Published:Updated:

மரண தண்டனையும் வேண்டாம்... ஆயுள் தண்டனையும் வேண்டாம்! - பிடிபட்ட டி23... பிடிபடாத தீர்வு...

புலிகளுக்குள் ஏற்படும் எல்லை மோதலால் வாழ்விடம் இழந்து காட்டைவிட்டு வெளியேறும் ‘பிரச்னைக்குரிய புலிகள்’ உருவாவது இயல்புதான்.

பிரீமியம் ஸ்டோரி

நீலகிரி மக்களையும் வனத்துறையினரையும் கலங்கடித்துக்கொண்டிருந்த ஒற்றை வேங்கைப்புலியைப் பிடிக்கும் 21 நாள் போராட்டம், அக்டோபர் 15-ம் தேதியுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. நீலகிரியில் மட்டும் கடந்த ஏழாண்டுகளில் டி23 புலியையும் சேர்த்து மொத்தம் நான்கு ஆண் புலிகள் காட்டைவிட்டு வெளியேறி, கால்நடைகளையும் மனிதர்களையும் தாக்கிக் கொன்றிருக்கின்றன. இவற்றில் மூன்று ஆண் புலிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், முதன்முறையாக டி23 புலியை உயிரோடு பிடித்திருக்கிறது வனத்துறை!

தமிழ்நாட்டின் முதுமலை, கேரளாவின் முத்தங்கா, கர்நாடகாவின் பந்திப்பூர் ஆகிய மூன்று வனப்பகுதிகளும் இணைந்த முச்சந்திப்பு வனப்பகுதியே உலகில் வங்கப்புலிகள் அதிகம் வாழும் பகுதியாக இருக்கிறது. புலிகளுக்குள் ஏற்படும் எல்லை மோதலால் வாழ்விடம் இழந்து காட்டைவிட்டு வெளியேறும் ‘பிரச்னைக்குரிய புலிகள்’ உருவாவது இயல்புதான். பாதுகாக்கப்பட்ட வனங்கள் மற்றும் ‘பஃபர் ஜோன்’ எனப்படும் வெளிமண்டலக் காடுகளில் நடைபெறும் ஆக்கிரமிப்புகள், குடியேற்றங்கள், கால்நடை மேய்ச்சல், வளர்ச்சிப்‌ பணிகள் போன்றவற்றால் வாழ்விடம் இழக்கும் புலிகள், அருகிலிருக்கும் எஸ்டேட்களிலும், குடியிருப்புகளிலும், தோட்டங்களிலும் நுழைந்து, புலி - மனித எதிர்கொள்ளல் சம்பவங்கள் ஏற்படுகின்றன. இதில் விபத்தாக ஆட்கொல்லிப் புலிகளும் உருவாவது உண்டு. அப்படி ஆட்கொல்லியாக உருவான புலிகளில் ஒன்றுதான் டி23.

மரண தண்டனையும் வேண்டாம்... ஆயுள் தண்டனையும் வேண்டாம்! - பிடிபட்ட டி23... பிடிபடாத தீர்வு...

ஒரு வளமான காட்டின் குறியீடு புலி. அதனாலேயே சூழலியலாளர்கள் புலியைத்தான் `காட்டுக்கு ராஜா’ என்பார்கள். அப்படி சுமார் 300 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்த முதுமலைக் காட்டில் இரை விலங்குகள், நீர்நிலை, இணை என அனைத்தும் கிடைக்கும் வகையில் குறிப்பிட்ட எல்லையை வகுத்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுதான், 13 வயதுடைய டி23 ஆண் புலி. ஒருகட்டத்தில் தனது எல்லையைத் தக்கவைத்துக்கொள்ள மற்றோர் இளம் ஆண் புலியுடன் ஏற்பட்ட மோதலில் காயமுற்று, முதுமலையைவிட்டு வெளியேறியது டி23. காட்டைவிட்டு மெதுவாக நகர்ந்த டி23, மசினகுடி சுற்றுவட்டாரத் தேயிலைத் தோட்டங்களில் தஞ்சம் புகுந்தது. காயம் காரணமாக வேட்டைத்திறன் குறைந்த நிலையில் கால்நடைகள், கோழிகள் ஆகியவை அதன் எளிய வேட்டை இலக்கான நிலையில், மனிதர்கள் இருவர் டி23-யால் கொல்லப்பட்டார்கள்!

இதனால் ஏற்பட்ட அச்சம், பதற்றம் காரணமாக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். ஏற்கெனவே இதே சுற்றுவட்டாரத்தில் மூன்று ஆட்கொல்லிப் புலிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், `டி23 புலியைக் கொல்லக் கூடாது’ என்று உயர் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, `டி23 புலியை கொல்லக் கூடாது’ என்று நீதிமன்றமும் உத்தரவிட்டநிலையில், 21 நாள்கள் தேடுதல் வேட்டையில் புலியை உயிருடன் பிடித்திருக்கிறார்கள் வனத்துறையினர். தற்போது மைசூரு ஜூவில் டி23 புலிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், உடல்நலம் தேறியதும்‌, வண்டலூர் உயிரியல் பூங்காவில் வைத்து வாழ்நாள் முழுக்கப் பராமரிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

மரண தண்டனையும் வேண்டாம்... ஆயுள் தண்டனையும் வேண்டாம்! - பிடிபட்ட டி23... பிடிபடாத தீர்வு...

“புலியைச் சுட்டுக்கொல்வது அல்லது உயிருடன் பிடித்து அடைத்துவைப்பது இரண்டுமே பிரச்னைக்குத் தீர்வு அல்ல” என்று சொல்லும் ஊட்டியைச் சேர்ந்த சூழலியலாளர் சுரேஷ் நம்மிடம், ‘‘இவர்கள் சொல்லக்கூடிய ‘பிராப்ளமேட்டிக் டைகர்ஸ்’ உருவாவது இயல்பானதுதான் என்றாலும், அந்தப் புலிகளும் வனத்தில் வாழ்வதற்கு உரிமை இருக்கிறது. அதற்காகவே புலிகள் காப்பகத்தின் எல்லைப் பகுதிகளில் `பஃபர் ஜோன்’ எனப்படும் வெளிமண்டல வனப்பகுதிகள் உருவாக்கப் பட்டிருக்கின்றன. 300 ஹெக்டேர் உள்மண்ட லத்தைக் கொண்டிருக்கும் முதுமலை புலிகள் காப்பகத்தில், சுமார் 400 ஹெக்டேர் பரப்பளவு வெளிமண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும் கடந்த ஏழாண்டுகளில் அங்கிருந்து நான்கு ஆண் புலிகள் வெளியேறியிருக்கின்றன.

அடிபட்டு, காயத்துடன் வெளிமண்டல காடுகளுக்கு வரும் புலிகளுக்கு அங்கிருக்கும் சட்டவிரோத தங்கும் விடுதிகள், மின்வேலிகள், கால்நடை மேய்ச்சல், சாலை விரிவாக்கம் என ஏராளமான இடையூறுகள் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்னைகள் காரணமாகவே கடந்த காலங்களில் தொட்டபெட்டா, பிதர்காடு, மேஃபீல்டு ஆகிய இடங்களை நோக்கி நகர்ந்த மூன்று புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டன. `ஆட்கொல்லி’ என்ற பெயரில் புலிகளைச் சுட்டுக்கொல்வது அல்லது உயிருடன் பிடித்து அடைப்பது இரண்டுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வல்ல. அவை ஆட்கொல்லிகளாக உருவாகாமல் தடுப்பதே வனத்தின் உயிர்ச் சூழலைக் காக்கும் நடவடிக் கையாகும். முதுமலை புலிகள் காப்பகத்தைச் சுற்றிலும் அத்துமீறி செய்யப் பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். கூடலூர் சுற்றுவட்டாரங்களில் ஒருசில தனியார் பெருந்தோட்ட முதலாளிகளிடம் ஆக்கிரமிப்பு நிலங்களாக இருக்கும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் தேயிலைத் தோட்டங்களை மீட்டு, வன விரிவாக்கம் செய்ய வேண்டும். இல்லையென்றால், புலிகள் வெளியேற்றத்தைத் தடுக்க முடியாது” என்றார்.

மரண தண்டனையும் வேண்டாம்... ஆயுள் தண்டனையும் வேண்டாம்! - பிடிபட்ட டி23... பிடிபடாத தீர்வு...

வனத்துறையின் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ‘‘முதுமலையின் வெளிமண்டலத்தில் ஏகப்பட்ட ஆக்கிரமிப்புகள் இருப்பது உண்மைதான். இந்த ஆக்கிரமிப்புகள்தான் வன விலங்குகளுக்கு ஆபத்தாக மாறியுள்ளன. மசினகுடியில ஏற்கெனவே யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பு பிரச்னையைச் சரிசெய்ய முடியவில்லை. உச்ச நீதிமன்றம் வரை அலைந்துகொண்டிருக்கிறோம். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிவுரைப்படி இங்கேயிருக்கும் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவோம். புலிகள் வாழ நல்ல சூழலை ஏற்படுத்துவோம்’’ என்றார் உறுதியாக. அதேசமயம், வனத்தில் ஆக்கிரமிப்புகள் நடக்காதபடி முன்கூட்டித் தடுப்பதே வனத்துறையின் கடமை.

`ஆட்கொல்லி’ என்ற பெயரில் புலியைச் சுட்டுக்கொல்வது மரண தண்டனை என்றால், உயிருடன் பிடித்து அடைப்பது ஆயுள் தண்டனை. புலிகள் புலிகளாகவே வாழட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு