Election bannerElection banner
Published:Updated:

Election Updates: ஒரு குடும்பத்துக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசம் - முதல்வர் பழனிசாமி

இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்
இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் லேட்டஸ்ட் செய்திகளின் தொகுப்பு..!

08 Mar 2021 8 PM

6 சிலிண்டர்கள் இலவசம் - முதல்வர் பழனிசாமி

சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமையகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர் செல்வமும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டொன்றுக்கு, ஆறு விலையில்லா சிலிண்டர்கள் வழங்கப்படும் எனத் தேர்தல் வாக்குறுதியளித்துள்ளனர். மேலும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

08 Mar 2021 6 PM

தி.மு.க கூட்டணியில் இணைந்த இதர கட்சிகள்

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

தி.மு.க கூட்டணியில் தமிழர் வாழ்வுரிமை கட்சி, ஆதி தமிழர் பேரவை, மக்கள் விடுதலைக் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. மூன்று கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீட்டுக்கான உடன்படிக்கை இன்று அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தானது.

08 Mar 2021 6 PM

அ.ம.மு.க கூட்டணியில் ஒவைசியின் கட்சி

ஒவைசி
ஒவைசி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க கூட்டணியில் அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி இணைந்திருக்கிறது. மூன்று தொகுதிகளில் அந்தக் கட்சி போட்டியிடவிருக்கிறது. வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய தொகுதிகள் அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

08 Mar 2021 12 PM

தி.மு.க கூட்டணிக்கு தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆதரவு!

தமிமுன் அன்சாரி - கருணாஸ்
தமிமுன் அன்சாரி - கருணாஸ்

மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவர் கருணாஸ் ஆகியோர் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்குத் தங்களுடைய ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள்.

தமிமுன் அன்சாரி, தற்போது நாகை சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இவர், 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், கருணாஸ் அ.தி.மு.க கூட்டணியில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு திருவாடானை தொகுதியில் எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்றவர்.

இருவரும் தங்கள் கட்சிக்கு, தி.மு.க கூட்டணியில் தலா ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

08 Mar 2021 11 AM

அ.தி.மு.க தலைவர்கள் படம் போட்ட 3,000 நோட்டு புத்தகங்கள்!

பறிமுதல் செய்யப்பட்ட நோட்டுகள்
பறிமுதல் செய்யப்பட்ட நோட்டுகள்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சணப்பிரட்டி ஆதிதிராவிடர் காலனியில் அ.தி.மு.க சார்பில் கேசவன் என்பவர் வீட்டில் நோட்டுப் புத்தகங்கள் வைக்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசியத் தகவல் வந்திருக்கிறது. அப்படி வந்த புகாரின் அடிப்படையில், மணிமேகலை தலைமையிலான பறக்கும்படை குழுவினர் இரவில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்., ஜெயலலிதா, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளர் தானேஷ் என்கிற முத்துகுமார் ஆகியோரது படங்கள் அடங்கிய 3,180 நோட்டுகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பறிமுதல் செய்து, கிருஷ்ணராயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

- வேம்பையன்

08 Mar 2021 10 AM

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகள்!

கம்யூனிஸ்ட்
கம்யூனிஸ்ட்

தி.மு.க தனது கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது. முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனான தொகுதிப் பங்கீடு என்பது ஒரு வாரத்துக்கும் மேலாக இழுபறிநிலையிலே நீடித்துவந்தது. இந்தநிலையில் இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் தி.மு.க-வுடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தநிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கூட்டணியில் ஆறு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக தி.மு.க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. முன்னதாக காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களும், ம.தி.மு.க., சி.பி.ஐ., வி.சி.க கட்சிகளுக்கு தலா ஆறு தொகுதிகளையும் தி.மு.க ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

08 Mar 2021 10 AM

நாளை தே.மு.தி.க மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்!

Election Updates: ஒரு குடும்பத்துக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசம் - முதல்வர் பழனிசாமி

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் சூழலில் கட்சிகள் தங்கள் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க உடனான தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்தநிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக நாளை தே.மு.தி.க மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. சென்னை கோயம்பேட்டிலுள்ள தலைமை அலுவலகத்தில் நாளை காலை 10:30 மணிக்கு ஆலோசனை நடைபெறுகிறது. இதில் கூட்டணி குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு