மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 34 - திருவாரூர் - வளமும் வாய்ப்பும்

வைக்கோல்
பிரீமியம் ஸ்டோரி
News
வைக்கோல்

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

கனவு - 34 - திருவாரூர் - வளமும் வாய்ப்பும்
சுரேஷ் சம்பந்தம்
ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு

வைக்கோலிலிருந்து ‘ஸ்ட்ரா போர்டு’ தொழிற்சாலை!

உலகம் முழுவதிலும் கொரோனா அலைகள் ஓய்ந்த பிறகு, கட்டுமானத்துறை மீண்டும் வளர்ச்சிப் பாதையை நோக்கித் திரும்பியிருக்கிறது. இதையொட்டிய இன்ட்டீரியர் துறையும் வளர்ச்சியின் பாதையிலேயே தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறது. வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், ஐடி தொழில்நுட்ப நிறுவனங்கள் எனப் புதிய கட்டுமானங்களுக்கான தேவை அதிகரித்திருக்கிறது. இதனால் சிமென்ட், ஜல்லி, இரும்புக்கம்பிகள் உள்ளிட்ட பல பொருள்களுக்கு டிமாண்ட் ஏற்பட்டிருப்பதுபோலவே, எம்டிஎஃப் பலகைகளுக்குச் சர்வதேசச் சந்தையில் தேவை கூடியிருக்கிறது. இதை ஈடுகட்டும் வகையில், அதன் உற்பத்தி பல்வேறு நாடுகளில் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு திருவாரூர் மாவட்டத்தில் எம்டிஎஃப் பலகை உற்பத்திக்கான ஸ்ட்ரா போர்டு தொழிற்சாலையை நிறுவ வேண்டும்!

நெற்பயிரை அறுவடை செய்யும்போது, அதிலிருந்து நமக்குத் துணைப்பொருளாகக் கிடைப்பது வைக்கோல். இந்த மாவட்டத்தில் உற்பத்தியாகும் லட்சக்கணக்கான டன் வைக்கோலில், மாட்டுக்குத் தீவனமாகச் சில டன் வைக்கோலே பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ளது அந்தந்த நிலத்திலேயே விடப்பட்டு, உழவுக்கு உட்பட்டு மண்ணுக்கு உரமாக மாற்றப்பட்டுவிடுகிறது. மண்ணோடு மண்ணாக மக்கிப்போகும் இந்த வைக்கோலிலிருந்து ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் மதிப்பிலான எம்டிஎஃப் பலகைகளை உருவாக்கி, உள்ளூரில் விற்கலாம்; வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.

கனவு - 34 - திருவாரூர் - வளமும் வாய்ப்பும்
Feverpitched

உலக அளவில் பல நிறுவனங்கள் ஸ்ட்ரா போர்டு தயாரிப்பில் ஈடுபட்டுவருகின்றன. அவற்றில், காம்பாக் சிஸ்டம்ஸ் (Compak Systems), நியூ பாம்பூ பேப்பர் கோ லிமிடெட் (New Bamboo Paper Co. Ltd) போன்றவை குறிப்பிடத்தக்கவை. இதில் பாம்போ பேப்பர் நிறுவனம் மட்டும் ஆண்டுக்குத் தோராயமாக 380 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் பெறுகிறது.

பெரும்பாலும் இயந்திரங்களைக் கொண்டுதான் நெற்பயிர்கள் அறுவடை செய்யப்படுகின்றன. இவற்றை பண்டல் பண்டலாக இயந்திரங்களே உருட்டித் திரட்டித் தயார்செய்கின்றன. இவற்றை லாரிகள் வழியாகத் தொழிற்சாலைகளுக்கு எடுத்துவந்து, மெக்கானிக்கல் டிஃபைபிரில்லேஷன் புராசஸ் செய்து ஃபைபராக மாற்றுகிறார்கள். இது சிறிய, பெரிய அளவிலான சிலிக்கான் தூளாகப் பிரிக்கப்பட்டு, பின்னர் எம்டிஎஃப் பலகைகளாக மாற்றப்பட்டு, தேவையான அளவுகளில் வெட்டி அடுக்கப்படுகின்றன. இவ்வகையான பலகைகள் லேசர் கட்டிங் செய்வதற்கும், ஆணி அடிப்பதற்கும் சுலபமானதாக இருக்கும். வைக்கோல் பொதுவாகக் கதகதப்பான தன்மைகொண்டது என்பதால், ஈரப்பதத்தால் பலகைகள் உப்பிக்கொள்வது தடுக்கப்படும். அதனால்தான், வைக்கோலிலிருந்து உருவாக்கப்படும் எம்டிஎஃப் பலகைகளுக்குச் சர்வதேச அளவில் பெரிய வரவேற்பு உள்ளது.

மரங்களை வெட்டிப் பலகைகளை உருவாக்குவதற்கு பதிலாக, வைக்கோல் மட்டுமே பயன்படுத்தப்படுவதால் இவை இயற்கைக்கு ஆதரவானதாக இருக்கின்றன. சுற்றுச்சூழலையும் பாதிக்காத ஒரு தொழிற்சாலையாக இதை உருவாக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு அம்சம்.

கனவு - 34 - திருவாரூர் - வளமும் வாய்ப்பும்
Khamhoung Panyavong

திருவாரூர் மாவட்டத்தில், ஆண்டுதோறும் சுமார் 4,80,000 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது. இதில் உற்பத்தியாகும் வைக்கோலிலிருந்து 50 சதவிகிதத்தை மட்டுமே ஸ்ட்ரா போர்டு தயாரிக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏக்கர் ஒன்றில், ஒரு டன் அளவில் வைக்கோல் கிடைக்கிறது. இதற்கு, நெற்பயிரை அறுவடை செய்யும்போது அடியோடு அறுத்து எடுக்க வேண்டும். அந்தவகையில் 1,80,00,000 போர்டுகள் தயாரிக்க முடியும். ஒரு கிலோ ஸ்ட்ரா போர்டின் விலை தோராயமாக 22 ரூபாய்க்கு வைத்து விற்பனை செய்தால், ஆண்டுக்கு 330 கோடி அளவுக்கு வருமானம் ஈட்டலாம். இந்த மாவட்டத்தில் ஸ்ட்ரா போர்டு தொழிற்சாலையை அமைத்தால், நேரடியாக 300 பேருக்கும் மறைமுகமாக 15,000 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். அத்துடன் சுமார் ஒரு லட்சம் விவசாயிகள் பயனடைவதோடு, அவர்களது வாழ்வும் மேம்பாடு அடையும். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள திருவாரூர், முன்னோக்கி நகரும் மாவட்டமாக மாறிவிடும்!

கனவு - 34 - திருவாரூர் - வளமும் வாய்ப்பும்
urfinguss
கனவு - 34 - திருவாரூர் - வளமும் வாய்ப்பும்

சர்வதேசத் தரத்தில் ஒரு அரிசி உற்பத்தித் தொழிற்சாலை!

திருவாரூர் மாவட்டத்தின் மிகப்பெரிய வளமே நெற்பயிர்தான் என்பதால், அங்கே நவீன அரிசி ஆலைகளும் அதிகமாக இருக்கின்றன. ஆனால், அவற்றில் அரிசியைப் பதப்படுத்தி, பிராண்டிங் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்குத் தரமான ஆலைகள் போதுமான அளவுக்கு இல்லை. எனவே, இங்கு ரைஸ் பேக்கேஜிங் இண்டஸ்ட்ரி ஒன்றை உருவாக்குவது அவசியமானது. திடீரென ஏற்படும் இயற்கைப் பேரிடர்கள், எதிர்பாராத பெருந்தொற்று நோய்கள், உலகப் போர்கள் போன்றவற்றின்போது மக்களைக் காப்பதில் உணவின் தேவை இன்றியமையாத ஒன்று. இத்தகைய சூழல்களை எதிர்கொள்ள உணவுப்பொருள்களில் அரிசியும் மிக முக்கியமானது.

உயர்தரமான உள்கட்டமைப்பு வசதிகளுடன்கூடிய அரிசி உற்பத்தித் தொழிற்சாலையை இந்த மாவட்டத்தில் அமைக்க வேண்டும். சரியான பதத்தில் நெல்லை வேகவைத்து, பின்னர் தேவையான அளவுக்கு அதைக் காயவைத்து, உலர்த்தி, அதன் பிறகு மேம்படுத்தப்பட்ட நவீன இயந்திரங்களின் வழியே அவற்றின் சத்துகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நெல்லின் மேற்பகுதியிலிருந்து உமியை நீக்கி, தொடர்ச்சியாக அதை மெருகூட்டி, பிரித்து, வகைப்படுத்தி, பதப்படுத்தி அதைப் பல்வேறு அளவுகளிலுள்ள பைகளில் நிரப்பி, சேமிப்புக் கிடங்குக்கு அனுப்பிவைக்க வேண்டும். அங்கிருந்து உள்நாட்டு விற்பனைக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய வேண்டும்.

கனவு - 34 - திருவாரூர் - வளமும் வாய்ப்பும்
papkin
கனவு - 34 - திருவாரூர் - வளமும் வாய்ப்பும்
ClaudineVM
கனவு - 34 - திருவாரூர் - வளமும் வாய்ப்பும்

திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயத்தில், எஸ்.எஸ்.பிராண்ட் பிரீமியம் ராஜபோகம் பொன்னி அரிசித் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்தத் தொழிற்சாலையில் மேற்கண்டவாறு அரிசியைப் பல்வேறு படிநிலைகளுக்கு உட்படுத்தி உற்பத்தி செய்கிறார்கள். அவர்களை முன்மாதிரியாகக்கொண்டு, இந்தத் தொழிற்சாலையைத் திருவாரூரில் நிறுவ வேண்டும். அந்தத் தொழிற்சாலையில் சர்வதேசச் சந்தையில் அதிகம் விரும்பப்படும் பாசுமதி, சீரகச் சம்பா போன்றவற்றோடு நம்முடைய பாரம்பர்ய அரிசிகளான மாப்பிள்ளை சம்பா, கறுப்பு கவுனி உள்ளிட்ட பல வகையான அரிசிகளையும் உற்பத்தி செய்ய வேண்டும். இத்தகைய தொழிற்சாலை அமைப்பதால், ஆண்டுக்குத் தோராயமாக 500 கோடி அளவுக்கு வருமானம் ஈட்டலாம். மேலும், நேரடியாக 100 பேருக்கும் மறைமுகமாக 5,000 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்!

(இன்னும் காண்போம்)