Published:Updated:

“ப்ளீஸ்... நாங்களும் படிக்கணும்!” - பழங்குடி மக்களின் பரிதாபக் குரல்...

துறவிக்காடு பழங்குடி மக்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
துறவிக்காடு பழங்குடி மக்கள்

எனக்குக் கையெழுத்து போடத் தெரியாது. எங்க பிள்ளைங்களாவது படிச்சு நல்ல நிலைக்கு வரணும்னு ஆசை.

‘‘சார்... நாங்க பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவங்க. எங்க முன்னோர்கள் செஞ்சுக்கிட்டிருந்த பூம்பூம் மாடு தொழில் அழிஞ்சுபோச்சு. இப்போ சிலர் டிரம்ஸ் அடிக்குற வேலைக்குப் போறாங்க. பாதிப் பேர் வருமானத்துக்கு வழியில்லாம மதுபாட்டில் பொறுக்குறாங்க. எங்களுக்குச் சாதிச் சான்றிதழ் இல்லை. அதனால, எங்க பிள்ளைங்களால எட்டாம் வகுப்புக்கு மேல படிக்க முடியலை. `சாதிச் சான்றிதழ் கொடுங்க’னு கேட்டு நாங்க அலைஞ்சு திரிஞ்சு ஓய்ஞ்சுபோயிட்டோம். படிப்பு இருந்துச்சுன்னா அடுத்த தலைமுறையோட தலையெழுத்து மாறிடும்கிற எங்க ஆசை கனவாவே போயிடுமோன்னு கவலையா இருக்கு’’ - தஞ்சையைச் சேர்ந்த அந்த இளைஞரின் குரலில் வலியும் வேதனையும் நிறைந்திருந்தது!

பட்டா இல்லை... தண்ணி இல்லை... மின்சாரம் இல்லை...

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு அருகே உள்ளது துறவிக்காடு. காவிரிக் கிளை வாய்க்காலை ஒட்டிய சாலையோரத்தில் 40-க்கும் மேற்பட்ட சிறிய குடிசைகள் நிறைந்த பகுதி. அதற்கு `எம்.ஜி.ஆர் நகர்’ என்று பெயர். ஓட்டை விழுந்த மேற்கூரைகளை மழையில் ஒழுகாமல் இருக்க தார்ப்பாய் கொண்டு மூடியிருக்கிறார்கள். வீடுகளில் கதவு இல்லை; கழிப்பறை இல்லை. சில உடைகள், கொஞ்சம் சமையல் பாத்திரம் அவ்வளவுதான் அவர்களின் சொத்து. ‘‘எப்பதான் நமக்குக் குடிக்குறதுக்கு நல்ல தண்ணி கிடைக்கப்போகுதோ?’’ என்று ஏக்கத்துடன் புலம்பியபடி ஆற்றுக்குள் சேறும் சகதியுமாகத் தேங்கி நிற்கும் தண்ணீரைச் சில பெண்கள் குடங்களில் நிரப்பிக்கொண்டிருந்தார்கள்.

“ப்ளீஸ்... நாங்களும் படிக்கணும்!” - பழங்குடி மக்களின் பரிதாபக் குரல்...

பட்டு என்பவரிடம் பேச்சுக் கொடுத்தோம்... ‘‘ரெண்டாவது தலைமுறையா இதே குடிசைகள்லதான் வாழ்ந்துக்கிட்டிருக்கோம். எங்களுக்குப் பட்டா இல்லை; சாதிச் சான்றிதழ் இல்லை; தண்ணியோ மின்சார வசதியோ இல்லை. ‘லைட் போஸ்ட்வெச்சு தெருவிளக்கு அமைச்சுக் கொடுங்க... குடிசை வீட்டுக்குத் தர்ற ஒத்த லைட் வசதியாவது செஞ்சு கொடுங்க... கொஞ்சமாவது வெளிச்சம் கிடைக்கும்’னு கெஞ்சிக் கேட்டுப் பார்த்தும் பலனில்லை. ராத்திரி நேரத்துல பாம்பு, பூச்சிகள்லாம் வீட்டுக்குள்ள வந்துடும். எப்பவும் பிள்ளைகளோட பயந்துக்கிட்டேதான் படுத்திருக்க வேண்டியிருக்கு. மழைக்காலத்துல நாங்க படுற துயரம் சொல்லி மாளாது.

“சாதிச் சான்றிதழ் மட்டுமாவது கொடுங்க!”

