Published:Updated:

ஊரடங்கு... திருப்பூரில் தெரிகிறது தேசத்தின் நிலை!

திருப்பூர்
பிரீமியம் ஸ்டோரி
News
திருப்பூர்

வேலையில்லாததால கையில சுத்தமா காசு இல்லை. ஊருக்குப் போகவும் வழியில்லை. எல்லாரும் கஷ்டத்துல இருக்கிறதால, யாருகிட்டயும் கடன் வாங்கவும் முடியலை.

இந்தியாவுக்குள் இருக்கும் லிட்டில் இந்தியா, திருப்பூர். இங்கு உள்ள பனியன் கம்பெனிகளில் இந்தியாவின் எல்லா மாநிலங்களையும் சேர்ந்த பல லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். குறைந்துவரும் வேலை, கையாளும் துணிகளுக்கு மட்டுமே கூலி என ஏற்கெனவே சிக்கலில் இருந்த திருப்பூர் தொழிலாளர்களின் வாழ்க்கை, இந்த ஊரடங்கால் மேலும் சூன்யமாகியிருக்கிறது.

அவர்களின் நிலையறிய திருப்பூர் நகரில் ஒரு ரவுண்டு அடித்தோம். ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள், மூன்று வேளை சாப்பாட்டுக்கே வழியின்றி இருப்பதைப் பார்க்க முடிந்தது.

அயர்னிங் மாஸ்டராக இருக்கும் இளைஞர் சதீஷ்குமார், “திருப்பூர்ல கிட்டத்தட்ட 80 சதவிகித பேர் வாரக்கூலி வாங்கித்தான் வாழ்க்கை நடத்துறோம். வாரத்துக்கு சராசரியா 3,000 ரூபாய் கிடைக்கும். அதுலதான் வீட்டு வாடகை, சாப்பாடு எல்லாமே பாத்துக்கணும். இ.எஸ்.ஐ, பி.எஃப், போனஸ்னு எதுவுமில்லை. இந்த ஊரடங்கு, எங்க வாழ்க்கையை தலைகீழா திருப்பிப் போட்டிருக்கு. பலரும் சாப்பாட்டுக்கு வழியிருந்தா போதும்னு சொந்த ஊருக்கே ஓடிட்டாங்க. இங்கேயே இருக்கிறவங்களுக்கு, கம்பெனிகள்ல அட்வான்ஸ் எதுவும் தர மாட்டேங்குறாங்க. வேலை இல்லாததால வட்டிக்குக்கூட கடன் கொடுக்கத் தயங்குறாங்க’’ என்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சந்தீப் ‘‘வாரச் சம்பளத்தை வாங்கி என் செலவு போக மிச்சக் காசை சிக்கனப் படுத்தி ஊருக்கு அனுப்பிவைப்பேன்.

வேலையில்லாததால கையில சுத்தமா காசு இல்லை. ஊருக்குப் போகவும் வழியில்லை. எல்லாரும் கஷ்டத்துல இருக்கிறதால, யாருகிட்டயும் கடன் வாங்கவும் முடியலை.

வாடகை தரலைன்னா வீட்டைக் காலி பண்ணச் சொல்றாங்க. மளிகைக்கடையில கடன் தரமாட்டேங்குறாங்க. ஒருசிலரோட உதவியால்தான் சாப்பாடே சாப்பிட முடியுது. ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும், வேலை இல்லைன்னா ஊருக்குத்தான் போயாகணும்’’ என்றார் விரக்தியோடு.

திருப்பூர்
திருப்பூர்

திருப்பூரில் ஒரே கம்பெனியில் 23 ஆண்டுகளாக வேலைசெய்யும் பால்ராஜ், ‘‘ `வேலை இல்லைன்னா எப்படி சம்பளம் கொடுக்க முடியும்?’னு கம்பெனிகாரங்க கையை விரிச்சுட்டாங்க. அட்வான்ஸும் தர மாட்டேங்குறாங்க. அரசாங்கம் கொடுத்த 1,000 ரூபாய், ரேஷன் அரிசியிலதான் பொழப்பு ஓடுது’’ என்றார்.

சி.ஐ.டி.யூ பனியன் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சம்பத், “வேற ஊர்ல இருந்து பிழைப்புக்காக திருப்பூர் வந்தவங்க நிறையபேர். அவங்ளுக்கு சொந்த ஊர்ல ரேஷன் அட்டை இருக்கிறதால அரசு கொடுத்த நிவாரணத்தொகை, ரேஷன் பொருள்களை வாங்க முடியல. யாராவது சாப்பாடு கொண்டு வருவாங்கன்னு பல தொழிலாளர்கள் சாலையில் காத்துக்கிடக்காங்க. வருஷம் 50,000 கோடி ரூபாய்க்கு உற்பத்தி செய்ற திருப்பூர்ல, ஒரு நிறுவனமும் தொழிலாளர்களுக்கு கொஞ்சம்கூட உதவி செய்யலை. இந்தச் சூழல்ல திருப்பூர் முதலாளிகள் கொஞ்சமாவது மனிதாபிமானத்தோடு நடக்கணும். அரசும் திருப்பூருக்கு பிரதான கவனம் செலுத்தி உதவி செய்யணும்’’ என்றார்.

