Published:Updated:

`1 கிலோ பிளாஸ்டிக் கொடுத்தால் நோட்டு, புத்தகம் இலவசம்!' - திருப்பூர் கலெக்டரின் அசத்தல் முயற்சி

தங்கள் வீடுகளிலிருந்து அதிகப்படியான பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு வந்து கொடுக்கும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்புப் பரிசாக எலெக்ட்ரிக் சைக்கிளை வழங்கும் திட்டமும் உள்ளது.

திருப்பூர் ஆட்சியர் விஜய கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்.
திருப்பூர் ஆட்சியர் விஜய கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்.

பிளாஸ்டிக் பொருள்களின் அன்றாட பயன்பாடு உலகம் முழுவதும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் அழிவின் விளிம்பில் சிக்கித் தவிக்கின்றன உயிரினங்களும் இயற்கையும். பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராகத் தன்னார்வ அமைப்புகளும் அரசும் தீவிரமாகக் குரல் கொடுத்து வருகின்றன. தமிழகத்திலும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.திரு

பிளாஸ்டிக்
பிளாஸ்டிக்

சமூக ஆர்வலர்களின் குரல்களுக்கு வலுசேர்க்கும் வகையில், ஆந்திரா மாநிலம், அனந்தபூர் மாவட்ட ஆட்சியர் சத்யநாராயணன் எடுத்த ஒரு முடிவு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர், தனது நிர்வாகத்துக்குட்பட்ட பகுதிகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரித்துக் கொண்டுவந்து கொடுத்தால், 1 கிலோ பிளாஸ்டிக் பொருள்களுக்கு 2 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என அறிவித்தார். இந்தத் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியுள்ளது.

`ஒரே கமென்ட்; பிரச்னைக்கு இன்ஸ்டன்ட் தீர்வு!’ - திருப்பூர் கலெக்டருக்குக் குவியும் பாராட்டு

அனந்தபூர் மாவட்ட ஆட்சியரைப்போல, திருப்பூர் ஆட்சியர் விஜய கார்த்திகேயனும் பிளாஸ்டிக் ஒழிப்புப் பணியில் களமிறங்கியிருக்கிறார். ஆனால், ஒரு சிறு மாற்றம். அரிசிக்குப் பதிலாக, மாணவர்களுக்கு இலவச புத்தகங்களையும் நோட்டுகளையும் அள்ளி வழங்கும் அசத்தலான திட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்.

திருப்பூர் ஜெய்வாபாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த, பிளாஸ்டிக் மறுசுழற்சி திட்டத்தை இன்று கலெக்டர் விஜய கார்த்திகேயன் தொடங்கிவைத்தார். அவரிடம், மாணவர்களும் மாணவிகளும் தங்கள் வீடுகளில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் பிளாஸ்டிக் பொருள்களைக் கொடுத்தனர். அவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கிப் பாராட்டினார்.

பிளாஸ்டிக் மறுசுழற்சி திட்டத்தை முன்னெடுத்த திருப்பூர் கலெக்டர்
பிளாஸ்டிக் மறுசுழற்சி திட்டத்தை முன்னெடுத்த திருப்பூர் கலெக்டர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயனிடம் பேசினோம். `` பிளாஸ்டிக் பயன்பாட்டால் பல பிரச்னைகள் உருவாகின்றன. தற்போது தமிழக அரசும் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடை செய்துள்ளது. எந்தவொரு திட்டத்தையும் மாணவர்களிடம் இருந்து தொடங்கினால் சிறப்பானதாக அமையும். அதனால்தான் பிளாஸ்டிக் மறுசுழற்சி திட்டத்தை அவர்களிடமிருந்தே தொடங்கினோம். மாணவர்கள் மூலமாக, அவர்களின் குடும்பத்தினரும் பிளாஸ்டிக் பயன்பாட்டின் அபாயத்தை எளிதில் உணர்ந்துகொள்ள முடியும். அன்றாடப் பயன்பாட்டில் இருந்து பிளாஸ்டிக் பொருள்களைப் படிப்படியாக ஒழிக்க முடியும்.

பிளாஸ்டிக் பாட்டிலுக்குப் பதிலாக மூங்கில் குடுவை... கரூர் பள்ளி மாணவிகளின் கூல் யோசனை!

திருப்பூர் மாவட்டம் முழுவதும் 1,324 அரசுப் பள்ளிகளும் 600 தனியார் பள்ளிகளும் உள்ளன. இந்தப் பள்ளிகளில் பிளாஸ்டிக் மறுசுழற்சி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பிரஷ்கள், பிளாஸ்டிக் குடுவைகள் போன்றவற்றைக் கொண்டு வந்து கொடுத்தால் அதற்கு நிகரான மதிப்புள்ள பொருள்கள் வழங்கப்படும்.

மாணவியைப் பாராட்டும் ஆட்சியர் விஜய கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்.
மாணவியைப் பாராட்டும் ஆட்சியர் விஜய கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்.

உதாரணமாக, ஒரு கிலோ பிளாஸ்டிக் பொருளுக்கு நிகராக நோட்டு, பென்சில் போன்றவை வழங்கப்படும். தங்கள் வீடுகளிலிருந்து அதிகப்படியான பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு வந்து கொடுக்கும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்புப் பரிசாக எலெக்ட்ரிக் சைக்கிளை வழங்கும் திட்டமும் உள்ளது.

எங்களுடைய இந்த முயற்சியில் சிறு பங்களிப்பை அளிக்கும் மாணவர்களையும் கௌரவிக்க இருக்கிறோம். பிளாஸ்டிக் ஒழிப்பில் சிறப்பான பங்களிப்பைக் கொடுக்கும் மாணவர்களுக்கு சான்றிதழும் பரிசும் வழங்கப்பட உள்ளன. வகுப்பறைகளிலேயே முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தால், பிளாஸ்டிக் இல்லாத திருப்பூரை உருவாக்கும் முயற்சியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார் உற்சாகத்துடன்.