்கு வேலைக்குப் போனேன். கல்யாணம் முடிஞ்சது. ரெட்டை பெண் குழந்தைகள். பிரசவத்துக்கு அப்புறம் வாத நோய் உள்ளிட்ட பிரச்னைகளால உடல் பலவீனமாகிடுச்சு. படுத்த படுக்கையானேன். குடும்ப வறுமை காரணமா கணவர் அறிவுச் செல்வம் வேலை தேடி திருப்பூர் செல்ல, ரெட்டை குழந்தைகளை எப்படி வளர்க்கப் போகிறோம்னு அச்சமா இருந்தது. அப்போ தான் யதார்த்தமா திருக்குறள் புத்தகத்தை படிக்கத் தொடங்கினேன். பள்ளி நாள்கள்ல திருக்குறள் போட்டிகள்ல பரிசு வாங்கி யிருக்கேன். ஆனாலும், வாழ்க்கையில ஒரு இக்கட்டான சூழ்நிலையில அந்தப் புத்தகத்தை படிச்சப்போ அது கொடுத்த தெம்பும் தெளிவும் நிறைய. அம்மா பிள்ளைகளை கவனிச்சுக்க, நான் கொஞ்சம் கொஞ்சமா படுக்கையில இருந்து எழுந்தேன்’’ என்பவர், தன் குழந்தைகளுக்குத் தமிழ் புகட்ட ஆரம்பித்தது பற்றிச் சொன்னார்.

‘`என் குழந்தைகளுக்கு செந்தமிழ் ஷாலினி, முத்தமிழ் ஷாமினினு பேரு வெச்சேன். ஆங்கில வழிக்கல்வியில படிச்ச அவங்களை, குடும்ப சூழ்நிலை காரணமாவும், தமிழ்லயே படிச்சு வளரட்டும் என்ற எண்ணம் காரண மாவும் அரசுப்பள்ளியில சேர்த்தேன். செந் தமிழுக்கும், முத்தமிழுக்கும் ஒன்பது வயசுல யிருந்து வீட்டுல நான் திருக்குறள் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சேன். அவங்களும் ஆர்வத் தோட குறள்களை விளக்கவுரையுடன் படிக்க ஆரம்பிச்சாங்க. ஒரு கட்டத்துல 1330 குறள் களையும் ஒப்பிக்கிற அளவுக்கு அதை கரைச்சுக் குடிச்சுட்டாங்க. தமிழகம் முழுக்கப் பல திருக்குறள் போட்டிகள்ல பங்கேற்று பரிசு களையும் பெறத் தொடங்கினாங்க. தொடந்து, என் குழந்தைகளுக்கு மட்டுமில்லாம எங்க பகுதியைச் சேர்ந்த 20 குழந்தைகளுக்கும் இப்போ திருக்குறள் வகுப்புகள் எடுக்கிறேன்’’ என்றவர், தன் கற்பித்தல் முறை பற்றிச் சொன்னார்.

திருக்குறள் முதல் தொல்காப்பியம் வரை அசத்தும் மழலைகள்...
திருக்குறள் முதல் தொல்காப்பியம் வரை அசத்தும் மழலைகள்...

‘`தொடக்கத்துல என் பிள்ளைகளுக்கு, பொம்மை வாங்கித் தர்றேன், மிட்டாய் வாங்கித் தர்றேன்னு சொல்லித்தான் குறள் களை மனப்பாடம் செய்ய வெச்சேன். அப்புறம் அவங்களுக்கே ஆர்வம் வந்து போட்டி போட்டு படிக்க ஆரம்பிச்சாங்க. தினமும் குறள்களை கைப்பட எழுதி, விளக்கத்தோட மனப்பாடம் செய்ய வெச்சேன். சின்னமனூர் நூலக வாசகர் வட்டம், செந்தமிழ் இலக்கிய மன்றம் இணைந்து நடத்தும் திருக்குறள் நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டோம்.

இப்போ எட்டாவது படிக்கும் என் ரெட்டை பிள்ளைகள், கடந்த மூணு வருஷமா எடுத்த தொடர் பயிற்சிகளின் பலனா, தேனி நாகலாபுரம் திருக்குறள் வழி திருவள்ளுவர் மன்றத்தில் முதன்முறையா முற்றோதல் செய்தாங்க. தெளிவான உச்சரிப்புடன் ஒப்புவித்தால் ஒரு மணி நேரத்திலும், விரைவா ஒப்பிவித்தால் 35 முதல் 40 நிமிடங்களிலும் முடிச்சிடுவாங்க. கோவை, கணபதி தமிழ்ச் சங்கம் நடத்தின திருக்குறள் போட்டியில பங்கேற்ற 10,000 பேர்ல முதலிடம் பெற்றாங்க’’ என்றவர் பிற தமிழ்ப்பாக்களையும் தன் பிள்ளைகளுக்குக் கற்றுவித்தது பற்றிக் கூறினார்.

‘`திருக்குறள் போட்டிகள்ல பங்கேற்றதன் மூலம் எங்களுக்கு சில தமிழறிஞர்களின் அறிமுகம் கிடைச்சது. அவங்க என் பிள்ளை களுக்கு திருப்பாவை, திருவெம்பாவை போன்ற இன்னும் சில பாக்களையும் சொல்லிக் கொடுக்கச் சொல்லி என்னை அறிவுறுத்தினாங்க. திருக்குறள் போட்டியில பங்கேற்றதில் திருப்பாவை, திருவெம்பாவை, தேவாரம், திருவாசகம், பாரதியார் கவிதைகள், தொல்காப்பியம் உள்ளிட்ட புத்தகங்கள் பரிசாகக் கிடைச்சிருந்தது.

வைகை தமிழ்ச்சங்கம் புலவர் இளங்குமரன், மதுரை தொல் காப்பிய மன்றம் இருளப்பன் ஐயா உள்ளிட்டவர்களிடம் அந்தப் பாடல்களில் எனக்கிருந்த சந்தேகங்களை கேட்டு கொஞ்சம் கொஞ்சமா நான் முதல்ல அவற்றை கத்துக்க ஆரம்பிச்சேன். அப்புறம் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுத்தேன். இப்போ சுற்று வட்டார கோயில்கள்ல திருவாசகம் படிக்க பலரும் எங்களை அழைக்கிறாங்க’’ - ஜெயமணியின் வார்த்தைகளில் பரவசம்.

‘`என் மூணாவது மகள் பைந் தமிழ் ரோஷினியும், அக்காக்களோட சேர்ந்து ரெண்டு வயசில் இருந்தே திருக்குறள் படிக்கிறா. இப்போ ஒன்றாம் வகுப்புப் படிக்கும் அவளால ஆயிரம் குறள்களை ஒப்புவிக்க முடியும். திருவாசகம், தேவாரம் படிக்கும் போதும் அக்காக் களோட சேர்ந்துக்குவா. நான் பத்தாம் வகுப்பு தான் படிச்சிருக்கேன். ஆனாலும், என் பிள்ளைகளை இப்படி மேடைகள்ல தமிழ்ப் பாக்கள் சொல்ற அளவுக்கு வளர்த் திருக்கிறதை நினைக்கும் போது, எனக்குக் கிடைக்காத கல்வி, குடும்ப வறுமைனு எல்லாத்தையும் ஜெயிச்சுட்ட மாதிரி ஒரு உணர்வு, நிறைவு கிடைக்குது’’ எனும்போது நெகிழ்கிறார்.

முத்தமிழ், செந்தமிழ், பைந்தமிழிடம் பேசினோம். ‘`திருக்குறள் மூலமா பிறருக்கு உதவணும், பொறாமைபடக் கூடாது, புறம்பேசக் கூடாது, பொறுமையா இருக்கணும், ஒழுக்கம் அவசியம், கல்வி மிகவும் முக்கியம்னு நிறைய தெரிஞ்சுக்கிட்டோம். தொல் காப்பியம் மூலம் தமிழ் இலக்கணத்தை முழுமையா கத்துக்கிட்டோம். நாங்க வளர்ந்ததும் டாக்டர், கலெக் டர், போலீஸ்னு ஆவோம். அதோட தமிழை வளர்ப் போம்!”

- வியக்கவைத்தது அந்த மழலைகளின் மொழி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism