Published:Updated:

45 ஆண்டுகளில் இல்லாத மழை; 50-க்கும் அதிகமானோர் பலி! - வெள்ளத்தில் மிதக்கும் மகாராஷ்டிரா

மும்பையில் தற்போதுள்ள வடிகால் அமைப்புகளால் இவ்வளவு பெரிய மழையை சமாளிக்க முடியவில்லை.

மும்பை மழை
மும்பை மழை ( ANI )

மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக பலத்த மழை கொட்டித் தீர்த்துவருகிறது. இதனால் மும்பை, தானே, புனே போன்ற நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மும்பையில், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத மழை பெய்துவருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஒரே நாளில் 375 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாகவும், மேலும் 48 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம்
வெள்ளம்
ANI

மும்பை உள்பட மாநிலம் முழுவதும் பெய்துவரும் மழையால், பல்வேறு விபத்து மற்றும் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் என அனைத்திலும் தண்ணீர் புகுந்துள்ளதால், மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மருத்துவக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

மும்மையில் விமான நிலையம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், பல விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. விமான சேவையைத் தொடங்க இன்னும் 48 மணிநேரம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் பல ரயில்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

திவாரி அணை
திவாரி அணை
ANI

இந்நிலையில், மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள திவாரி அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால், அணையிலிருந்து நீர் வெளியேறிவருகிறது. இதனால், அணைக்குக் கீழ் பகுதியில் உள்ள 7 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அணையை ஒட்டி இருந்த 12 வீடுகள் முழுவதுமாக நீரில் அடித்துச்செல்லப்பட்டதால், அதில் வசித்தவர்களில் 6 பேர் இறந்துள்ளனர். மேலும், 18 பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

கட்டப்பட்டு 19 வருடங்களான திவாரி அணையில், முன்னரே நீர்க்கசிவு அறிகுறிகள் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக உள்ளூர் மக்கள் கூறியும், மாவட்ட அதிகாரிகள் மழைக்கு முன்பே அதைச் சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மீட்புப் பணிகள்
மீட்புப் பணிகள்

மகாராஷ்டிரா மழை பற்றி பேசியுள்ள அம்மாநில முதல்வர், “ கடந்த 12 மணிநேரத்தில், மும்பை முழுவதும் 300 முதல் 400 மி.மீ வரை மழை பொழிந்துள்ளது. இது, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவு.” என்று கூறியுள்ளார்.