Published:Updated:

`குரூப் 2 தேர்வில் மொழிப் பாடம் நீக்கம்'- அதிருப்தியை வெளிப்படுத்திய கனிமொழி!

டிஎன்பிஎஸ்சி நடத்தும், குரூப் 2 தேர்வுகளிலிருந்து தமிழ் மொழிப் பாடம் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

Kanimozhi
Kanimozhi

தமிழகத்தில் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. அதில், வருவாய் துறை ஆய்வாளர், தொழிலாளர் துறை ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் -2 தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகிறது. மூன்று நிலைகளில் இந்த தேர்வானது நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல். இந்த மூன்றிலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அரசுப்பணியிடங்கள் வழங்கப்படும். குரூப் 2 தேர்வு முறையில் சில மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அண்மையில் தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

TNPSC
TNPSC

இதுகுறித்த அறிவிப்புகள் இன்று வெளியானது. அதில் குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக பொதுஅறிவு வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மொழிப் பாடம் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் கனிமொழி, ``டிஎன்பிஎஸ்சி நடத்தும், குரூப் 2 தேர்வுகளிலிருந்து தமிழ் மொழிப் பாடம் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழே தெரியாமல் பிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் தமிழக அரசுப் பணியில் சேருவதற்கே இது வழி வகுக்கும். தமிழக அரசு உடனடியாக இந்நடவடிக்கையைக் கைவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.