Published:Updated:

11 ஆண்டுக்கால போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி!

மகிழ்ச்சியில் சிவரக்கோட்டை விவசாயிகள்...

பிரீமியம் ஸ்டோரி
சிவரக்கோட்டையில் சிப்காட் அமைக்கும் திட்டத்துக்கான அரசாணையை ரத்து செய்திருக்கிறது தமிழக அரசு. இதையடுத்து, தங்களுடைய 11 ஆண்டுக்கால போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியைக் கொண்டாடிவருகிறார்கள் சிவரக்கோட்டை சுற்றுவட்டார மக்கள். அதேநேரத்தில், சட்டமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களே உள்ள நிலையில், ‘இது தேர்தல் ஸ்டன்ட்டோ?’ என்ற சந்தேகம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.

கடந்த 2009-ம் ஆண்டு, `மதுரை மாவட்டம் சிவரக்கோட்டையில் 598.66 ஹெக்டேர் பரப்பளவில் சிப்காட் வளாகம் அமைக்கப்படும்’ என்று அரசாணை வெளியிட்டது, அப்போதைய தி.மு.க அரசு. ‘இந்தத் திட்டம் எங்கள் வாழ்வாதாரத்தைப் பறிக்கும்’ என்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். மக்களுக்கு ஆதரவாக இடதுசாரிகள் நல்லகண்ணு, பாலபாரதி, சமூகச் செயற்பாட்டாளர்கள் மேதா பட்கர், நம்மாழ்வார் உட்பட பலரும் போராடினார்கள். உச்ச நீதிமன்றம் வரை வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், சிப்காட் கொண்டுவருவதில் அரசு தீவிரமாக இருந்தது.

2011-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு, சிப்காட் திட்டத்தை நிறுத்திவைத்தார். மக்கள் சற்று நிம்மதியடைந்தார்கள். ஆனால், அரசாணை ரத்துசெய்யப்படாமல் இருந்ததால், அ.தி.மு.க ஆட்சியிலும் சிப்காட்டைத் தொடங்க தொழில் நிறுவனங்கள் முயற்சியெடுத்தன. இந்தநிலையில்தான் டிசம்பர் 21-ம் தேதி சிப்காட் திட்டத்தை ரத்துசெய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.

11 ஆண்டுக்கால போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி!

சிப்காட்டுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து நடத்திய விவசாய சங்கத் தலைவர் சிவரக்கோட்டை ராமலிங்கத்திடம் பேசினோம். ‘‘இந்தப் பகுதி கரிசல் மண் பூமி என்பதால் சோளம், ராகி, தினை உட்பட 27 வகை தானியங்களின் விளைச்சலால் சிறுதானியக் களஞ்சியமாகத் திகழ்கிறது. சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்தினால் சிறுதானிய விவசாயம் பாதிக்கும்; இதை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதை அரசுக்குத் தெரியப்படுத்தியும் கண்டுகொள்ளவில்லை. இங்கிருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் கப்பலூரில் ஏற்கெனவே ஒரு சிப்காட் செயல்பட்டுவரும்போது, பெரு முதலாளிகளுக்காக எங்களின் நிலங்களைக் கையகப்படுத்துவதில் தீவிரமாக இருந்தார்கள்.

ஆட்சி மாறிய பிறகு சிப்காட் திட்டத்தை ஜெயலலிதா நிறுத்திவைத்தார். ஆனால், அரசாணை அப்படியே இருந்தது. திட்டத்தைச் செயல்படுத்த தொழில்துறை அதிகாரிகள் மீண்டும் ஆர்வம்காட்டினார்கள். அதனால், அரசாணையை ரத்துசெய்ய உத்தரவிடக் கோரி நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தியதை அடுத்து, திட்டத்தை ரத்துசெய்து அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. அரசுக்கு நன்றி’’ என்றார்.

‘இத்தனை ஆண்டுகள் சும்மா இருந்துவிட்டு, தேர்தல் நெருங்கிவருவதால் இந்த நடவடிக்கையா?’ என்று இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமாரிடம் கேட்டோம். ‘‘அப்படியல்ல. சிப்காட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தியபோதே, அம்மா ஆதரவு அளித்தார்கள். ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. இப்போது மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அரசாணை ரத்துசெய்யப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது முதல் தற்போது சிப்காட் திட்டத்தை ரத்து செய்ததுவரை அம்மா வழியில் எடப்பாடி செயல்பட்டுவருகிறார்’’ என்றார்.

சிவரக்கோட்டை, இனி சிறுதானியக் கோட்டையாகட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு