Published:Updated:

`ரூ.70,000 ஐபோன்; 150 வீடியோ; 42,000 ஃபாலோயர்ஸ்!' - வழிப்பறி வழக்கில் கைதான `டிக் டாக் ஷாருக்'

ராம் பிரசாத்

நொய்டாவைச் சேர்ந்த டிக் டாக் பிரபலமான ஷாருக் கானை வழிப்பறி வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Tik tok  shahruk khan
Tik tok shahruk khan

நொய்டாவின் ஆல்பா 2 பகுதியில் கடந்த சில நாள்களாக செயின் பறிப்புச் சம்பவங்கள் நடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் வந்தது. இதையடுத்து அப்பகுதியைக் காவலர்கள் கண்காணித்து வந்தனர். சந்தேகப்படும்படியாக நான்கு நபர்கள் அப்பகுதியில் சுற்றித்திரிந்த நிலையில் அந்த நால்வரின் விவரங்களைச் சேகரித்த காவல்துறையினர் அவர்கள் மீது தங்கள் பார்வையைத் திருப்பினர். கடந்த சில நாள்களுக்கு முன்பு நால்வரும் இரவில் கைவரிசை காட்ட காத்திருந்தபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

shahruk khan and Gang
shahruk khan and Gang

காவல்துறையின் விசாரணையில் இந்தக் கும்பலுக்கு தலைவனாகச் செயல்பட்ட நபர் ஷாருக் கான் என்றும் அவர் டிக் டாக்கில் மிகவும் பிரபலம் எனவும் தெரியவந்ததுள்ளது. இதுகுறித்துப் பேசிய காவல்துறையினர், ``திருட்டுச் சம்பவங்கள் நடப்பதாகக் காவல்துறையினருக்குப் புகார் வந்தது. இது தொடர்பான விசாரணையில் இறங்கியபோது ஆசிப் மற்றும் அவரின் நண்பர் மீது சந்தேகம் வந்தது. இரு சக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த ஆசிப் மற்றும் அவரின் நண்பர் இருவரைத்தான் முதலில் கைது செய்தோம். அவர்களிடம் விசாரித்தபோதுதான் பைக் உரிமையாளர் ஷாருக் கான் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஷாருக்கான் மற்றும் முகேஷ் இருவரையும் கைது செய்தோம்.

"தவசி குடிச்சிட்டு கார் ஓட்டியிருக்கார்; அதான் அப்பா இறந்துட்டார்!" - `ஸ்டில்ஸ்' சிவா மகன் அபிஷேக்!

இந்தக் கும்பலுக்கு ஷாருக் கான் தான் தலைவனாகச் செயல்பட்டு வந்துள்ளார். தனியாகவும் கூட்டாகவும் சேர்ந்து கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். கைதானவர்களிடமிருந்து 5 மொபைல் போன், இருசக்கர வாகனம் ஒன்று மற்றும் 3,000 ரூபாயைக் கைப்பற்றியுள்ளோம். ஷாருக் கான் சவுதியில் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் சவுதியிலிருந்து இந்தியா திரும்பியுள்ளார். இங்கு சிலருடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகள்தான் இவர்களுடைய இலக்கு. வழிப்பறி செய்யும் பொருள்களை ஷாருக் கானிடம் கொடுத்து வந்துள்ளனர். அவர்தான் மற்றவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து வந்துள்ளார்.

`ரூ.70,000 ஐபோன்; 150 வீடியோ; 42,000 ஃபாலோயர்ஸ்!' - வழிப்பறி வழக்கில் கைதான `டிக் டாக் ஷாருக்'

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்தக் கொள்ளைக் கும்பலின் தலைவன் ஷாருக் பாலிவுட் ஸ்டார் ஷாருக் கானின் தீவிர ரசிகர். டிக் டாக் செயலில் ஷாருக் கான் என்ற பெயரில் மிகவும் பிரபலமாக இருக்கிறார். இவரை டிக் டாக்கில் 42,000 பேர் பின் தொடர்கின்றனர். ஷாருக் கான் போன்று நடனமாடுவது, டயலாக் பேசுவது என 150-க்கும் அதிகமான வீடியோக்களைப் பதிவிட்டுள்ளார். வீடியோ எடுப்பதற்காகவே 70,000 மதிப்பிலான ஐபோனை வாங்கியுள்ளார். இந்தப் பகுதியில் நடந்த 6 குற்றச் செயல்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.