என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
சமையல்
Published:Updated:

தனியறை... ஒரே அறை... குழந்தைகளை எங்கே தூங்கவைப்பது சரி?

தனியறை... ஒரே அறை...
பிரீமியம் ஸ்டோரி
News
தனியறை... ஒரே அறை...

#Lifestyle

'அம்மா மேல ஒரு கால்; அப்பா மேல ஒரு கால்' என்று, தூங்கும்போதுகூட பாசம் பகிர்ந்தபடி பிள்ளைகள் உறங்குவதுதான் நம் நாட்டில் வழக்கம். மேலைநாட்டுப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுகிற சிலர், 'பிள்ளைகள் தனியாக உறங்குவதுதான் சரி' என்கிறார்கள். எது சரி, எது தவறு? மனநல மருத்துவர் பூங்கொடி பாலா விளக்கமாகச் சொல்கிறார்.

பெற்றோருடன் உறங்குவதால் கிடைக்கிற நன்மைகள்...

பாதுகாப்பும் பாசமும்!

அம்மா அணைத்தபடி தாய்ப்பால் ஊட்டும்போது கிடைக்கிற அதே பாதுகாப்பு உணர்வும் பாச உணர்வும், பெற்றோர் நடுவில் படுத்து உறங்கும்போதும் பிள்ளைக்குக் கிடைக்கும். குழந்தைப் பருவத்தில் அப்பாவைவிட அம்மாவின் மீது பிள்ளைகள் அதிக பாசத்துடன் இருப்பதற்கு காரணமும் மேலே சொன்ன உணர்வுகள்தான்.

பூங்கொடி பாலா
பூங்கொடி பாலா

எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வார்கள்!

பெற்றோருடன் படுத்து உறங்குகிற குழந்தைகள் அன்றைய தினம் வீட்டில், பள்ளிக்கூடத்தில், நண்பர்களுடன் விளையாடிய பொழுதில், இணையதளத்தில் இருந்த நேரத்தில் என்னென்ன நடந்தன என்று பெற்றோரிடம் சொல்வதற்கு வாய்ப்புகள் அதிகம். பிள்ளைகள் இப்படிப் பகிர்ந்துகொள்ளும்போது சரி, தவறுகளைச் சுட்டிக்காட்டி அவர்களைச் சரியான பாதையில் வழி நடத்துவது சுலபம். பிள்ளைகளுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை, சரியாகப் பேச முடியவில்லை என்று வருத்தப்படுகிற பெற்றோர்கள் இந்த பெட் டைமை அதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அட்ஜஸ்ட் செய்துகொள்கிற குணம் வளரும்!

குடும்பமாக ஒரே கட்டிலில் அல்லது பாயில் படுக்கும்போது அந்தக் குறிப்பிட்ட இடத்துக்குள் ஒருவருக்கொருவர் அட்ஜஸ்ட் செய்துகொண்டு படுப்பார்கள். அப்பாவுக்குக் கால் வலிக்காமல் இருக்க அம்மா தன் தலையணையை வைக்க, அம்மா சௌகரியமாகப் படுக்க வேண்டும் என்று அப்பா கட்டிலின் ஓரத்திற்குச் செல்ல, நடுவில் இருக்கும் பிள்ளைக்குச் சொல்லித் தராமலே அட்ஜஸ்ட் செய்யும் இயல்பு வந்துவிடும்.

பயமில்லாமல் உறங்குவார்கள்!

சில குழந்தைகள் இருட்டுக்கும் தனிமைக்கும் பயப்படுவார்கள். பெற்றோருக்கு நடுவில் படுக்கும்போது இந்த பயமும் படபடப்பும் இல்லாமல் தூங்குவார்கள்.

தீமைகள்...

தாம்பத்தியம் தடைப்படும்!

குழந்தைகளுடன் சேர்ந்து தூங்கும்போது கணவன்-மனைவிக்குள் தாம்பத்தியம் தடைப்படும். 'பையன் முழிச்சிட்டிருப்பானோ', ' பொண்ணு முழிச்சுக்குவாளோ' என்ற பயத்திலேயே உறவுகொள்ளத் தயங்குவார்கள். இதனால் கணவன்-மனைவிக்குள் மனத்தாங்கல் வரலாம். சில நேரம் பிள்ளை உறங்கிவிட்டது என்று நினைத்துக்கொண்டு இவர்கள் உறவு கொண்டிருப்பார்கள். ஆனால், பிள்ளை விழித்துக் கொண்டிருக்கும். இந்தப் பிரச்னை இப்போது அதிகமாகியிருக்கிறது.

தனியாக உறங்குவதால் கிடைக்கிற நன்மை!

தனியே உறங்கும் பிள்ளைகள் தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் இருப்பார்கள். இருட்டுபயம் இருக்காது.

தீமைகள்...

அட்ஜஸ்ட் செய்வதில்லை!

தனி பெட்ரூமில் தூங்கிப் பழகிய குழந்தைகள் சொந்தக்காரர்கள் வீடுகளுக்குச் செல்லும்போதும் விசேஷங்களுக்குச் செல்லும்போதும் எல்லாருடனும் அட்ஜஸ்ட் செய்து படுப்பதில்லை. அங்கேயும் தனக்குத் தனியறை வேண்டும், தனி பெட் வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள்.

தனியறை... ஒரே அறை... குழந்தைகளை எங்கே தூங்கவைப்பது சரி?

செல்போன் அடிக்‌ஷன்!

பெற்றோருடன் தூங்குகிற பிள்ளைகளைவிட தனி பெட்ரூம், தனி டிவி என்று இருக்கிற பிள்ளைகள் நீண்ட நேரம் கண்விழித்து டிவி பார்க்கிறார்கள். செல்போன் வைத்திருக்கிற பிள்ளைகள் அதற்கு அடிமை ஆகிவிடுகிறார்கள். இதனால் அவர்களின் கண்கள் பாதிக்கப்படுவதோடு மோசமான வீடியோக்களை பார்ப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.

குடும்பத்துடன் ஒட்டுவதில்லை!

தனியாகப் படுத்து பழகிய பிள்ளைகள் பகல் நேரத்திலும் பிரைவஸி என்ற பெயரில் தனிமையில் இருக்க ஆரம்பிக்கிறார்கள். நிறைய பெற்றோர்கள் 'எங்களோட பேசறதே இல்லை', 'தனித் தீவு மாதிரி இருக்கா', 'யாரோடவும் ஒட்ட மாட்டேங்குறான்' என்று வருத்தப்படுகிறார்கள்.

இதை ஃபாலோ செய்யலாம்!

10 வயது வரைதான் பிள்ளைகள் பெற்றோருடன் சேர்ந்து படுக்க வேண்டும். அதன் பிறகு, தனியாகப் படுப்பதுதான் சரி. தனியறையில் குழந்தைகளைப் படுக்க வைக்கிறீர்கள் என்றால், மாலை நேரத்தில் அவர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும். வெளிநாடுகளில் பிள்ளைகளைத் தனியறையில் படுக்க வைத்தாலும் மாலை நேரத்தில் பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவழிப்பார்கள். அதனால் அவர்களுக்குள் பாசப்பிணைப்பு அறுபடாமல் இருக்கும்.