அலசல்
Published:Updated:

கட்டடத்தை மீண்டும் கட்டிவிடலாம்... உயிர்கள் பறிபோயிருந்தால்?

திருப்பூர்
பிரீமியம் ஸ்டோரி
News
திருப்பூர்

திருப்பூரில் மண்ணில் புதைந்த சுத்திகரிப்பு ஆலை...

பொலபொலவென இடிந்துவிழும் தரமில்லாத கட்டுமானங்களைக் கட்டுவதில், முந்தைய அ.தி.மு.க ஆட்சியாளர்கள் ஸ்பெஷலிஸ்ட்டுகள்போல. சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு, நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டடம், தளவானூர் தடுப்பணை என அ.தி.மு.க ஆட்சியின் ஊழல் முகத்தைத் தோலுரித்த, சரிந்த கட்டுமானங்களின் வரிசையில் இணைந்திருக்கிறது திருப்பூரில் கட்டுமானப் பணிகளின்போதே மண்ணில் புதைந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்!

கட்டடத்தை மீண்டும் கட்டிவிடலாம்... உயிர்கள் பறிபோயிருந்தால்?

திருப்பூர் குளத்துப்புதூரில், பாதாள சாக்கடைக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள் நடந்துவருகின்றன. கடந்த 2018-ல் இந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டபோதே, அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், “ஆரம்பக்காலங்களில் இந்த இடம் குளமாக இருந்தது. மழைத்தண்ணீர் தேங்கும் அந்த இடத்தில் கட்டுமானம் கட்டக் கூடாது” என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறியே திருப்பூர் மாநகராட்சி இந்தக் கட்டுமானத்துக்கு அனுமதி அளித்து, கிட்டத்தட்ட 60 சதவிகித பணிகள் முடிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில்தான், கடந்த வாரம் பெய்த மழையில் அந்த கட்டடத்தைச் சுற்றி குளம்போல தண்ணீர் தேங்கியிருக்க... கட்டடத்தின் ஒரு பகுதி அப்படியே மூன்றடிக்கு மண்ணில் புதைந்துவிட்டது. இதையடுத்து, இரவோடு இரவாக மண்ணில் புதைந்த கட்டடத்தை இடித்துத் தள்ளியிருக்கின்றனர்.

சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணையில் இறங்கினோம். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நடந்துவரும் இடமானது, 1910 காலகட்ட அரசு ஆவணங்களில் 7.52 ஏக்கர் பரப்பளவுள்ள குளம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. உள்ளூர் மக்கள் இதை ‘ஆண்டிபாளையம் சின்னக்குளம்’ என்றழைக்கின்றனர். இதற்கு எதிரே 71.3 ஏக்கரில் ‘ஆண்டிபாளையம் பெரிய குளம்’ இருப்பதும் ஆவணங்களில் பதிவாகியிருக்கிறது. மழைக்காலங்களில் செட்டிப்பாளையம், சின்னாண்டிபாளையம், கணபதிபாளையம் உள்ளிட்ட மேடான பகுதிகளிலிருந்து வரும் மழைநீர், சின்னக்குளத்தை நிரப்பிய பிறகு பெரிய குளத்துக்குச் செல்லும். அதேபோல நொய்யலாற்றின் உபரிநீரால் பெரிய குளம் நிரம்பி வழிந்தாலும் தண்ணீர் பின்வாங்கி சின்னக்குளத்துக்கு செல்லும். இப்படி மழை வெள்ளத்தை தாங்கிப் பிடிக்கும் இயற்கையான கட்டமைப்பைச் சிதைத்து, சின்னக்குளத்தை ஆக்கிரமித்தே சுத்திகரிப்பு நிலையம் தற்போது கட்டப்பட்டுவருகிறது. இதனாலேயே மழைநீர் தனக்கான இடத்தில் இயல்பாகவே தேங்கி நிற்க... அங்கு கட்டப்பட்டுவந்த கட்டுமானம் மண்ணில் புதைந்திருக்கிறது.

கட்டடத்தை மீண்டும் கட்டிவிடலாம்... உயிர்கள் பறிபோயிருந்தால்?

