Published:Updated:

அனைத்து அரசுப் பணிகளுக்கும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு...

அனைத்து அரசுப் பணிகளுக்கும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு...
பிரீமியம் ஸ்டோரி
அனைத்து அரசுப் பணிகளுக்கும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு...

குறுக்கு வழி தடுக்கப்படுமா, புதுப்புது ஊழல்களை உருவாக்குமா?

அனைத்து அரசுப் பணிகளுக்கும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு...

குறுக்கு வழி தடுக்கப்படுமா, புதுப்புது ஊழல்களை உருவாக்குமா?

Published:Updated:
அனைத்து அரசுப் பணிகளுக்கும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு...
பிரீமியம் ஸ்டோரி
அனைத்து அரசுப் பணிகளுக்கும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு...

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட மாநில அரசின் அனைத்துப் பணியிடங்களுக்கும் டி.என்.பி.எஸ்.சி வழியாக ஆட்களைத் தேர்வு செய்வதற்கான சட்ட மசோதா கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் பணம் கொடுத்து குறுக்குவழியில் வேலைவாய்ப்பு பெறுவது முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று வரவேற்பு குரல்கள் எழுந்திருக்கும் அதேவேளையில், கடந்த ஆட்சியில் டி.என்.பி.எஸ்.சி அமைப்பிலேயே தேர்வுகள் நடத்துவதில் குளறுபடிகள் மற்றும் ஊழல்கள் நடந்த சூழலில் இந்தப் பொறுப்பை ஒப்படைப்பது சரியா என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

அனைத்து அரசுப் பணிகளுக்கும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு...

இந்தியாவிலேயே மாகாண அளவில் அரசு ஊழியர்களைத் தேர்வுசெய்வதற்காக உருவாக்கப்பட்ட முதல் அமைப்பு டி.என்.பி.எஸ்.சி-தான். 1929-ல் `மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, 1957-ல் `மெட்ராஸ் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நமது மாநிலத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றப்பட்ட பிறகு, 1970-ல் `தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இதுநாள் வரை அரசுப் பணியாளர்கள் மட்டுமே இந்த அமைப்பின் வழியாகத் தேர்வு செய்யப்பட்டுவந்தனர். மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், அரசுக் கழகங்கள், வாரியங்கள் உள்ளிட்டவற்றுக்கான பணியாளர் தேர்வுகள் அந்தந்த துறைகள், நிறுவனங்கள், கழகங்கள் வழியாகவே இதுவரை நடைபெற்றன. இந்த நிலையில்தான், `இனி அனைத்து அரசுப் பணியிட நியமனங்களும் டி.என்.பி.எஸ்.சி-யிடம் ஒப்படைக்கப்படும்’ என்று கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிதி மற்றும் பணியாளர் நலத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இதன் மூலம் ஆவின், குடிநீர் வடிகால் வாரியம், மின் வாரியம், சுற்றுலா மேம்பாட்டுக் கழகம், அரசுப் போக்குவரத்துக் கழகம் என அனைத்துக்கும் டி.என்.பி.எஸ்.சி வழியாகவே இனி பணியாளர் சேர்க்கை நடைபெறும்.

இது பற்றிய சாதக, பாதகங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன்... ``பொதுத்துறை நிறுவனங்களில் மட்டுமின்றி, பல்வேறு அரசுத் துறை நியமனங்களே தன்னிச்சையாக, வெளிப்படைத்தன்மை இல்லாமல் நடந்துவருகின்றன. ஊழலின் ஊற்றுக்கண் இங்கிருந்தே தொடங்குகிறது. ஒருவர் வேலைக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்து வரும்போது, முதலில் அந்தப் பணத்தை எப்படி எடுப்பது என்றுதான் யோசிப்பார். நியமனங்கள் நேர்மையாக நடந்தால், நேர்மையான நபர்கள் அரசுத் துறைக்கு வருவார்கள். அந்த வகையில் இந்த மசோதா வரவேற்கக்கூடியதே. ஆனால், லட்சக்கணக்கான நியமனங்களைச் செய்யப்போகும் டி.என்.பி.எஸ்.சி அமைப்புக்கு அதற்கான நிதிக் கட்டமைப்பு போதுமா, பணியாளர்கள் போதுமா என்றெல்லாம் தெளிவுபடுத்தப் படவில்லை. இந்தக் கட்டமைப்புகளை மேம்படுத்தவில்லையென்றால், பொதுத்துறை நிறுவனங்களுக்கான தேர்வுகளைச் சரியான நேரத்தில் நடத்த முடியாது. இதனால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செயல்பட முடியாமல் கூடுதல் நஷ்டத்துக்குத் தள்ளப்பட வாய்ப்பு ஏற்படும். அதனால்தான், டி.என்.பி.எஸ்.சி அமைப்பில் சீர்திருத்தம் தேவை என்று நிதியமைச்சரே சொல்லியிருக்கிறார். இப்படி மசோதா இயற்றிவிட்டால் மட்டும் போதாது; டி.என்.பி.எஸ்.சி நியமனங்களில் யாருடைய தலையீடும் இருக்கக் கூடாது. நேர்மையான அதிகாரிகள் மட்டுமே அங்கு பணிக்கு அமர்த்தப்பட வேண்டும். இவற்றைச் செய்தால் மட்டுமே தேர்வுகளை நேர்மையாக நடத்த முடியும்’’ என்றார்.

நம்மிடம் பேசிய இன்னும் சிலரோ, “கடந்த ஆட்சியின்போது டி.என்.பி.எஸ்.சி-யின் தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் அம்பலமாகி தரகர்கள், ஊழியர்கள், மோசடியாக வேலைவாய்ப்பு பெற்றவர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டார்கள். மோசடியில் ஈடுபட்ட 99 பேருக்கு போட்டித் தேர்வுகளை எழுத வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இதையொட்டி அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஊழல் ஆணையமாக மாறிவிட்டது. டி.என்.பி.எஸ்.சி ஊழலில் முக்கியக் குற்றவாளிகளை கைதுசெய்ய தி.மு.க ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று குற்றம்சாட்டினார். தமிழக அரசு அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துவிட்டு, அனைத்து நியமனங்களையும் டி.என்.பி.எஸ்.சி வழியாகச் செய்தால் மட்டுமே ஊழல் ஒழிக்கப்படும். இல்லாவிட்டால், புதுப்புது வழிமுறைகளைக் கண்டறிந்து ஊழல் செய்வார்கள்” என்றார்கள்.

ஜெயராம் வெங்கடேசன், லெனின், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
ஜெயராம் வெங்கடேசன், லெனின், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த லெனின் நம்மிடம், “தமிழக அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதே. அதேசமயம், அப்பரன்டிஷிப்பாக இருப்பவர்களுக்கும், பல ஆண்டுகளாகத் தற்காலிக ஊழியர்களாக இருப்பவர்களுக்கும் வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட சதவிகிதம் ஒதுக்கி முன்னுரிமை வழங்க வேண்டும்” என்றார். டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளைத் தொடர்ச்சியாக எழுதிவரும் தேர்வர்கள் சிலர் நம்மிடம், ``தேர்வுகளைத் தள்ளிவைப்பது, சிலபஸ் குளறுபடிகள் என தற்போது டி.என்.பி.எஸ்.சி நடத்திவரும் தேர்வுகளையே முறையாகவும், சரியான காலகட்டத்திலும் நடத்துவதில்லை. இவர்களிடம் மொத்தப் பொறுப்பையும் தூக்கிக்கொடுத்தால் எங்களைப் போன்ற தேர்வர்களுக்கு மன உளைச்சல்தான் அதிகமாகும்’’ என்றார்கள்.

இது பற்றியெல்லாம் தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் கேட்டோம். ``இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் நேர்மையான முறையில் கிடைக்க வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கம். தவிர, நேரடி நியமனங்கள் மூலமாக, பல துறைகளில் தமிழ் தெரியாதவர்கள், தமிழ்நாட்டைச் சாராதவர்கள் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். அதையும் சரிசெய்யும் நோக்கத்தில்தான் இந்த முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. டி.என்.பி.எஸ்.சி-யின் கட்டமைப்பை மேம்படுத்துவது தொடங்கி, நிர்வாகரீதியாக அனைத்துச் சீர்திருத்தங்களையும் செய்த பிறகுதான் தேர்வுகள் நடத்தப்படும். அதற்காக வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. தேர்வுகள் வெளிப்படைத்தன்மையோடு நேர்மையாக நடத்தப்படும்’’ என்றார் நம்பிக்கையுடன்!

மேற்கண்ட விமர்சனங்களையும் கவனத்தில்கொள்ள வேண்டும் தமிழக அரசு. அப்போதுதான் நல்ல நோக்கத்துக்காக நிறைவேற்றப்பட்ட மசோதா உண்மையான பலனைத் தரும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism