Published:Updated:

தன்னார்வலர்களுக்கு செக்... தயாராகாத அரசு - சோத்துக்கு என்ன வழி?

ஏற்கெனவே சரிவில் இருக்கும் இந்தியப் பொருளாதாரத்தால் அடித்தட்டு மற்றும் கீழ் நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்புகளில் இருக்கிறார்கள்.

பிரீமியம் ஸ்டோரி
கோவை சுங்கம் பகுதி. நடைபாதையில் சுருண்டு படுத்துக்கிடக்கிறார் அந்த நடுத்தர வயதுக்காரர். அவர் உடல் நடுங்கிக்கொண்டிருக்கிறது.

இருசக்கர வாகனத்தில் வந்த தன்னார்வலர் ஒருவர் பதறியபடியே வண்டியை நிறுத்தி, அவரைத் தட்டி எழுப்பி சாப்பாட்டுப் பொட்டலத்தை வழங்குகிறார். எழ முடியாமல் சிரமத்துடன் எழுந்திருக்கும் அந்த நபர், உணவுப்பொட்டலத்தை மடியில் இறுக்கிக்கொண்டே, ‘‘சிவகங்கைப் பக்கம் சொந்த ஊருங்க. சமையல் கூலிவேலைக்குப் போவேன். தினமும் ஜி.ஹெச் பக்கத்துல படுத்துக்குவேன். இப்போ வேலையும் இல்லை; ஊருக்கும் போக முடியலை; சாப்பாட்டுக்கே வழியில்லை. தினமும் ஒரு இடத்துல படுக்குறேன். துரத்திட்டே இருக்காங்க” என்று புலம்புகிறார். அவரிடம் தன்னார்வலர், “சாப்பிட்டுப் படுங்க, விடிஞ்சதும் மத்ததைப் பாத்துக்கலாம்” என்கிறார் ஆறுதலுடன். அதற்கு அவர் கண்களில் நீர் வழிய கைகூப்பியபடி, ‘‘எதுக்கு சார் விடியணும்... விடியவே வேண்டாம்!’’ என்கிறார் விரக்தியுடன். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு கொரோனா ஊரடங்கு ஒவ்வொரு விடியலையும் ரணமாகத்தான் மாற்றியிருக்கிறது.

ஏற்கெனவே சரிவில் இருக்கும் இந்தியப் பொருளாதாரத்தால் அடித்தட்டு மற்றும் கீழ் நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்புகளில் இருக்கிறார்கள். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் பல மாநிலங்களில் பெயரளவில் செயல்படுவதால், கிராமப்புறங்களில் வறுமை அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு முந்தைய இந்திய நிலைமையே மிகவும் கவலைக்குரியதாகத்தான் இருக்கிறது. உதாரணத்துக்கு, உலகளாவிய பசித்திருப்போர் பட்டியல் (Global hunder index) 2019-ன்படி 117 நாடுகளின் பட்டியலில் 102-ம் இடத்தில் இருக்கிறது இந்தியா. தவிர, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி மானிய விலையில் தானியம் வழங்கும் திட்டத்துக்கான நிதியை கணிசமான அளவு மத்திய அரசு குறைத்துவிட்டதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட பொருளாதார வல்லுநர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகின்றனர். இந்த நிலையில்தான் கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் பசி மற்றும் பட்டினிச்சாவுகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்குமோ என்ற அச்சம் நாட்டை கவ்வத் தொடங்கியிருக்கிறது.

தன்னார்வலர்களுக்கு செக்... தயாராகாத அரசு - சோத்துக்கு என்ன வழி?

‘இன்று காலையில் வாசலில் ஒரு குரல். ஒரு பெண்ணும் 15 வயது மதிக்கத்தக்க சிறுமியும் நின்றுகொண்டிருந்தார்கள். ‘நாங்கள் பிச்சைக்காரர்கள்அல்ல. வேலை இல்லை. பசிக்கிறது. ஏதாவது உதவி பண்ணுங்கள்’ என்றார் அந்தப் பெண். ஒரு பை நிறைய அரிசியும், பிஸ்கட்டும், பணமும் கொடுத்து அனுப்பினேன். பஞ்சகாலம் உருவாகிவிட்டது. நம் காலத்தில் இதைக் காணவேண்டிய நிலை. மனம் கலங்குகிறது!’ - இப்படிப் பதிவுசெய்திருக்கிறார் சமூக ஆர்வலர் சுரேஷ்குமார இந்திரஜித். இது உதாரணம் மட்டுமே.

பசி, தன்மானத்தை இழந்து பலரையும் கையேந்த வைத்திருக்கிறது கொரோனா ஊரடங்கு. 21 நாள் ஊரடங்கிலேயே இந்த நிலை. அடுத்து மே 3-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துவிட்டது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தமிழக அரசு தரும் இன்னோர் ஆயிரம் ரூபாயும், குடும்ப அட்டைகளுக்கு தரும் இலவசப் பொருள்களும் ஏழைக் குடும்பங்களுக்கு எம்மாத்திரம்... தமிழக அரசுக்கு மத்திய அரசு கொடுத்ததுபோல் இதுவும் யானைப்பசிக்கு சோளப்பொரிதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படியான இக்கட்டான சூழலில் மக்களை அரவணைத்துக் காக்க வேண்டிய தமிழக அரசு, ஆதரவின்றித் தவிக்கும் மக்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்குவது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது என தன்னார்வலர்களுக்கு செக் வைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதேசமயம் அரசுத் தரப்பில், ‘தடையெல்லாம் இல்லை; கொரோனா பரவலைத் தடுக்க சில கட்டுப்பாடுகளை மட்டுமே விதித்திருக்கிறோம்’ எனக் கூறப்படுகிறது.

ஆனாலும், ‘இதில் அ.தி.மு.க அரசு அரசியல் செய்கிறது; எதிர்க்கட்சிகள் மக்களிடம் நல்லபெயர் வாங்குவதை ஆட்சியாளர்கள் விரும்பவில்லை. சென்னை பெருவெள்ளத்தின் போதே தன்னார்வலர்களிடம் பொருள்களைப் பிடுங்கி ஆளுங்கட்சியின் ஸ்டிக்கர் ஒட்டியதையெல்லாம் மறக்க முடியுமா?’ என்றெல்லாம் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தன்னார்வலர்களுக்கு செக்... தயாராகாத அரசு - சோத்துக்கு என்ன வழி?

சில இடங்களில் உதவி பெறும் மக்களையே அதிகாரிகள் மிரட்டியிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. ``தேனி மாவட்டத்தில் பழங்குடியின கிராம மக்களுக்கு, தன்னார்வலர்கள் உதவி செய்திருக்கின்றனர். அதைத் தடுத்த அதிகாரிகள், ‘நாங்களே தருவோம்’ என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள். மூன்று நாள்களாகியும் ஓர் உதவியும் வரவில்லை’’ என்று குமுறுகிறார் சென்னை மற்றும் கேரளப் பெருவெள்ளத்தின் போது பணிகளை தீவிரமாகச் செய்த சமூகச் செயற்பாட்டாளர் இனியன் ராமமூர்த்தி.

சென்னையைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் அருள்தாஸ், ‘‘நாங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும் திருநங்கைகளுக்கும் சில உதவிகளைச் செய்கிறோம். அதையும் தடுக்கிறார்கள் அதிகாரிகள். தமிழகம் முழுவதும் 2,500 தன்னார்வல நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியிருப்பதாக அரசு சொல்கிறது. அவை அனைத்தும் கண்துடைப்பு” என்கிறார்.

சென்னையைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர், சென்னை மாநகராட்சியைத் தொடர்புகொண்டு தன்னை ஒரு தன்னார்வலராகப் பதிவுசெய்ய முயன்றுவருகிறார். 15 நாள்களுக்குமேலாக மாநகராட்சி நிர்வாகம் தன்னை அலைக்கழித்து வருவதாக நொந்துகொள்கிறார் அவர்.

நாகர்கோவிலைச் சேர்ந்த டைசன், “சாலையோரம் வசிப்போருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கும் நாங்கள் உணவு வழங்கிவருகிறோம். மனநலம் பாதிக்கப் பட்டவர்கள் எப்போதும் ஒரே இடத்தில் இருப்பதில்லை. நாங்கள் அவர்களை தொடர்ந்து கண்காணித்துவருவதால், எங்களுக்குத்தான் அவர்கள் இருக்கும் இடம் தெரியும். அதேபோல் யாருக்கு உணவு தேவை என்பதும், எங்களைப் போன்ற களப்பணியாளர் களுக்குத்தான் தெரியும். தினமும் சமைத்து அதிகாரிகளிடம் கொண்டுபோய் உணவைக் கொடுப்பது என்பது, நடைமுறைக்கு ஒத்துவராது” என்றார்.

கோவை உணவு வங்கி நிறுவனர் வைஷ்ணவி, “அரசின் உதவித் திட்டம் மூலம் பயன்பெற பலரிடம் ரேஷன் கார்டுகள்கூட இல்லை. இதுதான் உண்மையான களநிலவரம். புறநகர்ப் பகுதிகளில் உணவு இல்லாமல் தவிப்பவர்களுக்கு அரசு எப்படி உணவு வழங்கப்போகிறது எனத் தெரியவில்லை. ஆனால், இந்த நேரத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை” என்றார்.

தன்னார்வலர்களுக்கு செக்... தயாராகாத அரசு - சோத்துக்கு என்ன வழி?

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் சுற்றுவட்டாரத்தில் 15 கிராமங்களில் தினமும் மதியம் 100 பேருக்கு சாப்பாடு கொடுத்துவருகிறார் ‘பசித்தோர்க்கு உணவு’ அமைப்பின் தலைவர் கருங்கல் ஜார்ஜ். அவர், ‘‘கிள்ளியூர் தாசில்தாரை வைத்து தினமும் உணவு கொடுங்கள்; நான் அவர்களுக்கு சாப்பாடு வழங்குவதை நிறுத்திக்கொள்கிறேன்’’ என்று கடுமையாக எதிர்வினையாற்றுகிறார்.

