Published:Updated:

2022 - டாப் 25 பரபர...

2022 - டாப் 25 பரபர...
பிரீமியம் ஸ்டோரி
News
2022 - டாப் 25 பரபர...

சென்றமுறை ஒத்த ஓட்டு வாங்கி ஒலக சாதனை புரிந்த பா.ஜ.க. இந்தமுறை ‘தனித்துக் களம் காண்கிறோம்' என்று தைரியம் காட்டி இறங்கினார்கள். வாங்கினது என்னவோ வெண்கலக் கிண்ணிதான்.

2022 - டாப் 25 பரபர...

வயது வந்தவர்களுக்கு மட்டும்!

‘மிட்நைட் மசாலா’ இப்போது ஒளிபரப்பப்படுவதில்லை. ஆனால் குறுகிய கால இடைவெளியில் பா.ஜ.க-வினரின் ஆபாச ஆடியோ - வீடியோக்கள் வெளியாகி ட்விட்டரில் டிரெண்ட் அடிக்கத் தவறுவதில்லை. இன்னொருபுறம் வேறு கட்சியில் இருந்து நான்கு ஆட்களைச் சேர்த்தால் இந்தக் கட்சியில் இருந்து ஆறுபேர் வேறு கட்சிக்குப் போகும் ‘உள்ளே வெளியே’ விளையாட்டுதான் கமலாலயத்தின் பிரதான பொழுதுபோக்கே. ‘இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்ல’ என்ற கிரேக்க பழமொழிக்கு வாழும் உதாரணமானவர், ‘அறிவுசார் பிரிவு’ அர்ஜுன மூர்த்தி.

வெளிநாட்டு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த காயத்ரி ரகுராம், காசி சங்கமத்துக்குத் தன்னை அழைக்கவில்லை என்று ட்விட்டரில் கண்ணைக் கசக்க, காசியில் சங்கமம் நடந்ததோ இல்லையோ தமிழகத்தில் பா.ஜ.க., ‘தெறிக்க விடலாமா?’ என்று பிளவுபட்டுப் பிதுங்கியது. அதேநேரத்தில் திருச்சி சூர்யா இன்னொரு பா.ஜ.க பிரமுகர் டெய்சியை ஆபாச அர்ச்சனை செய்த ஆடியோ வெளியாகிக் கட்சிப்பேர் நாறியது. ‘பெண்களைப் பற்றித் தப்பாப் பேசினா கையை வெட்டுவேன், நாக்கை வெட்டுவேன்’ என்று அனல் கக்கிய அண்ணாமலை திருச்சி சூர்யாவிடம் எதை வெட்டப்போகிறாரோ என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அண்ணாமலையோ காயத்ரியைக் கட்டம் கட்டி அரசியல் சதுரங்கத்தில் காயை வெட்டினார். சூர்யா - டெய்சி சர்ச்சையை விசாரிக்க ஒரு விசாரணைக்குழு அமைக்க, ‘போன வருஷம் கே.டி.ராகவன் விவகாரத்தை விசாரிக்க ஒரு குழு போட்டீங்களே அது என்னாச்சு?’ என்று கமலாலயம் கதவைத் தட்டி விசாரித்தான் தமிழன். ரெண்டே நாளில் ‘நாங்க ரெண்டு பேரும் அக்கா - தம்பி. ரொம்ப ரொம்பக் கேவலமாப் பேசிக்குவோம்’ என்று ‘பேக்கரி டீலிங்’ காட்டியது பி.ஜே.பி பிப்பில்லிக்கா பிளாக்கி. ‘கனத்த மனதுடன் திருச்சி சூர்யாவை சஸ்பெண்ட் செய்கிறேன். அடிமட்டத் தொண்டனாகக் கட்சி வளர்ச்சியில் கவனம் செலுத்துவார்’ என்று அண்ணாமலை அறிக்கை விட, தாமரைக் கட்சிக்காரர்களே தரையில் விழுந்து புரண்டு சிரித்தார்கள். அடுத்த வாரத்தில் ‘கேசவ விநாயகத்துக்கு கெட்-அவுட் சொல்லலைன்னா காவிக்கட்சி காலி’ என்று ரணகள ராஜினாமாக் கடிதம் கொடுத்தார் திருச்சி சூர்யா. அடுத்த கட்சியிலிருந்து ஆளைத் தூக்குகிறேன் என்று அண்ணாமலை கூட்டிவந்த கு.க.செல்வம், திருச்சி சூர்யா, டாக்டர் சரவணன் எல்லாம் டாட்டா காட்டி வெளியேற, ‘தாமரை மல்லாந்தே தீரும்’ என்று கண்ணுல ஜலம் வெச்சது கமலாலயம் வட்டாரம்.

2022 - டாப் 25 பரபர...

காங்கிரஸில் ஒரு சு.சாமி!

சி.பி.ஐ ஒருபக்கம் சோதனைகள், வழக்குகள் என அலைக்கழித்தாலும், ‘எனக்குன்னு ஒரு வானம்; எனக்குன்னு ஒரு மேகம்' என ட்விட்டரில் ராஜாங்கம் நடத்திக்கொண்டிருந்தார் கார்த்தி சிதம்பரம். ‘எத்தனை முறை சி.பி.ஐ சோதனை நடந்தது என்பதை நானே மறந்துட்டேன்' என சி.பி.ஐ-யைக் கலாய்த்து ட்வீட் போட்டு, வேம்புலியையே ஸ்பேரிங் போடக் கூப்பிட்டார் இந்தக் காங்கிரஸ் கபிலன். மார்ச் மாதம் ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மொத்தக் காங்கிரஸ் கோஷ்டிகளும் துக்கம் அனுசரித்துக்கொண்டிருந்த அந்த நாளில், ‘நெட்ப்ளிக்ஸில் என்ன படம் பார்க்கலாம்' என்று ட்விட்டரில் கேள்விகேட்டு, ‘என்ன வேணா நடக்கட்டும், நான் சந்தோஷமா இருப்பேன்' மோடின் உச்சத்துக்கே போயிருந்தார்.

ஒருபக்கம், ராகுல் காந்தி நாடு முழுவதும் நடையாய் நடந்துகொண்டிருக்க, மறுபக்கம் இவர் ஹோட்டல்களுக்கு விசிட் அடித்து எதார்த்தமாகப் பதார்த்த ரிவ்யூ செய்தார். சத்தியமூர்த்தி பவனில் கோஷ்டி மோதல் குடுமிப்பிடி சண்டை நடக்க, ‘‘எக்ஸ்க்யூஸ்மீ, எனக்கு வேணா தலைவர் பதவி தாங்களேன்" என்று சண்டையின் சந்து இடுக்கில் அப்ளிகேஷன் போட்டு அலறவைத்தார்.

2022 - டாப் 25 பரபர...

ஒட்டுமொத்த பர்னிச்சரும் காலி!