இந்த ஆக்கிரமிப்பு எப்படி ஏற்பட்டது என்பது பற்றி நம்மிடம் விவரித்தார்கள் அந்தப் பகுதி மக்கள் சிலர்... “1910 காலகட்டத்தில் அரசு ஆவணங்களில் ‘குளம்’ என்று இருந்ததை, 1983-ல் ‘அரசு புறம்போக்கு நிலம்’ என்று வகைப்பாடு மாற்றம் செய்திருக்கிறார்கள். அப்படி மாற்றிய பிறகும் மழைக்காலத்தில் அங்கு குளம்போல தண்ணீர் தேங்கி நிற்கும். காலப்போக்கில் அந்த இடத்தில் ஓர் ஏக்கரில் குப்பை மறுசுழற்சி மையம், இன்னோர் ஏக்கரில் ‘அம்ருத்’ திட்டத்தில் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டினர். குளமாக இருந்த அந்தப் பகுதி, தற்போது பள்ளமாக இருந்ததால் அங்கு மண்ணைக் கொட்டி நிரவி, மூன்றரை ஏக்கரில் 29 கோடி ரூபாயில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டிவருகிறார்கள். ஏற்கெனவே பூமியின் அடித்தளமும் பலவீனமாக இருந்த நிலையில், கட்டுமானத்தையும் தரமில்லாமல் கட்டியதாலேயே நான்கு நாள்கள் மழைக்கே கட்டடம் மண்ணில் புதைந்துபோனது.

இதுவே சுத்திகரிப்பு நிலையம் இயங்கிக்கொண்டிருக்கும்போது இப்படி நடந்திருந்தால், உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காதா... அதோடு, உள்ளேயிருக்கும் கழிவுநீர் ஆண்டிப்பாளையம் பெரிய குளத்துக்கு போயிருக்காதா? இந்தப் பெரிய குளம்தான் 200 ஏக்கர் விவசாய நிலங்களுக்குப் பாசன வசதியும், சுற்றியுள்ள ஐந்து கிராமங்களுக்கு நிலத்தடி நீராதாரமும் தருகிறது. ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் இந்தக் குளத்துக்கு வந்து செல்கின்றன. எனவே, பெரிய குளத்தைப் பாதுகாக்க, சின்னக்குளத்தை மீட்டெடுக்க வேண்டியது அவசியம். சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதோடு, மறுபடியும் அந்த இடத்தில் நீர் தேங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இந்தக் கட்டுமானத்தை திருப்பூரைச் சேர்ந்த ‘ஈகோ புரொட்டக்‌ஷன் இன்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம் செய்துவருகிறது. கட்டுமானம் மட்டுமல்லாமல், கட்டி முடித்த பிறகு பத்தாண்டுக்காலம் இதைப் பராமரிக்கவும் அவர்களுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. கட்டுமானத்தின் மதிப்பு 29 கோடி ரூபாய் என்றாலும் மொத்தத் திட்டத்தின் மதிப்பு சுமார் 94 கோடி ரூபாய் என்கிறார்கள். இங்கு கழிவுநீரைக் கொண்டு வர குழாய் அமைப்பதற்காக குளத்துப்புதூர் முதல் சின்னாண்டிபாளையம் பஸ் நிறுத்தம் வரை சுமார் 50-க்கும் மேற்பட்ட பெரிய மரங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன.

இந்த விவகாரம் குறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடியிடம் கேட்டோம். “கட்டுமானத்தில் பிரச்னை இருப்பதாகத் தெரியவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பகுதி குளமாக இருந்ததாகச் சொல்கிறார்கள். மழைநீர் தேங்கியதால்தான் கட்டடம் மண்ணில் புதைந்துள்ளது. சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் பத்தாண்டுகளுக்குப் பராமரிப்புக்கான டெண்டரையும் எடுத்திருப்பதால், அவர்களே மீண்டும் கட்டடத்தை க் கட்டிக் கொடுத்துவிடுவார்கள். இதனால் அரசுக்கு எந்த வருவாய் இழப்பும் கிடையாது. வல்லுநர் குழுவைவைத்து கட்டடத்தின் தரம், நிலத்தின் தன்மை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

கிராந்தி குமார் பாடி
கிராந்தி குமார் பாடி

கட்டுமானம் மண்ணில் புதைந்ததால் அரசுக்கு வருவாய் இழப்பு இல்லைதான்... கட்டடத்தையும் கட்டித் தந்துவிடுவார்கள்தான்... ஒருவேளை இதுவே ஒரு பள்ளிக்கூடமாகவோ, குடியிருப்பாகவோ இருந்து உள்ளே ஆட்களும் இருந்திருந்தால், மண்ணில் புதைந்து உயிரிழந்தவர்களை, மீண்டும் உயிரோடு தந்துவிடுவார்களா? நீர்நிலையிலிருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றுவதே இதற்குச் சரியான தீர்வாக இருக்கும்.