Published:Updated:

` சுர்ஜித் சடலமாக மீட்கப்பட்ட செய்தி வேதனையை அளித்தது!'- முதல்வர் பழனிசாமி உருக்கம்

சிறுவன் சுர்ஜித் வில்சனின் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் முதல்வர் பழனிசாமி இரங்கலை தெரிவித்துள்ளார்.

சுர்ஜித்
சுர்ஜித்

திருச்சி மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி 4 நாள்களாக நடந்து வந்த, நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். விடியற்காலை 4.30 மணி அளவில் சிறுவன் சுர்ஜித் உடல் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் சுர்ஜித்தின் உடல் கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சுர்ஜித் குடும்பத்தை நேரில் சந்திக்கவுள்ளார்.

சுர்ஜித்
சுர்ஜித்

சுஜித் மரணம் தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுர்ஜித் வில்சன் தவறி விழுந்துவிட்டான் என்ற செய்தி எனக்கு மிகுந்த வேதனையை அளித்தது. இந்தச் செய்தியை அறிந்தவுடன் சிறுவனை உயிருடன் மீட்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு அமைச்சர்கள், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு உத்தரவிட்டிருந்தேன். வல்லுநர் குழு உதவியுடன் குழந்தையை உயிருடன் மீட்க இரவு பகலாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தும் சிறுவன் சுர்ஜித் வில்சன் சடலமாக மீட்கப்பட்டான் என்ற செய்தி எனக்கு மிகுந்த வேதனையை அளித்தது.

ஏற்கெனவே ஆழ்துளைக் கிணறு அமைக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விதிகளை வகுத்து அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். இதில் கவனக்குறைவு ஏதும் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

அமைச்சர்கள்,
அமைச்சர்கள்,

இனிவரும் காலங்களில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க வேண்டும் என்றால், பொதுமக்கள் தங்களுடைய நிலங்களில் ஆழ்துளைக் கிணற்றை மூடும்போது உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மீட்புப் பணியை இரவு பகலாக மேற்கொண்ட அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் இத்தருணத்தில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் சுர்ஜித் வில்சன் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.