Published:Updated:

டாப் 10 யூடியூபர்ஸ்

குட் மித்திகல் மார்னிங்
பிரீமியம் ஸ்டோரி
குட் மித்திகல் மார்னிங்

சோஷியல் மீடியா

டாப் 10 யூடியூபர்ஸ்

சோஷியல் மீடியா

Published:Updated:
குட் மித்திகல் மார்னிங்
பிரீமியம் ஸ்டோரி
குட் மித்திகல் மார்னிங்

முன்பெல்லாம் பால்யகால நண்பர்கள் திடீரென போன் செய்தால், ‘என்னடா/என்னடி… கல்யாணமா?’ என்பதுதான் இளைஞர்களின் கேள்வியாக இருந்தது. இப்போதெல்லாம் போன் செய்பவர்கள் சொல்வது, ‘யூடியூப் சேனல் தொடங்கியிருக்கேன். மறக்காம சப்ஸ்க்ரைப் செஞ்சிடு’ என்பதுதான். வீட்டுக்கொரு மரம் வளர்ப்பது என்பது இன்று யூடியூப் சேனலாக மாறியிருக்கிறது. உலகமே உற்று நோக்கும் இந்த ஏரியாவில், டாப் 10-ல் வருவதெல்லாம் லேசுப்பட்ட காரியமா? அந்தப் பத்துப் பேரைத்தான் பார்க்கப்போகிறோம். இந்தப் பட்டியலானது, யூடியூபர்கள் தங்கள் சேனலில் செய்த விளம்பரங்கள் மற்றும் தங்களின் மெர்சன்டைஸ் மூலம் பெற்ற வருமானத்தையும் கணக்கில்கொண்டு தயார் செய்யப்பட்டது. யூடியூபில் ஹிட் அடிக்க வயது முக்கியமல்ல... தனித்திறமை இருந்தால்போதும். அதை உணர்த்துகிறது, இந்தப் பட்டியல்.

டாப் 10 யூடியூபர்ஸ்

#1 ரியான்'ஸ் வேர்ல்டு-ரியான் காஜி (Ryan Kaji) - 10 வயது கோடீஸ்வரன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டாப் 10 லிஸ்ட்டில் முதல் இடத்தில் இருக்கும் ரியான் காஜி, சமீபத்தில்தான் தனது 10 வயதை எட்டினார் (ஏஜ் இஸ் ஜஸ்ட் எ நம்பர் பாஸ்!). தனக்கு நான்கு வயது இருக்கும்போது, தனது வயதுள்ள குழந்தைகள் சிலர், குழந்தைகளுக்கான விதவிதமான பொம்மைகளை வாங்கி அவற்றை ரிவ்யூ செய்து வீடியோவாக யூடியூபில் வெளியிட்டதைத் தன் அம்மாவுடன் பார்த்துள்ளார். அப்போது அவரிடம். “என்ன மாதிரி இருக்கற இவங்க எல்லாம் யூடியூப்ல வர்றாங்களே… நான் ஏன் வரலம்மா?” என்று கேட்டது, அந்தத் தாயை ஆழ்ந்த சிந்தனைக்கு உள்ளாக்கியது. வேதியியல் ஆசிரியரான தாய், தன் மகனின் ஆசையை நிறைவேற்ற, தனது வேலையைத் துறந்தார். முழுநேர யூடியூபராகத் தன் மகனை மாற்ற ஆயத்தமானார்.

தினம் ஒன்றாக பொம்மை ரிவ்யூ வீடியோக்களையும், அறிவியல் சார்ந்த DIY வீடியோக்களையும், ஸ்டோரி டெல்லிங் வீடியோக்களையும் தனது மழலைப் பேச்சால் சுட்டித்தனமாகச் செய்துகொண்டிருக்கிறார் ரியான். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த அமெரிக்கக் குழந்தை வெளியிட்ட ஒரு வீடியோ, 2 பில்லியன் வியூஸைத் தாண்டி ஹிட் அடித்துக்கொண்டிருக்கிறது. மேலும், PocketWatch மற்றும் WildWorks ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, ‘Tag with Ryan’ என்னும் கேமிங் ஆப் ஒன்று தயாரித்து வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு இந்த சுட்டிக் குழந்தை சம்பாதித்தது, 29.5 மில்லியன் டாலர் (ரூ. 217 கோடி). அதிக வருமானம் ஈட்டிய லிஸ்டிலும் டிஜிட்டல் உலகிலும் முன்னணியில் உள்ளது. சியர்ஸ் ரியான்!

டாப் 10 யூடியூபர்ஸ்

2-மிஸ்டர் பீஸ்ட் MrBeast (Jimmy Donaldson) - இவர் அமெரிக்காவின் நம்பர் 1

2012-ம் ஆண்டில் டொனால்ட்சன் என்ற 13 வயது அமெரிக்கச் சிறுவன், யூடியூபில் தானும் ஏதாவது புதுமையாகச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறான். `ஹிட் அடித்துக்கொண்டிருக்கும் யூடியூபர்களின் சொத்து எவ்வளவு தெரியுமா?’ என்பது போன்ற சில வீடியோக்களை அந்தச் சிறுவன் தயாரிக்கிறான். `இன்னும் சில ஆண்டுகளில் தன்னைப் பற்றியும் இதுபோல் வீடியோக்கள் வரவேண்டும்' என அன்று நினைத்தான். அந்த அளவுக்கு ஏதாவது சாதிக்க வேண்டும் என்று உறுதியாகவும் இருந்தான் அந்தச் சிறுவன். அதற்கடுத்து இவன் சென்றது, ‘பீஸ்ட் மோடு’ வேகத்தில்தான்.

தற்போது, அமெரிக்காவில் தனிநபர் நடத்தும் யூடியூப் சேனலில் அதிக சப்ஸ்க்ரைபர்களைக் கொண்டவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். 67 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களைப் பெற்றும், 12 பில்லியன் வியூஸைப் பெற்றும் அசத்தியிருக்கிறார் ஜிம்மி. கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திக்கொண்டு, `முழுநேர யூடியூபராகப் போகிறேன்' என்று இவர் சொன்னதும், அவரி தாய் ரியல் பீஸ்ட்டாக மாறி, ‘‘டொனால்ட்… உனக்கு அது செட் ஆகாது; படிப்பில் கவனம் செலுத்து” என்று கூறினார். ஆனால், அதை ஏற்க மறுத்த டொனால்ட், பின்னர் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

சாதிக்க வேண்டும். அதைத் தவிர அவர் மனதில் அப்போது ஏதும் இல்லை. ‘நீ தோத்துடுவன்னு யாராவது சொன்னா, நீ நம்ப வேண்டியது அவங்கள இல்ல... உன்னை!’ என்ற வசனத்துக்குச் சிறந்த உதாரணமாக மாறினார். யூடியூபில் ஜொலிக்கத் தொடங்கியதும், தன் நண்பர்களைத் தனது சேனலில் பணிக்குச் சேர்த்துக்கொண்டார். தற்போது ‘மிஸ்டர் பீஸ்ட்’ (MrBeast) சேனலோடு வேறு ஐந்து சேனல்களையும் நடத்திவருகிறார் இந்த பீஸ்ட். சேலஞ்ச் வீடியோக்கள்தான் இவரது கன்டென்ட். பல விநோதமான சேலஞ்சுகளைச் செய்து அசத்துகிறார். உதாரணமாக, இவரது தொடக்கக்கால வீடியோவைச் சொல்லலாம். 1 முதல் 1 லட்சம் வரையுள்ள எண்களை இடைவெளி விடாமல் சொல்லி வீடியோ செய்தார். இதைச் செய்ய அவருக்கு 40 மணி நேரம் ஆனது. இந்த வீடியோ அவரை டிஜிட்டல் உலகில் வெளிச்சம் போட்டுக் காட்டியது. இத்துடன் கேமிங் வீடியோக்களையும் உருவாக்கினார். தற்போது வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளார். கூடவே, சமூக சேவைகளிலும் ஈடுபட்டுவருகிறார். கடந்த ஆண்டில் இவர் 24 மில்லியன் டாலர் ஈட்டியுள்ளார். இந்திய மதிப்பில் 177 கோடி ரூபாய்!

டாப் 10 யூடியூபர்ஸ்

#3 டியூட் பெர்ஃபெக்ட் (Dude Perfect) - இவர்கள் தந்திரர்கள்!

ஐந்து நண்பர்கள்... கல்லூரி காலத்தின் ரூம்மேட்ஸ். இவர்கள் ஒன்றுகூடினால் எப்போதும் ‘ஃபன் பண்றோம்’ மோடுதான். `ஏலே ஏலே தோஸ்துடா’ என வெறும் பாட்டோடு நிற்காமல், ஐவரும் இணைந்து ஒரு யூடியூப் சேனலைத் தொடங்கினர். தங்களது பலம் என நம்பிய காமெடியையும் விளையாட்டையும் கையில் எடுத்தனர். ‘ஸ்டீரியோடைப்ஸ்’ (Stereotypes) என்ற பெயர்களில் இவர்கள் பதிவிடும் காமெடி வீடியோக்கள் யூடியூபின் ஹிட் சீரிஸ்களில் ஒன்று.

ஆனால், இவர்கள் உலக அளவில் பிரபலமாக இவர்களது ட்ரிக் ஷாட்ஸ் (Trick Shots) வீடியோக்கள்தான் காரணம். பேஸ்கெட் பால் ட்ரிக்ஸ் (Basket ball Tricks) வீடியோக்களில் கூடைப்பந்தை வைத்து இவர்கள் காட்டிய வித்தைகள் அனைத்தும் மெகா ஹிட். அதுமட்டுமல்லாமல் கின்னஸ் சாதனையும் செய்துள்ளனர். இதுவரை 15 கின்னஸ் சாதனைகளை இவர்கள் நிகழ்த்தியுள்ளனர். யூடியூபில் ஹிட் அடித்த ஸ்போர்ட்ஸ் வீடியோ, இவர்களுக்குப் பெரிய அளவில் ஸ்பான்சர்ஷிப்பைப் பெற்றுக்கொடுத்தது.

இவர்களின் ட்ரிக் ஷாட்ஸ் வீடியோக்களை சந்தேகித்து பலரும் கேள்விகளை எழுப்பினர். ஆனால், அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில், இவர்கள் ஏன் யூடியூப் உலகின் உச்சத்தில் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. ஐந்து பேரில் ஒருவரான கோடி ஜோன்ஸ் கூறியது இதுதான். “நாங்கள் செய்யும் ட்ரிக் வீடியோ போலி என்று சிலர் சொல்வது எங்களுக்கு நல்லதுதான். ஏனென்றால், அசாத்தியமான ஒரு விஷயத்தை நாங்கள் செய்துகொண்டு இருக்கிறோம் என்பதை அவர்களின் சந்தேகங்கள் எங்களுக்கு எடுத்துச் சொல்கின்றன. அதுமட்டுமல்ல, இந்தச் சந்தேகங்கள்தான் எங்களுக்குக் கூடுதல் விளம்பரத்தைத் தருகின்றன; யூடியுபில் ஹிட் அடிக்க உதவுகின்றன” என்கிறார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனாத் தொற்று பரவத் தொடங்கியபோது, தங்கள் சேனலில் ‘க்வாரன்ட்டீன் க்ளாஸிக்ஸ்’ (Quarantine Classics) என்ற சீரிஸைத் தொடங்கினர். அதில் பெற்ற வருமானம் 1.1 கோடி ரூபாயை ரெட் க்ராஸ் அமைப்புக்கும், ‘ஃபீடிங் அமெரிக்கா’ (Feeding America) என்ற அமைப்புக்கும் வழங்கினர். இவர்கள் கடந்த ஆண்டில் பெற்ற வருமானம் 23 மில்லியன் டாலர் (170 கோடி ரூபாய்). நீங்க உண்மையாவே பெர்ஃபெக்ட் டியூட்.

டாப் 10 யூடியூபர்ஸ்

#4 ரெட் அண்டு லிங்க் (Rhett and Link) - பேசினால் கோடிகள் கொட்டும்!

‘டீக்கடை ராஜா நாங்க; நாளைய இந்தியாதாங்க’ என்று வரும் பாட்டு வரிகளுக்குப் பொருத்தமான ஆட்கள் இவர்கள்தான். இரண்டு பேர். சிறுவயதிலிருந்து நண்பர்கள். நல்ல காமெடி டைமிங்குடன் பேசி கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் திறமை பெற்றவர்கள். இன்ஜினீயரிங் முடித்த பிறகு, 2012-ம் ஆண்டில் யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி ‘குட் மித்திகல் மார்னிங்’ (Good Mythical Morning) என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றைத் தொடங்கினர். இத்தனை வருடம் டைம்பாஸ் செய்யப் பேசியதை, வீடியோவாக்கி யூடியூபில் பேசினர். ஆனால், இத்தனை நாள்களாய் வெட்டியாய்ப் பேசியதற்கு இப்போது அவர்கள் சம்பளமும் பெற்றனர்.

‘ஒர்க் ஆன் யுவர் ஸ்ட்ரென்த்’ என்பதற்கு இவர்கள்தான் சிறந்த எடுத்துக்காட்டு. இதோடு நின்றுவிடவில்லை இவர்களது பயணம். SMOSH என்ற ஸ்கெட்ச் காமெடி வீடியோக்கள் செய்யும் யூடியூப் சேனலை வாங்கி, 100 பேருக்கு வேலையும் கொடுத்தனர். மேலும் விளம்பரங்கள் மூலமாகவும் நல்ல வருமானத்தைப் பெற்றனர். இதன்மூலம் கடந்த ஆண்டு இவர்கள் ஈட்டிய தொகை 20 மில்லியன் டாலர் (147 கோடி ரூபாய்). நம்ம ஊர் வி.ஐ.பி-க்களே… இவங்கள கொஞ்சம் பாத்து வெச்சுக்கோங்க!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
டாப் 10 யூடியூபர்ஸ்

#5 மார்க்கிப்லையர் (Markiplier- Mark Fischbach) - ஸ்மார்ட் சர்வைவர்!

இளைஞர்களைக் கவரும் வகையில் கேம்ஸ் டீகோடிங் வீடியோக்கள், லைவ் கேமிங், ஸ்கெட்ச்சிங் வீடியோக்களில் மார்க் ஃபிஷ்பேக் கில்லாடியாகவே இருக்கிறார். ஆனால், சர்வைவல் ஹாரர் கேம்ஸ் வீடியோக்கள்தான் இவரை கேமர்களுக்கு மத்தியில் மிகப் பிரபலமான நபராக மாற்றியது. இதன்மூலம் 16 பில்லியனுக்கும் மேலான வியூஸும், 29 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களையும் தனது சேனலில் பெற்றுள்ளார்.

யூடியூப் மட்டுமல்லாமல் தன் நண்பருடன் ஆடைகள் விற்பனை கம்பெனியையும் நடத்திவருகிறார். இவர் அதே நண்பருடன் இணைந்து ‘யுனஸ் என்னஸ்’ (Unus annus) என்ற மற்றொரு யூடியூப் சேனலை 2019-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தொடங்கினார். `இந்தச் சேனலை சரியாக ஒரு வருடம் மட்டும்தான் பயன்படுத்துவேன். அதன் பிறகு முடக்கிவிடுவேன்' என்று கூறினார். சேனல் தொடங்கப்பட்ட ஐந்தே நாள்களில் ஒரு மில்லியன் சப்ஸ்க்ரைபர்களைப் பெற்றார். நாள் ஒன்றுக்கு ஒரு வீடியோ வீதம் தொடர்ந்து வீடியோக்கள் பதிவேற்றப்பட்டன. அவர் கூறியது போலவே நவம்பர் 14-ம் தேதி அந்தச் சேனலை முடக்கிவிட்டார். கடைசி நாளன்று அவர் செய்த 12 மணிநேர தொடர் லைவ்வை 15 லட்சம் பேர் கண்டுள்ளனர்.

இதற்கு சரியான உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், இந்த எண்ணிக்கையானது சராசரியாக அனல் பறக்கும் நல்ல ஐ.பி.எல் மேட்சை ஹாட் ஸ்டாரில் நம் மக்கள் காணும் எண்ணிக்கைக்குச் சமமாகும். இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தச் சேனல் மூலமாகவும் அவருக்குப் பணம் கொட்டியது. ஒரு கண்டிஷனோடு சேனல் தொடங்கி, அதில் வீடியோ வெளியிடுவதும் ஒருவகை மார்க்கெட்டிங் உத்திதான் போல. அந்த வகையில் ஸ்மார்ட்தான் இந்த அமெரிக்கர். கடந்த ஆண்டு இவர் ஈட்டிய வருவாய் 19.5 மில்லியன் டாலர். நம் மதிப்பில் 143 கோடி ரூபாய்.

டாப் 10 யூடியூபர்ஸ்

#6 ப்ரெஸ்டன் (Preston – Preston Arsement) - கொரோனா கால ஜாக்பாட்!

2K கிட்ஸின் மிகப் பெரிய பொழுதுபோக்கு மொபைல் கேம்ஸ், வீடியோ கேம்ஸ்தான். குறிப்பாக, கொரோனா கால ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கிய குழந்தைகளுக்கு மொபைல்தான் பொழுதுபோக்காக மாறியது. கேம்களை விளையாடி அதை யூடியூபில் வீடியோவாக வெளியிட்டுப் பணமாக்கியுள்ளார் 27 வயது அமெரிக்கரான ப்ரெஸ்டன். தனக்கென 4 யூடியூப் சேனல்கள் வைத்து, 32 மில்லியனுக்கும் மேலான சப்ஸ்க்ரைபர்களைப் பெற்றுள்ளார் இவர்.

TBNRFrags என்ற இவரது யூடியூப் சேனல் கேமர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக உள்ளது. சேனலுடன் சேர்த்து, ‘Minecraft’ என்ற வீடியோ கேமின் சர்வரையும் மேலாண்மை செய்துவருகிறார். இந்த சர்வரைப் பயன்படுத்த விரும்புவோர், பணம் செலுத்தி விளையாடலாம். இந்த வகையிலும் அவர் மிகப் பெரிய தொகையை வருமானமாக ஈட்டுவருகிறார். கொரோனா ஊரடங்கு காலம் இவருக்கு மிகப்பெரிய ஜாக்பாட்தான். வீடியோ கேம்ஸ், யூடியூப் சேனல்கள் என, கடந்த ஆண்டில் 19 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார். இந்திய மதிப்பில் 140 கோடி ரூபாய்.

டாப் 10 யூடியூபர்ஸ்

 #7 லைக் நஸ்ட்யா (Like Nastya – Anastasia Radzinskaya) - பேசா சிறுமியின் பேச்சு!

ரஷ்யாவின் அனஸ்டாஸியா ரட்ஸின்ஸ்கயா என்ற 7 வயதுச் சிறுமியின் யூடியூப் சேனல்தான் லைக் நஸ்ட்யா (Like Nastya). பிரபலமாகவும் (நல்ல வழியில்) சாதிக்கவும் வயது முக்கியமல்ல என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு. இரண்டு வயதாக இருக்கும்போது, இந்தக் குழந்தைக்குப் பெருமூளை வாத பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இனி இவர் பேசுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு எனவும் மருத்துவர்கள் அனஸ்டாஸியாவின் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதைக் கேட்டு மனம் தளராத பெற்றோர், குழந்தைக்குப் பேசப் பயிற்சியளித்துள்ளனர். அவ்வப்போது தங்கள் குழந்தை பேசுவதை வீடியோ எடுத்துவைத்து, அதற்கு ஏற்றவாறு பயிற்சியும் வழங்கியுள்ளனர். நாளடைவில் அந்த நோயையும் இவர் வெற்றிகண்டார்.

பேசவே வாய்ப்பில்லை என்று கூறப்பட்ட இந்தக் குழந்தை பேசுவதை தற்போது உலகமே ரசித்துவருகிறது. அன்பாக்ஸிங் வீடியோக்கள், விலாக் வீடியோக்கள், சிறு நாடக வீடியோக்கள் எனப் பல வகைகளில் தனது மழலைப் பேச்சில் இணையத்தைக் கலக்கிவருகிறார். ‘லைக் நஸ்ட்யா’ (Like Nastya), ‘நஸ்ட்யா விலாக்’(Nastya Vlog), ‘நஸ்ட்யா ஷோ’ (Nastya Show) எனப் பல யூடியூப் சேனல்களில் தற்போது வீடியோ செய்துவருகிறார் அனஸ்டாஸியா. மேலும், ஒரே நாளில் 100 மில்லியனுக்கும் மேல் வியூஸை அள்ளிச் சென்று சாதனை படைத்துள்ளார் இந்தச் சிறுமி. உலக அளவில் இவரின் ரசிகர்கள் பரவியுள்ளதால், அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தனது தாய்மொழியான ரஷ்ய மொழியைத் தாண்டி ஆங்கிலத்திலும் வீடியோ செய்துள்ளார். தனது மொத்த சேனல்களையும் சேர்த்து 190 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களைக் கொண்டுள்ள இவர், கடந்த ஆண்டு 18 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளார். இந்திய மதிப்பில் 133 கோடி ரூபாய்!

டாப் 10 யூடியூபர்ஸ்

#8 ப்ளிப்பி–ஸ்டீவின் ஜான் (Blippi - Stevin John) - குழந்தைகளின் யூடியூப் டீச்சர்!

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஸ்டீவின் ஜான், குழந்தைகளுக்கு விளையாட்டுடன் பாடங்களைக் கற்றுத்தரும் வேலையைத் தனது யூடியூப் சேனலான `ப்ளிப்பி’ (Blippi) மூலமாகச் செய்துவருகிறார்.

அமெரிக்க விமானப்படையில் பணியாற்றிய இவர், ஒருநாள் தனது உறவினரின் குழந்தை யூடியூப் பார்ப்பதைக் கண்டு, அந்தக் குழந்தையோடு அமர்ந்து அதைப் பார்த்துள்ளார். தரமற்ற, எளிதில் கான்செப்ட்களைப் புரியவைக்கத் தவறும் யூடியூப் வீடியோக்களைக் குழந்தை பார்ப்பதைக் கண்டவர் மனத்தில், 'நாம் ஏன் ஒரு யூடியூப் சேனல் உருவாக்கி, அதைச் சரியாகச் செய்யக் கூடாது' என்ற எண்ணம் எழுந்துள்ளது. மஞ்சள் உடை, நீல நிறத் தொப்பி அணிந்து, குழந்தைகளுக்காகக் குழந்தையாகவே மாறி, தான் நினைத்ததைச் செய்துகாட்டியும் வருகிறார். தற்போது யூடியூப் மட்டுமல்லாமல் ஹுலூ (Hulu), அமேசான் (Amazon) உள்ளிட்ட நிறுவனங்களுடன் கைகோத்துப் பல கன்டென்ட்களை உருவாக்கி வருகிறார். கடந்த ஆண்டில் இவரது வருமானம் 17 மில்லியன் அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில் 125 கோடி ரூபாய்!

டாப் 10 யூடியூபர்ஸ்

#09 டேவிட் டோப்ரிக் (David Dobrik) - சர்ச்சை சாதனைக்காரர்!

ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த 24 வயது இளைஞரான டேவிட், தனது விநோத ப்ராங்க், விலாக் வீடியோக்களுக்காகப் பெயர்பெற்றவர். அதில், ஒரு ப்ராங்க் வீடியோவுக்காகச் செய்த வில்லங்கச் செயல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தனது யூடியூப் சேனலில் பணிபுரியும் நண்பனை ப்ராங்க் செய்ய, நண்பரின் தாயைத் திருமணம் செய்துகொண்டார் (சில மாதங்களுக்குப் பிறகு விவாகரத்தும் செய்துகொண்டனர்). யூடியூப் மட்டுமல்லாமல் வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட்டாக ‘The Angry Birds 2’ படத்திலும் பணியாற்றியுள்ளார். டிக் டாக்கிலும் இவர் செம டிரெண்ட்.

இவரது விநோத முயற்சிகள், பல கார்ப்பரேட் ஸ்பான்சர்ஷிப்கள் கிடைக்க உதவின. அவற்றில் பிரபல நிறுவனங்களான EA Sports, Bumble போன்றவையும் அடங்கும். அதுமட்டுமல்லாமல், தனது பி்ராண்டின் ஹூடீ (Hoodie), டீ ஷர்ட் போன்றவற்றின் விற்பனையும் இவரது வருவாயில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சமீபத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான இவரது சேனலில் பணிபுரியும் சக ஊழியரால், டேவிட்டின் சேனலை 3 மாதங்கள் முடக்கியது யூடியூப் நிறுவனம். மீண்டும் ஜூன் மாதம் முதல் வீடியோக்கள் வரத் தொடங்கியுள்ளன. இப்படி சர்ச்சைகளையும் சாதனைகளையும் சந்திக்கும் டேவிட் டோப்ரிக், 18 மில்லியனுக்கும் மேற்பட்ட சப்ஸ்க்ரைபர்களுடன் கடந்த ஆண்டு 15.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 113 கோடி ரூபாய்) வருமானம் பெற்று, இந்த லிஸ்ட்டில் 9-வது இடத்தைப் பெற்றுள்ளார்.

டாப் 10 யூடியூபர்ஸ்

#10 ஜெஃப்ரீ ஸ்டார் (Jeffreestar) - மயக்கும் மேக்கப் ஸ்டார்!

அமெரிக்க யூடியூப் ஸ்டாரான ஜெஃப்ரீ, தனது சேனலில் மேக்கப் வீடியோஸ், விலாக் (Vlog) வீடியோஸ் போன்றவற்றைப் பதிவிட்டு, கோடிகளை அள்ளிவருகிறார். 35 வயதான ஜெஃப்ரீக்குச் சிறுவயது முதலே மேக்கப் செய்வதில் ஆர்வம் அதிகம். பள்ளிப்பருவத்தில் தன் தாய்க்கு மேக்கப் செய்து, அதில் ஏற்பட்ட ஆர்வத்தால், மேக்கப் செய்வதையே தனது தொழிலாக மாற்றிக்கொண்டார்.

முதலில் பாடகராக அறிமுகமான இவர், பின்னர் மேக்கப் செய்வதை முழுநேர பிசினஸாக மாற்றினார். காஸ்மெடிக்ஸ் நிறுவனம் ஒன்றையும் நடத்துகிறார். இவரது நிறுவனத்தின் அழகுசாதனப் பொருள்களைப் பயன்படுத்தி மேக்கப் செய்து, அதை வீடியோவாக யூடியூபில் பதிவிட்டு சப்ஸ்க்ரைபர்களைக் கவர்ந்திருக்கிறார். மேக்கப் என்பது பெண்கள் சமாசாரம் என்ற பிம்பத்தை உடைத்து, விதவிதமாக மேக்கப் செய்து சிக்ஸர் அடிக்கிறார். இவரது கலெக்‌ஷனில் இருந்து வெளியான `Eye Shadow Pallate’ என்ற அழகு சாதனப் பொருள் ஒன்று, விற்பனைக்கு வந்த 30 நிமிடங்களிலேயே 10 லட்சத்துக்கு மேல் விற்பனையானது. கடந்த 2020-ம் ஆண்டு மட்டும் இவர் யூடியூப் மூலம் 15 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார். இந்திய மதிப்பில் 110 கோடி ரூபாய்!