லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

நமக்கு நாமே... ஒரு ஸ்மார்ட் கைடு!

ஸ்மார்ட் கைடு
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்மார்ட் கைடு

தேவை அதிக கவனம்

லாக் டௌனில் வீட்டிலும் வெளியிலும் பல மாற்றங்கள் நடந்த வண்ணம் உள்ளன.
நமக்கு நாமே... ஒரு ஸ்மார்ட் கைடு!

அவற்றில் ஒரு முக்கிய அம்சம் இது. இதுவரை வீட்டில் செய்யாத பணிகளை இப்போது புதிதாகச் செய்யத் தொடங்கியுள்ளனர் மக்கள். சமையலறை பக்கமே செல்லாத குடும்பத் தலைவர் காய்கறி நறுக்கித் தருவது, வீட்டு உபயோகப் பொருள்களைக் கடைக்குக் கொண்டு செல்லாமல் தாங்களாகவே பழுது நீக்குவது... இப்படிப் பலவற்றிலும் முதன்முதலாக ஈடுபடுகின்றனர். அறிமுகமில்லாத வேலை என்பதால் சிலருக்கு காயங்களும் ஏற்படுகின்றன என்கிறார்கள் மருத்துவர்கள். இப்படி காயங்களும் விபத்துகளும் நேராத வகையில் ஸ்மார்ட்டாகப் பணி செய்வது குறித்துச் சொல்கிறார் அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் ஜெயராமன்.

சமையலறையில் மின் அடுப்பு, எரிவாயு அடுப்பு இரண்டிலும் கவனம் தேவை. எண்ணெய்ப் பலகாரங்கள் சமைக்கும்போது நீளக் கரண்டியையே பயன்படுத்த வேண்டும். சமையல் வேலையின்போது வேறு எந்தப் பணியிலும் கவனம் சிதறக் கூடாது. சமையலறை விபத்துகள் பல கவனச் சிதறல்களால் ஏற்படுபவைதாம்.

நமக்கு நாமே... ஒரு ஸ்மார்ட் கைடு!

சமையலுக்குரிய பொருள்களை நம் கைகளுக்கு எட்டுகிற தூரத்தி லேயே வைத்திருக்க வேண்டும். சமையலின்போது நாம் பயன் படுத்துகிற துணிகளை ஈரப்படுத்தி வைத்திருப்பதே நல்லது. சூட்டையும் மின்சாரத்தையும் கடத்தாதவை என்பதால் கைப்பிடிகள் இருக்கிற பாத்திரங்களையும் கரண்டிகளையுமே பயன்படுத்த வேண்டும்.

மின் அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ் என எந்தச் சாதனத்தைப் பயன்படுத்தும்போதும்சரி, ஒருமுறை மின்தடை ஏற்பட்டுவிட்டால் எல்லா மின்சாதனங்களையும் அணைத்துவிட வேண்டும்.

நமக்கு நாமே... ஒரு ஸ்மார்ட் கைடு!

கூர்மையான பொருள்களைக் கவனமாகக் கையாள வேண்டும். காய்கறி நறுக்கப் பழகுபவர்கள், கைகளை உயர்த்தி நறுக்கக் கூடாது. விரல் நகக்கண்ணுக்கு அருகே கத்தி முனையை வைத்துக்கொண்டு நறுக்க வேண்டும். அப்போதுதான் விரலில் கத்தி படாமல் இருக்கும். கூரிய பொருள்களை ஒருவரிடம் தருவதிலும் முறை இருக்கிறது. கூர்முனை நம் கைப்பக்கம் இருக்க வேண்டும். அப்போதுதான் அதைப் பெறுபவரைப் பதம் பார்க்காமல் இருக்கும்.

வீட்டிலேயே முடித்திருத்தம் செய்து கொள்வோர், துருப்பிடிக்காத, லேசான பதமுள்ள கத்தரிகளைப் பயன்படுத்த வேண்டும். தடிமனான சீப்புகளில் சீவியெடுத்துதான் முடி வெட்ட வேண்டும்.

நமக்கு நாமே... ஒரு ஸ்மார்ட் கைடு!

பட்டம் செய்வது, கிராஃப்ட்ஸ் செய்வது எனக் குழந்தைகளும் அவர்களுக்காகப் பெரியவர்களும் தினமும் ஈடுபடுகின்றனர். கூரிய பொருள்களைக் குறித்து பயமுறுத்தாமல் அவற்றை எப்படிக் கையாள்வது என்று கற்றுக்கொடுக்கலாம். உடைந்த பிளேடோ, குண்டூசியோ கீழே விழுந்துவிட்டால் அவற்றின் எதிர்முனையை அழுத்தினால் கூர்முனை எழும்பும். எடுத்துப் பாதுகாப்பாக வைத்திடலாம்.

வீட்டு வேலைகள் செய்யும்போது கதவு களை, பாதி திறந்து வைத்திருப்போம். இது ஆபத்தானது. குழந்தைகள் கைகளை விட்டுக்கொள்வார்கள். எப்போதும் முழுமையாகக் கதவு களைத் திறந்து வைக்கவோ, மூடி வைக்கவோ வேண்டும்.

எதிர்பாராதவிதமாக கண்ணாடிகள் உடைந்தால் ஈரத்துணி கொண்டு ஒற்றி எடுத்தாலே நுணுக்கமான பீஸ்கள் கூட துணியோடு வந்துவிடும். எக்காரணம் கொண்டும் அந்தச் சின்ன துண்டுகளைக் கையில் எடுக்கக் கூடாது.

நமக்கு நாமே... ஒரு ஸ்மார்ட் கைடு!

வெட்டுக் காயங்கள் ஏற்பட்டால், உடனே ஈரத்துணியால் காயம்பட்ட இடத்தை இறுகக் கட்டி விடலாம். சிறிது நேரத்தில் ரத்தம் ஒழுகுதல் நின்றுவிடும். காயத்தின் அளவைப் பொறுத்து மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

வீட்டை அழகாக்குவதாகக் கூறி கண்ணாடிப் பொருள்களை சுவரிலோ, அலமாரியிலோ உயரத்தில் வைப்பது ஆபத்து. டேபிள் மேலே நடுவே, அலமாரியின் கீழ்வரிசை இரண்டு மட்டுமே கண்ணாடிப் பொருள்களுக்கான இடம்.

நமக்கு நாமே... ஒரு ஸ்மார்ட் கைடு!

மரப்பொருள்கள் உள்ளிட்ட எதிலும் இடித்தோ, நசுங்கியோ வீக்கம் ஏற்பட்டால் ஐஸ்பேக் ஒத்தடம் தந்தால் வீக்கம் வற்றிவிடும். லேசான காயமென்றால் வீட்டிலேயே மருந்து போட்டுக்கொள்ளலாம். காயம் பலமானதாக இருந்தால் மருத்துவரை அணுகுதல் அவசியம்.

சிறிய தீக்காயங்கள் ஏற்பட்டால் ஓடுகிற தண்ணீரில் காயம்பட்ட இடத்தைக் கழுவ வேண்டும். காயத்தின் தன்மைக்கேற்ப வீட்டிலேயே மருந்திட்டுக் கொள்வதும், மருத்துவமனை செல்வதும் முடிவெடுத்து உடனடியாகச் செயல்பட வேண்டும்.

நமக்கு நாமே... ஒரு ஸ்மார்ட் கைடு!

இந்த லாக் டௌன் நாள்கள் பெரும்பாலான மனிதர்களுக்கு சுயசார்பினைக் கற்றுத் தந்திருக்கிறது. அதனுடைய ஒரு பகுதியாக, வீட்டிலேயே நாம் எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறோம். பாதுகாப்பாக இவை தொடரட்டும்.