
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

ஜவ்வாது மலைப்பகுதியில், மருத்துவச் செடிகள் (Medicinal Plants) அதிக அளவில் உள்ளன. பொதுவாக மருத்துவச் செடிகளைப் பொறுத்தவரை, மண் வளத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்றபடிதான் வளரும். எல்லா இடங்களிலும் எல்லா மருத்துவச் செடிகளும் வளராது. ஜவ்வாது மலை அடிவாரங்களில் கிட்டத்தட்ட 5 கிலோமீட்டர் பரப்புக்கு, நிலவேம்பு, கீழாநெல்லி, மருந்து கூர்க்கன் ஆகிய மூன்று மருத்துவச் செடிகள் வளர்கின்றன. இவை மூன்றுமே இயற்கை மருத்துவத்தில் முக்கியமான இடம்வகிப்பவை. இவற்றை எப்படி மேம்பட்ட முறையில் சந்தைப்படுத்த வேண்டும் என்பதை மட்டும் நாம் திட்டமிட வேண்டும்!
மருத்துவச் செடிகளுக்கு மாபெரும் சந்தை!
மருத்துவச் செடிகளுக்கு என்று தமிழ்நாட்டில் இரண்டு முக்கிய அமைப்புகள் இருக்கின்றன. ஒன்று, IMPCOPS. இன்னொன்று, Tamilnadu State Medicinal Plants Board. இவற்றில் IMPCOPS, பயிற்சி இயற்கை மருத்துவர்கள் நடத்தும் கூட்டுறவு அமைப்பு. Tamilnadu State Medicinal Plants Board (TNSMPB ) தமிழ்நாடு அரசின் அமைப்பு. இந்த இரண்டு அமைப்புகளுமே மருத்துவச் செடிகளை சூரணம், பச்சிலை, கஷாயம், சாறு, லேகியம், தைலம் ஆகிய பழைமையான வடிவங்களில் விற்றுவருகின்றன. ஆனால், இவற்றால் பெரிய அளவில் எந்தப் பொருளாதாரப் பயனும் இல்லை. ஏனென்றால், பழைமையான சூரணத்துக்கோ, கஷாயத்துக்கோ சர்வதேசச் சந்தையில் உரிய அங்கீகாரம் இல்லை. அதன் நம்பகத்தன்மையும் இன்னும் துல்லியமாக நவீன மருத்துவ உலகில் நிரூபிக்கப்படவில்லை. எனவே, நம்மூர் மருத்துவச் செடிகள் அனைத்தையும் முறையாக Standardize செய்ய வேண்டும். அதற்கு, நவீன மருத்துவ உலகம் ஏற்றுக்கொள்ளும் வடிவத்தில் நாம் மருத்துவச் செடிகளை சந்தைக்குக் கொண்டுவர வேண்டும்.
ஹிமாலயா நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம். அவர்கள் கொண்டுவந்திருக்கும் `Liv 52’ மாத்திரை கீழாநெல்லியிலிருந்து உருவாக்கப்படுவது. ஆனால், கீழாநெல்லியைச் சூரணமாகவோ, கஷாயமாகவோ கொடுக்காமல், நவீன மருத்துவச் சந்தைக்கு ஏற்றபடி மாத்திரை வடிவத்திலும், டானிக் வடிவத்திலும் விற்கிறார்கள். இன்றைய தேதிக்கு, 60 மாத்திரைகள் உள்ளடங்கிய ஒரு டப்பாவின் விலை 155 ரூபாய். 100 மி.லி டானிக்கின் விலை 80 ரூபாய். இதேபோலத்தான் நாமும் நிலவேம்பு, கீழாநெல்லி, மருந்து கூர்க்கன் ஆகிய மூன்று மருத்துவச் செடிகளையும் சந்தைப்படுத்த வேண்டும். இதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானத்தை நாம் எளிதாகப் பெற முடியும்!
ஆரணி பட்டு ஆண்டு வருமானம் ரூ.1,000 கோடி
திருவண்ணாமலை என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வரும் மற்றொரு வளத்தைச் சொல்கிறேன். அது, ஆரணி பட்டுச்சேலை!
ஆரணியில் 1,000 வருடங்களுக்கும் மேலாகப் பட்டுத்தொழில் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. தென்னிந்திய வரலாற்றில், ஆரணி நெசவாளர்களின் கலைத்திறன் வியந்து போற்றப்படுகிறது. அவர்களின் செய்நேர்த்தி, ஜரிகை வடிவங்களை உருவாக்கும்விதம், தரமான பட்டைத் தேர்வுசெய்வது ஆகிய குணங்களும் குறிப்பிடப்படுகின்றன. உண்மையில், பட்டுக்கூட அல்ல... ஆரணி நெசவாளர்களின் இந்தத் திறமைதான் நமக்கான வளம்!
முதன்மையாக, ஆரணியெங்கும் வீடுகளில் தனித்தனியாக நெசவு செய்துவரும் நெசவாளர்களை ஒருங்கிணைந்த தொழிற்சாலைச் சூழலுக்குள் நாம் கொண்டுவர வேண்டும். இதற்கு ஆரணியில் பட்டுப் பூங்கா (Silk Park) தொடங்கப்பட வேண்டும். ஏற்கெனவே, காஞ்சிபுரத்தில் ஒரு பட்டுப் பூங்கா தயாராகிவருகிறது. அதன் தொடர்ச்சியாகக்கூட உருவாக்கலாம். குறிப்பாக, இந்தப் பட்டுப் பூங்காவை மொத்தம் மூன்று முக்கியப் பிரிவுகளைக்கொண்டதாக வடிவமைக்க வேண்டும்.

