தினசரி நாம் செய்யும் செலவுகளைக் குறித்து வைக்கும் பழக்கம் இன்றைக்கு நம்மில் பலருக்கும் கிடையாது. இதனால் நாம் எவ்வளவுதான் சம்பாதித்தாலும், மாதக் கடைசியில் சம்பளம் முழுவதும் எப்படிச் செலவானது, எதற்காக, எவ்வளவு செலவு செய்தோம் என்று தெரியாமல் முழிக்கிற நிலையே பலருக்கும் இருக்கிறது.
இந்தப் பிரச்னைகளிலிருந்து தப்பிக்க நமக்கு உதவுவதுதான் ஃபைனான்ஷியல் ஆப்ளிகேஷன்கள். இந்த ஆப்களை நாம் பயன்படுத்தத் தொடங்கினால் போதும், செலவு கட்டுக்குள் வரும். நம் ஃபைனான்ஷியல் நடவடிக்கைகளுக்கு உதவும் எட்டு ஃபைனான்ஷியல் ஆப்களை இனி பார்ப்போம்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
1. எக்ஸ்பென்ஸ் மேனேஜர் (Expense Manager)
நம், செலவுகள் கையைக் கடிக்காதபடி பார்த்துக்கொள்ளத்தான் பலருக்கும் ஆலோசனை தேவை. எக்ஸ்பென்ஸ் மேனேஜர் என்ற செயலி இதை மிகவும் சிறப்பாகக் கையாள்கிறது. தினசரி, வாரம், மாதம், ஆண்டு என நம் பட்ஜெட்டை நமக்கு ஏற்றவாறு பட்டியல் போட்டுப் பார்க்க இந்த ஆப்ஸ் பேருதவியாக இருக்கும். வரவு செலவுகளை ட்ராக் செய்தல், வரித் தொகையை ட்ராக் செய்தல், கிரெடிட் கார்டு, வங்கி ஸ்டேட்மென்ட் போன்றவற்றை இந்த ஒரே செயலியின் கீழ் கொண்டு வர முடியும். அதேபோல், இதில் வரும் ரிப்போர்ட்டுகளை csv, html, pdf, excel என நமக்குத் தேவைப்படும் ஃபார்மெட்டில் மாற்றியும் கொள்ளலாம். மொபைலை மாற்றும் போதும் அல்லது வேறு சில பிரச்னைகளின் போதும் இதில் இருக்கும் விவரங்களை கூகுள் டிரைவ், மெமரி கார்டு போன்றவற்றில் தாமாகவே பேக்-அப் செய்யும் வசதியையும் இந்தச் செயலி தருகிறது.

50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்தச் செயலியை டவுன்லோடு செய்திருக்கிறார்கள். இந்தச் செயலி இணைய இணைப்பு இல்லாத போதும், வேலை செய்யும் என்பது கூடுதல் ப்ளஸ்.
ஆப்பை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.expensemanager&hl=en_IN
2. மின்ட் (Mint: Budget,Bills,&Finance Tracker)

வரவு செலவுக் கணக்கைப் பராமரிக்க மிகவும் பயன்படும் செயலி இது. இதிலிருக்கும் அம்சங்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் எளிமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உங்கள் வங்கிக் கணக்கு, கடன் அட்டைக் கணக்கு, கடன் கணக்குகள் அனைத்தையும் இந்தச் செயலியில் இணைத்துக்கொள்ளலாம். இதன் சிறப்பம்சமே, இதன் பட்ஜெட்டிங்தான். உங்கள் செலவுகளுக்கேற்ப பிரத்யேக பட்ஜெட்டை உருவாக்கித் தரும். உங்கள் கணக்குவழக்கு குறித்த விவரங்களை இந்தச் செயலியில் சரியாகப் பதிவு செய்துவிட்டால், நீங்கள் எந்தெந்தச் செலவுகளைக் குறைத்து, பணத்தை மிச்சப்படுத்தலாம் என்பதை எடுத்துச் சொல்லும். ஒரு கோடி பேருக்கு மேல் இந்தச் செயலியை டவுன்லோடு செய்திருக்கிறார்கள்.
டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.mint&hl=en
3. டாக்ஸ் கால்குலேட்டர் இந்தியா 2021-2022 (Tax Calculator India 2021-2022)

பலருக்கும் வருமான வரி என்றாலே வேப்பங்காய்தான். ஆனால், வருமான வரியை வருட ஆரம்பம் முதலே எப்படியெல்லாம் திட்டமிடலாம் என்பதை அழகாக எடுத்துச் சொல்கிறது இந்த ஆப்ஸ். நமது சேமிப்புக் கணக்குத் தொடர்பான விவரங் களையும், பி.எஃப் தொகை பங்களிப்பு மற்ற முதலீடுகளின் பங்களிப்பு என அனைத்துக்கும் ஏற்ற வாறு கணக்கிடுகிறது இந்த ஆப்ஸ்.
மிக முக்கியமாக, புதிய வரிக் கணக்கீடு மற்றும் பழைய வரிக் கணக்கீடு ஆகிய இரண்டையும் இந்த ஆப்ளிகேஷன் மூலம் செய்துகொள்ள முடியும்; ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளவும் ஆப்ஷன் இருக்கிறது. கடந்த மே மாதமே வெளியான இந்த ஆப்ளிகேஷன் டவுன்லோடு ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. புதிய அப்டேட்களும் இலவசமாகவே கிடைக்கின்றன.
டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.quintetsolutions&hl=en
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS4. மை பட்ஜெட் புக் (My Budget Book)!

உங்கள் நிதித் திட்டமிடலுக்கு உதவும் ஆப்ஸ் இது. இதில் உங்களின் வருமானம் மற்றும் தினசரிச் செலவை பதிவு செய்தால், அடுத்துவரும் மாதத்தில் உங்கள் செலவு எப்படி இருக்கும், நீங்கள் இன்னும் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதை இந்த ஆப்ஸ் தானாகவே தந்துவிடும். இந்த ஆப்ஸைப் பயன்படுத்த இன்டர்நெட் வசதி தேவையில்லை.

இதில் நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கையும் இணைத்துக்கொள்ளலாம். உங்கள் வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் தினசரி செலவுகள் ஆகியவற்றை எக்ஸெல் படிவங்களாகத் தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் உள்ளது. கூகுள் ப்ளேஸ்டோரில் இதன் விலை: ரூ.310. இதுவரை இந்த ஆப்ளிகேஷனை 60 லட்சம் பேர் டவுன்லோடு செய்திருக்கிறார்கள்.
டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.onetwoapps.mh&hl=en
5. மணி லவ்வர் (Money Lover)
ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டில் உங்கள் செலவுகள் இருக்க வேண்டும் என விரும்பினால், இந்த ஆப்ஸ் உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். இந்த வாரத்துக்கு எனது பட்ஜெட் இதுதான் என நீங்கள் இதில் செட் செய்துகொள்ளலாம். பிறகு, நீங்கள் செலவு செய்யும் தொகையை, இதில் குறித்து வைத்துக்கொண்டே வந்தால், உங்கள் லிமிட்டைத் தாண்டியதும், இந்த ஆப்ஸ் உங்களை எச்சரிக்கும்.

நீங்கள் மாதம்தோறும் செலுத்த வேண்டிய பில் விவரங்களையும், இதில் ஒருமுறை குறித்து வைத்துக் கொண்டால் போதும். ஒவ்வொரு மாதமும், உங்களுக்குக் குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே அலர்ட் செய்திகளை அனுப்பும். இந்தச் செயலியில் கிளவுட் சிங்கிங் இருப்பதால், மொபைலில் நீங்கள் பதிவு செய்திருக்கும் விவரங்களை உங்கள் கணினியிலும் பார்க்கலாம். நமக்குத் தேவைப்படும் விவரங்களை சார்ட் போட்டு, விளக்கமாகவும் பார்க்கலாம். நாம் எதற்கு அதிகம் செலவு செய்கிறோம் என்பதைக் கண்டறிந்து, எந்தச் செலவுகளை நாம் குறைக்க முடியும் என்பதற்கு இந்தச் செயலி உறுதுணையாக இருக்கும். இதை 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் டவுன்லோடு செய்திருக்கிறார்கள்.
டவுன்லோட்டு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.bookmark.money&hl=en
6. ஃபைனான்ஷியல் கால்குலேட்டர் (Financial Calculator India)

சிலர் மூன்று, நான்கு இடங்களில் கடன் வாங்கியிருப்பார்கள். எவ்வளவு அசல் கட்டியிருக்கிறோம், எவ்வளவு தொகை கடன் பாக்கியுள்ளது, இ.எம்.ஐ தொகை இந்த மாதம் எவ்வளவு என்பதெல்லாம் தெரியாமல் குழம்பிக் கிடப்பார்கள். இந்த ஆப்ஸ் நமது முதலீடுகளிலிருந்து நமக்கு வர வேண்டிய தொகை மற்றும் நாம் வாங்கியுள்ள கடனுக்குச் செலுத்த வேண்டிய வட்டி ஆகியவற்றுக்கான தகவல்களை அளித்தால், அதுவே கணக்கிட்டுச் சொல்லிவிடுகிறது. இந்த ஆப்ஸ் கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது. இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்துள்ளனர். புதிய அப்டேட்களும் அடிக்கடி இலவசமாகவே கிடைக்கின்றன.
டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.rkayapps.financeindia&hl=en
7. ஒய்நாப் (YNAB)

பட்ஜெட்டுக்கு மட்டுமான பிரத்யேகச் செயலி இது. ‘மற்ற நிதி சார்ந்த சேவைகள் எதுவும் எனக்கு வேண்டாம்; பணத்தை மிச்சப்படுத்துவதற்கான வழி மட்டும் கிடைத்தால் போதும்’ என்பவர்கள் இந்தச் செயலியை தாராளமாகத் தேர்வு செய்யலாம்.இந்தச் செயலியில் முதலில் நீங்கள் எந்தெந்த வழிகளில் பணத்தைச் செலவழிக்கிறீர்கள் என்பதை வகைப்படுத்த வேண்டும். பின்னர் ஒவ்வொரு வகையான செலவுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்க வேண்டும். அடுத்து, நீங்கள் எங்கெல்லாம் வரம்பை மீறிச் செலவு செய்கிறீர்களோ, அங்கெல்லாம் இந்தச் செயலி உங்களை எச்சரிக்கும். இதனால் உங்களால் ஒவ்வொரு மாதமும் கணிசமான தொகையை மிச்சப்படுத்த முடியும். இந்த ஆப்ஸ் முதல் 30 நாள்களுக்கு இலவசம். அதன்பிறகு பணம் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்ய வேண்டும். இந்த செயலியை இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் டவுன்லோடு செய்திருக்கிறார்கள்.
டவுன்லோடு செய்ய: https://www.youneedabudget.com/
8. பர்சனல் கேப்பிடல் (Personal Capital)

நிதி நிர்வாகத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்தச் செயலியைத் தாராளமாகத் தேர்வு செய்யலாம். இந்தச் செயலியின் சிறப்பம்சம், இது தானாகவே உங்கள் வரவு செலவுகளைக் கண்காணிக்கும். உங்கள் செலவுக் கணக்குகளைத் தனியாகப் பிரித்து, எதற்கெல்லாம் நீங்கள் அதிகம் செலவு செய்கிறீர்கள் என்பதைத் தனியாகக் காட்டும். உங்கள் முதலீடுகள், நிகர மதிப்பு மற்றும் பணப்புழக்கம் என எல்லாவற்றுக்கும் தனித்தனியே செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த ஒரே செயலியின் மூலம் மேற்சொன்ன அனைத்தையும் கண்காணித்துக்கொள்ளலாம். சம்பளதாரர்கள் தவிர, சுயதொழில் செய்பவர்களுக்கும் இந்தச் செயலி பயனுள்ளதாக இருக்கும். இலவசமாகப் பயன்படுத்தும் செயலி இது. இந்தச் செயலியை இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் டவுன்லோடு செய்திருக்கிறார்கள்.
டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.personalcapital.pcapandroid&hl=en