ஊரடங்கு... திருப்பூரில் தெரிகிறது தேசத்தின் நிலை!

திருப்பூர் ஆயத்த ஆடை மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் சக்திவேல், ‘‘ஏற்கெனவே அனுப்பிய ஆர்டர்களுக்கு பணம் வரவில்லை. கிட்டத்தட்ட 70 சதவிகித ஆர்டர்கள் கேன்சலாகிவிட்டன. எங்களுக்கே நிலைமை சிக்கலாகத்தான் இருக்கிறது. இதற்கிடையில் மார்ச் வரை எப்படியோ சமாளித்து சம்பளம் கொடுத்து விட்டோம். ஏப்ரல் மாதம் சம்பளம் கொடுக்க முடியாத சூழல். இந்த நிலையில் அரசாங்கம்தான் உதவி செய்ய வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இ.எஸ்.ஐ சட்டத்தின்கீழ் பதிவு செய்த தொழிலாளர்களுக்காக, ‘அடல் பிமித் வியாக்தி கல்யாண் யோஜனா’ என்னும் திட்டம் 2018-ல் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின்படி, தொழிலாளர்கள் திடீரென வேலையிழக்க நேரிட்டால், அவர்கள் புதிய வேலையைத் தேடிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக நிவாரண உதவித்தொகை செலுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் தற்போது 91 ஆயிரம் கோடி ரூபாய் நிதி இருக்கிறது. தற்போது ஊரடங்கு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு, அந்த நிதியிலிருந்து மத்திய அரசு நிவாரணத் தொகை கொடுத்து உதவினால் நன்றாக இருக்கும்’’ என்றார்.

சதீஷ்குமார் - சந்தீப் - பால்ராஜ்
சதீஷ்குமார் - சந்தீப் - பால்ராஜ்

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் (டீமா) சங்கத்தின் தலைவர் எம்.பி.முத்து ரத்தினம், ‘‘வெயில் காலத்துக்கு எனத் தயாரித்த 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடைகள் தேங்கியிருக்கின்றன. இதை அடுத்த வருடம்தான் விற்பனை செய்ய முடியும். ஊரடங்கால் கிட்டத்தட்ட 5,000 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் இருந்து எப்படி வெளியே வருவதென்றே எங்களுக்குத் தெரியவில்லை.

சம்பத் - சக்திவேல் - எம்.பி.முத்து ரத்தினம்
சம்பத் - சக்திவேல் - எம்.பி.முத்து ரத்தினம்

கம்பெனியின் ஹாஸ்ட லில் தங்கி இருப்பவர்களுக்கு சாப்பாடு கொடுத்து கவனித்துக் கொள்கிறோம். கான்ட்ராக்ட் மூலமாக 80 சதவிகிதத்தினர் வேலை செய்கின்றனர். இவர்கள் ஒரே கம்பெனியில் வேலை செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு பொது அமைப்புகளைத் தொடர்பு கொண்டு உதவிகளை செய்து வருகிறோம். பெரிய பனியன் நிறுவனங்களிடம் நிதி பெற்று, ஒரு டீம் அமைத்து அதன் மூலமாக தொழிலாளர் களுக்கு உதவ அரசு முயற்சி எடுத்திருக்கலாம்’’ என்றார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்தி கேயனோ, “கணக்கெடுக்கப் பட்ட வட மாநிலத்தவர்கள் 1,30,000 பேரில், கம்பெனி ஹாஸ்டலில் தங்கியிருக்கும் 68,000 பேருக்கு உணவு கிடைப்பதில் எந்தப் பிரச்னையுமில்லை. மீதம் உள்ளவர்களுக்கு கம்பெனி சார்பில் மளிகைப் பொருள்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 33,000 பேர் அத்தியாவசிய தேவைகளின்றி தவித்துவந்தனர். இவர்களுக்காக ‘திருப்பூர் கொரோனா ஃபைட்டர்ஸ்’ என்ற குழு மூலம் 1,200 தன்னார்வலர் களை ஒருங்கிணைத்து உதவிசெய்கிறோம். ஊழியர்களுக்கு சேரவேண்டிய சம்பளம், நிலுவைத் தொகை மற்றும் பொருளாதாரரீதியான உதவிகளைச் செய்வது குறித்து பனியன் நிறுவனங்கள் மற்றும் சங்கங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறேன். கொரோனா தடுப்பு நடவடிக்கை முடிந்த பிறகு, நிச்சயமாக கம்பெனி முதலாளிகளை அழைத்துப் பேசி ஊழியர்களுக்கு உரிய உதவி கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

திருப்பூரின் மீது மத்திய, மாநில அரசுகள் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம்!