Published:Updated:

கழிப்பறை கபளீகரம்! - ஆர்.கே.நகர் அட்ராசிட்டி...

அ.தி.மு.க., தி.மு.க-னு பல கட்சிக் காரங்களுமே ஆக்கிரமிச்சிருக்காங்க. பில்டிங்கா மாத்தி, அதுக்கு பட்டா வாங்கித் தர்றோம்னு காசு புடுங்குறாங்க

பிரீமியம் ஸ்டோரி

“சார்... எங்க ஏரியாவுல 624 கழிப்பிடங்களை ஆக்கிரமிப்பு செஞ்சுட்டாங்க” என்றபடி கைநிறைய ஆவணங்களுடன் ஜூ.வி அலுவலகத்துக்கு வந்தார் வடசென்னையைச் சேர்ந்த ஆர்.டி.ஐ செயற் பாட்டாளர் செல்வம். அவர் சொன்ன விஷயங்களைக் கேட்டு நமக்குத் தலைசுற்ற ஆரம்பித்தது.

சிறு ஃப்ளாஷ்பேக்... 1992-ம் ஆண்டு ‘நடைபாதைவாசிகள் மறுவாழ்வுத் திட்டம்’ என்ற பெயரில் மானிய விலையில் வீட்டு மனைகளை தமிழக குடிசை மாற்று வாரியம் ஒதுக்கீடு செய்தது. இதன்படி, ஆர்.கே.நகர் பகுதியில் கொருக்குப்பேட்டை-ஜெ.ஜெ.நகர் பகுதியில் 1,511 வீட்டுமனைகளை ஏழை மக்கள் பெற்றனர். 242 சதுரஅடிகொண்ட ஒரு வீட்டு மனையின் விலை 14,400 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு மாதம் 60 ரூபாய் வீதம் 240 மாதங்களுக்குத் தவணை செலுத்த வேண்டும். 20 ஆண்டுகளில் கடன் முடிந்துவிடும். இதற்கிடையே, வாரியமே இவர்களுக்கு இந்த மனையில் மானியத்தில் வீடும் கட்டிக்கொடுத்தது. குறுகிய பரப்பளவு என்பதால் வீட்டுக்குள் கழிப்பிட வசதி கிடையாது. இதற்காகவே மேற்கண்ட பகுதிகளில் ஒரு தொகுப்புக்கு எட்டு கழிப்பறைகள் வீதம் 78 இடங்களில் 624 பொதுக்கழிப்பிடங்களைக் கட்டிக்கொடுத்தது வாரியம். மக்கள் அவற்றைப் பயன்படுத்தினார்கள்.

செல்வம்
செல்வம்

ஆண்டுகள் கழிந்தன. சென்னை நகருக்குள் பாதாளச்சாக்கடைத் திட்டம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இது இந்தப் பகுதிகளுக்கும் வரவே, கழிவுநீர்க்குழாய்கள் அமைக்கப்பட்டு, அவை வீடுகளுடன் இணைக்கப் பட்டன. ஒருகட்டத்தில் பொதுக்கழிப்பிடங்கள் பயன்பாடற்றுப் போயின. 2003-ம் ஆண்டுக்குப் பிறகு காலியாகக் கிடந்த அந்தப் பொதுக்கழிப்பிடங்களை சிலர் ஆக்கிரமித்தனர். கழிப்பிடங்களில் பழைய சாமான்களைப் போடுவது, சாக்குத் துணிகொண்டு மூடுவது என அந்த இடங்கள் உருமாற்றப்பட்டன.

இது தொடர்பாக ஆர்.டி.ஐ மூலம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திடமிருந்து பெற்ற பதிலையும், கழிப்பிடங்கள் இருந்த இடங்களின் வரைபடத்தையும் நம்மிடம் காட்டினார் செல்வம். “வாரியம் தரப்பிலிருந்து எனக்கு அனுப்பிய பதிலில், ‘ஆக்கிரமிப்புதாரர்களுக்கே அந்த இடங்களை வழங்குவது குறித்த நடவடிக்கையில் இருப்பதாக’ குறிப்பிட்டிருக்கிறார்கள்” என்றார்.

