நடப்பு
Published:Updated:

அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங்... உஷார் டிப்ஸ்! - ஏமாற்றத்தைத் தவிர்க்கும் எளிய வழிகள்!

ஆன்லைன் ஷாப்பிங்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன்லைன் ஷாப்பிங்

இந்த முறை கொரோனாவால் ஆஃப்லைன் வியாபாரம் மந்தமாக இருப்பதால், ஆன்லைன் சேல் பெரிய அளவில் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது!

ஷாப்பிங் சீஸன்களின் `பாகுபலி’ என்றால், அது பண்டிகைக்கால சீஸன்தான். 16-ம் தேதி தொடங்கிய ஃப்ளிப்கார்ட் சேல் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. அமேசான் சேல் 17-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த ஆன்லைன் ஷாப்பிங் சேலில் எதையேனும் நீங்கள் வாங்க நினைத்திருந்தால் சில விஷயங்களை நீங்கள் அவசியம் மனதில் கொள்வது நல்லது.

கடந்த சில ஆண்டுகளாக இணையத்தில் அதிகம் பேசப்பட்ட தலைப்புகளில் ஒன்று `பிக் பில்லியன் டே’ மற்றும் `கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்.’ இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் போர்ட்டல்களான ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் நடத்தும் இந்த அதிரடி தள்ளுபடி சேல்கள் ஒவ்வோர் ஆண்டும் மெகா ஹிட்தான். இந்தியாவின் 99% போஸ்டல் கோட் நம்பர்களிலிருந்தும் சென்ற ஆண்டு ஆர்டர்கள் வந்திருக்கின்றன. கிட்டத்தட்ட 19,000 கோடி ரூபாய்க்கு இரண்டு நிறுவனங்களும் வர்த்தகம் செய்திருந்தன. இந்த முறை கொரோனாவால் ஆஃப்லைன் வியாபாரம் சோர்ந்திருப்பதால், ஆன்லைன் சேல் இன்னும் பெரிய அளவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஷாப்பிங் சேலில் நீங்களும் எதையேனும் வாங்க நினைத்திருந்தால் உங்களுக்காக சில டிப்ஸ்.

ஆன்லைன் ஷாப்பிங்
ஆன்லைன் ஷாப்பிங்

1. ஆன்லைன் ஷாப்பிங்குக்கு கொஞ்சம் ஹோம் வொர்க் தேவை. முதலில் நீங்கள் கட்டாயம் வாங்க நினைக்கும் பொருள்களுக்கான பட்டியலைத் தயார் செய்யுங்கள். முடிந்தால் இப்போதே அந்த பொருள்களை பிரவுஸ் செய்து, அதன் ஸ்பெக்ஸ் மற்றும் தேவையான தகவல்களை நன்கு தெரிந்துகொள்ளுங்கள். ஆன்லைன் சேல் தொடங்கியதும் ஆஃபர் ஜோனில் அந்தப் பொருள்கள் இருக்கிறதா எனப் பார்த்து வாங்கலாம்.

2. ஒவ்வொரு பொருளுக்கான பக்கத்திலும் ஏற்கெனவே அதை வாங்கியவர்கள் தரும் ரிவ்யூக்களைப் படித்துப் பாருங்கள். புராடக்ட் பக்கத்திலிருக்கும் படங்களைவிட, ரிவ்யூக்களில் வரும் படங்கள்தான் முக்கியம். அவைதான் உண்மையான படங்கள். அதுபோலவே, அந்தப் பக்கத்திலிருக்கும் கேள்வி-பதில்களையும் வாசியுங்கள். நிறைய சந்தேகங்களுக்கு அங்கே பதிலிருக்கும்.

3. சில பொருள்கள் உடனே தேவையில்லை என்றாலும் விலை குறைவாக இருந்தால் வாங்கலாம். ஆனால், அந்தப் பொருள்களின் முந்தைய விலை தெரிந்தால்தான் அந்த முடிவை எடுக்க முடியும். சில நேரம் சில விற்பனையாளர்கள், விலையைக் குறைத்துக் காட்டினாலும் உண்மையான விலை அதைவிடக் குறைவாக இருக்கக்கூடும். விலையை முதலில் ஏற்றி, பின்பு குறைத்துக் காட்டும் அதே பழைய டெக்னிக்தான். இதற்கு ஆன்லைனில் ஒரு தீர்வு இருக்கிறது. அந்தப் பொருளின் கடந்தகால விலை என்ன, எப்படியெல்லாம் அதன் விலை மாறி வந்திருக்கிறது என்பதை எடுத்துச் சொல்ல பல இணையதளங்கள் உள்ளன. அதன் மூலம் உண்மையிலே விலை குறைந்திருக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்ட பின் வாங்கலாம். மேலும், எந்தத் தளத்தில் அந்தப் பொருளின் விலை குறைவாக இருக்கிறது என்பதையும் பார்க்கலாம்.

4. பெரும்பாலான ஆஃபர்கள் அறிவிக்கப்பட்ட உடனே சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிடும். மொபைல்களுக்குத்தான் முன்னர் இந்த `வாம்மா மின்னல்’ ரக பிரச்னை இருந்தது. இப்போது பெரும்பாலான ஆஃபர் பொருள்களுக்கும் இந்த அவசரம் இருக்கிறது. எனவே, நீங்கள் வாங்க நினைக்கும் முக்கியமான பொருள்களை ஷாப்பிங் கார்ட்டில் இப்போதே சேர்த்து வைக்கலாம். ஆஃபர் அறிவிக்கப் பட்டதும் உடனே வாங்க இது உதவக்கூடும்.

பொருளை வாங்கி, பார்சலைப் பிரிக்கும்போது அதை வீடியோ எடுத்துக்கொள்ளுங்கள். பொருள்கள் சேதமடைந்திருந்தாலோ, மாறி வந்திருந்தாலோ அது பற்றிப் புகார் தெரிவிக்க இந்த வீடியோ உதவும்!

5. இந்த சேலில் ‘ஆஃபர் மழை’ பொழியும் என்பதால், நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ பொருள்கள் வாங்கித் தர சிலர் விரும்புவார்கள். ஆனால், அவர்களின் முகவரியை ஆன்லைன் தளங்களில் சேர்த்திருக்க மாட்டார்கள். அவசரமாக ஆர்டர் செய்ய வேண்டி வரும்போது இது நேரத்தைக் காலி செய்யும். எனவே, யாருக்காவது பொருள்கள் வாங்கித் தர வேண்டியிருந்தால் முன்னதாகவே அவர்கள் முகவரியையும் சேர்த்து வைக்கவும். அது போலவே, ஒவ்வொரு பொருளை வாங்கும்போதும் சரியான முகவரியைத் தேர்வு செய்துள்ளோமா என்பதையும் உறுதி செய்யவும்.

ஆன்லைன் ஷாப்பிங்
ஆன்லைன் ஷாப்பிங்

6. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, கேஷ் ஆன் டெலிவரி என எதுவாக இருந்தாலும் அந்த பேமென்ட் முறையையும் முதலிலே பார்த்து வைத்துக்கொள்ளுங்கள். சில கிரெடிட் கார்டு நிறுவனங்கள் கேஷ்பேக் போன்ற சலுகைகள் தருவதால், அந்த கிரெடிட் கார்டு உங்களிடமிருந்தால் அதையும் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள்.

7. இ.எம்.ஐ ஆஃபர்களும் நிறைய வரும். ஆனால், அதற்கு பிராசஸிங் சார்ஜ்போல வேறு ஏதேனும் கட்டணம் இருக்கலாம். பொருளின் விலையைத் தாண்டி நாம் கட்டும் எந்தப் பணமும் வட்டி போலத்தான். எனவே, மறைமுகக் கட்டணம் பற்றி முன்பே படித்து வைத்துக்கொள்ளுங்கள். அதன் அடிப்படையில் எப்படி வாங்கலாம் என்பதை முடிவு செய்யுங்கள்.

8. வழக்கமாக நடப்பதைப்போல, பல ஆயிரம் மடங்கு அதிக விற்பனை இந்த ஆண்டு ஆகும் என்பதால், டெலிவரியில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் தாமதமாகலாம். எனவே, பொருள் நம் கைக்கு ஓரிரு நாளில் நிச்சயமாக வந்துவிடும் என நினைத்து எதையும் திட்டமிட வேண்டாம். ஒருவேளை தாமதமானால், அது உங்கள் மகிழ்ச்சியைக் கெடுத்துவிடும்.

9. எந்தப் பொருளை வாங்கினாலும் அதை அன்பாக்ஸிங் செய்யும்போது வீடியோ எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பொருள்கள் சேதமடைந்திருந்தாலோ, மாறி வந்திருந்தாலோ அது பற்றிப் புகார் தெரிவிக்க இந்த வீடியோ உதவக்கூடும்.

10. முக்கியமாக, இந்த சேலில் எவ்வளவு ரூபாய்க்கு ஷாப்பிங் செய்யலாம் என நீங்களே ஒரு லிமிட் வைத்துக் கொள்ளுங்கள். அதைத் தாண்டாமல் பார்த்துக்கொள்வது வீண் செலவைத் தடுக்க உதவும். ஹேப்பி ஷாப்பிங்!