Research & Development
இந்தப் பிரிவின் முக்கியக் குறிக்கோளே, பட்டுச்சேலை பற்றிய பொதுப்புத்தியை உடைப்பதாக இருக்க வேண்டும். அதற்கு, மாங்காய், மயில், தாமரை, கட்டங்கள் போன்ற பாட்டிக் காலத்து டிசைன்களை மெல்லக் குறைத்துக்கொண்டு, கலம்காரி, ஃப்ளோரல் போன்ற பேத்திகளின் காலத்து டிசைன்களை அறிமுகப்படுத்த வேண்டும். முடிந்தால், கண்கூசும் கலர்களில் மட்டுமே புடவை நிறத்தைத் தேர்ந்தெடுக்காமல், இங்கிலீஷ் கலர்கள் எனப்படும் லைட் கலர்களிலும் புடவை நிறத்தைத் தேர்ந்தெடுக்கலாம். அடுத்ததாக, புடவையைக் கடந்த வடிவங்களிலும் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். மார்க்கெட்டில் ‘ஒட்டிக்கோ கட்டிக்கோ’ வேட்டியைப்போல 1 Minute Saree, Frock போன்ற டிரெண்டிங் வடிவங்கள் இருக்கின்றன. அவற்றை மாடலாகக்கொண்டு புதிய வடிவங்களை உருவாக்கலாம். புதிதாக Vegan saree / Ahimsa silk என்ற கான்செப்ட்டும் அறிமுகமாகியிருக்கிறது. இது குறித்தும் சரியான ஆய்வு மேற்கொண்டு நடைமுறைப்படுத்தலாம்.

Production
இந்தப் பிரிவின் தலையாய நோக்கமாக, தறிக்கொட்டாயில் அழுக்கு வேட்டியும், நைந்த சேலையுமாகக் காட்சியளிக்கும் நெசவுத் தொழிலாளர்களை, அடையாள அட்டை, தரமான சீருடை போன்றவற்றை அளித்து கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களைப்போல மாற்றம் செய்வதாக இருக்க வேண்டும். அதாவது, Blue Collar Worker-களாக இருப்பவர்களை Crafts Men-களாகவும், Designers-களாகவும் மாற்ற வேண்டும். இது White Collar Worker-ஐவிட ஒரு படி மேலாகும். இங்கே அமையும் தறி, தையல் மற்றும் சாயக்கூடங்களும் நவீன கட்டமைப்பு வசதிகள்கொண்டவையாக இருக்க வேண்டும். இப்படியிருந்தால், ஐடி ஊழியர்கள் “நாங்கள் டைடல் பார்க்கில் வேலை பார்க்கிறோம்” என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வதைப்போல, நெசவாளர்களும் “நாங்கள் சில்க் பார்க்கில் வேலை பார்க்கிறோம்” என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வார்கள்.

Marketing
புவிசார் குறியீடு இருந்தும் ஆரணி பட்டுப்புடவைகளுக்கு என்று சரியான சந்தைப்படுத்துதல் இதுவரை இல்லை. இதற்குத் தீர்வுகாணவேண்டியது மார்க்கெட்டிங் பிரிவின் பணி. முதலில், Raymond, Peter England போன்று ஆரணி பட்டுக்கென்று ஒரு Brand-ஐ உருவாக்க வேண்டும். பின்பு, அவர்களைப்போலவே Franchise மாடலில் ஊரெங்கும் கடைகளைத் திறந்து ஆரணி பட்டுப்புடவைகளைச் சந்தைப்படுத்த வேண்டும். தனியாகப் பெண்களுக்கான வீகன் உடைகளுக்கென்றே உலகம் முழுவதும் 12 லட்சம் கோடி ரூபாய் சந்தை இருக்கிறது. இதில் வீகன் சில்க்கில் மட்டும் நாம் கவனம் செலுத்தினாலே, வருடத்துக்கு 5,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டலாம்!
(இன்னும் காண்போம்)