Published:Updated:

பலிகூடம் ஆகிறதா பள்ளிக்கூடம்?

சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி
பிரீமியம் ஸ்டோரி
News
சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி

எல்லார்கிட்டயும் எம் பையன் பாசமா இருப்பான். பள்ளிக்கூடம் முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வந்து எனக்கு உதவியா இருப்பான்.

குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பிவிட்டு நிம்மதியாகப் பெற்றோரால் வீட்டில் இருக்க முடியாத சூழல். பள்ளிகளில் பாலியல் அத்துமீறல் குறித்த செய்திகளால் பல அதிர்ச்சிகளைச் சந்தித்துவரும் நம்மை நிலைகுலையச் செய்திருக்கிறது, மூன்று பிஞ்சு உயிர்கள் பறிபோன கொடூரம்.

நெல்லை நகரில் இருக்கும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி நூறாண்டுகளைக் கடந்த பாரம்பரியம் கொண்டது. 1871-ல் சாஃப்டர் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், பின்னர் மேல்நிலைப்பள்ளியாக வளர்ந்து தற்போது 3,200 மாணவர்கள் படிக்கிறார்கள். இந்தப் பள்ளியின் கழிவறைச் சுவர் இடிந்து மூன்று மாணவர்கள் பலியாகியிருக்கிறார்கள்.

உயிரிழந்த அன்பழகன், விஸ்வரஞ்சன், சுதீஷ் ஆகிய மூன்று மாணவர்களுமே சாதாரண குடும்பப் பின்னணி கொண்டவர்கள். தங்கள் குழந்தைகள் படித்து நல்லநிலைக்கு வருவார்கள் என்கிற குடும்பத்தினரின் கனவு, அந்தக் கட்டடத்தைப்போலவே தகர்ந்திருக்கிறது.

ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த அன்பழகனின் தந்தை கார்த்திக், லாரி டிரைவர். “என் மகன் நல்லாப் படிப்பான் சார். அவன் நல்லாப் படிச்சு அரசு வேலைக்குப் போவான்னு நம்பிக்கையா இருந்தேன். அதுக்காகத்தான் தூரமா இருந்தாலும் பரவால்லன்னு இந்தப் பள்ளிக்கூடத்துல சேர்த்தேன். ஆனா இப்படி பாதியிலேயே எங்கள விட்டுட்டுப் போவான்னு நினைச்சுக்கூடப் பார்க்கலயே” என்று கதறுகிறார்.

மாணவன் அன்பழகனின் தாய் மாரியம்மாள், வீட்டிலேயே தோசை மாவு தயாரித்து வீடு, வீடாகச் சென்று விற்பனை செய்கிறார். பேசவே முடியாத துயரத்தில் இருந்தவர் சிறிது தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, “எல்லார்கிட்டயும் எம் பையன் பாசமா இருப்பான். பள்ளிக்கூடம் முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வந்து எனக்கு உதவியா இருப்பான். மாவு பாக்கெட்டைத் தூக்கிட்டு எங்கூடவே விற்கவும் வருவான்.

விஸ்பரஞ்சன், சுதிஷ், அன்பழகன்
விஸ்பரஞ்சன், சுதிஷ், அன்பழகன்

ஒரு வாரமா அவனுக்குக் காய்ச்சல், சளியா இருந்ததால் பள்ளிக்கூடம் போகாம வீட்டுலயே இருந்தான். அவனை வீட்டுல இருக்கச் சொல்லிட்டு நான் மாவு விற்கப் போவேன். 17-ம் தேதி அவனுக்கு உடம்பு நல்லாயிருச்சு. அதனால் அவனைப் பள்ளிக்கூடம் போகச் சொன்னேன். எப்பவுமே பள்ளிக்கூடம் போறதுக்குத் தயங்காத அவன் அன்னிக்கு, ‘இன்னிக்கு வெள்ளிக்கிழமை, அதனால் திங்கள் கிழமைலேருந்து போறேன்மா’ன்னு சொன்னான். நான்தான் கட்டாயப்படுத்தி அனுப்பி வச்சேன். அவன் போன கொஞ்ச நேரத்துலயே ‘உங்க பையனுக்கு சின்ன விபத்து ஏற்பட்டுருச்சு’ன்னு போன் பண்ணினாங்க. அவசரமா ஓடிப்போய்ப் பார்த்தால், என் பையனோட உசுரு இல்லாத உடலத்தான் பார்க்க முடிஞ்சுது. அவன் பேச்சைக் கேட்டு ஒருநாள் வீட்டுலயே வச்சிருந்தா இந்த நிலமை வந்திருக்காதே...” என்று கதறி அழுதார்.

சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த விஸ்பரஞ்சன் எட்டாம் வகுப்பு படித்துவந்தான். சிறுவனின் தந்தை தினகரன் ரயில் ஓட்டுநராக இருக்கிறார். மகன் இறப்பைத் தாங்க முடியாமல் தாய் எழில் தவித்துவருகிறார். அழுது புலம்பியபடி இருக்கும் அவரைத் தேற்ற முடியாமல் உறவினர்கள் தவித்துவருகிறார்கள்.

கதறி அழுத எழில், ‘‘சைக்கிள்ல ஸ்கூலுக்குப் போனா பாதுகாப்பு இல்லேன்னுதான் நானே அவன ஸ்கூல்ல விட்டுட்டு கூட்டிட்டு வருவேன். ‘அம்மா, எனக்கு சைக்கிள் வாங்கிக் குடுங்க’ன்னு அடிக்கடி கேட்பான். அவன் ஆசப்பட்ட மாதிரி வாங்கிக் குடுக்கறதுக்கு முன்னயே எங்களத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டானே” என்று தலையில் அடித்து அழுதார்.

சுவர் இடிந்ததில் பலியான ஆறாம் வகுப்பு மாணவன் சுதீஷ், சுத்தமல்லி அருகே உள்ள பழவூர் கிராமத்தைச் சேர்ந்தவன். அவன் அக்காவும் அண்ணனும் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பள்ளியில் படிக்கிறார்கள். சுதீஷ் நன்றாகப் படிக்கக் கூடியவன் என்பதால் சாஃப்டர் பள்ளியில் சேர்த்திருந்த நிலையில் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது.

பலிகூடம் ஆகிறதா பள்ளிக்கூடம்?

சுதீஷின் தந்தை ராமச்சந்திரன் டெய்லராகப் பணியாற்றுகிறார். தாய் முத்துமாலை, நூறுநாள் வேலைத் திட்டப் பணிக்குச் செல்கிறார். “அவன் நல்லாப் படிச்சதால், தூரமா இருந்தாலும் பரவால்லன்னு அந்தப் பள்ளிக்கூடத்துல சேர்த்தோம். ரொம்பச் சுறுசுறுப்பானவன். ‘அவன் எப்படிப் படிக்கிறான்’னு கேட்க ஸ்கூலுக்குப் போறப்பல்லாம் வாத்தியாருக, ‘உங்க மகன் நல்லா படிக்கான்யா. இதே மாதிரி படிச்சா எதிர்காலத்துல நல்லா வருவான்’னு சொல்லுவாங்க. அதைக் கேட்கறதுக்காகவே அடிக்கடி பள்ளிக்கூடத்துக்குப் போவேன். இனிமே அவனைப் பத்தி யாருகிட்ட போயி கேட்பேன்” என்று வெடித்து அழுகிறார் ராமச்சந்திரன்.

சுவர் இடிந்து மூன்று மாணவர்கள் பலியானதுடன், நான்கு மாணவர்கள் காயமடைந்ததற்குப் பள்ளி நிர்வாகம் மட்டுமல்லாமல் அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார்கள், சமூக ஆர்வலர்கள். ‘‘தமிழகம் முழுவதும் சுமார் 48,000 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் முக்கியமான பிரச்னை, கழிவறை. ஆயிரக்கணக்கில் மாணவர்கள் படித்தாலும் விரல் விட்டு எண்ணும் சொற்ப எண்ணிக்கையிலேயே பள்ளிகளில் கழிவறைகள் இருக்கின்றன.

அவற்றையெல்லாம் ஒரு பிரச்னையாகவே அதிகாரிகள் கண்டுகொள்ளாததன் விளைவே மூன்று அப்பாவி உயிர்கள் பலியாகியிருக்கின்றன. மாணவர்களின் உயிரிழப்புக்குக் காரணமானவர்களுக்குக் கடும் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

எந்தவொரு பிரச்னையாக இருந்தாலும் உயிர்ப்பலி ஏற்பட்ட பிறகே அது தொடர்பாக விவாதிப்பது, நடவடிக்கையில் இறங்குவது என்பது தமிழகத்தின் வாடிக்கையாகிவிட்டது. கும்பகோணம் பள்ளியில் 17 வருடங்களுக்கு முன்பு தீவிபத்து ஏற்பட்டு 94 பச்சிளம் குழந்தைகள் பலியான பிறகுதான், கூரை வேயப்பட்ட பள்ளிகளே இருக்கக் கூடாது என்று அதிகாரிகள் தேடித் தேடி நடவடிக்கை எடுத்தார்கள்.

அதுவரை அப்படியொரு சம்பவம் நடந்துவிடாமல் இருக்க எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுபோலவே இப்போதும் எல்லாப் பள்ளிகளிலும் சுவர்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள கட்டடங் களின் உறுதித்தன்மையை அவ்வப்போது பரிசீலித்து அனுமதி கொடுக்க வேண்டிய அதிகாரிகள் பாராமுகமாக இருப்பதாலேயே இதுபோன்ற விபத்துகள் நடக்கின்றன” என்று வேதனைப்பட்டார்கள்.

பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து மாணவர்களிடம் பேசியபோது அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன. ``எங்க பள்ளிக்கூடத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருந்தாலும் கொஞ்ச பாத்ரூம்தான் இருக்கு. அதனால் இண்டர்வெல் பெல் அடிச்சதும் முண்டியடிச்சு ஓடிவருவோம். அன்னிக்கும் அதுமாதிரி ஓடிப்போனோம். உள்ளே கூட்டமா இருந்ததால் வெளியே சிலர் காத்திருக்கும்போது சுவர் இடிஞ்சு விழுந்துருச்சு.

விஷ்ணு - பிரம்மா
விஷ்ணு - பிரம்மா

சுவர் விழுந்ததில் சிலர் சிக்கியதும் பெரிய பையன்கள் உதவி செய்ய ஓடிவந்தாங்க. ஆனால் அங்கிருந்த ஆசிரியர்கள் எங்களை கிளாஸ் ரூமுக்கு விரட்டி விட்டுட்டாங்க. ஆசிரியர்களும் காயமடைஞ்சவங்களுக்கு உதவி செய்யல. ஆம்புலன்ஸ் வரும்வரை எல்லா ஆசிரியர்களும் கைகட்டி வேடிக்கை பார்த்தாங்க. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்து கிடந்த ஒரு மாணவனை அடையாளம் பார்க்கறதுக்காக அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் கம்பால் முகத்தைத் திருப்பினார்” என்று அதிர்ச்சி விலகாமல் பேசினார்கள்.

சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாயும் காயமடைந்த சஞ்சய், இசக்கிபிரகாஷ், ஷேக் அபுபக்கர், அப்துல்லா ஆகியோருக்கு தலா 3 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது. காசோலை வழங்கிய பின்னர் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், “கவனக் குறைவாகச் செயல்பட்ட சாஃப்டர் பள்ளி தாளாளர் சகாய செல்வராஜ், தலைமை ஆசிரியர் ஞானசெல்வி, கட்டட ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

நம்மிடம் பேசிய ஆர்.டி.ஐ ஆர்வலரான பிரம்மா, ‘‘அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கட்டப்படும் சுவர்கள் பள்ளிக்காக இல்லாமல் பணத்துக்காகக் கட்டப்படுவதன் விளைவே இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடக்கக் காரணம். அந்தப் பள்ளியின் சுவரின் உறுதித் தன்மைக்குச் சான்றளித்த பொறியாளரையும் வழக்கில் சேர்க்க வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் உண்டு. இங்கும் இருக்க வேண்டும். அந்த அமைப்பினர் யாரும் இந்தத் துயரச் சம்பவத்துக்குக் குரல் கொடுக்கவில்லை. இந்தப் பள்ளியில் அப்படியொரு அமைப்பு ஆக்டிவாக இருந்ததா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. பள்ளிக்கூடங்களை பலிகூடமாக மாற்றுவதைத் தடுக்க அரசு சாட்டையைச் சுழற்ற வேண்டியது அவசியம். மூன்று மாணவர்கள் உயிரைத் தியாகம் செய்த பிறகுதான் தமிழகம் முழுவதும் பள்ளிக் கட்டடங்களின் தரத்தைச் சோதிக்கி றார்கள். அதனால் பள்ளிகளில் பறிபோன கடைசி உயிராக மூவரின் தியாகமும் இருக்கட்டும்” என்கிறார்.

சம்பவம் பற்றி மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் கேட்டதற்கு, “பள்ளியின் சுவர் இடிந்ததற்குத் தரமற்ற கட்டுமானமே காரணம் என்பது தெரியவந்திருக்கிறது. மறு உத்தரவு வரும் வரை பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. பள்ளியைப் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் ஆய்வு செய்து அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அந்த ஆவணங்களை ஆய்வு செய்துவருகிறோம். அதிகாரிகள் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மூன்று உயிர்களுடனாவது முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும், இத்தகைய துயரங்களும் முறைகேடுகளும்.