அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

அரசு டெண்டர்களில் புறக்கணிக்கப்படும் ‘எல்காட்’ - கண்டுகொள்வாரா முதல்வர்?

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின்

தி.மு.க ஆட்சி அமைந்தவுடன், பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவதற்கு ‘நிர்பயா’ திட்டத்தின்கீழ் கேமரா கொள்முதல் நடைபெற்றது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தொலைநோக்கில் உதித்த ஒரு துறை, இன்று கேட்பாரற்றுக் கிடப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. “தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திட்ட ‘எல்காட்’ நிறுவனத்தை இன்று அரசுத் துறைகளே புறந்தள்ளுகின்றன.” என்று கொந்தளிக்கிறார்கள் ‘எல்காட்’ நிறுவன ஊழியர்கள்.

1996-ல் தி.மு.க ஆட்சி அமைந்தவுடன், தொழில்துறையிலிருந்து தனியாகப் பிரித்து தகவல் தொழில்நுட்பத்துறையை உருவாக்கினார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. தமிழ்நாடு அரசுக்கென தனியாக தகவல் தொழில்நுட்பக் கொள்கையும் அப்போது உருவாக்கப்பட்டது. அரசுத் துறைகளுக்குத் தேவைப்படும் கம்ப்யூட்டர், லேப்டாப், பிரின்டர்கள், சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட மின்னணு உபகரணங்களைக் கொள்முதல் செய்யவும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்ய ஊக்குவிக்கவும் ‘எல்காட்’ நிறுவனம் அப்போது உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம்தான், தற்போது உதாசீனப் படுத்தப்படுவதாகக் கூறுகிறார்கள் விவரமறிந்த அதிகாரிகள்.

சென்னை எல்காட் அலுவலகம்
சென்னை எல்காட் அலுவலகம்

இது குறித்து நம்மிடம் பேசிய ‘எல்காட்’ உயரதிகாரிகள் சிலர், “ஒவ்வோர் ஆண்டும், சுமார் 250 மின்னணு உபகரணங்களுக்கு ‘ரேட் கார்டு’ பட்டியலைத் தயாரிக்கிறது எல்காட். ஐ3 முதல் ஐ7 வரை பல்வேறு பிராசஸர்களை சப்ளை செய்யும் நிறுவனங்கள், கேமராக்கள், பிரின்டர், புரொஜெக்டர்களை சப்ளை செய்பவர்கள் எனப் பல்வேறு மின்னணு நிறுவனங்கள் இந்த ‘ரேட் கார்டு’ டெண்டரில் பங்கேற்று, தரம், தகுதியின் அடிப்படையில் பட்டியலில் இடம்பிடிக்கின்றன. டாலரின் மதிப்பு ஏற்ற இறக்கத்தைச் சந்தித்தாலும், ரேட் கார்டில் செய்து கொடுத்த உறுதியின்படிதான், மின்னணு உபகரணங்களை அந்த நிறுவனங்கள் சப்ளை செய்ய வேண்டும். இதனால், அரசுக்குப் பல கோடி ரூபாய் மிச்சமாகும்.

அரசுத் துறைகளிடமிருந்து உபகரணங்கள் கொள்முதலுக்கான உத்தரவு கிடைத்த பிறகு, இந்த ரேட் கார்டில் இடம்பெற்றிருக்கும் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வெளிப்படைத்தன்மையுடன் ஒப்பந்தம் போடப்படும். சப்ளையும் சீராக நடக்கும். ஆனால், இதில் ‘கட்டிங்’ எதிர்பார்க்க முடியாது என்பதால், அதிகார வட்டத்தில் இருக்கும் சிலர் இந்த நடைமுறையை விரும்புவதில்லை.

தி.மு.க ஆட்சி அமைந்தவுடன், பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவதற்கு ‘நிர்பயா’ திட்டத்தின்கீழ் கேமரா கொள்முதல் நடைபெற்றது. தற்போது, அந்த கேமராக்கள் பலவும் பழுதடைந்துவிட்டன. எல்காட் மூலமாக, அந்தக் கொள்முதல் நடந்திருந்தால், இந்த தரக் குறைவு நிச்சயம் ஏற்பட்டிருக்காது.

அரசு டெண்டர்களில் புறக்கணிக்கப்படும் ‘எல்காட்’ - கண்டுகொள்வாரா முதல்வர்?

சிவில் சப்ளைஸ் துறையில், ரேஷன் கடைகளில் ‘முக அங்கீகார முகமை’யைப் (Facial Recognition System) பயன்படுத்தி பதிவுசெய்யும் நடைமுறை வரவிருக்கிறது. இதற்கான உபகரணங்கள் டெண்டரை அந்தத் துறையே கையாளவிருக்கிறது. அதேபோல, மின்சாரத்துறையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் ஒப்பந்தத்தையும் அந்தத் துறையே மேற்கொள்ளவிருக்கிறது. உள்ளாட்சித்துறையில், நகர்ப்புறங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தும் ஒப்பந்தத்தை வெளியிடவிருக்கிறார்கள். பள்ளிக்கல்வித் துறையில், ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்தின்கீழ், டி.வி., புரொஜெக்டர் உள்ளிட்ட உபகரணங்கள் கொள்முதல் செய்யும் டெண்டரையும் அந்தத் துறையே கையாளவிருக்கிறது. இப்படித் தொடர்ந்து மின்னணு உபகரணங்கள் கொள்முதலில், ஒவ்வொரு துறையிலும் பல கோடி ரூபாய் பணம் புரள்கிறது. அதை, ‘எல்காட்’ மூலமாகக் கொள்முதல் செய்தால், தாங்கள் விரும்பிய நிறுவனத்துக்கு டெண்டரை வழங்க முடியாது. அதற்காகத்தான், அந்தந்த துறைகளே தன்னிச்சையாக டெண்டர்களை அறிவித்து கொள்முதல் செய்துகொள்கின்றன.

ஆட்சி அமைந்தவுடன் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், ‘அரசுத் துறைகளுக்குத் தேவையான மின்னணு உபகரணங்களை ‘எல்காட்’ மூலமாகவே கொள்முதல் செய்யவேண்டும்’ என முதல்வர் ஸ்டாலின் கண்டிப்புடன் கூறினார். அதை அவரது சகாக்களே பின்பற்றவில்லை.” என்றனர் வேதனையுடன்.

மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

‘எல்காட்’ புறக்கணிப்படுவது குறித்து, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜிடம் பேசினோம். “கடந்தகாலங்களில் சிலபல பிரச்னைகள் இருந்தது உண்மைதான். தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், அந்தப் பிரச்னைகளையெல்லாம் களைந்து புத்துணர்வு ஊட்டியிருக்கிறோம். ரேட் கார்டுகளை சீராக்கி, ஆன்லைன் மூலமாகவே கொள்முதல் செய்யும் வகையில் புதிதாக, கொள்முதல் இணைய முகமையை (Procurement Portal) உருவாக்கியிருக்கிறோம். இனி வரும் காலங்களில் அரசுத் துறைகளுக்குத் தேவைப்படும் மின்னணு உபகரணங்கள் எல்காட் வழியாகவே செல்லும்” என்றார்.

கருணாநிதியின் கனவில் உதித்த ‘எல்காட்’ நிறுவனம், ‘கட்டிங்’ பஞ்சாயத்துகளால் இன்று அரசுத் துறைகளாலேயே ஓரங்கட்டப்பட்டு நிற்கிறது. நேரடியாக முதல்வர் ஸ்டாலின் கவனித்தால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு வரும்!