கரூர் மாவட்டம் ‘இணைந்த கைகள்’ அமைப்பைச் சேர்ந்த சாதிக் அலி, “தமிழக அரசு உத்தரவிடுவதற்கு முன்பே கரூர் மாவட்ட நிர்வாகம் எங்களுக்குத் தடைபோட்டுவிட்டது. இது அவசர கோலத்தில் எடுக்கப்பட்ட முடிவு. நாங்கள் கொண்டு செல்லும் உணவுக்காக எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் என எங்களுக்குத்தான் தெரியும். அவர்களைத் தேடிப் பிடித்து அதிகாரிகளால் உணவு வழங்க முடியுமா? இது பட்டினிச்சாவுகளை அதிகரித்துவிடும்” என்று எச்சரிக்கிறார்.

தஞ்சாவூரைச் சேர்ந்த சிவ.சண்முகம், “டாக்டர்கள், தூய்மைப் பணியாளர்களைப் போன்றுதான் தன்னலம் பார்க்காமல் தன்னார்வலர்கள் செயல்படுகின்றனர். அரசாங்கம் மட்டுமே அனைத்து நிவாரணப் பணிகளையும் மேற்கொள்வது இயலாத காரியம். அது அதிகாரிகளுக்கு பெரும் பணிச்சுமையாக மாறிவிடும். தன்னார்வலர்களுக்கு முட்டுக்கட்டையிடுவது ஆரோக்கியமற்ற செயல்” என்றார்.

திருச்சியைச் சேர்ந்த மனிதம் சமூகப்பணி மையத்தின் இயக்குநர் தினேஷ்குமார், “இப்படி ஒட்டுமொத்தமாகத் தடை விதித்திருப்பது தவறு. சில விதிமுறைகளை வகுத்திருக்கலாம்” என்றார்.

கொரோனா ஊரடங்கில் ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதிகளில் ஒருசிலரைத் தவிர மற்றவர்களை களத்தில் பார்ப்பதே அரிதாக இருக்கிறது. ஆனால், தி.மு.க தரப்பில் பெருமளவில் களமிறங்கிப் பணியாற்றிவருகின்றனர். இதைத் தடுக்கும் நோக்குடன்தான் இந்தத் தடையை விதித்துள்ளதாக குற்றம்சாட்டும் தி.மு.க தரப்பு, இந்தத் தடையை எதிர்த்து நீதிமன்றத்தை நாடவும் முடிவுசெய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், தன்னார்வலர்களுக்குத் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என அறிக்கை வெளியிட்டுள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், ‘‘தன்னார்வ அமைப்புகள் சேவையாற்ற தடையில்லை. ஊரடங்குக்காலம் என்பதால் அந்த விதிமுறைகளைப் பின்பற்றவும், தொற்றுநோயால் பாதிக்கப்படாமல் பாதுகாப்பான முறையில் சேவையாற்றவும் விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது’’ என்று கூறியுள்ளார்.

மே 3-ம் தேதி வரை இனி வேலையும் இல்லை; கூலியும் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. இதனால், இன்னும் 19 நாள்களை எப்படி நகர்த்துவது என்ற சமூகப் பதற்றம் உருவாகத் தொடங்கியுள்ளது. தமிழக அரசு தரும் உதவி மட்டும் போதுமானதாக இருக்காது. இது ஆட்சியாளர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே, தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளித்து அவர்களை வழிநடத்த வேண்டியது அரசின் பொறுப்பாகும்.

உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர் என்பது யாருக்கு வேண்டுமானாலும் புரியாமல் இருக்கலாம். தன்னை உழவர் என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமிக்கு புரியாமலிருக்காது!

அட்டைப்படம்: அருண் டைட்டன்

“கட்சிப் பாகுபாடு பார்க்கவில்லை!”

இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் பேசினோம்.

“உதவி செய்வதில் யாருக்கும் எந்தத் தடையும் இல்லை. கொரோனா பணிகளுக்கென அமைக்கப்பட்டுள்ள 12 உயர்மட்டக் குழுக்களில் ஒரு குழு, தன்னார்வலர்களுக்கு வழிகாட்டி முறைபடுத்திவருகிறது. இதன்படி 2,500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 58,000 தன்னார்வலர்கள் அந்தந்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து நிவாரணங்களை வழங்கிவருகிறார்கள்.

உதவி செய்பவர்களிடமிருந்து, உதவி பெறுபவர்களுக்கும்கூட தொற்று பரவ வாய்ப்புள்ளது. எனவே, மக்களைக் காக்க வேண்டிய பொறுப்புள்ள ஓர் அரசாக சில கட்டுப்பாடுகள் அவசியம். கட்சிப் பாகுபாடு பார்த்தெல்லாம் யாருடைய பணியையும் தடைசெய்யும் நோக்கம் அரசுக்கு இல்லை. எதிர்க்கட்சிகள்தான் இதை மிகைப்படுத்தி அரசியல் செய்கின்றன’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு