Published:Updated:

காசிரங்கா பூங்காவைச் சூழ்ந்த வெள்ளநீர்! - கடைக்குள் பதுங்கிய புலி#AssamFloods

ராம் பிரசாத்

காசிரங்கா தேசிய வனவிலங்குகள் பூங்கா 90 சதவிகிதம் வெள்ள நீரில் மிதக்கின்றன.

புலி
புலி

அசாமில் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அசாமே வெள்ளக்காடாகத்தான் காட்சியளிக்கிறது. 28 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பல கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மாநிலமே இருளில் மூழ்கியுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அசாமின் புகழ்பெற்ற காசிரங்கா தேசிய வனவிலங்குகள் பூங்கா 90 சதவிகிதம் வெள்ள நீரில் மிதக்கின்றன. வெள்ளத்தின்போதே விலங்குகள் காலியாக இருக்கும் நிலப்பகுதியை நோக்கி பயணமானது. வெள்ளத்தோடு வெள்ளமாக விலங்குகள் அடித்துச் செல்லப்பட்டன. சில விலங்குகள் பூங்காவை விட்டு தேசிய நெடுஞ்சாலையில் புகுந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வெள்ளத்தில் பூங்காவில் இருந்த 50-க்கும் அதிகமான விலங்குகள் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

யானைகள்
யானைகள்

இந்த நிலையில்தான், காசிரங்கா பூங்காவிலிருந்து தப்பிய புலி ஒன்று புகலிடம் தேடி ஒரு கடைக்குள் நுழைந்துள்ளது. பொதுமக்கள் வனத்துறைக்கு அளித்த தகவலின் பேரில் 10 மணி நேரத்துக்குப் பிறகு புலி பத்திரமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து அந்தக் கடையின் உரிமையாளர் கூறுகையில், ``காலை வழக்கம்போல் கடையைத் திறந்து எனது பணிகளை மேற்கொண்டேன். அப்போது மக்கள் புலி, புலி எனக் கூச்சலிட்டனர். நான் வெளியில் வந்து பார்த்தபோது எனக்கு 20 அடிக்கு முன்பு புலி இருந்தது. நான் பயத்தில் இருந்தேன். புலி என்னைப் பார்த்தது. ஆனால், ஒன்றும் செய்யவில்லை. நேராக கடைக்குள் சென்றுவிட்டது. நான் அங்கிருந்து ஓடிவிட்டேன். புலி களைப்பாக இருந்தது என்றார்.

வனவிலங்கு மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், `பூங்காவில் தண்ணீர் சூழ்ந்ததால் புலி அங்கிருந்து வெளியேறி சாலைக்கு வந்துள்ளது. உயரமான நிலப்பகுதியை நோக்கிச் செல்லவதற்காக வந்திருக்கும். சாலைகளில் அதிகமாகச் சென்ற வாகனங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் இருந்தால் மறைவான பகுதியைத் தேடி கடைக்குள் வந்துவிட்டது’ என்றனர்.

காண்டாமிருகங்கள்
காண்டாமிருகங்கள்

காசிரங்கா பூங்கா நீண்ட நாள்களுக்குப் பிறகு இதுபோன்ற வெள்ளத்தைச் சந்திப்பதாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற காசிரங்கா பூங்காவில் உலகின் மீதமுள்ள ஒற்றைக் கொம்பு காட்டாமிருகங்களில் மூன்றில் ஒரு பங்கு இங்கு உள்ளது. காண்டாமிருகங்களுக்கு என்ன ஆனது என்று ஊழியர்கள் அச்சப்பட்டு வந்த நிலையில், அவை நீர்நிலைகளால் சூழப்பட்ட உயரமான நிலத் திட்டுகளில் இருப்பது கண்டறிந்துள்ளனர்