கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு வெளியிட்ட ‘இந்திய கடல் மீன்பிடி ஒழுங்காற்று மற்றும் மேலாண்மைச் சட்ட முன்வரைவு’, மீனவர்களை கண்ணீர்க் கடலில் தள்ளியிருக்கிறது. ‘கடலோர மாநிலங்களில் உள்ள மீனவர்கள் மத்தியில் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தி, கருத்துகளை அறிந்த பிறகு அது சட்டமாக்கப்படும்’ என மத்திய அரசு கூறியிருந்தது. `‘மீனவர்களை பெருமளவு பாதிக்கக்கூடிய இந்தச் சட்ட முன்வரைவு குறித்து விரிவாக விவாதிக்காமல், பெயரளவுக்கு கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்திவிட்டு, சட்டத்தைக் கொண்டுவரப் பார்க்கிறார்கள்’’ எனக் கதறுகிறார்கள் தமிழக மீனவர்கள்.
கடந்த 2009-ல் ‘கடல் மீன்பிடித் தொழில் ஒழுங்காற்று மற்றும் மேலாண்மைச் சட்ட முன்வரைவை’ காங்கிரஸ் அரசு அறிமுகப் படுத்தியது. அதைச் சட்டமாக்கினால் மீன்பிடித் தொழிலே அழிந்துவிடும் என்று கடுமையான எதிர்ப்புகள் கிளம்ப, அது கைவிடப்பட்டது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS‘‘காங்கிரஸ் அரசாங்கம் கொண்டுவந்த அதே சட்டத்தை, நாசூக்கான வார்த்தைகளில் முன்பைவிட மோசமான ஷரத்துகளை இணைத்து மீண்டும் கொண்டுவந்திருக்கிறது இன்றைய மோடி அரசு’’ என்று கொந்தளிக்கிறார்கள் மீனவர்கள்.

இதுகுறித்து ஏ.ஐ.டி.யூ.சி மீனவர் தொழிற்சங்க மாநிலச் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேலிடம் பேசினோம். ‘‘இந்தியாவில் இரண்டு கோடி மீனவர்கள் நாட்டுப் படகு மற்றும் விசைப் படகு மூலம் கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களுடைய எதிர்காலம் பற்றிச் சிந்திப்பதைவிட, கப்பல்கள் மூலம் ஆழ்கடலில் உள்ள சூரை மீனைப் பிடிப்பது, கடலில் பண்ணை அமைத்து மீன் வளர்ப்பது, அதற்காக கடற்பரப்பில் பிளாட் போட்டு தனியாருக்குக் கொடுப்பது போன்ற விஷயங்களையே இந்த மீன்பிடிக் கொள்கை அதிகம் பேசுகிறது. இந்தக் கொள்கையின் நோக்கம், பாரம்பர்ய முறையிலான மீன்பிடித் தொழிலை அழித்து, அதை கார்ப்பரேட் மயமாக்குவது தான். சர்வதேச நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யும்போதோ, இந்தியாவுக் கான மீன்பிடிக் கொள்கைகளை உருவாக்கும்போதோ மீனவர் களிடம் கருத்துக் கேட்கப் படுவதே இல்லை. சட்ட வடிவங்களைக் கொண்டுவரும் கடைசி நேரத்தில் மக்களிடம் கருத்து கேட்கும் நாடகத்தை நடத்துகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்தச் சட்ட முன்வரைவுப்படி பார்த்தால், 12 கடல் மைலுக்கு அப்பால் உள்ள ஆழ்கடலில் மீன் பிடிக்க, மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெற வேண்டும். சிறு மீனவர்கள் 12 கடல் மைல் தூரம்கொண்ட பிராந்திய கடல் எல்லையைத் தாண்டக் கூடாது என்று 2009-ம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்டுவந்த சட்டத்தை, இப்போது இப்படி மாற்றியுள்ளார்கள். அத்துடன், ‘மீன் பிடிக்கச் செல்லும் ஒவ்வொரு படகும், மீன் பிடித்தலுக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்’ என்ற புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதும் மீன்பிடித் தொழிலுக்கு மானியங்கள் கொடுத்து ஊக்குவித்துக்கொண்டிருக்கும்போது, மீன்பிடித் தொழிலுக்கும் பிடிக்கிற மீனுக்கும் இந்திய அரசு கட்டணம் நிர்ணயிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் திணறிக்கொண்டிருக்கும் மீன்பிடித் தொழில், இந்தச் சட்ட முன்வரைவால் மேலும் அழிவை நோக்கிச் செல்லும்.
அனுமதி இல்லாமல் மீன் பிடித்தாலோ அல்லது மத்திய அரசு கொண்டுவரும் மீன்வள மேலாண்மைத் திட்டங்களை மீறினாலோ மீனவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனை கொடுப்பது என்று இந்தச் சட்டம் கூறுகிறது. ஆனால், அபராதத்தொகை எவ்வளவு, என்ன வகையான தண்டனை என்பதை, தெளிவாக விளக்கவில்லை. மீன்பிடிக்கச் செல்லும் படகுகளைச் சோதனையிடும் அதிகாரத்தை, மீன்வளத் துறையிலிருந்து இந்திய கடலோரக் காவல் படைக்கு மாற்றியிருக்கிறார்கள். அது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இந்திய எல்லைக்குள் எந்தத் தடையும் இல்லாமல் மீன்பிடிக்க, வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளுக்கு அரசின் பல கொள்கைகள் வழிவகுக்கின்றன. அவற்றில் எவ்வித மாற்றமும் செய்ய முன்வராத மத்திய அரசு, உள்நாட்டு மீனவர்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இந்த நடவடிக்கை, பாரம்பர்ய மீனவர்களை அழித்துவிடும்’’ என்றார்.

இதுகுறித்து மீன்வளத் துறை துணை இயக்குநர் காத்தவராயனிடம் பேசினோம். ‘‘மத்திய அரசு அனுப்பியுள்ள மசோதா முன்வரைவு குறித்து மீனவர்களின் கருத்துகளைக் கேட்க, மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்களிலும் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. முன்வரைவில் உள்ளவற்றை தமிழில் விளக்கிவருகிறோம். முன்வரைவு குறித்த ஆட்சேபனைகளைத் தெரிவிக்க மீனவர்களுக்கு நிச்சயமாக வாய்ப்பு வழங்கப்படும். ஆனால், அந்த முன்வரைவில் என்ன உள்ளது என்பது குறித்து அறியாமலேயே சிலர் இதை எதிர்க்கின்றனர்’’ என்றார்.
கடலின் பாதுகாவலர்கள், மீனவர்கள். கடல் மீது அவர் களுக்கு இருக்கும் உரிமையைப் பறிக்கும் வகையிலான எந்த விதமான செயலையும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.