அலசல்
Published:Updated:

“அரசுப் பேருந்துகளுக்கு சுங்கக் கட்டணம் அநியாயம்!” - மக்களிடம் மறைமுகச் சுரண்டல்

பேருந்து
பிரீமியம் ஸ்டோரி
News
பேருந்து

எந்த அரசு வாகனமாக இருந்தாலும், அதற்குரிய மோட்டார் வாகன வரி, எஃப்.சி., ஆர்.சி உள்ளிட்டவற்றுக்கான கட்டணங்கள் செலுத்தப்படுகின்றன

‘தமிழகத்தில் ஓடும் அரசுப் பேருந்துகளுக்கு, சுங்கக் கட்டணமாக ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் கொட்டி அழிக்கப்படுகிறது. இந்திய குடியரசுத் தலைவரில் தொடங்கி, பிரதமர், நீதியரசர்கள், மாநில முதல்வர்கள், ராணுவ அதிகாரிகள், எம்.எல்.ஏ-க்கள் வரை வாகனங்களுக்குச் சுங்கக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர்களுக்கெல்லாம் தங்கள் வரிப்பணத்தைச் சம்பளமாகக் கொடுக்கும் சாமானியர்கள், அரசுப் பேருந்தில் பயணித்தால்கூட சுங்கக் கட்டணத்தைச் செலுத்தும் அவலம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது’ என்று கொதிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இது குறித்து நமக்குக் கிடைத்திருக்கும் ஆர்.டி.ஐ தகவல்கள் அதிரவைக்கின்றன!

“அரசுப் பேருந்துகளுக்கு சுங்கக் கட்டணம் அநியாயம்!” - மக்களிடம் மறைமுகச் சுரண்டல்

தமிழகத்தில் பயன்பாட்டிலுள்ள அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை, போக்குவரத்துக் கழகங்கள் ஆண்டுவாரியாகச் செலுத்தியிருக்கும் சுங்கக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை ஆர்.டி.ஐ மூலமாகப் பெற்றிருக்கிறார் சமூக ஆர்வலர் காசி மாயன். அதில்தான், தமிழகத்தில் தொலைதூர அரசுப் பேருந்துகளை இயக்கும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாயை சுங்கக் கட்டணமாகச் செலுத்தியிருக்கும் புள்ளிவிவரங்கள் கிடைத்திருக்கின்றன. இது குறித்து காசி மாயனிடம் பேசினோம்...

“அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமாக 1,122 பேருந்துகள் இயங்குகின்றன. தமிழகம் முழுவதும், ஆம்னி ஓடாத வழித்தடங்களிலும் இந்தப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசுப் பேருந்துகளில் பெரும்பாலும் சாமானியர்கள், கூலி வேலை செய்பவர்கள், நடுத்தர வர்க்கத்தினர்தான் பயணிக்கிறார்கள். வசதி படைத்தவர்கள் ஆம்னி சொகுசுப் பேருந்துகளிலும், கார்களிலும் சென்றுவிடுகிறார்கள். இந்த அரசுப் பேருந்துகளுக்குச் சுங்கக் கட்டணமாக ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் வசூலிக்கப்படுவது வேதனைக்குரிய விஷயம்.

“அரசுப் பேருந்துகளுக்கு சுங்கக் கட்டணம் அநியாயம்!” - மக்களிடம் மறைமுகச் சுரண்டல்

2018-ம் ஆண்டு 40.29 கோடி ரூபாயும், 2019-ம் ஆண்டு 44.28 கோடி ரூபாயும், 2020-ம் ஆண்டு 21.60 கோடி ரூபாயும், 2021-ல் ஜனவரி முதல் மே மாதம் வரை 14.86 கோடி ரூபாயும் சுங்கக் கட்டணமாகச் செலுத்தியிருக்கிறது தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம். சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் 3,460 பேருந்துகள் ஓடுகின்றன. இவற்றில் பல பேருந்துகள் நெடுஞ்சாலை வழித்தடத்திலும் பயணிப்பதால், சுங்கக் கட்டணம் செலுத்தியிருக்கின்றன. 2018-ல் 2.65 கோடி, 2019-ல் 2.68 கோடி, 2020-ல் 1.11 கோடி ரூபாயை சுங்கக் கட்டணமாகச் செலுத்தியிருக்கிறார்கள் மாநகர் போக்குவரத்துக் கழகத்தினர். சாமானியர்கள் பயணம் செய்யும் அரசுப் பேருந்துகளுக்குச் சுங்கக் கட்டணம் எதற்கு? அரசு நினைத்தால், இதற்கு விதிவிலக்கு அளிக்கலாம். இந்தச் சுங்கக் கட்டணம் வசூலிப்பது, மறைமுகமாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கடன் சுமையை அதிகரிக்கவும் செய்கிறது. 2006-லிருந்து 2021 மே மாதம் வரை, தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 1,555.94 கோடி ரூபாய் கடன் சுமை அதிகரித்திருக்கிறது” என்றார்.

சி.ஐ.டி.யூ-வின் மாநிலத் தலைவர் செளந்தரராஜனிடம் பேசினோம். “எந்த அரசு வாகனமாக இருந்தாலும், அதற்குரிய மோட்டார் வாகன வரி, எஃப்.சி., ஆர்.சி உள்ளிட்டவற்றுக்கான கட்டணங்கள் செலுத்தப்படுகின்றன. அதற்குப் பிறகும், அரசுப் பேருந்துகளுக்குச் சுங்கக் கட்டணம் வசூலிப்பது அநியாயம். இதில் பயணிப்பவர்கள் எல்லாருமே சாமானியர்கள்தான். இப்படி சுங்கக் கட்டணம் செலுத்துகிற தொகைதான், மக்களின் தலையில் டிக்கெட் கட்டண உயர்வாக வந்து விழுகிறது. ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான ரூபாய் சுங்கக் கட்டணமாக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் செலுத்துவதால், அதன் கடன் சுமையும் அதிகரிக்கிறது. யாரும் பேருந்து ஓட்ட விரும்பாத வழித்தடத்திலும் அரசுப் பேருந்துகள் ஓடுகின்றன. இதையெல்லாம் குறிப்பிட்டு, ‘அரசுப் பேருந்துகளுக்குச் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்’ என்று நான் சட்டமன்றத்திலும் பேசியிருக்கிறேன், மத்திய அரசுக்குக் கடிதமும் எழுதியிருக்கிறேன். ஆனால், எந்த மாற்றமும் இல்லை” என்றார் வருத்தத்துடன்.

காசி மாயன் - சௌந்தரராஜன்
காசி மாயன் - சௌந்தரராஜன்

ஆர்.டி.ஐ-யில் கிடைத்திருக்கும் தகவலின்படி, ஒவ்வொரு வருடமும் அக்டோபர், நவம்பர், ஜனவரி மாதங்களில்தான் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அதிகமாகச் சுங்கக் கட்டணத்தைச் செலுத்தியிருக்கின்றன. தீபாவளி, பொங்கல் பண்டிகையையொட்டி, சொந்த ஊருக்குச் செல்லும் மக்களிடம் சுங்கக் கட்டணம் என்கிற பெயரில் இப்படியொரு மறைமுகச் சுரண்டலை நடத்துகிறது அரசு. இந்த விவகாரத்தில், மத்திய அரசுதான் முடிவெடுக்க முடியும் என மாநில அரசு கழன்றுகொள்வது சரியல்ல. பண்டிகைக் காலத்தில் மும்மடங்கு விலைவைத்து வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கும், அரசுப் பேருந்துகளுக்குச் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடும்.

சாமானியர்களின் வாகனமான அரசுப் பேருந்துக்கு, சுங்கக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்குமா அரசு?