Published:Updated:

ஊழலை மறைக்கத் துடிக்கும் ‘போலி’ ஐ.ஏ.எஸ்-கள்!

‘போலி’ ஐ.ஏ.எஸ்-கள்
பிரீமியம் ஸ்டோரி
News
‘போலி’ ஐ.ஏ.எஸ்-கள்

2001-ல் தேர்ச்சி பெற்றவர்களை விசாரிக்குமா காவல்துறை?

‘‘டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 விவகாரத்தில் அரசு காட்டும் வேகத்தை, இதற்கு முன் நடந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகளிலும் காட்டி விசாரித்தால் பல்வேறு மோசடிகள் அம்பலத்துக்கு வரும்’’ என்கிறார்கள், இந்த முறைகேட்டால் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டவர்கள்.

2001-ம் ஆண்டு நடந்த குரூப்-1 தேர்வில் விதிமுறைகளை மீறி சில தேர்வர்கள் விடைத்தாளில் சில குறியீடுகளைப் பயன்படுத்தி தேர்வு எழுதியதாகவும், 2004-ம் ஆண்டில் தேர்வு முடிவுகள் வெளியானபோது அவர்கள் தேர்ச்சிபெற்றதாகவும் அப்போதே நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில், `மோசடியாகத் தேர்ச்சிபெற்றவர்களை, பணிநீக்கம் செய்ய வேண்டும்’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த வழக்கு உச்ச நீதிமன்றம் சென்ற பிறகு, சீராய்வு மனுவில் பணிநீக்கத்துக்கு கருணை அடிப்படையில் தடைவிதித்தனர்.

ஊழலை மறைக்கத் துடிக்கும் ‘போலி’ ஐ.ஏ.எஸ்-கள்!

‘‘அந்தத் தேர்வில் தேர்வாகி பலர் இப்போது தமிழக அரசில் உயர் பதவிகளில் இருக்கின்றனர். குறிப்பாக, ஐ.ஏ.எஸ் பதவியில் பலர் இருக்கின்றனர். இப்போது நடந்திருக்கும் முறைகேட்டின் பின்னணியிலும் சில உயர் அதிகாரிகள் இருக்கின்றனர். எனவே, முறைகேடு வெளியே வருவதை அவர்கள் தடுக்கின்றனர். எனவே, 2001-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-1 தேர்வில் தேர்ச்சிபெற்று அதிகாரிகளாக இருப்பவர்களையும், இப்போது நடைபெற்று வரும் குரூப்-4 முறைகேட்டை வெளிவராமல் தடுக்கும் அதிகாரிகளையும் கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது.

கடந்த இருபது ஆண்டுகளாக தமிழக அரசின் பொதுத்தேர்வு வாரியம் நடத்திய எல்லா தேர்வுகளிலும் முறைகேடு நடந்துகொண்டே இருக்கிறது. ‘வினாத்தாள், விடைத்தாள் இரண்டையும் தனித்தனியாகக் கொடுத்தால் முறைகேடு நடக்கிறது’ என்று வினாத்தாள், விடைத்தாள் இரண்டையும் ஒரே புக்லெட்டாக அச்சடித்துக் கொடுத்தனர். இப்போது இதிலும் முறைகேடுகள் நடைபெறுகின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சென்னையில் புகழ்பெற்ற ஒரு நிறுவனத்தில் படித்த பலரும், தொடர்ந்து குரூப்-1 தேர்வில் தொடர்ச்சியாக வெற்றிபெறுகின்றனர். தேர்வுத்தாளில் அவர்கள் எந்த மோசடியும் செய்வதில்லை. ஆனால், தேர்வில் கேட்கப் படும் கேள்விகள் எல்லாம் குறிப்பிட்ட சிலருக்கு முன்கூட்டியே கொடுக்கப்படுகின்றன. தெரிந்த கேள்விக்குத் தெளிவாக பதில் எழுதுவதில் யாருக்கும் சிரமம் இருப்பதில்லை. இந்தக் கேள்வித்தாள் வெளிவரும் ரூட்டைக் கண்டறிந்து, கேள்வித்தாளை லீக் செய்பவர் களைக் கைதுசெய்ய வேண்டும்’’ என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.

‘போலி’ ஐ.ஏ.எஸ்-கள்
‘போலி’ ஐ.ஏ.எஸ்-கள்

அவர்களே தொடர்ந்து, ‘‘2015 மற்றும் 2016-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-1 தேர்வில் முறைகேடு நிகழ்ந்ததாக அப்போது ஆதாரங்களுடன் செய்தி வெளியானது. டி.என்.பி.எஸ்.சி-யில் உறுப்பினராக இருந்த ஒருவர் மூலமே இந்த முறைகேடு நிகழ்ந்திருப்பது அம்பலத்துக்கு வந்தது. ஆனால், அந்த விவகாரம் அப்போதே அமுக்கப்பட்டது.

தமிழகத்தில் 1999-ம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற ஒவ்வொரு தேர்விலும் ஒவ்வொருவிதமான மோசடி நிகழ்ந்துவருகிறது. இப்போது குரூப் 4-ல் நிகழ்ந்த முறைகேட்டில் சிறிய மீன்களைப் பிடித்துவிட்டு, திமிங்கலங்களைத் தப்பவிடுகிறார்கள்.

ஒவ்வொரு முறையும் டி.என்.பி.எஸ்.சி விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதே அ.தி.மு.க ஆட்சியில்தான். 83 அதிகாரிகள் மோசடியாகத் தேர்வான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்தபோது, அந்த வழக்கில் அதிகாரிகளுக்கு ஆதரவாகக் களமிறங்கியது இப்போது ஆட்சியில் உச்சத்தில் இருக்கும் அமைச்சர் ஒருவர்தான். அதேபோல் ஜெயலலிதா காலத்தில்தான் டி.என்.பி.எஸ்.சி-யில் ஓய்வுபெற்ற அதிகாரிகள் இல்லாமல், வேறு சிலரை உறுப்பினர் பதவிக்குக் கொண்டுவந்தார். இதுபோன்ற உறுப்பினர்கள் மூலமே இந்த மோசடி சத்தமில்லாமல் அரங்கேற ஆரம்பித்தது. தகுதியான உறுப்பினர்களை டி.என்.பி.எஸ்.சி-க்கு நியமிக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், சில உறுப்பினர்களை நீக்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டி.என்.பி.எஸ்.சி-யில் 14 உறுப்பினர்களும் ஒரு தலைவரும் இருக்க வேண்டும். இப்போது மூன்று உறுப்பினர்களும் ஒரு தலைவரும் மட்டுமே இருக்கின்றனர். பிற உறுப்பினர்களுக்கான தேர்வுகளை அரசு நடத்த முயன்றபோது, பலமான போட்டிகள் இருந்ததால் அவற்றை நிறுத்திவைத்திருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த அனைத்து தேர்வுகளிலுமே மோசடி நிகழ்ந்துள்ளது’’ என்று அழுத்தமாகச் சொல்கின்றனர்.

2004-ம் ஆண்டு நடத்த குரூப்-1 மோசடியை விசாரிக்க வேண்டும் என்று முதன்முதலில் நீதிமன்றம் சென்றவர் வழக்கறிஞர் மாதவன். தமிழக அரசு நடத்தும் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து தொடர்ந்து வழக்கு நடத்திவருகிறார். அவரிடம் பேசினோம்.

‘‘தமிழகத்தில் 1999-ம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற ஒவ்வொரு தேர்விலும் ஒவ்வொருவிதமான மோசடி நிகழ்ந்துவருகிறது. இப்போது குரூப் 4-ல் நிகழ்ந்த முறைகேட்டில் சிறிய மீன்களைப் பிடித்துவிட்டு, திமிங்கலங்களைத் தப்பவிடுகிறார்கள். சமீபகாலமாக குரூப்-1 தேர்வில் வெற்றிபெற்றவர்கள் விவரங்களையும், அவர்கள் பயின்ற மையங்களையும் ஒப்பீடு செய்ய வேண்டும். அதை விசாரிக்கும் பொறுப்பு சி.பி.ஐ வசம் இருந்தால்தான் உண்மை வெளிவரும். தமிழக அதிகாரிகளை விசாரிக்கச் சொன்னால், அவர்களில் சிலரே இதேபோன்ற மோசடியில் தேர்வானவராகக்கூட இருக்கக்கூடும். அவர்கள் நியாயமான விசாரணையை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது’’ என்று அதிர்ச்சியூட்டுகிறார்.

டாஸ்மாக் டு கலால் துறை கமிஷனர்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தென்சென்னை பகுதியில் டாஸ்மாக் கடை எண் 715-ல் பணிபுரிந்த ரவிக்குமார் என்பவர், குரூப் 1 தேர்வில் தேர்ச்சிபெற்று கலால் துறையில் துணை கமிஷனர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் அவர் பதவி உயர்வு பெற்று கமிஷனராகவும் நியமிக்கப்பட்டார். ஆனால், சில மாதங்களில் அவருடைய ஆங்கிலப் புலமை மற்றும் கோப்புகளைக் கையாளும் நடைமுறைகளைப் பார்த்து, சக அதிகாரிகள் அவர்மீது சந்தேகமடைந்தனர். இதுகுறித்து மேலிடத்துக்கு புகார் செல்லவே விசாரணை நடைபெற்றது. இதில் டாஸ்மாக் கடையிலிருந்து சரக்கு சப்ளை செய்த சகவாசத்தில் டி.என்.பி.எஸ்.சி உயர் அதிகாரிகளுடன் ரவிக்குமாருக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கேள்வித்தாள்கள் லீக் ஆகி இவர் தேர்ச்சிபெற்றார் என்ற விவரங்கள் விசாரணையில் தெரியவந்தன.

இந்த நிலையில், ரவிக்குமாருக்கு திருமண ஏற்பாடுகளும் நடைபெற்றுவந்தன. திருமணம் நடக்கும் முன்பே மணமேடையில் வைத்தே ரவிக்குமாரை போலீஸார் கைதுசெய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவருடன் 11 பேர் தலா மூன்று லட்சம் ரூபாய் கொடுத்து முறைகேடாக குரூப் 2 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட போட்டித்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றது தெரியவந்தது. அந்த வழக்கு இப்போதும் நடந்துவருகிறது.

இதுவரை டாஸ்மாக் நிறுவன ஊழியர்கள் மட்டுமே சுமார் 100 பேர் டி.என்.பி.எஸ்.சி-யின் பல்வேறு போட்டித்தேர்வுகளில் தேர்ச்சியடைந்து பல்வேறு பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்போது அவர்கள் அனைவரையும் விசாரிக்க முடிவுசெய்துள்ளது சி.பி.சி.ஐ.டி போலீஸ்.