உலகத்தில் என்ன நடந்தாலும் அதற்கு எதிர்த்திசையில் ஓடும் இலக்கியவாதிகள் இந்த ஆண்டும் நவரசங்களில் நாட்டியம் ஆடினார்கள். நாளுக்கு நாற்பது கவிதைகள் எழுதி கீழே தேதியையும் போட்டு மனுஷ்யபுத்திரன் கவிதைகள் என்ற பெயரில் டைரிகளை நிரப்பி, காதல் கவிதைகளில் தபுசங்கரைத் தலைகீழாகத் தண்ணீர் குடிக்கவைத்தால், சுயமோக ஜெயமோகன் மட்டும் சும்மா இருப்பாரா? ‘தமிழின் நம்பர் 1 எழுத்தாளர் நான்தான்’ என்று ஜெயமோகன் சொன்னதைக் கேட்டுப் பெரும்பாலான தமிழர்கள் `இவர் மைக்மோகனின் பெரியப்பா பையனா, ஜெயமாலினியின் சித்தப்பா பையனா?' என்று தலையைச் சொறிந்தார்கள். ‘‘இதுக்கு முன்னாடி எத்தனையோ பேரு ‘அறைக்கலன்'ங்கிற வார்த்தைய உருவாக்கியிருந்தாலும் இப்ப நான் உருவாக்கினதுதான் ஃபர்ஸ்ட் டைம்’’ என்று கெக்கேபிக்கே காமெடி பண்ண, ஜெயமோகனின் ஒட்டுமொத்த அறைக்கலன்களையும் அடித்துத் தூள்தூளாக்கியது சமூகவலைதளம். சாருநிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிப்பைக் கேட்டு ‘‘அடுத்த வருஷம் பாரேன், ‘இலக்கியச்செம்மல்' விருதை எடப்பாடிக்குத் தருவாரு ஸ்டாலின்'’ என்று பகபக பந்தயம் கட்டினார்கள்.

2022 - டாப் 25 பரபர...

சிரிப்புப் போலீஸுக்கு டைம் சரியில்லை!

வடிவேலு இல்லாத குறையைப் போக்க வாராது வந்த மாமணிதான் அண்ணாமலை. ‘கையும் களவுமாக' மாட்டிய ராகவன் பஞ்சாயத்தை விசாரிக்க ஒரு குழு, ‘கெட்டபய சார் இந்தத் திருச்சி சூர்யா' பிராதை விசாரிக்க ஒரு குழு என்று வரிசையாய் அண்ணாமலை குழுக்கள் அமைக்க, ‘முதல்ல நீங்க ஐ.பி.எஸ் எப்படி பாஸ் பண்ணீங்கன்னு விசாரிக்க ஒரு குழு போடணும்' என்றது தமிழகம். `வல்வில் ஓரி சுதந்திரப்போராட்ட வீரர், 360 டிகிரி கணக்கு தப்பு, விமான பாகத்தில் வாட்ச்' என்று பொது அறிவுப் பூஜ்ஜியமாக அண்ணாமலை உளறிக்கொட்டியது அனேகம். ‘போராடப் போறேன்’ எனக் கட்சிக்காரர்களைக் கூட்டிக்கொண்டு கோட்டை நோக்கிப் போக, போலீஸ் கைது செய்ய வருவது தெரிந்ததும்கூட வந்தவர்களை அம்போவென விட்டுவிட்டு ஆட்டோவில் ஏறிய மான் கராத்தே வீரர். ‘பெண்களைப் பற்றித் தப்பாய்ப் பேசினால் நாக்கை வெட்டுவேன்’ என்று பாகுபலி மோடில் இருந்தவரைப் பழிதீர்க்க அடுத்த வாரமே வெளியானது திருச்சி சூர்யா - டெய்சி ‘ஏச்சுக்குப் பேச்சு’ ஆடியோ. பாகுபலி பிலிம் காட்டிய அண்ணாமலை பம்ம, ‘இவரு டம்மி பீசு’ என்று தமிழகமே சிரித்தது. குண்டுவெடித்த மறுநாளே என்.ஐ.ஏ-வுக்கு ஏன் மிஸ்டுகால் கொடுக்கலை என்று தமிழக அரசைப் பார்த்துக்கேட்ட அண்ணாமலை, ‘வாட்ச் ரசீது நாலு மாசம் கழிச்சு தர்றேனே’ என்று தலையைச் சொறிந்தது தமாசு... தமாசு!

2022 - டாப் 25 பரபர...

வீணைக்கும் வீணைப் பிஞ்சு...

நீண்ட நாள்களாகக் கா விட்டிருந்த கங்கை அமரன் இளையராஜாவுடன் இணைந்து ‘அண்ணன் போட்ட சோறு, தினமும் தின்னேன் பாரு' என்று புதுமெட்டு கட்ட, புல்லரித்துப்போனது தமிழகம். ஆனால் அமரன் வந்தது ஆப்புடன் என்பது பிறகுதான் தெரிந்தது. இதுவரை அம்பேத்கர் என்ற பெயரையே உச்சரிக்காத இளையராஜா, ‘'மாட்டுக்கண்ணுல எம்.ஜி.ஆர் தெரியறாரு, மோடி உருவத்தில் அம்பேத்கர் தெரியறாரு’ என முரட்டு முன்னுரை எழுத, தமிழ்ச்சமூகம் ‘கோபம் வர்றமாதிரி காமெடி பண்ணாதீங்க ராஜா' என்று கண்சிவந்தது. அடுத்து ராஜாவுக்கு ராஜ்யசபா எம்.பி பதவியும் கிடைக்க, ‘சந்தோஷம்தான். ஆனா சந்தேகம்தான்' என்று எசப்பாட்டுக்கே எதிர்ப்பாட்டு பாடினார்கள். காந்திகிராமத்தில் டாக்டர் பட்டம் வாங்கிய கையுடன் ‘ஆபரேஷன் காசி’க்குக் கிளம்பினார். ‘தமிழ்ச் சங்கமத்தில்' சமஸ்கிருதப் பாடல்கள் இரண்டைப் பாட, ‘தமிழைக் காணோம்?' என்று கோபப்பட்டு கொஸ்டீன் கேட்டார்கள் தமிழர்கள். விட்டாரா ராஜா? ‘முத்துசாமி தீட்சிதருக்கு சரஸ்வதி கொடுத்தது வீணை. அது மியூசியத்தில் இருக்குது, வீணை மேல் ஆணை' என்று அவிழ்த்துவிட்டதுடன் மோடியை வியந்து வியந்து வியந்து பாராட்டியதில் விலாநோகச் சிரித்து மீம் மெட்டீரியல் ஆக்கியது தமிழகம்.

2022 - டாப் 25 பரபர...

வந்தாரய்யா வாரிசு!

