Published:Updated:

“முதல்வரின் மாவட்டத்துக்கு ஒரு ரேட்... எங்களுக்கு ஒரு ரேட்டா?”

திருப்பத்தூர் மக்கள்
பிரீமியம் ஸ்டோரி
திருப்பத்தூர் மக்கள்

கொதிக்கும் திருப்பத்தூர்வாசிகள்!

“முதல்வரின் மாவட்டத்துக்கு ஒரு ரேட்... எங்களுக்கு ஒரு ரேட்டா?”

கொதிக்கும் திருப்பத்தூர்வாசிகள்!

Published:Updated:
திருப்பத்தூர் மக்கள்
பிரீமியம் ஸ்டோரி
திருப்பத்தூர் மக்கள்

‘ஒரு கண்ணுக்கு வெண்ணெய்... மறு கண்ணுக்குச் சுண்ணாம்பு என்பதுபோல், தமிழக அரசு பாரபட்சமாக நடந்துகொள்கிறது’ என்று திருப்பத்தூர் விவசாயிகள் கொந்தளிக்கின்றனர். ‘சாலை அமைப்பதற்காகக் கையகப்படுத்தப்படும் எங்கள் பகுதி நிலங்களுக்கு, எட்டுவழிச்சாலைக்காக சேலத்தில் கையகப்படுத்த நிலங்களுக்கு வழங்கப்பட்டதைவிட மிகக்குறைவாக தொகை வழங்கப்படுகிறது’ என்பதுதான் அவர்களின் குற்றச்சாட்டு.

“முதல்வரின் மாவட்டத்துக்கு ஒரு ரேட்... எங்களுக்கு ஒரு ரேட்டா?”

`மதுரை மேலூரிலிருந்து திருப்பத்தூர், காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக தஞ்சாவூருக்கு சுமார் 2,500 கோடி ரூபாயில் சாலை அமைக்கப்படும்’ என, மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. ‘இந்தச் சாலை, கிழக்கு – மேற்கு திசையிலான போக்குவரத்துச் சாலை. இதன் தொடர்ச்சி சென்னை ஈ.சி.ஆரில் இணைந்து, தென் மாவட்டங்களின் சுற்றுலா வளர்ச்சிக்கு வழிவகுக்கும்’ என்று அதிகாரிகள் விளக்கமளித்திருந்தனர்.

திட்டம் அறிவிக்கப்பட்டபோது, ‘விவசாய நிலத்தை அழித்து சாலை அமைக்கக் கூடாது’ என்று விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், ‘நிச்சயம் சாலை அமைந்துவிடும்’ என்ற நிலைக்கு வந்த பிறகு, ‘இழப்பீட்டையாவது முறையாகக் கொடுக்க வேண்டும்’ என்று விவசாயிகள் வீதிக்கு வந்துள்ளனர். ‘நிலத்துக்குத் தகுதியான அளவு பணம் வழங்கப்படும்’ என்று தெரிவித்திருந்த நிலையில், ஒருசிலருக்கு மட்டும் மிகக்குறைவான அளவு பணத்தை அனுப்பி அரசு நாடி பிடிக்க ஆரம்பித்துள்ளதாக மதுரை நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை, திருப்பத்தூர் பகுதி விவசாயிகள் சமீபத்தில் முற்றுகையிட்டனர். அத்துடன், ‘எங்களை அழைத்துப் பேசி நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையென்றால், கடுமையான போராட்டம் நடத்தி சாலை அமைக்கவிட மாட்டோம்’ என மாவட்ட வருவாய் அலுவரிடம் மனு அளித்துள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து நம்மிடம் பேசிய காட்டாம்பூர் விவசாயி தங்கமணி, ‘‘திருப்பத்தூர் பகுதிக்கு உட்பட்ட காட்டாம்பூர், வாணியங்காடு, சுண்ணாம்பிருப்பு, திருக்கோஷ்டியூர் என பல ஊராட்சிகளுக்கு உட்பட்ட சுமார் 60 கிராம மக்கள், இந்தச் சாலையால் பாதிக்கின்றனர். அதிகளவு இழப்பீடு தருவதாகச் சொல்லிவிட்டு, தற்போது எல்லா ஊராட்சிகளிலும் ஒருசிலருக்கு மட்டும் முதற்கட்டமாக குறைந்த இழப்பீட்டுப் பணத்தை அனுப்பியுள்ளனர். இதன்மூலம், அனைவருக்கும் இதே இழப்பீட்டுத் தொகைதான் என்று அரசாங்கம் சொல்ல நினைக்கிறது. ஏற்கெனவே இந்தப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை எண் 226-ல் நிலம் கையகப்படுத்தப்பட்டபோது சென்ட்டுக்கு 25,000 முதல் 3,00,000 ரூபாய் வரை வழங்கப்பட்டது. ஆனால், தற்போது என்.ஹெச்-338, 36, 383-ல் கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடாக சென்ட்டுக்கு 2,000 முதல் 3,000 ரூபாய் வரை முதல் கட்டமாக அனுப்ப ஆரம்பித்துள்ளனர். இதனால் எங்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

“முதல்வரின் மாவட்டத்துக்கு ஒரு ரேட்... எங்களுக்கு ஒரு ரேட்டா?”

இழப்பீட்டை சரியாகக் கொடுப்போம் என்று சொன்னதால்தான் அரைகுறை மனதோடு நிலத்தைத் தர ஒப்புக்கொண்டோம். ஆனால், தற்போது முறையாக இழப்பீடு வழங்காதது வருத்தமளிக்கிறது. சேலத்தில் எட்டுவழிச் சாலைக்காக நிலத்தைக் கையகப்படுத்தும்போது வழிகாட்டி மதிப்பில் நான்கு மடங்கு தொகை என முறையாக இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால், எங்களுக்கு அப்படியல்ல. அடிமாட்டு ரேட்டுக்குத்தான் இழப்பீடு வழங்கப்படுகிறது. நாங்களும் விவசாயிகள்தான். எங்களுக்கு மட்டும் பாரபட்சம் பார்ப்பது ஏன்? எங்களுக்கு ஒரு ரேட்... முதல்வரின் மாவட்டத்துக்கு ஒரு ரேட்டா?’’ என்று கேள்வி எழுப்பினார்.

தேவரம்பூர் விவசாயி கதிரேசன், ‘‘சிவகங்கை மாவட்டத்தில் தொழில் வாய்ப்புகள் என்பது மிகவும் குறைவு. வானம் பார்த்த பூமியாக விவசாயம் செய்கிறோம். ஐந்து தலைமுறைகளாக விவசாயம் செய்த என்னுடைய நிலத்தை அரசு இப்படி சாலைக்காகக் கேட்பது மிகவும் வேதனைக்குரியது. எனினும், இழப்பீடாவது முறையாகக் கிடைக்கும் எனக் காத்திருந்தோம். இந்த நிலையில் ஒருசிலருக்கு மட்டும் பணத்தை அனுப்பி அரசு நோட்டம்பார்த்துள்ளது. அந்தத் தொகையைக் கேட்டாலே வயிற்றில் புளி கரைக்கிறது. வெளிப்படைத்தன்மையே இல்லாமல் அரசு எங்களுக்கு இழப்பீடு வழங்குகிறது.

பூர்வீகமாக விவசாயம் செய்யும் எங்களுக்கு, நிலத்தை விற்கவேண்டிய அவசியமில்லை. ஆனால், அரசு கட்டாயப்படுத்தி குறைந்த விலைக்கு எங்களிடம் நிலத்தை வாங்குவது எந்த விதத்தில் நியாயம்? எங்களிடம் அரசு எடுக்கும் இடத்தில் சீமைக்கருவேலமரம் விளைந்தால்கூட, சில வருடங்களில் இழப்பீட்டைவிட கூடுதல் பணத்தை எடுத்துவிடுவோம். பல தலைமுறைகளுக்கு உணவையும் வருமானத்தையும் அள்ளித் தரக்கூடிய விவசாய நிலங்களுக்கும் தற்போதைய வழிகாட்டி மதிப்பை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு நிர்ணயிப்பது எந்த வகையில் நியாயம்? ஒரு சென்ட்டுக்கு வழங்க வேண்டிய நியாயமான பணத்தை எங்களுக்கு வழங்க வேண்டும்’’ என்றார்.

“முதல்வரின் மாவட்டத்துக்கு ஒரு ரேட்... எங்களுக்கு ஒரு ரேட்டா?”

வருவாய்த் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘தமிழகம் முழுக்க சாலைகளுக்காக வழங்கப்படும் இழப்பீட்டுத்தொகையைத்தான் இங்கேயும் வழங்குகிறோம். திருப்பத்தூர் பகுதி விவசாயிகள் குறிப்பிடும் மற்றொரு சாலையில், அனைத்தையும் ஒரே மதிப்பீடாகக் குறிப்பிடப்பட்டு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது நன்செய் நிலம், புன்செய் நிலம் எனப் பிரித்துப் பார்த்து இடத்துக்குத் தகுந்த மதிப்பீடு செய்யப்பட்டு, இழப்பீடு வழங்கப்படுகிறது. அதனால், விவசாயிகளுக்குக் குழப்பமாகத் தெரிகிறது. விதிகளின்கீழ்தான் இழப்பீடு வழங்கப்படுகிறது. இதில் எந்த முறைகேடும் இல்லை’’ என்றனர்.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் நெடுஞ்சாலை ஆணைய திட்ட மேலாளர் சரவணனிடம் பேசினோம். ‘‘விவசாயிகள் - இடத்தை விற்பவர்கள்; நெடுஞ்சாலைத் துறையினர் - நிலத்தை வாங்குபவர்கள். இருவருக்கும் இடையில் பாலமாக இருந்து மாநில அரசு நிலத்தை வாங்கிக் கொடுக்கிறது. இழப்பீட்டுத்தொகையை நிர்ணயம் செய்வதும் மாநில அரசுதான். தொகை அதிகமாக இருந்தால் நாங்களும், குறைவாக இருந்தால் விவசாயிகளும் அப்பீல் செல்லலாம். அதை மாவட்ட ஆட்சியர் சரிசெய்வார். இதிலும் இரு தரப்புகளிலும் யாருக்கும் திருப்தியில்லையென்றால், நீதிமன்றத்தை நாடலாம். இதுதான் நடைமுறை. `இந்த விவகாரத்தில் டி.ஆர்.ஓ மற்றும் கலெக்டர்தான் தலையிட முடியும். எடுத்தவுடன் நாங்கள் இதில் தலையிட முடியாது’ என விவசாயிகளிடம் சொல்லிவிட்டோம்’’ என்றார்.

விளைநிலங்களைக் கொடுக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க அரசு முன்வர வேண்டும். இதில் எந்தவிதமான பாரபட்சமும் காட்டப்படக் கூடாது!