அரசியல்
அலசல்
Published:Updated:

கல்குவாரிக்கு எதிர்ப்பு... மிரட்டப்படும் மக்கள்... துணைபோகும் காவல்துறை!

கல்குவாரி அமைக்க எதிர்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
கல்குவாரி அமைக்க எதிர்ப்பு

கல்குவாரியை எதிர்க்கிறோம் என்ற ஒரே காரணத்துக்காக, அதிகாரிகள் மூலம் எங்களை டார்ச்சர் செய்கிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூர் வட்டம், வெங்கோடு கிராமத்தில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள் அந்த ஊர் மக்கள். நடவடிக்கைக்குப் பதிலாக காவல்துறை மற்றும் வட்டாட்சியர் மூலம் தொடர் மிரட்டல் வருவதாகப் புகார்கள் கிளம்பியிருக்கின்றன. என்ன நடக்கிறது வெங்கோட்டில்... விசாரணையில் இறங்கினோம்.

‘‘வேண்டவே வேண்டாம்!’’

வெங்கோடு கிராம மக்கள் நம்மிடம், “வாச்சனூர் அருகே கல்குவாரி நடத்திவரும் ஜே.சி.கே.மைன்ஸ் என்ற நிறுவனம், வெங்கோடு பகுதியில் 20 ஏக்கர் விவசாய நிலத்தை விலைக்கு வாங்கியது. அங்கிருந்த பலன் தரும் மரங்களை வெட்டிய பிறகே, அவர்களது திட்டம் எங்களுக்குத் தெரியவந்தது. உடனே, ‘விவசாய நிலத்தில் கல்குவாரி அமைக்கக் கூடாது’ என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கச் சென்றோம். எங்கள் புகார் மனுவை வாங்கிக்கொண்ட டி.ஆர்.ஓ., ‘ஏற்கெனவே, உங்கள் ஊர் மக்கள் சிலரிடம், ஆட்சேபனையில்லை என்று கையெழுத்து வாங்கிவிட்டு வேலையைத் தொடங்கியிருந்தால் என்ன செய்வீர்கள்?’ எனக் கேட்டார். அப்போதுதான் நீண்ட நாள்களாக இதற்கான வேலைகள் நடந்துவருகின்றன என்பதே எங்களுக்குத் தெரியவந்தது.

கல்குவாரிக்கு எதிர்ப்பு... மிரட்டப்படும் மக்கள்... துணைபோகும் காவல்துறை!

கல்குவாரி அமைப்பதால், விவசாயத்துக்கு மட்டுமல்ல, குடிநீருக்கும் பிரச்னை ஏற்படும் என்பதால்தான், ‘எங்களுக்குக் கல்குவாரி வேண்டவே வேண்டாம்’ என்று ஊராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றினோம். அந்தத் தீர்மான வாசகங்களை ஊர் முழுவதும் பேனராக வைத்திருப்பதோடு, வீடுதோறும் போஸ்டரும் ஒட்டியிருக்கிறோம். அதற்காக எங்களைச் சிலர் மிரட்டுகிறார்கள். இன்ஸ்பெக்டர் ராஜாவோ, ‘குட்கா விற்பதாக வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடுவேன்’ என்று பெட்டிக்கடைக்காரர்களை மிரட்டுகிறார்” என்றனர்.

மிரட்டும் அதிகாரிகள்!

நம்மிடம் பேசிய ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பாபு, “கல்குவாரியை எதிர்க்கிறோம் என்ற ஒரே காரணத்துக்காக, அதிகாரிகள் மூலம் எங்களை டார்ச்சர் செய்கிறார்கள். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்டவேண்டிய ஊராட்சி மன்றக் கணக்கு வழக்குகளை ஸ்பெஷல் ஆய்வு எனச் சொல்லி இப்போது காட்டச் சொல்கிறார்கள். 203 விதியின்படி எங்களிடமிருந்து செக் பவரைப் பறிப்பதற்கான வேலைகளையும் பார்க்கிறார்கள். ‘வராத திட்டத்தை எதிர்த்து ஏன் பேனர் வைக்கிறீர்கள்... கல்குவாரி வந்தால் உங்களுக்கு என்ன பாதிப்பு?’ எனக் கேட்கிறார் பி.டி.ஓ. காவல் நிலையத்துக்குச் சென்றால் அங்கே இன்ஸ்பெக்டர் ராஜா எங்களை மிரட்டுகிறார். இவர்களுக்கு அஞ்சி ஊராட்சி மன்றத் தலைவர் வெளியிலேயே வருவதில்லை. எனக்கும் வெளியில் செல்லவே அச்சமாக இருக்கிறது” என்றார்.

கல்குவாரிக்கு எதிர்ப்பு... மிரட்டப்படும் மக்கள்... துணைபோகும் காவல்துறை!