தனது சிவப்பு ராட்சசனை வைத்து தமிழ் சினிமாவை வளைத்துப் பிடித்ததன் பலனாக கமலும், மணிரத்னமும் வெற்றிப் புன்னகையில் கைகுலுக்கினார்கள். இதன் பலனாக பெட்டிக்குள் மறைந்திருந்த இந்தியன் தாத்தாவும் வெளியே வந்தார். இப்படி தொட்டதையெல்லாம் பொன்னாக்கியவர், சினிமா பேட்டிகளின் வழியாக மற்ற நடிகர்களின் நெஞ்சைப் புண்ணாக்கினார். ‘நெஞ்சுக்கு நீதி’தான் கடைசிப்படம் என்றவருக்கு பாகுபலி கெட்டப்பில் பிரமாண்ட கட் அவுட் வைக்க, “ஏமாந்தீங்களா? ‘மாமன்னன்’தான் கடைசிப் படம்” என்று ‘வெவ்வவ்வே’ சொன்னார். மாமன்னனுக்குப் பிறகும் ஷூட்டிங் கிளம்பிப் போய்விடுவாரோ என்று பயந்த கழகத்தவர்களே ‘உதயநிதிக்கு அமைச்சர் பதவி வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்ற, ‘‘எதுக்குத் தீர்மானம்லாம், நான் என் கடமையைத்தானே செஞ்சேன்” என்று உதயநிதி கொடுத்த எக்ஸ்பிரஷன்ஸ்தான், பத்துவருட சினிமா வாழ்க்கையில் பெஸ்ட் பெர்பாமன்ஸ். ஒருவழியாக உதயநிதி அமைச்சராக, ‘‘அவர் மகன் வந்தாலும் ‘வாழ்க’ சொல்வோம்’’ என்று கே.என்.நேரு கொடுத்தது புது பெர்பாமன்ஸ்!

2022 - டாப் 25 பரபர...

‘நன்னாள்’ நாயகன்

‘நாலு பேரும் நல்லா இருந்த கட்சியும்’னு ஜாலியா கேக் வெட்டிக் கொண்டாடி இருந்தவங்க மேல யார் கண்ணு பட்டுச்சோ தெரியல, எல்லாமே பட்டு பட்டுனு மாறுச்சு. ‘அடுத்த முதல்வர் இவர்தான்’னு தெரிஞ்சுதானோ என்னவோ சட்டசபை முடிஞ்சு உதயநிதி கார்ல ஏறப் போனவரை மறிச்சு அவரோட கார்ல ஏத்திவிட்டாங்க. ஏத்தி ஏத்தி ஏத்தின்னு கூட இருந்தவங்க எல்லாம் இவர ஏத்திவிட, ஓ.பி.எஸ்ஸ கழட்டிவிட்டு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டிப் பொதுச்செயலாளராகத் தீர்மானம் போட்டாங்க. அதுக்கு முன்னாடி வரை RRR ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் மாதிரி கைகோத்து ‘நாட்டு நாட்டு’ பாடல் பாடிய பன்னீரும் பழனியும் சண்டக்கோழியா மாறி பறந்து பறந்து அடிச்சிக்க ஆரம்பிச்சதுல இன்ஃபினிட்டி வார் தோத்துப்போச்சு. பொதுக்குழு கூட்றத பொழுதுபோக்கா மாத்தி, யார் யாரையோ கட்சில இருந்து நீக்கி அறிக்கையா விட்டுப் பழகினவரு நல்லவேள தன்னைத்தானே நீக்கிக்கல. ‘ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும் வாடி இருக்குமாம் கொக்கு’ன்னு டெல்லிலேயே காத்துக் கிடக்கிறவருக்கு ‘கடல்லயே இல்லையாம்’னு சீக்கிரம் புரியவரும். பன்னீர் வழக்குமேல் வழக்குப் போட்டு வாய்தா வாங்க, ‘தம்பி, டீ இன்னும் வரலை’ மோடிலேயே தவமாய்த் தவழ்கிறார். 'அம்மா இறந்த இந்த நன்னாளில்'னு பிளாக் சட்டை போட்டு எடப்பாடி செய்ததுதான் இந்த ஆண்டின் பிப்பிலிக்கா பிளாக்கி பிளாக் ஹ்யூமர்!

2022 - டாப் 25 பரபர...

கண்ணீர் தேசம்... பன்னீர் ஆஸம்!

முன்னாடிலாம் என்ன பிரச்னை வந்தாலும் மெரினால உக்காந்து தர்மயுத்தம் செஞ்சு மெரினா நாயகன்னு பேரெடுத்தவர். நாளாக நாளாக உள்கட்சிலேயே ஆப்பு வைக்கிறாங்கன்னு தெரிஞ்சதும் நெஜமாவே யுத்தத்துக்குத் தயாராகி, உருட்டுக்கட்டை, கல்லோட அ.தி.மு.க அலுவலகத்தை நொறுக்கியெடுத்தாரு. உள்ளுக்குள்ள தூங்கிட்டிருந்த மிருகத்தத் தட்டி எழுப்பினதுக்குப் பலனா கட்சியின் பல தூண்களைக் கட்சியிலிருந்து நீக்கி ஸ்ட்ராங்கா இருந்த பில்டிங்கோட பேஸ்மென்ட்ட அசைச்சிவிட, அதுக்கு முன்னாடியே அவர கட்சில இருந்து நீக்கியதா அறிவிப்பு வர, கட்சில யாரெல்லாம் இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கிறதுக்கு முன்னாடி கட்சி யார்கிட்ட இருக்குன்னு அவங்களுக்குள்ளேயே ட்விஸ்ட் ஆகி... போதும்ப்பா சாமி, ஆள விடுங்கன்னு அ.தி.மு.க-வே ஆக்கர் விழுந்த பம்பரமாச்சு. கட்சியை விட்டு நீக்கியது செல்லும்னு தீர்ப்பு வந்த பிறகும், ‘ஹே... நானும் ரவுடி, நானும் ரவுடி...’ என்கிற ரேஞ்சில் ‘நான்தான் அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர்’ என்று அறிக்கை விட்டபடி அ.தி.மு.க கொடியுடன் சுற்றுப்பயணமும் செய்தார். ஒற்றைத்தலைமைக்காக ஒத்தையா, ரெட்டையா போட்டதுக்கு இன்னமும் விடைதெரியாம முழிக்கிறது பாவப்பட்ட ர.ர.க்கள்தான்! எடப்பாடி ஒருத்தரை நீக்கினா அவரைச் சேர்த்துப் பதவி கொடுக்கிறது, கொடி பிடிச்சு கோர்ட் படி ஏறுறது, ‘தனிக்கட்சி ஆரம்பிக்க தைரியம் இருக்கா?’ன்னு எடப்பாடிக்கு சவால் சவடால் விட்டதுன்னு இந்த வருஷம் முழுக்க பன்னீர் செஞ்ச பணிகள் இவைதான் பங்காளி!

2022 - டாப் 25 பரபர...

கோஷ்டி வெடிச்சது... வேட்டி கிழிஞ்சது!

இப்போது தருமி டைம் ட்ராவல் செய்து வந்து, ‘பிரிக்க முடியாதது என்னவோ?’ எனக் கேட்டால், ‘காங்கிரஸும் கோஷ்டிப் பூசலும்’ என பதில் சொல்லியிருப்பார் முன்னாள் காங்கிரஸ் உறுப்பினரான ‘திருவிளையாடல்’ சிவாஜி கணேசன். அப்படிப்பட்டது தமிழக காங்கிரஸ். ஆனா, ‘என்னதான் ஆச்சு இந்தக் காங்கிரசுக்கு?’ என்று கவலைப்படும் நிலையில் சிலபல ஆண்டுகளாகவே கோஷ்டி மோதல் எதுவுமின்றி சைலன்ட் மோடில் இருந்த கட்சி, திடீரென்று வயலன்ட் வைப்ரேஷன் மோடுக்கு மாறியது. நெல்லை காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக சத்தியமூர்த்தி பவனில் நடந்த சண்டைக்காட்சியால் நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகரன் தற்காலிகமாக நீக்கப்பட்டார். ஆனால், நீக்கிய மறுநாளே டெல்லி தலைமையால் சேர்க்கப்பட்டார். அதுவரை அழகிரிக்கு ஆலவட்டம் சுற்றிய உள்ளூர்த் தலைகள் எல்லாம் டெல்லிக்கு ப்ளைட் பிடித்துப்போய் ‘அழகிரியுடன் அன்னந்தண்ணி புழங்கக்கூடாது’ என்று கோபப்பட்டுக் கொடி பிடித்தார்கள். இப்போதைய சண்டை நிலவரப்படி கே.எஸ்.அழகிரி கோஷ்டி, திருநாவுக்கரசர் கோஷ்டி, செல்வப்பெருந்தகை கோஷ்டி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோஷ்டி, கார்த்தி சிதம்பரம் கோஷ்டி என ஐ.பி.எல் டீம் எண்ணிக்கையைத் தாண்டி, இவ்வாண்டு தமிழக காங்கிரஸ் கோஷ்டிகளின் எண்ணிக்கை, அமெரிக்க டாலர் மதிப்பு போல உச்சம் தொட்டுவிட்டது.

2022 - டாப் 25 பரபர...

கொலம்பஸ் கொலம்பஸ் கொண்டா ஒரு தீவு!

வெளிநாட்டிற்குத் தப்பித்து ஓடிய நித்யானந்தா, ‘மரியான்' தனுஷ் மாதிரி தத்தளித்துக்கொண்டிருப்பார் என நினைத்தால், ஒரு தீவையே விலைக்கு வாங்கி, ‘எனக்கு ராஜாவா நான் வாழுறேன்' என மஜா மோடில் வாழ்ந்துகொண்டிருந்தார். யார் கண் பட்டதோ, நித்யானந்தாவுக்கு உடம்பு சரியில்லை என்று தகவல்கள் தாவின. ‘‘பிரபஞ்ச சக்தியோடு என் ஆத்மாவைக் கலக்கும் முயற்சியில் இருக்கிறேன். சமாதி நிலையில் இருக்கிறேன். ஆனால், நான் சாகவில்லை’’ என்று நித்தி கொடுத்த விளக்கத்தைக் கேட்டு, ‘கமல்ஹாசன் சார், ஒரிஜினல் ஐடி-ல வாங்க' என சிலர் கமென்ட் போட ஆரம்பித்துவிட்டார்கள்.

நண்டு ஆம்லேட்டில் மேற்கொண்டு நாலு கரண்டி பெப்பரைத் தூவியது போல், ‘‘கரீபியத் தீவு ஒன்றின் வங்கியில் நித்யானந்தா சேமித்துவைத்திருந்த தங்கம், பணமெல்லாம் கொள்ளை போய்விட்டன. அந்தப் பரிதவிப்பில்தான், உடல்சோர்ந்துவிட்டார்’’ என வந்தது ஒரு காரசார கமகம தகவல். கடைசியில், ‘எனக்கு அடைக்கலம் கொடுத்து உதவுங்க' என இலங்கைக்கு நித்தி தரப்பு கடிதம் எழுத, ‘நான் எங்க தாவுறது, நானே தவழ்ந்துட்டிருக்கேன்' என மறுகடிதம் எழுதாத குறையாக அந்நாட்டு அரசு முழித்தது.

கோடம்பாக்கத்தை விட்டே காணாமல்போன இயக்குநர் பேரரசுக்கும், கெட்டவார்த்தை திருச்சி சூர்யாவுக்கும் ‘கைலாச தர்ம ரட்சகா' விருதுகள் கொடுத்து தர்மத்தையே தலைகீழாகத் தொங்கவிட்டது இந்த ஆண்டின் கசமுசா காமெடி!

2022 - டாப் 25 பரபர...

அதே டெய்லர்... அதே வாடகை!

மே மாதம் பா.ம.க-வின் தலைவராக அன்புமணி ராமதாஸ் ‘ஒருவர்' மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல ஆண்டுகளாக அப்பதவியில் மிக்சர் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஜி.கே.மணிக்கு, மிக்சரோடு தட்டைப் பிடுங்கிவிட்டு ‘கௌரவத் தலைவர்' என்னும் காலித்தட்டைக் கொடுத்தார்கள். கெட்டப்பை மாற்றினாலும் கேரக்டரை மாற்றாத அன்புமணி, ‘அடுத்த தேர்தலில் பா.ம.க ஆட்சியமைக்கும்' என்று வழக்கமாகச் சூளுரைக்க, பாட்டாளிச் சொந்தங்கள் பதறாமல், வாய்க்கு முன் சொடக்குவிட்டார்கள். பொன்னியின் செல்வன் வைபில் இருந்த அன்புமணி, ‘சோழர் காலப் பாசனத் திட்டத்தைச் செயல்படுத்துவோம்' என உறுதிமொழி ஏற்று, ‘நஞ்சைகளே புஞ்சைகளே... வன்னியரின சொந்தங்களே...’ என சோழ தேசம் பக்கம் குதிரையை ஓடவிட்டு, ‘வன்னியின் செல்வன்' ஆனார்.

2022 - டாப் 25 பரபர...

சிக்குபுக்கு பிச்சுக்கிச்சு!

‘இருக்கு, ஆனா இல்லை' என்ற எஸ்.ஜே.சூர்யா டயலாக்தான் இந்த ஆண்டு அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி உறவு. உள்ளாட்சித் தேர்தலில் தனித்துக் களம் கண்டு தரைதட்டியது பா.ஜ.க கப்பல். ஆனாலும், ‘வலிக்கலையே வலிக்கலையே' என்று ‘‘நாங்கள்தான் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி’’ என்று அழும்பு பண்ணினார் அண்ணாமலை. தெர்மாகோல் செல்லூராரே தீப்பொறி திருமுகமாக மாறி ‘ஒரே ஒரு பாட்ஷா... ஒரே ஒரு வைகையாறுதான்... அதில ஒரே ஒரு தெர்மாகோல்தான்... அது அ.தி.மு.க-தான்' என்று முரட்டு கீதம் பாடினார். ‘உள்ளாட்சித் தேர்தலைப்போன்று நாடாளுமன்றத் தேர்தலிலும் 39 வேட்பாளர்களைத் தனியாக நிறுத்த முடியும்' என்று கரு.நாகராஜன் சொல்ல, போர்வைக்குள் புரண்டு உருண்டு சிரித்தார்கள் ஹெச்.ராஜா உள்ளிட்ட காவிகள். காலை 11 மணி ஆனாலே நாக்கு அரித்து மைக் தேடும் ஜெயக்குமாரும் பா.ஜ.க.வை நாக்-அவுட் செய்தார். எதையுமே கண்டுகொள்ளாத எடப்பாடி, ‘இப்படியே போனா இருக்கிற பதவிக்கும் ஆபத்து' என்று ‘அ.தி.முக தலைமையில்தான் அடுத்த தேர்தலில் கூட்டணி' என்று ஆப்படித்தார். ஆனாலும் பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி கன்டினியூ ஆகுமா, கட் ஆகுமா என்று ஒரு இடைவேளைக்குப் பிறகு விவாதிப்போம்!

2022 - டாப் 25 பரபர...

கோலிவுட் குமுறுதுங்கோ!

பிரஸ்மீட், சக்சஸ்மீட் என எல்லாவற்றிலும் காமெடி கதகளி ஆடியது தமிழ் சினிமா. ‘அஜித்தும் ஏ.கேதான் அஷ்வின்குமாரும் ஏ.கேதான்’ என்று இயக்குநர் ‘கலகல கலகல ரெட்டைக்கிளவி’ பாடினால் ‘நிறைய கதைகேட்டு நான் தூங்கியிருக்கேன்’ என்று அஷ்வின்குமார் குதூகலமாய்க் கொட்டாவி விட, குதறித்தள்ளியது சோஷியல் மீடியா. எத்தனையோ ஸ்டார்களைப் பார்த்த தமிழ்த்திரையுலகம் புதிதாக ஸ்லீப்பிங் ஸ்டாரையும் கண்டு சரித்திரம் படைத்தது. இன்னொருபக்கம் யூடியூபில் ஹிட்டடிக்க ‘அந்த நடிகை செய்த காரியம் என்ன தெரியுமா?’, ‘இந்த நடிகரோட பெட்ரூம் வாசல்ல எலுமிச்சம்பழம் எதுக்கு இருக்கு தெரியுமா?’ன்னு குவிஸ் போட்டி நடத்தி வாங்கிக் கட்டிக்கிட்டதுல முதல் விருது வாங்குபவர் பயில்வான் ரங்கநாதன். நாய் சேகர் தலைப்பு நாய்படாத பாடுபட்டு ஒருவழியா வந்து வந்த இடமே தெரியாமப் போனது தனிக்கதை. ‘வெந்து தணிந்தது காடு தமிழ் சினிமாவுக்கு ஒரு கும்பிடு போடு’ன்னு குண்டக்க மண்டக்க புரொமோஷனுக்காக மட்டும் பேசிப் பேசி ஓடா தேஞ்சிபோனாரு கூல் சுரேஷ். ‘ஏதாச்சும் சொல், உன் இஷ்டத்துக்குச் சொல்’னு பாட்டு பாடிக்கிட்டே ‘முத்து படத்துல ஜோடியா நடிக்க ரஜினி கூப்ட்டாரு’ன்னு மதுவந்தி சொல்ல, தமிழ் நெட்டிசன்ஸ் தற்கொலைப்படையாக மாறினார்கள். ‘வாரிசு விஜய்தான் நம்பர் ஒன், மற்றவங்க எல்லாம் டீக்கடை பன்’ என்று தயாரிப்பாளர் கொளுத்திப்போட்டதில் தகிக்கிறது தமிழ் சினிமாவுலகம்.

2022 - டாப் 25 பரபர...

போர்... ஆமாம் போர்!

இவ்வாண்டு சோஷியல் மீடியாவில் அதிகம் புரட்டியெடுக்கப்பட்டது ராஜ் பவன் ரவியா, ‘லவ் டுடே' ரெவியா என்று பட்டிமன்றமே நடத்தலாம். அந்த அளவுக்கு சர்ச்சைகளின் நாயகனாகி சண்டைகள் செய்தார் ஆளுநர் ரவி. ‘இந்தியா என்பது ரிஷிகளின் தேசம். அதனால் யாரும் மூணு மாசம் முடிவெட்டக்கூடாது, ஆறுமாசம் ஷேவிங் செய்யக்கூடாது', ‘சனாதனம்தான் இந்தியாவுக்கு சாம்பார் சட்னி' என்றெல்லாம் இஷ்டத்துக்கு உளறிக்கொட்ட, ‘இவர் கவர்னரா, பா.ஜ.க வட்டச்செயலாளர் வண்டுமுருகனா?' என்று சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்டனர் மக்கள். அனுப்பிவைத்த மசோதாக்களை எல்லாம் ஆறப்போட்டு ஊறப்போட்டுவிட்டு, ‘ஜி.யு.போப் திருக்குறள் டிரான்ஸ்லெஷன் சரியில்லை, கால்டுவேல் பேஸ்ட்டில உப்பில்லை' என்று தேவையில்லாத ஆணிகளைத் தினம் தினம் பிடுங்கிக்கொண்டிருந்தார். பேரறிவாளனையும் பிறகு அறுவரையும் விடுதலை செய்த உச்ச நீதிமன்றம், ‘ஆளுநர் என்பவர் அமைச்சரவை முடிவுக்குக் கட்டுப்பட்டவர்' என்று நடுமண்டையிலேயே நங், நங்கு என்று குட்டினாலும் கவலைப்படாத கவர்னர், இன்னும் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆறப்போட்டுத்தான் ஆத்திரங்களைக் கிளப்புகிறார் மக்களே!

2022 - டாப் 25 பரபர...

பெல் பட்டனை அமுக்குங்க!

சோஷியல்மீடியால நாம உயிரோட இருக்கணும்னா எல்லா ட்ரெண்டிங்லயும் கலந்துக்கணும்ங்றதுல நெட்டிசன்ஸ் எல்லாருமே வெளாட்டா அலெர்ட்டா இருந்தாங்க. வித்தியாசமா என்ன பண்ணுனாலும் ‘கிரிஞ்ச்’னு சொல்றதும், கருத்தா ஏதாவது பேசினா ‘பூமர்’னு சொல்றதும் பரவலாச்சு. அப்டினா என்னன்னு விளக்கம் கேட்டா, விளக்கம் கேட்டவங்களையே ‘பூமர் அங்கிள்' பட்டம் பூமராங்கா தாக்குச்சு. ரீல்ஸோட ரீல் அந்துபோகிற அளவுக்கு ஒவ்வொருத்தருக்குள்ளேயும் இருக்கிற கலைவெறியர்கள் காட்டுத்தனமா வெளிவந்தாங்க. அதுல முக்கியமா ‘பொன்னியின் செல்வன்’ ஃபீவர்ல ஒரிஜினல் குந்தவைக்கும் நந்தினிக்கும் நம்ம தோழிகள் பாடம் எடுத்ததெல்லாம் வேற லெவல். 2கே கிட்ஸ்கள் கொண்டாடிய பப்ஜி மதனுக்கும் பைக் வெறியர் டிடிஎஃப் வாசனுக்கும் காப்பு மாட்டியது காவல்துறை. ‘ஆடி காரே வெச்சிருந்தாலும் நாங்க ஏழைங்க’ என்று பப்ஜி குடும்பம் பஜ்ஜி சுட, காவல்துறைக்கே சவால்விட்டுக் கடுப்பைக் கிளப்பினார் டி.டி.எஃப்.

2022 - டாப் 25 பரபர...

உளறல் உடன்பிறப்பே...

‘படுத்தா தூக்கமில்லை; பாதியில் எழுந்திருக்கேன்' என்று முதல்வர் ஸ்டாலினையே கதறவும் பதறவும் வைத்தவர்கள் தி.மு.க அமைச்சர்கள். மைக்கும் கையுமாக அமைச்சர்களைப் பார்த்தாலே, ‘கிரிகாலா உடம்ப இரும்பாக்கிக்கடா.. அடைமழை வெளுத்து வாங்கப்போகுது' என இணைய உடன்பிறப்புகள் நடுங்கிப்போய் உட்கார்ந்திருந்தார்கள். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மூத்த அமைச்சர் பொன்முடி, ‘ஓசி பஸ்ஸில்தான போறீங்க' எனப் பெண்களைப் பார்த்துப் பேசியதற்காக தெளிய வைத்துத் தெளிய வைத்து நெட்டிசன்கள் அடித்தார்கள். ‘ஆம்னி பஸ்களின் கட்டணம் உயர்வு ஏழைகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை' என ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு ஆதரவாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச, தாறுமாறாக டயரை பஞ்சர் ஆக்கினார்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் தமிழர்கள். இவங்களையெல்லாம் தூக்கி ஏப்பம் விட்ட துரைமுருகன், ‘இவங்களைப் பணியிடை நீக்கம் செய்யுங்க. அப்படி இல்லைன்னா கன்னியாகுமரிக்குத் தூக்கியடிங்க' என மருத்துவமனை ஊழியர்களிடம் மிரட்டினார். கே.கே.எஸ்.எஸ்.ஆர் நடுஹாலில் பனியனுடன் அமர்ந்து நாட்டாமை செய்ததும் வீடியோ வைரலானது. ஆகமொத்தம் தி.மு.க அமைச்சர்களின் நாக்கில் சனிபகவான் ஸ்னேக் டான்ஸ் ஆடினார்.

2022 - டாப் 25 பரபர...

இந்த சந்தாதாரரைத் தொடர்புகொள்ள முடியாது!

சுனாமி வந்தாலும் அணைகட்டி நிக்கிற அளவுக்கு பினாமிகள் சூழ வலம் வந்தவரை வருமான வரித் துறை மூலமா உயர் நீதிமன்றம் ஆப்பு வச்சது. ஜெயலலிதா மரணத்தில் இவர்மீது எந்த சந்தேகமும் இல்லைன்னு சொன்ன ஓ.பன்னீர்செல்வம் மேலேயே எல்லாருக்கும் சந்தேகம் இருந்தது. இவரும் ஓ.பி.எஸ்ஸும் இப்படி இருக்க, ‘இவங்க ரெண்டு பேரையும் அ.தி.மு.க-வில் இணைக்க வாய்ப்பே இல்லை’ன்னு எடப்பாடி சொல்ல, ‘அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்’னு ஐகோர்ட்டுத் தீர்ப்பும் வர ‘புண்படுத்திட்டே இருக்கீங்களேய்யா'ன்னு சசி வாய்ஸ் சத்தமா கேட்டது. ‘அ.தி.மு.க-வுக்கு நிச்சயம் தலைமை தாங்குவேன்’னு வீராவேசமா கிளம்பினவர ‘நீங்க வேணும்னா பா.ஜ.க-வில் சேந்திடுங்களேன்’னு நயினார் நாகேந்திரன் அழைக்க, ஜெர்க் ஆகி நின்னாரு சசி. ‘அதெல்லாம் முடியாதுங்க, அ.தி.மு.க-வைக் கட்டிக்காக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது, நான்தான் அ.தி.மு.க-வின் எதிர்காலம், அ.தி.மு.க கொடில இருந்து இரட்டை இலைல முளைக்கிற செடி வரை பயன்படுத்தக் கூடாதுன்னு சொல்ல யாருக்கும் உரிமை இல்லை’ன்னு மூச்சுவிடாமப் பேசி முடிச்சாங்க. அதோட நிக்காம வண்டிய எடுத்துக்கிட்டுப் புரட்சிப் பயணம் கிளம்பினவருக்கு பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவுன்னு தகவல் கிடைக்க, சுற்றுப்பயணத்துல மாற்றம் செஞ்சாரு. அப்போதான் ஆதரவாளர்களுக்குப் புரிஞ்சது, ‘நம்ம அம்மாகூட மட்டுமல்ல, பிரிட்டன் பெரியம்மா கூடவும் தொடர்புல இருந்த இவங்கதான் உலகத்தலைவி'ன்னு. ஆறுமுகசாமி ஆணையம் லிட்டில் மம்மிமீது குற்றச்சாட்டு ஷட்டில் காக் விளையாட, அப்போது ஆஃப் ஆனவர்தான்.

2022 - டாப் 25 பரபர...

அப்டியே ஷாக் ஆகிட்டோம்!

சென்ற ஆண்டு நடந்த அணில்களின் தாக்குதலில் இருந்து தப்பித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜூலை மாதம் மின் கட்டண உயர்வை அறிவித்தார். ஒட்டு மொத்த மக்களும் ஆத்திர அணில்களாக மாற, ‘மத்திய அரசின் அழுத்தத்தின் காரணமாகவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது’ என கமலாலயம் பக்கம் கண்டனத்தைத் திருப்பிவிட்டார். ‘உ.பி-ல மின்கட்டணம் கூட்டுனாக... ம.பி-ல மின்கட்டணம் கூட்டுனாக... அவ்ளோ ஏன், கேரளாவுலகூட மின்கட்டணம் கூட்டுனாக... கழக ஆட்சில மட்டும்தான் கம்மி' என தி.மு.க ஐ.டி விங் சமூக வலைதளங்களில் கரகாட்டம் ஆடியும் ‘ஒரு பயனும் இல்லை.' மின் கட்டண உயர்வு பிரச்னையில் இருந்து மீண்டு வருவதற்குள், ‘மின் கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு அவசியம்' என்று குனியவைத்துக் குத்த, குமுறினார்கள் தமிழ்க்குடிமகன்கள். இதற்கிடையில் வேலை வாங்கித் தருவதாய் மோசடி செய்ததாக சென்ற ஆட்சியில் தொடரப்பட்ட வழக்குவேறு கரூர்க்காரரிடம் கண்ணாமூச்சி ஆடுகிறது. எல்லாக் கவலைகளையும் மறக்க, அவ்வப்போது அண்ணாமலையிடம் ஒரண்டை இழுத்து ரிலாக்ஸ் ஆகிறார் அணில் வாரிய அமைச்சர்.

2022 - டாப் 25 பரபர...

கதை சொல்லப்போறேன்!

எல்லாருக்கும் சொந்த வீடு கட்டித்தரணும்னு உயர்ந்த எண்ணம் கொண்ட எளிய தமிழ்ப்பிள்ளை தங்குறதுக்கு வாடகை வீடுகூட இல்லைன்னு ஆதங்கப்பட்டவருக்கு லட்சக்கணக்கான வாடகைல நீலாங்கரைல வீடு கிடைச்சது முப்பாட்டன் புண்ணியம். வழக்கமா கதைகளா சொல்றவரு வெளிநாட்டுக் கார், கொடைக்கானல் எஸ்டேட் எல்லாம் எப்படிக் கிடைச்சதுன்னு கதை கதையா சொல்ல, தொல்குடித் தமிழர்கள் எல்லாம் சிலையா நின்னாங்க. கதை மட்டும் இல்லைங்க, பாடவும் வரும்னு ‘ஹே... அலெக்ஸா, அந்த மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே பாடு’ன்னு அண்ணன் பாடுன பாட்டுல அலெக்ஸாவே அரண்டு ஓடியது. உதயநிதியை எதிர்த்து நிற்பேன்னு சவுக்கு சங்கர் சொல்ல, அப்படின்னா தம்பியை எதிர்த்து என் கட்சி ஆள அந்தத் தொகுதில நிறுத்தமாட்டேன்னு அண்ணன் சொல்ல ‘ஒரு தொகுதி கட்டுத்தொகை தப்பிச்சது ஒறவே' என்று ஆனந்தக்கண்ணீர் வடித்தார்கள் நா.த.க தம்பிகள். ‘டெல்லி வானூர்தி நிலையத்தில் ராணுவ வீரர்கள் என்னை முற்றுகையிட்டு சல்யூட் அடித்தார்கள்' என்று அண்ணன் அவிழ்த்துவிட்டது இந்த ஆண்டின் எவர்கிரீன் கதைநேரம்!

2022 - டாப் 25 பரபர...

எங்களுக்கு இன்னொரு பேர் இருக்கு!

சாமியார்கள் அரசியலில் தலையை நுழைத்து டேமேஜ் பண்ணுவது தமிழகத்திலும் அவ்வப்போது எட்டிப்பார்த்தது. தருமபுர ஆதீனம் பட்டினப்பிரவேச பல்லக்கை ரத்து செய்தால், ‘மினிஸ்டர்ல இருந்து எம்.எல்.ஏ வரைக்கும் ஒருத்தன் ஊரில நடமாட முடியாது' என்று நாக்கை மடித்து பல்லைக்கடித்தார் மயிலாடுதுறை ஜீயர். இந்த அரட்டல் உருட்டலில் சோடாபாட்டில் வில்லிபுத்தூர் ஜீயரே ‘ஐயோ பயந்துவருது' என்றார். ‘இவங்க காவியுடை அணிந்த துறவியா, காலித்தனம் பண்ணும் ரவுடியா?' என்று வினாத்தொடுத்தார்கள் விபூதி அணிந்த பக்தர்கள். இன்னொருபுறம் புது மதுரை ஆதீனம் பண்ணுனதெல்லாம் அக்குறும்பு. பழைய மதுரை ஆதீனமும் அவ்வப்போது அன்லிமிட்டெட் காமெடிகளை அள்ளித்தெளித்தாலும் திராவிடக் கட்சிகளுடன் ‘முஸ்தபா முஸ்தபா' பாடுவாரே தவிர தாமரைக்கட்சிப் பக்கம் தலைவைத்துக்கூடப் படுத்ததில்லை. நாகூர் ஹனிபா பாடலைப் பாடி மதச்சார்பின்மை பேணுபவர். ஆனால் புது மதுரை ஆதீனமோ தாமரை பார்ட்டிகளுடன் சினேகம் வளர்த்து சின்னாபின்னமானார். ஆனால் அவரே ‘‘இந்து என்ற சொல்லே கிடையாது. அதனால் ‘இந்து' என்ற சொல்லை தமிழர்கள் பயன்படுத்தக் கூடாது. சைவம், வைணவம் என்றுதான் பயன்படுத்த வேண்டும்’’ என்று பொக்ரான் குண்டைப் பொசுக்கென்று போட, ‘நீங்க நல்லவரா கெட்டவரா?' என்று நாயகன் கேள்வி கேட்டு, பதறி சிதறினார்கள் பா.ஜ.க-வினர்.

2022 - டாப் 25 பரபர...

மொத்தக் குடும்பமும் டேமேஜ்!

‘ஐயா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்; அம்மா மரணத்தில் சந்தேகம்' என்று ஓ.பி.எஸ் ஸ்டார்ட் செய்த தர்மயுத்தத்தின் விளைவாக அமைக்கப்பட்டது ஆறுமுகசாமி ஆணையம். ஆனால் ஒவ்வொருமுறையும் ஆணையத்தின் ஆயுள் நீட்டிக்கப்பட, ‘அதிகம் வாய்தா வாங்கிய நீதிபதி இவர்தான்' என்று சாதனை படைத்தார். ‘ஆமையை மிஞ்சும் வேகத்தில் செயல்படுவதால் ஆறுமுகசாமி ஆமையம் என்று அழைக்கப்படும்' என்று பொன்மொழியும் உருவானது. நான்கு ஆண்டுகளைக் கடந்தும் சம்பவத்தில் முக்கிய சாட்சிகளான சசிகலா, பன்னீர், விஜயபாஸ்கர் ஆஜர் ஆகாமல் இருந்தார்கள். ஒருவழியாக அஃபிடவிட் அனுப்பிய சசிகலா, ‘ஐயா தெரியாதுங்கய்யா' என்றே அனேகக் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். தர்மயுத்தம் கொமாரு பன்னீரோ ‘சசிகலா மீது எனக்கு சந்தேகமில்லை. சிலர் சந்தேகப்பட்டார்களே என்பதற்காக யாம் நடத்திய திருவிளையாடல்தான் அது' என்று ஞானப்பழத்தைப் பிழிய, ஒட்டுமொத்தத் தமிழகமும் டென்ஷன் ஆனது. இரண்டு முதல்வர்களைப் பார்த்து ஐந்தாண்டுகளை வெற்றிகரமாகக் கடந்து ஆறுமுகசாமி தாக்கல் செய்த அறிக்கை, சசிகலா மீது வீசியது அத்தனையும் அணுகுண்டு. ‘ஜெயலலிதாவின் மரணத்தில் சசிகலா, விஜயபாஸ்கர், ஜெ.ராதாகிருஷ்ணனை விசாரிக்கணும், சசிகலா - ஜெயலலிதா உறவில் கிழிஞ்சது தோரணம்' என்று குற்றச்சாட்டுகளை அடுக்கியது மட்டுமல்ல, ‘அறிவிக்கப்பட்ட தேதிக்கு முதல்நாளே ஜெயலலிதா இறந்துவிட்டார்' என்று சர்ச்சைகளுக்கு சரவெடி கொளுத்தினார்.

2022 - டாப் 25 பரபர...

நடுவுல நிறைய பக்கத்த காணோம்!

‘எல்லாக் கோட்டையும் அழிங்க, முதல்ல இருந்து புரோட்டா சாப்பிடுவோம்' என்றது தி.மு.க அரசு. ஆம்பூரில் பிரியாணித் திருவிழா என்று அறிவித்தவுடன் ‘பீப் பிரியாணியும் போடணும்' என்று போர்க்கொடி எழுந்ததும், ‘கனத்தமழை காரணமாக பிரியாணித் திருவிழா ரத்து' என்று அண்டா மூடியை அவசர அவசரமாக மூடினார்கள். மயிலாடுதுறையில் பட்டணப்பிரவேசப் பல்லக்குக்குத் தடா போட்டார்கள். ஆனால் எதிர்ப்பு வலுத்ததும் ‘எதில வேணா ஏறுங்க, எங்களுக்கு என்ன’ என்றார்கள். இப்படி ‘அறிவிப்போம்... வாபஸ் வாங்குவோம்... ரிப்பீட்டு’ பல முறை நடந்தது பரிதாபம்தான்.

இன்னொருபுறம் ‘ஸ்டாலின் அண்ணாச்சி, சொன்ன வாக்குறுதி என்னாச்சு?' என்று கேட்கும் நிலையில் அத்தனை வாக்குறுதிகளும் சைலன்ட் மோடில் சலனமில்லாமல் கிடந்தன. ‘பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைப்போம்’ எனத் தேர்தல் வாக்குறுதி அளித்தது பற்றி நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடம் கேட்டதற்கு, ‘வாக்குறுதி கொடுத்தோம். என்னைக்குன்னு சொன்னோமா?’ என்று எகிறினார். சிலிண்டர் மானியம் கடைசிவரை வரவில்லை. மாசாமாசம் மின்கட்டணம் ரீடிங் எடுப்போம் என்றார்கள், எடுத்தது என்னவோ மின்கட்டணத்தை உயர்த்தி, நம் பர்ஸிலும் பாக்கெட்டிலும் இருந்த பணத்தை மட்டும்தான். இன்னொருபுறம் சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வு, நெய் விலை உயர்வு என்று ஸ்கோரை ஏத்தி பேட்டாலயே நம் முகரையைப் பேர்த்தார்கள். ‘இதெல்லாம் விடியல் ஆட்சி லிஸ்ட்டிலேயே இல்லையே' என்று வியர்த்து விறுவிறுத்துப்போனோம்.

2022 - டாப் 25 பரபர...

அவங்களுக்கும் பசிக்கும்ல!

‘மல்லிப்பூ இட்லியெல்லாம் வேகுதே; ரெய்டு டீம் வந்து வந்து போகுதே' என்பதுதான் இந்த ஆண்டில் அ.தி.மு.க ரத்தங்களின் விருப்பப் பாடல். எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு என்றவுடன் ‘பழிவாங்கும் நடவடிக்கையை அனுமதிக்க மாட்டோம்' என்று கண்கள் சிவந்து, கைகளை முறுக்கி வந்தார்கள் அ.தி.மு.க தொண்டர்கள். வந்தவர்களுக்கு வாசலில் நடந்தது பெரும் விருந்து. இட்லி, சாம்பார், வெண்பொங்கல், ரோஸ்மில்க் என்று பதார்த்தங்களைப் பரிமாற, போராட்டத்தை மறந்து பொங்கலில் முந்திரிப்பருப்பு தேட ஆரம்பித்தார்கள் ர.ரக்கள். வேலுமணி வீட்டில் விருந்தை முடித்துவிட்டு, ‘அடுத்த ரெய்டு எப்போ?' என்று ஆவலுடன் காத்திருந்தார்கள். தங்கமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் வியர்க்க விறுவிறுக்க ரெய்டு நடந்தாலும் விருந்து களைகட்டவில்லை. ‘ரெய்டு சமையல் சாதம், ரோஸ்மில்க் பிரமாதம்' என்று பாட நினைத்தவர்களுக்குப் பச்சைத்தண்ணிகூடப் பரிமாறாதது பரிதாபம்தான். ‘வந்தாங்க... ரெய்டு பண்ணுனாங்க...போனாங்க... ரிப்பீட்டு. முடியலை தலைவரே' என்று முன்னாள் அமைச்சர்கள் கதறினாலும், அது கைதுவரை போகாத கன்னித்தீவு ரகசியம் என்னவென்றுதான் தெரியவில்லை.

2022 - டாப் 25 பரபர...

உள்ளாட்சி... புண்ணாச்சு!

சென்றமுறை ஒத்த ஓட்டு வாங்கி ஒலக சாதனை புரிந்த பா.ஜ.க. இந்தமுறை ‘தனித்துக் களம் காண்கிறோம்' என்று தைரியம் காட்டி இறங்கினார்கள். வாங்கினது என்னவோ வெண்கலக் கிண்ணிதான். ஆனா சாம்பார் வாளியில் முக்கியெடுத்து, ‘மஞ்சளா இருக்கு பாருங்க, நாங்க தங்கப்பதக்கம் வாங்கிட்டோம்' என்று தகிடுதத்தம் செய்தார் அண்ணாமலை. ‘உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதில் நாங்கதான் மூணாவது பெரிய கட்சி' என்று மீசை வரைந்து ஆசையாய் முறுக்க, ‘ஐயா, நீங்க போட்டியிட்டதே காலுக்கு அரைக்கால் வீசம். அதிகமாப் போட்டியிட்டு அதிகமா ஜெயிச்ச காங்கிரஸ் கட்சிதான் மூணாவது பெரிய கட்சி. போங்க பாஸ் போங்காட்டம் ஆடாதீங்க' என்று புள்ளிவிவரத்தை மூஞ்சி மீது அள்ளித்தெளித்தார்கள். இன்னொரு தனித்து நின்ற கட்சி பா.ம.க. ஆனால் மக்களும் அவர்களிடமிருந்து தனித்து நிற்க, மாம்பழம் நசுங்கிப்போனது. ‘கள்ள ஓட்டு போடுறாங்க’ என்று தி.மு.க-காரர் சட்டையைக் கழற்றி விலங்கை மாட்டிக்கொண்டார் வில்லங்க ஜெயக்குமார். அதற்குப்பிறகு அ.தி.மு.க-வே ஆளுக்குப் பாதி என்று பிச்சுக்கிட்டதால் உள்ளாட்சி இடைத்தேர்தல்களில் பன்னீரும் பழனியும் வேட்பாளர்களை நிறுத்தாமலே அப்பீட் ஆனார்கள்.

2022 - டாப் 25 பரபர...

தலைவலி... புரட்சித் தலைவலி!

ரோல்ஸ் ராய்ஸ் காருக்காக இறக்குமதி வரி, நுழைவு வரி, ஸ்டார்ட் செய்ய வரி, கியர் போட வரி எனப் போடப்பட்ட பில் தொகை கார் விலையைவிட எக்குத்தப்பாக எகிற, வரி விலக்கு கேட்டு நீதிமன்றப் படியேறினார் விஜய். அபராதமாக ஒரு லட்சத்தை விதித்ததோடு, விசாரணையின் க்ளைமாக்ஸில், ‘ஒரு சினிமா நடிகர் என்பவர்...' என நாலு பக்கத்துக்கு சமூகக் கருத்தை எழுதி அதை விஜய் தரப்புக்கே வாசித்துக் காட்டினார் நீதிபதி. ‘விஜய் பட டயலாக்கைவிட இது நல்லாருக்கே' என்று ஊரே பாராட்ட, நொந்துபோனார் விஜய். கார்க்கண்ணாடியில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருக்க, அந்த வீடியோ வைரலாகி போலீஸ் 500 ரூபாய் அபராதம் விதித்தது. இன்னொருபுறம் கடனைத் திருப்பித்தராமல் ‘வீரமே வாகை சூடும்' படத்தை வெளியிடக்கூடாது என லைகா நிறுவனம் நீதிமன்றம் சென்றது. ‘அப்டி விஷால் ஒரு படம் நடிக்கிறாரா?' என விஷால் ரசிகர்கள் ஷாக் ஆக, ‘இன்னும் விஷால் படமெல்லாம் நடிச்சிட்டிருக்காரா?' என மக்களும் ஷாக் ஆனார்கள். ஒரு பேட்டியில் ‘தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா எந்த அரசு பெஸ்ட்?' என்று கேட்க, ‘மோடி' என்று விஷால் பதில் அளிக்க, ‘ஐ.க்யூவிலும் நம்மளை மாதிரியே இருக்காரு’ என்று அண்ணாமலை வியந்து வியந்து உள்ளுக்குள் பாராட்டியிருப்பார்.