எனக்குக் கையெழுத்து போடத் தெரியாது. எங்க பிள்ளைங்களாவது படிச்சு நல்ல நிலைக்கு வரணும்னு ஆசை. ஆனா, அதுக்குச் சாதிச் சான்றிதழ் இல்லாதது பெரும் தடையா இருக்கு. எங்க பிள்ளைங்க எட்டாம் வகுப்பு வரை பிரச்னையில்லாம படிக்குறாங்க. சாதிச் சான்றிதழ் இல்லாததால, அதுக்கு மேல படிப்பைத் தொடர முடியலை. அதனால, பிள்ளைகளும் எங்களோடவே பாட்டில் பொறுக்குற வேலைக்கு வந்துடுறாங்க. இதுவரைக்கும் 25 பேர் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியிருக்காங்க. இப்போ படிச்சுட்டிருக்குற 15 பேருக்கும் எப்போ பிரச்னை வரும்னு தெரியலை. புத்தகப் பையைத் தூக்கிச் சுமக்குற வயசுல, இப்படி பாட்டில் பொறுக்குற நிலை எந்தப் பிள்ளைகளுக்கும் வரக் கூடாது.

படிப்பு இல்லாததால எந்த வேலைக்கும் போக முடியாம ஒரு தலைமுறையே இங்கன முடங்கிப்போச்சு. அடுத்த தலைமுறையோட எதிர்காலமாவது நல்லபடியா அமையணும்னா படிப்பு அவசியம். ‘எங்களுக்கு மத்த வசதிகள்கூட வேணாம்... சாதிச் சான்றிதழ் மட்டுமாவது கொடுங்க. எங்க பிள்ளைங்க படிச்சு நல்ல நிலைமைக்கு வந்துடும்’னு கண்ணீர்விட்டு கதறிப் பார்த்தாச்சு. அதிகாரிகள் மனமிரங்கல’’ என்றார் ஆற்றாமையுடன்.

பட்டு, உலகம்பாள், சிவா
பட்டு, உலகம்பாள், சிவா

“எங்க பிள்ளைங்களாவது நல்லா வாழணும்!”

உலகம்பாள் என்ற பெண்மணி பேசினார்... ‘‘நாலு இடத்துக்குப் போய் பாட்டில் பொறுக்கினாத்தான், எங்க வீட்டுல அடுப்பெரியும். படிப்பு இல்லாததால, பொம்பளைப் பிள்ளைகளை சீக்கிரமே கல்யாணம் செஞ்சு கொடுத்துடுறோம். அதுங்களும் எங்களை மாதிரியே இந்த குடிசைக்குள்ள, இருட்டுக்குள்ள எங்க பொழைப்பையே பொழைக்குதுங்க. படாத பாடு படுதுங்க. கட்சிக்காரங்க தேர்தல் நேரத்துல வர்றதோட சரி... அப்புறம் எங்க பக்கமே எட்டிப் பார்க்க மாட்டாங்க. எங்க வாழ்க்கை இப்படியே முடிஞ்சிருச்சு. பிள்ளைங்களாவது நல்லா வாழணும். எங்களுக்கு உதவி பண்ணுங்கன்னு அதிகாரிகள்கிட்ட போராடிக்கிட்டே இருக்கோம்’’ என்று கண்கலங்கினார்.

சிவா என்ற இளைஞர், ‘‘எங்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. பட்டா கேட்டா, நீர்நிலையில இருக்குறீங்கனு சொல்றாங்க. சாதிச் சான்றிதழ் கேட்டா, ஏதேதோ காரணம் சொல்லி அதையும் மறுக்குறாங்க. பேங்க்ல கணக்கு தொடங்கப்போனா, ஆவணங்கள் எதுவும் இல்லாததால முடியாதுனு சொல்லிடுறாங்க. அதனால, நூறு நாள் வேலையிலயும் சேர்த்துக்க மாட்டேங்குறாங்க. சாதிச் சான்றிதழ் இல்லாம, சிலர் உதவியோட நான் கல்லூரிப் படிப்பை முடிச்சிருக்கேன். என்னைப்போல எல்லாரும் படிக்கணும். ‘தயவு செஞ்சு எங்களைப் படிக்கவையுங்க’னுதான் அரசாங்கத்துக்கிட்ட கேக்குறோம். அரசாங்கம் மனசுவெச்சு முழு கவனம் செலுத்தினா மட்டும்தான், எங்களைப்போல விளிம்புநிலை மக்களோட வாழ்க்கையில வெளிச்சம் கிடைக்கும்’’ என்றார்.

தினேஷ் பொன்ராஜ்
தினேஷ் பொன்ராஜ்

கனத்த இதயத்துடன்தான் அங்கிருந்து விடைபெற்றோம். தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் கவனத்துக்கு இந்த விவரங்களைக் கொண்டுசென்றோம். அனைத்தையும் பொறுமையாகக் கேட்டவர், உடனடியாக அதிகாரிகளை அந்தப் பகுதிக்கு ஆய்வுக்கு அனுப்பிவைத்தார். ‘‘சாதிச் சான்றிதழ் கொடுத்து படிப்பைத் தொடர நடவடிக்கை எடுப்பதுடன், அடிப்படை வசதிகளையும் விரைவில் செய்துகொடுக்கிறேன்’’ என்று உறுதியளித்திருக்கிறார்.

அந்த எளிய மனிதர்களுக்கு வாழ்க்கையின்மீதும், இந்தச் சமூகத்தின்மீதும் நம்பிக்கை ஏற்படுத்தவேண்டியது இந்த அரசின் கடமை!