மக்களின் புகார் குறித்து கீழ்க்கொடுங்காலூர் இன்ஸ்பெக்டர் ராஜாவிடம் பேசினோம். “கல்குவாரி அமைக்க அனுமதி கேட்டுக் கடிதம் யாரும் கொடுத்திருக்கிறார்களா?” என்று தன் பொறுப்பை உணராமல் பேசத்தொடங்கியவர், “பஞ்சாயத்தில் தீர்மானமே நிறைவேற்றா மல் தீர்மானம் நிறைவேற்றியதாகக் காட்டியிருக்கிறார்கள். ஊராட்சித் தலைவரை அழைத்துக் கேட்டதும் அதை அழித்துவிட்டார்கள். அதுமட்டுமல்ல, அனுமதியில்லாமல் பேனர் வைத்திருக்கிறார்கள். கேட்டால், `நாங்கள் வைக்கவில்லை’ என்கிறார்கள். பிறகு மீண்டும் வைக்கிறார்கள். இதையெல்லாம் செய்வது அங்கிருக்கும் ‘குடிகாரப் பசங்க’தான். பிசினஸ் செய்ப வன் இடம் வாங்கி வைத்திருக்கிறான். இவர்களும் ஐந்தாயிரம் போகும் இடத்துக்குப் பத்தாயிரம் கிடைக்கிறது என்று விற்றுவிட்டார்கள். இப்போது நிலம் வாங்கியவனை மிரட்டி, கூடுதல் பணம் வாங்கப் பார்க்கிறார்கள்” என்று வருவாய்த்துறை அதிகாரிபோலவே பேசினார்.

மேலும், “நான் யாரிடமும் எதுவும் பேச வேண்டியதில்லை. என்ன... எஃப்.ஐ.ஆர் போட்டுவிட்டு போய்க்கொண்டே இருக்கலாம். ஆனால், பாவம் எனப் பேசிச் சரிசெய்துவைத்திருக்கிறேன். இங்கே என்ன நடக்கிறது, என்ன மாதிரியான சட்டம்-ஒழுங்கு பிரச்னை இருக்கிறது எனத் தெரியாமல் எவனோ சொன்னதைவைத்து என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள். போனை வையுங்கள்” என்று ஏதோ அந்த கல்குவாரிக்கே ஓனர்போலப் பேசி, கடுப்புடன் போனைத் துண்டித்தார் இன்ஸ்பெக்டர். நம்மிடமே இப்படிப் பேசுபவர் உள்ளூர் மக்களை எப்படி மிரட்டியிருப்பார்..?

கல்குவாரிக்கு எதிர்ப்பு... மிரட்டப்படும் மக்கள்... துணைபோகும் காவல்துறை!

கல்குவாரி கொண்டுவரக் கூடாதா?

ஜே.சி.கே.மைன்ஸ் உரிமையாளரும், வெம்பாக்கம் மத்திய ஒன்றிய தி.மு.க செயலாளருமான சீனுவாசனிடம் பேசினோம். “வெங்கோட்டில் விவசாயத்துக்கென நிலம் வாங்கி வைத்திருக்கிறோம். அதில் கல்குவாரி கொண்டுவரப் போகிறோம் என அவர்களாகப் பேசிக்கொள்கிறார்கள். அப்படியே இருந்தாலும் கல்குவாரி கொண்டுவரக் கூடாதா என்ன... கல்குவாரி வந்தால் மக்களிடம் கருத்து கேட்கப் போகிறார்கள். அதன் பிறகுதான் கொண்டுவர முடியும். மிரட்டுகிறார்கள் என்பதெல்லாம் பொய். இப்போதைக்கு கல்குவாரி வைக்கும் எண்ணம் இல்லை” என்றவரிடம், “எதிர்காலத்தில் இருக்கிறதா?” என்று கேட்டதற்கு, “இப்போது வரை கல்குவாரி வைக்க ஒரு பேப்பர் வேலையைக்கூடத் தொடங்கவில்லை. இடம் வாங்கி வைத்திருக்கிறோம். இப்போதைக்கு இல்லை என்று மட்டும்தான் சொல்ல முடியும்” என்றார் கூலாக.

சீனுவாசன்
சீனுவாசன்

மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டோம். “சார் வேறொரு மீட்டிங்கில் இருக்கிறார். அவரிடம் தகவலைச் சொல்லிப் பேசச் சொல்கிறோம்” என்றார் அவரது உதவியாளர். ஆனால் இதுவரை பேசவில்லை. பி.டி.ஓ-வைத் தொடர்பு கொண்டோம். நமது அழைப்பையே ஏற்கவில்லை.

வாங்கிய நிலத்தில் இருந்த மாமரங்களையெல்லாம் வெட்டியிருப்பதைப் பார்த்தால், கல் குவாரி அமைப்பதற்கான வேலைகள் தொடங்கி விட்டதாகவே தெரிகிறது. மக்கள் கோரிக்கைக்குச் செவிசாய்க்குமா மாவட்ட நிர்வாகம்?