அவருடன் சம்பந்தப்பட்ட ஏரியாவுக்குக் கிளம்பினோம். கொருக்குப்பேட்டை - ஜெ.ஜெ.நகரில் வரைபடத்தில் கழிப்பிடங்களாகக் குறிப்பிட்டிருந்த இடங்களைப் பார்வையிட்டோம். வீடு, மளிகைக் கடை, ஹோட்டல், பட்டறை எனப் பல பகுதிகளை “இவைதான் கழிப்பிடங்களாக இருந்த பகுதிகள்” என்று சுட்டிக்காட்டினார் செல்வம். இன்னும் சில கழிப்பிடங்களில் உபயோகமற்ற பொருள்கள் குவிந்துகிடந்தன. அங்கிருந்த பெரியவர் ஒருவர், “அ.தி.மு.க., தி.மு.க-னு பல கட்சிக் காரங்களுமே ஆக்கிரமிச்சிருக்காங்க. பில்டிங்கா மாத்தி, அதுக்கு பட்டா வாங்கித் தர்றோம்னு காசு புடுங்குறாங்க” என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுச் சென்றார்.

நம்மிடம் பேசிய செல்வம், “பத்து வருடங்களுக்கு மேலாக இந்த அநியாயம் நடக்கிறது. இந்த ஆக்கிரமிப்புகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த ஆளும்கட்சிப் பிரமுகர்களின் உறவினர்கள், நண்பர்கள் என ஆக்கிரமிப்பு செய்வார்கள். அடுத்து, அக்கம்பக்கத்தினர் ஆக்கிரமித்திருப்பார்கள். இதில் அ.தி.மு.க., தி.மு.க என்று எந்தப் பாரபட்சமும் இல்லை” என்றார்.

வெற்றிவேல் - ராஜேஷ் - கணேசன்
வெற்றிவேல் - ராஜேஷ் - கணேசன்

ஆர்.கே.நகர் 38-வது தி.மு.க வட்டச் செயலாளர் கணேசனைச் சந்தித்து, “கழிப்பிடங்களை உங்கள் கட்சியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்திருப்பதாகச் சொல்கிறார்களே...” என்று கேட்டோம். “அதெல்லாம் பொய். ஆளும்கட்சியினர்தான் இங்கிருக்கும் கழிப்பிடங்களை உடைத்து ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்கிறார்கள். நேதாஜி நகரில் தண்ணீர் கேன் விற்கும் பிரமுகர் ஒருவருக்கு இதுதான் வேலையே. என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட பிரபல ரௌடி ஒருவர் உயிருடன் இருந்தபோது, இந்தப் பகுதியில் மூன்று கழிப்பிடங்களை ஆக்கிரமித்து விற்றார். பலமுறை சம்பந்தப்பட்ட துறையிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை’’ என்றார்.

அ.ம.மு.க பொதுச்செயலாளர் தினகரன்தான் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. அவர் நீண்டநாள்களாகத் தொகுதி மக்களின் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதால், அவரது கட்சியைச் சேர்ந்தவரும் ஆர்.கே.நகர் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான வெற்றிவேலிடம் இது பற்றிக் கேட்டோம். “கழிப்பிடங்களுக்கு அருகே இருப்பவர்கள்தான் அந்த இடங்களை ஆக்கிரமித்திருந்தனர். பல்வேறு அரசியல் கட்சியினரும் அந்த இடங்களைப் பிடுங்கி விற்றிருக்கிறார்கள்” என்றார் பொத்தாம் பொதுவாக.

கழிப்பறை கபளீகரம்! - ஆர்.கே.நகர் அட்ராசிட்டி...

அ.தி.மு.க வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளர் ராஜேஷிடமும் இது குறித்துக் கேட்டோம். “சமூக விரோதிகள், ஆட்சிகள் மாறும்போது ஆளும்கட்சிப் பெயரைத்தான் பயன்படுத்து வார்கள். சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நான் எப்போதும் துணைபோனதில்லை. அ.தி.மு.க-வைச் சேர்ந்த யாரேனும் ஆக்கிரமித்திருப்பதாக ஆதாரத்துடன் என்னிடம் சொன்னால், நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

சென்னை குடிசை மாற்று வாரிய தலைமைப் பொறியாளர் சேதுபதியிடம் இது குறித்தெல்லாம் கேட்டோம். “நீங்கள் குறிப்பிடும் பகுதிகளில் தற்போது கழிப்பிடங்களே தேவையில்லை என்ற நிலை வந்துவிட்டது. கழிப்பிடங்கள் இருந்த இடங்களை அந்தப் பகுதி மக்களே கேட்டு, மனுக்களைக் கொடுத்திருக் கிறார்கள். அவற்றைக் குடியிருப்பு மனைகளாக மாற்றிவிடலாம் என்று சி.எம்.டி.ஏ-வுக்கு விண்ணப்பித்தோம். அவர்களும் 2016-ம் ஆண்டே அனுமதி கொடுத்துவிட்டார்கள். பொது விலையை நிர்ணயித்து, தகுதியான நபர்களைத் தேர்வுசெய்து, பயனாளிகளுக்கு அந்த இடங்களை விரைவில் கொடுத்து விடுவோம்” என்றவரிடம், “வாரியத்துக்குச் சொந்தமான இடங்களைப் பலரும் ஆக்கிரமித்து விற்றிருக்கிறார்கள். அந்த இடங்களை மீட்டு மக்கள் பொதுப் பயன்பாட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தியிருக்கலாமே?” என்று கேட்டோம்.

கழிப்பறை கபளீகரம்! - ஆர்.கே.நகர் அட்ராசிட்டி...

“அவை குறுகலான தெருக்கள். 78 இடங்களில் இங்கொன்றும் அங்கொன்றுமாக கழிப்பிடங்கள் இருக்கின்றன. குறுகலான இடம் என்பதால் மக்களின் பொதுப் பயன்பாட்டுக்கு அந்த இடங்கள் பொருந்தாது. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டுதான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். ஆக்கிரமிப்பு குறித்தும் ஆய்வு செய்துவருகிறோம். ஆக்கிரமிப் பாளர்கள்மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். ஆக்கிரப்பாளர்களுக்கு வாரியம் ஒருபோதும் துணை போகாது” என்றார். `ஆக்கிரமிப்பாளர்களுக்கே அந்த இடம் சொந்தம் என்று முடிவெடுத்தால், ஆக்கிரமிப்புகள் இன்னும் அதிகரிக்காதா...’ என்பதே சாமானியனின் கேள்வியாக இருக்கிறது.

‘அஞ்சு கோடிப் பேரு, அஞ்சு கோடி தடவை, அஞ்சஞ்சு பைசாவா திருடினா தப்பா?’ என்றொரு வசனம் ‘அந்நியன்’ படத்தில் வரும். அதுதான் நினைவுக்கு வருகிறது!

ஆக்கிரமிப்பின் மதிப்பு ஆறு கோடி ரூபாய்!

மேற்கண்ட கழிப்பிடங்கள் இருந்த பகுதிகளில் இன்று அரசு வழிகாட்டுதல் மதிப்பின்படி ஒரு சதுர அடி 1,000 ரூபாய் வரை விற்பனையாகிறது. சந்தை விலையில் 3,000 ரூபாய் வரை விற்பனையாகிறது. அதன்படி பார்த்தால், ஆக்கிரமிப்பிலிருக்கும் இடங்களின் மதிப்பு சுமார் ஆறு கோடி ரூபாய். தவிர, இந்தக் கழிப்பிடங்களுக்கான செப்டிக் டேங்க்குகளும் ஆக்கிரமிப்பில் இருப்பது தனிக்கதை!

கழிப்பறை கபளீகரம்! - ஆர்.கே.நகர் அட்ராசிட்டி...
கழிப்பறை கபளீகரம்! - ஆர்.கே.நகர் அட்ராசிட்டி...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு