Published:Updated:

பூங்காவான குப்பைமேடு!

நெல்லை
பிரீமியம் ஸ்டோரி
நெல்லை

நெல்லை தூய்மைப் பணியாளர்களின் பசுமைப் புரட்சி

பூங்காவான குப்பைமேடு!

நெல்லை தூய்மைப் பணியாளர்களின் பசுமைப் புரட்சி

Published:Updated:
நெல்லை
பிரீமியம் ஸ்டோரி
நெல்லை

‘எங்கே குடியிருக்கிறீர்கள்?’ என்று யாராவது கேட்டு, மாநகராட்சி குப்பை கொட்டும் இடத்துக்கு அருகிலுள்ள இடத்தின் பெயரைச் சொல்லும்போதே எதிரிலுள்ளவரின் ஏளனப் பார்வையைச் சந்திக்க நேரிடும். சென்னை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளின் நிலைமை இதுதான். ஆனால், அதை மாற்றிக்காட்டியிருக்கிறது நெல்லை மாநகராட்சி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1994-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நெல்லை மாநகராட்சியில், ஐந்து லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். 109 சதுர கி.மீ பரப்பளவுள்ள நெல்லையில் தினமும் 160 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு சங்கரன்கோவில் சாலையிலுள்ள ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் குவிக்கப்படு கின்றன. பாதாளச் சாக்கடைக் கழிவுநீரும் அங்குள்ள சேமிப்பு தொட்டிக்குக் கொண்டு செல்லப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இந்தக் குப்பைகளாலும் கழிவுநீர்த் தொட்டிகளாலும் ராமையன்பட்டி பகுதியைச் சுற்றிலும் வசிப்பவர்கள் மிகுந்த துன்பத்துக்கு உள்ளானார்கள். காற்று வீசும் காலங்களில் குப்பைக் கிடங்கில் பற்றி எரியும் தீயால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுவாசிக்க முடியாத அளவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. எனவே, குப்பைக் கிடங்கை அகற்றக்கோரி, போராடிவந்தார்கள்.

பூங்காவான குப்பைமேடு!

தற்போது அந்தப் பகுதி, பூங்காவாகவும் சோலையாகவும் மாற்றம் அடைந்து வருகிறது. இது பற்றிப் பேசிய பொதுமக்கள், ‘‘குப்பையோடு சேர்த்து இறந்துபோன விலங்குகளின் உடலையும் கோழிக்கழிவுகளையும் கொட்டுவதால் இந்தப் பகுதியே துர்நாற்றம் வீசும். குப்பைக் கிடங்கில் தீ ஏற்பட்டால் ஒரு வாரம் வரைகூட எரியும். அந்த நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வரவே முடியாது. மழைக்காலங்களில் ஈ, கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதால் நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்து அதிகம். `குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும்’ என்று போராடினோம். தற்போது இங்கே அதிகமாகக் குப்பைகள் கொட்டப்படாததோடு, ஒரு பகுதியைப் பூங்காவாக மாற்றியிருக்கிறார்கள். விரைவில் எங்கள் பிரச்னை தீரும் என நம்புகிறோம்’’ என்கிறார்கள் நிம்மதி தொனிக்கும் குரலில்.

கடந்த பல ஆண்டுகளாகச் சேகரிக்கப்பட்டு, மலைபோலக் கொட்டிக்கிடந்த குப்பைகளை, தூய்மைப் பணியாளர்கள் திடக்கழிவு மேலாண்மை மூலமாக உரமாக மாற்றி, விவசாயிகளுக்கு விற்பனை செய்கிறார்கள். நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்பட்ட இடங்களில் பூச்செடிகளையும் மரங்களையும் நட்டு, பசுஞ்சோலையாக மாற்றி யிருக்கிறார்கள்; பராமரிக்கிறார்கள். அதனால் அந்தப் பகுதியே பசுமையாகக் காட்சியளிக்கிறது. துர்நாற்றம் மறைந்திருப்பது குடியிருப்புவாசிகளை நிம்மதியடையவைத்திருக்கிறது.

கண்ணன்
கண்ணன்

இது குறித்து நெல்லை மாநகராட்சி ஆணையர் கண்ணனிடம் பேசினோம். ‘‘நெல்லை மாநகரத்தின் குப்பைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கொட்டப் பட்டதால் ஏற்பட்ட பிரச்னையைச் சமாளிக்க மாநகரம் முழுவதும் 41 இடங்களில் குப்பைகளைத் தரம் பிரிக்கும் மையங்களை அமைத்தோம். தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளைக் கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கிறோம். அதனால் ஒரே இடத்துக்கு அனைத்துப் பகுதிகளின் குப்பையும் வந்து சேர்வது நின்றுபோனது. 183 ஏக்கர் பரப்பளவுள்ள ராமையன்பட்டி குப்பைக் கிடங்கை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாக்கும் வகையில் சுற்றுச்சுவர் எழுப்பினோம். குப்பைக் கிடங்கு பகுதியிலுள்ள துர்நாற்றத்தைப் போக்கும் வகையில் மலர்ச் செடிகளை வளர்க்கத் திட்டமிட்டோம். முதற்கட்டமாக, அறிவியல் முறைப்படி, மூடாக்கு முறையில் செடிகளை வளர்த்தோம். அவை நல்ல முறையில் வளர்ந்ததால், மாநகரம் முழுவதும் இருக்கும் 1,106 தூய்மைப் பணியாளர்களையும் சுழற்சி முறையில் பயன்படுத்தி பூங்கா அமைத்தோம்.

தூய்மைப் பணியாளர்கள் குப்பை நாற்றம் வீசிய இடத்தில் லஷ்மி கரந்தை, சங்கு புஷ்பம் போன்ற பூச்செடி களை வளர்த்து, பராமரிக்கிறார்கள். குப்பைமேட்டில் ’கொரியன் கிராஸ்’ வகை புல் வளர்த்து அதைப் பசுமையாக்கினார்கள். நூற்றுக்கும் அதிகமான தென்னை, வேம்பு, புங்கன், மருதம், வன்னி, அரசு, ஆல் போன்ற மரங்களையும் பராமரித்துவருகிறார்கள். மாநகரின் கழிவுநீரைச் சுத்திகரிப்பு செய்யும் தொட்டிகள் ராமையன்பட்டி பகுதியிலேயே அமைந்திருக்கின்றன. அதனால், அங்கு சுத்திகரிக்கப்படும் தண்ணீர் மூலம் இந்தப் பூங்கா பராமரிக்கப்படுகிறது. அதனால் கழிவுநீர் வெளியில் சென்று சுகாதாரம் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

பூங்காவான குப்பைமேடு!

`நெல்லையின் அடையாளமான தாமிரபரணியைப் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை’ என்பதை, பொதுமக்களிடம் வலியுறுத்திவருகிறோம். வருங்காலத்தில் நெல்லை மாநகரின் ஒரு சொட்டு கழிவுநீர்கூட தாமிரபரணி ஆற்றில் கலக்காத வகையில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். கொரோனா காலத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமை இருக்கிறது. அதையும் மீறி பூங்கா அமைத்துப் பராமரிக்கிறார்கள். இதையறிந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, அவர்களை பாராட்டினார். அது எங்களுடைய பணியாளர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது’’ என்றார் மகிழ்ச்சியுடன்.

தூய்மைப் பணியில் மட்டுமல்லாமல் பசுமைப் பணியிலும் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் பாராட்டுக்குரியவர்கள்!